Skip to main content

நீங்க கேட்டு நான் இல்லைன்னு சொல்ல முடியுமா? காசி விஷயத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

suji


"காசி விவகாரம் நமக்கெதற்கு என்று விட்டுவிடக் கூடாது. இன்னும் எத்தனை காசிகள் நம்மிடையே உலவுகின்றனரோ? காசிகள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை அறிந்து தெளிவதற்காகவாவது, இவன் போன்றவர்களை முடிந்தமட்டிலும் தோலுரித்தே ஆகவேண்டும்'' என்கிற ரீதியிலேயே நாகர்கோவில் மக்கள் ஆதங்கப்பட்டனர்.
 


காசியின் அப்பா தங்கப்பாண்டியன், தன் கோழிக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் "இதே கோட்டார் ஸ்டேஷன்ல, என் மகனை எஸ்.ஐ. ஆக்கி உட்கார வைப்பேன்'' எனச் சொல்வாராம். அப்பாவின் ஆசைப்படியே எஸ்.ஐ. ஆகவேண்டும் என்ற எண்ணம் காசிக்கும் இருந்தது. ஆனால், குறுக்கு வழியில்தான், அவன் தலைக்கு எஸ்.ஐ. தொப்பி வந்தது. எப்படித் தெரியுமா?

காசியின் வீடு மற்றும் கோழிக்கடைக்கு மிக அருகிலேயே போலீஸ் குடியிருப்பு உள்ளது. தலைமைக் காவலராக இருந்து பதவி உயர்வு பெற்று எஸ்.ஐ. ஆன அந்த நேர்மையானவரின் மகள், பக்கத்தில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு நடந்து சென்றே படித்து வந்தாள். அவள் பள்ளி மாணவியாக இருந்தபோதே பின் தொடர்ந்தான் காசி. குவார்ட்டர்ஸுக்கு பக்கத்திலேயே இருந்ததால், காசி அப்பா வைத்திருந்த இறைச்சிக் கடைக்கு காவலர்கள் பலரும் வாடிக்கையாளர்களாக இருந்தனர்.
 

house


போலீஸ் குடியிருப்புக்குள் வெளியாட்கள் யாரும் சுலபமாகப் போய்விட முடியாது. ஆனால், இறைச்சியை டோர் டெலிவரி செய்யும் சாக்கில், போலீஸ் வீடுகளுக்குள் காசி போனான். தான் ‘ரூட்’ விட்ட எஸ்.ஐ.யின் மகள் வீட்டுக்கும் அப்படித்தான் போனான். அவள் கல்லூரியில் படிக்கும் வரையிலும், வீட்டுக்குள் சென்று ‘காதல் நாடகம்’ நடத்தினான். "என் உடம்பைப் பார்.. எஸ்.ஐ. செலக்ஷனுக்கு ரெடி ஆயிக்கிட்டிருக்கேன். எஸ்.ஐ. ஆனதும் உன்னை மேரேஜ் பண்ணிக்கிறேன்...'' என்று காசி பேசிய ஆசை வார்த்தைகளில் அவளை ஏமாற்றி வீடியோ எடுத்தான். "உங்க அப்பாவோட எஸ்.ஐ. தொப்பி எனக்கு நல்லாயிருக்குல்ல...'' என்று தலையில் மாட்டிக்கொண்டு செல்ஃபியும் எடுத்தான்.

காசியிடம் தன் மகள் ஏமாந்தது, நேர்மையான அந்த எஸ்.ஐ.க்கு தெரிந்துபோனது. தனது பெண்ணின் எதிர்காலம் குறித்த அச்சத்தாலும், காசிக்கு அந்த ஊரிலுள்ள ஜாதி பலத்தாலும், ஹரியின் வலுவான பின்னணியாலும் அமைதியானார். அந்த மாவட்டத்திலேயே வேறு ஊருக்கு "டிரான்ஸ்பர்' வாங்கிக்கொண்டு போனார். காசியோ, "அன்னைக்கு இந்த ஆளு போலீஸ்காரன்ங்கிற திமிர்ல, நாங்க பாதைக்கு இடையூறா கோழிக்கூடுகளை வச்சிருக்கோம்னு பிரச்சனை பண்ணி மாற்ற வச்சாரு. போலீஸ்காரன்னா பெரிய பருப்பா? நெஞ்சுல வஞ்சம் வச்சி அவரு மகளை கரெக்ட் பண்ணினேன். இப்ப அவரையே ஊரு மாற வச்சிட்டேன்'' என்று நண்பர்களிடம் மார்தட்டினான். ஒரு போலீஸ் அதிகாரியின் குடும்பத்தையே நிம்மதியிழக்க வைத்தவன் கடையிலிருந்துதான், நல்லி எலும்போடு 2 கிலோ மட்டன் பார்சல், இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி போன்றவர்களின் வீடுகளுக்கு வாரம்தோறும் இலவசமாகப் போகிறது.
 

suji

 


