Skip to main content

நீங்க என்ன ஆக்ஷன் வேணும்னாலும் எடுங்க... காசி விவகாரம் முதலில் இவருக்குத்தான் தெரியும்... வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 18/05/2020 | Edited on 18/05/2020

 

suji


விசாரணை என்ற பெயரில் "விர்ஜின் டெஸ்ட் எடுப்போம், வா!'’ என்று பாதிப்புக்கு ஆளான பெண்களுக்குக் குடைச்சல் கொடுத்தார் ஒரு பெண் போலீஸ் அதிகாரி. காசி வழக்கு சம்பந்தப்பட்ட விசாரணையிலிருந்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரியை விடுவித்துள்ளது, காவல்துறை.
 


“காசி, சிறுமியைச் சீரழித்த வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் வருவதால், அதனை ஒரு பெண் போலீஸ் அதிகாரிதான் விசாரிக்க வேண்டும் என்ற நிலையில், ஆய்வாளர் சாந்த குமாரியிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவரோ, விசாரணை என்ற பெயரில், சென்னை பெண் டாக்டரிடமும், நேசமணி நகர் பொறியியல் பட்டதாரி பெண்ணிடமும், "நீங்க அவனுட்ட கொண்டு கொடுத்துட்டு இப்பம் அவன் நாசமாக்கி போட்டான்னு வேஷம் கட்டுறீங்களா?'' என்று எரிந்து விழுந்து அழ வைத்திருக்கிறார். மிரட்டும் ரீதியாக நடத்திய இந்த விசாரணைக்கு தனது போலீஸ் போனை பயன்படுத்தாமல், பெர்சனல் செல்போனிலிருந்தே பேசியிருக்கிறார்.

புகார் அளித்த பெண்கள்மீது சாந்தகுமாரி கோபம் கொண்டதற்குக் காரணம் உண்டு. சாந்தகுமாரியின் மகனும் காசியும் நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கின்றனர். உறவினர்கள் போல், காசி வீட்டாரும் சாந்தகுமாரி வீட்டாரும் பழகியிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களிடம் சாந்தகுமாரி காட்டிய வேகத்தைப் பார்க்கும்போது, அவருடைய மகனுக்கும் காசி நடத்திய பாலியல் வேட்டையில் தொடர்பு இருந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது என்று கச்சிதமாக முடிச்சு போட்டனர்.
 

suji


"காசி என்னங்க காசி... 5 வருஷத்துக்கு முன்னால காசியை தூக்கி சாப்பிடற வில்லங்க சமாச்சாரமெல்லாம் இதே நாகர்கோவிலில் நடந்திருக்கு.. எதுவும் வெளிவராம பண்ணிட்டாங்க. புதுச்சேரி கிளப்புகளில் காசி கும்மாளம் போட்டதிலிருந்து, சென்னை பெண்களை நெருங்கியது வரை காசியின் அத்துமீறலுக்கு பலமான பின்னணி உண்டு'' என்று குமுறலுடன் பேசினார் நாகர்கோவிலுள்ள முக்கிய பிரமுகர். அவர் சுட்டிக்காட்டியது, காசியின் நண்பர் என்று சொல்லப்படும் ஹரியை. வழக்கறிஞர்கள் சிலரும் ஹரியின் இருண்ட பக்கங்களைப் புரட்டினார்கள்.

குமரி மாவட்டத்தில் காவல் துறையினருக்குப் பயந்து கந்து வட்டி தொழிலை ஓரம்கட்டிவிட்டு, பெட்டிப் பாம்பு போல் பம்மியிருப்பவர்கள் அனேகம் பேர். ஹரியோ, வழக்கறிஞர் என்ற போர்வையில், காவல்துறையினரின் பரிபூரண ஆசியுடன் கந்துவட்டி தொழிலிலும், கட்ட பஞ்சாயத்து செய்வதிலும், அடிதடி பேர்வழிகளைக் கையில் வைத்துக்கொண்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் குட்டி ராஜாங்கமே நடத்தி வருகிறார். ஹரியால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் காவல் நிலையங்களிலோ, மாவட்ட எஸ்.பி.யிடமோ புகார் கொடுத்தால், அது குப்பைக் கூடைக்குப் போய்விடும் என்கிறார்கள்.