மாமூல் போலீஸ்காரர்கள் ஹரியை பார்க்கும் போதெல்லாம் ‘சல்யூட்’ வைப்பதைப் பார்த்த காசி, தானும் வழக்கறிஞர்- கட்டப் பஞ்சாயத்து- கந்துவட்டி’ என சகலத்திலும் கொடிகட்டிப் பறக்கவேண்டும் என்று ஆசைப் பட்டான். இந்த ஸ்டேட்டஸ், தனது தீவிர பாலியல் வேட்டைக்கு, பெரிதும் பயன்படும் என்று நம்பினான். அதனாலேயே, ஹரிக்கு மிகவும் நெருக்கமானான். எவ்வளவு சம்பாதித்தாலும் பண விஷயத்தில் ஹரி ரொம்பவே கெட்டியானவர். காசியோ, பெண் மிரட்டலில் கிடைத்த பணத்தை, லிக்கர் ப்ளஸ் லேடி எனத் தாராளமாக வாரியிறைத் தான். காசியின் இந்தக் கவனிப்பு தான், அவனை ஹரியின் ஜூனியர் ஆக்கியது.

உயர் அதிகாரிகளிடம் செல்போனில் பேசும்போது “நான் ஹரியின் ஜூனியர் பேசுறேன்.." என்று தெனாவட்டாகப் பேசுவான். இவனது அலப்பறை பிடிக்காத போலீஸ் அதிகாரிகள் "காசி ரொம்ப ஓவரா பேசுறான்...'' என்று ஹரியிடம் சொன்னால், "மாப்ள பேசினானா? சரி, என்ன கேட்டாலும் பண்ணிக்கொடுங்க...'' என்று கூலாகச் சொல்லிவிடுவார்.

ஒருமுறை காசியின் தோழி, டூவீலர் லைசன்ஸ் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும், டபிள்யூ. சி.சி. சாலையில் பயணித்தபோது, டிராபிக் போலீசாரால் நிறுத்தப்பட்டாள். தகவல் காசியிடம் போனது. ஸ்பாட்டுக்கு வந்த காசி "நான் ஹரியின் ஜூனியராக்கும்.. இப்ப விடலைன்னா, நடக்கிறதே வேறு...'' என்று மிரட்ட, டிராபிக் போலீஸோ, அந்தப் பெண்ணை அபராதம் கட்டச் செய்து, ரசீதைக் கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் ஹரி அங்கே வந்துவிட்டார். அங்கிருந்த போலீசாரிடம் சட்டம் பேசி தகராறு செய்து விட்டு, அபராத ரசீதை அங்கேயே கிழித்தெறிந்தார்.

தன்னால் பாதிக்கப்பட்ட பெண்களோ, அவர்களது உறவினர்களோ, யாரையாவது மிரட்ட வேண்டுமென்றால், அவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே, “தப்பான தொழில் பண்ணிட்டு என்கிட்டயே பஞ்சாயத்து பண்ண வர்றீங்களா? உங்கள மாதிரி ஆளுங்கள விடவே மாட்டேன். இருங்க.. எஸ்.பி.கிட்ட பேசுறேன்...'' என்று டயல் செய்வான். எதிர்முனையில் ஹரிதான் போனை எடுப்பார். “நான் ஹரியின் ஜூனியர் பேசுறேன்..." என்றதும், காசி இருக்கும் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, எஸ்.பி. ரேஞ்சுக்கு பேசுவார். அடிக்கடி இதுபோன்ற தில்லாலங்கடி வேலைகளை, இருவரும் சர்வசாதாரணமாகப் பண்ணுவார்கள்.

நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான பாறையை அவரது அண்ணன் நடத்துகிறார். அங்குதான், காவல்துறையில் தனக்கு நெருக்கமான அதிகாரிகளுக்கு 'சியர்ஸ்' சொல்லுவான் காசி. போதை ஏறியதும், காசியின் சேட்டையை அறிந்த அதிகாரிகள், "ஏன்டா நீ மட்டுமே அனுபவிக்குற? எங்க கண்ணுல கொஞ்சம் காட்டக்கூடாதா?'' என்று கெஞ்சுவார்கள். அதற்கு அவன், "சார்.. நீங்க கேட்டு நான் இல்லைன்னு சொல்ல முடியுமா? அழகழகான ஆண்ட்டி பீஸ் கைவசம் இருக்கு. அமவுண்ட் கொஞ்சம் அதிகமாகும்'' என்பான். அவர்களோ, "அட, போடா மாமா.. பணமெல்லாம் ஒரு மேட்டரே இல்ல...'' என்பார்கள். இப்படித்தான், பல முக்கிய அதிகாரிகளுக்கு பெண் சப்ளை நடந்திருக்கிறது.

கோட்டார் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் காசி மீது புகார் அளித்தவுடன், இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், முதலில் ஹரியைத்தான் தொடர்பு கொண்டார். "காசியைக் கொஞ்சம் விசாரிக்கணும்.. கூட்டிட்டு வாங்க...'' என்று அவர் கூற, ஹரி அலட்சியமாக “மாப்ள இப்ப பிசியா இருக்கான். நேரம் கிடைக்கும்போது நானே கூட்டிட்டு வர்றேன்'' என்றிருக்கிறார். அது சரி! காசியை விசாரிப்பதற்கு ஹரியிடம் ஏன் அனுமதி கேட்க வேண்டும்? காவல் நிலையத்திலிருந்து பார்த்தாலே, காசியின் வீடு தெரியும். ஆனாலும், ஹரியின் வலதுகை என்பதால், காசியை விசாரிப்பதற்கு முதலில் ரொம்பவே தயங்கியது காவல்துறை. காசி கைதாவதற்கு முன், சகல அஸ்திரங்களையும் பிரயோகித்துப் பார்த்து விட்டுத்தான் ஹரி ஓய்ந்திருக்கிறார். இப்போதும் கூட, மாமூல் பணம், பெண் சப்ளை போன்ற விவகாரங்களில், இந்தக் கூட்டணி தங்களை மாட்டிவிட்டால் என்னாவது? என்று கதிகலங்கிப் போய் இருக்கிறார்கள் சில போலீஸ் அதிகாரிகள். அதனால்தான், கஸ்டடியில் காசி இருந்தபோது, பேச்சில் கடுமை காட்டினாலும், முடிந்த அளவுக்கு மிதமாகவே நடந்து கொண்டனர். இத்தனை உள் விவகாரம் இதற்குள் இருப்பதால், இந்த வழக்கிலிருந்து காசி தப்புவதற்கான வழிகளை ஆராய்ந்து, காப்பாற்றியே தீரவேண்டும் என்ற முனைப்பில் ஒரு போலீஸ் டீமே செயல்படுகிறதாம்.

நக்கீரனுக்கு அளித்த பேட்டியில் காசி குறித்த சில உண்மைகளையும், அவனோடு தனக்கிருந்த தொடர்பினையும் ஒளிவுமறைவின்றி பேசியிருந்தார், வழக்கறிஞர் ஹரி. நாகர்கோவில் மக்கள் ஹரியைப் பற்றி அவரது வாய்ஸிலேயே தெரிந்து கொண்டதாலோ என்னவோ, "நக்கீரன் நிருபர்களின் கை, கால்களை உடைத்து வீட்டிற்குள்ளேயே முடக்கிப் போடுவேன். வழக்கு வந்தால் சந்திப்பதெல்லாம், எனக்கு சாதாரண விஷயம்தான்'' என்று மிரட்டும் தொனியில், தனது நட்பு வட்டத்தில் பேசிவருகிறார், ஹரி.
 

 

advocate

 

http://onelink.to/nknapp


காசியின் தாயார் பத்மா, "என் மகன் தப்பு செய்திருக்க மாட் டான். அவனை நான் அப்படி வளர்க்கல. ஆடம்பரமா வளர்த்தது ஒரு தப்பா? அப்படி அவன் தப்பு பண்ணியிருந்தாலும், அதில் தப்பில்லை. ஏன்னா.. அந்தப் பெண் பிள்ளைங்களாட்டு அவனைத் தேடி போனதுனாலதானே அந்தத் தப்பு நடந்திருக்கும். இப்ப ஒரு ஈ, காக்கா கூட வீட்டு பக்கம் வரலியே...'' என்று வீட்டுக்குள் புலம்பிக் கொண்டிருக்கிறாராம். "அக்கம் பக்கத்தினர் யாரும் காசி வீட்டு பக்கம் தலை காட்டுவதில்லை. பக்கத்திலுள்ள உறவினர்களும் என்ன ஏதென்று கேட்காத நிலையில், வீடு பூட்டியே கிடக்கிறது. வீட்டு மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் இரண்டு குடும்பத்தினரும் கூட, காசியின் பெற்றோரிடம் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. பக்கத்திலேயே வசிக்கும் காசியின் சகோதரி, அடிக்கடி தாய் வீட்டுக்கு வருவார். கைது சம்பவத்துக்குப் பிறகு அவர் வெளியே வருவதில்லை'' என்கிறார்கள், கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

காசியின் பெற்றோரைக் காட்டிலும் பன்மடங்கு துயரத்தில் அவனால் பாதிக்கப்பட்ட பெண்களும் உறவினர்களும் இருக்கிறார்கள். புகார் அளிக்காத நிலையிலும், வீடியோவில் சிக்கி விசாரணைக்கு ஆளாகி வருபவர்களோ, வெளியே தெரிந்தால் மானம் போய்விடும்; உயிர் வாழவே முடியாது என்று பரிதவிக்கின்றனர். காசி-ஹரி கூட்டணிக்கு துணைபோய், அவர்கள் ஏற்பாடு செய்த பெண்களை ருசித்த காக்கிகளும், தங்கள் பெயர் வெளி வந்துவிடக் கூடாது என்ற பீதியில் உறைந்துபோய் கிடக்கின்றனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் அத்தனையும் செய்துவிட்டு, போலீசார் வீடுகளுக்குள்ளும் புகுந்து விளையாடியவனை, தப்ப வைக்கும் முயற்சியில் சில கருப்பு ஆடுகள் ஈடுபட்டுள்ளன வா? இவர்களைக் காவல்துறை விட்டு வைக்கலாமா?


-மணிகண்டன்.


 

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.