மேலும், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடசேரி, கோட்டார், நேசமணி நகர், ஆசாரிப்பள்ளம் காவல் நிலையங்களிலும், அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும், ஹரி வைத்ததுதான் சட்டம். அவர் கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டார்கள். காவல்துறையில் ஹரிக்கு உள்ள செல்வாக்கு, தனக்குப் பயன்படும் என்பதை உணர்ந்தே ஹரியுடன் வலுவான நட்பினை ஏற்படுத்திக்கொண்டான், நாளும் பெண்களோடு சல்லாபம் நடத்திவரும் காசி. ஹரியும், கோழிக்கடை உரிமையாளர்கள் சிலருக்குக் காசி மூலம் கந்துவட்டிக்குப் பணம் கொடுத்தார். வீடியோ பிளாக்மெயில் செய்து பெண்களிடம் காசி பறித்த பல லட்சங்கள், ஹரி ரூட்டில் தொழிலதிபர்களிடம் வட்டிக்கு விடப்பட்டது.
 

hari


நாணயத்தின் இருபக்கங்கள் போல, காசி - ஹரி நட்பு அமைந்திருந்தது. இப்படித்தான், சில்லறை விற்பனை கோழிக்கடை வைத்திருந்தவர்களுக்கு, கந்துவட்டிக்குப் பணம் கொடுத்த காசி, வட்டி கொடுக்க முடியாத ஒருவரது கடையை, தன் பெயருக்கு மிரட்டி எழுதி வாங்க, ஹரி சட்டரீதியான பக்கபலமாக நின்றிருக்கிறார். அதுபோலவே, வேப்பமூடுவில் கடை நடத்திவந்த டிராவிட் என்பவருக்கு ரூ.2 லட்சத்தைக் கந்து வட்டிக்குக் கொடுத்த காசி, ரூ.5 லட்சம் மதிப்பிலான ஹார்லி டேவிட்சன் பைக்கை பறித்த பின்னணியிலும் சட்ட உதவி செய்திருக்கிறார் ஹரி. இருந்தும்கூட, காசி மீது டிராவிட் கொடுத்த புகாரை கோட்டார் காவல் நிலையம் ஏன் வாங்கியதென்றால், பாலியல் குற்றச்சாட்டில் அவன் கைதானதுதான்.
 


தொடக்கத்தில் சிவசேனா, பிறகு ஆர். எஸ்.எஸ்., இந்து முன்னணி, அப்புறம் திமுக என மாறிக்கொண்டே இருந்தார் ஹரி. தனது வீட்டின் பின் வாசல் வழிக்காக, நாகர்கோவில் மாநகராட்சிக்குச் சொந்தமான நாகராஜா கோவில் திடலின் காம்பவுண்டை இடித்தபோது, அதை பா.ஜ.க.வினர் கையிலெடுத்தனர். உடனே, பா.ஜ.க. அனுதாபியாக மாறிப்போனார்.

கோர்ட்டுக்கு ஹரி வரும்போதெல்லாம், காரை ஓட்டிவருவது காசிதான். கோர்ட்டில் அங்கங்கே இருவரும் நிற்பதை வழக்கறிஞர்களும் பார்த்திருக்கின்றனர், சி.சி.டி.வி.யும் பதிவு செய்திருக்கிறது.

காசியின் கூட்டாளிகள் 7 பேரில் ஹரியே முதன்மையானவர் என்பதற்கு போட்டோ, வீடியோ உள்ளிட்ட ஆதாரங்கள் இருந்தும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. காசியிடமிருந்து கைப்பற்றிய வீடியோக்களில் ஹரி இருந்த அனைத்தையும் தனியாக எடுத்து வைத்திருந்தனர். காசி கைதான இரண்டு நாட் களில், ஹரியின் வீட்டுக்கு போலீஸ் போனது. அன்றிலிருந்தே காவல்துறையினருக்கு தலைவலிதான். ஹரியை எக்காரணம் கொண்டும் போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என்று தென்மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். அதனால், காசியோடு ஹரி இருந்த வீடியோக்கள் அழிக்கப்பட்டனவாம். ஹரிக்காக காவல்துறையினரை ‘சைலண்ட்’ ஆக்கிய சக்தி எதுவென்றால், திருச்சியில் வெகு பிரபலமான டாக்டர் ஒருவரைக் கை காட்டுகின்றனர். ஹரியின் உறவினரான அந்த டாக்டர், காவல்துறையில் உயர் மட்டத்திலுள்ள அதிகாரிகளோடு எப்போதும் தொடர்பில் இருப்பவராம். குமரி மாவட்டத்திலோ, கேரளாவிலோ, உல்லாசமாக இருக்க விரும்பும் அதிகாரிகளுக்கு, ஹரி மூலம் அத்தனை ஏற்பாடுகளையும் செய்வாராம், அந்த திருச்சி டாக்டர். அவருக்கு விசுவாசம் காட்டுவதற்காகவே, காசி வழக்கில் ஹரி கழற்றி விடப்பட்டிருக்கிறார்.

ஹரி குறித்து நமக்கு கிடைத்த தகவல்களை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் முன் வைத்தோம்.

"காசி மீது இரண்டு ரேப், ஒரு போக்சோ, இரண்டு மோசடி, ஒரு கந்துவட்டி என மொத்தம் 6 புகார்கள் பதிவாகியிருக்கின்றன். புகார் கொடுத்தவர்களைப் பற்றிய தகவல்கள் வெளியாகிவிடக்கூடாது என்பதற்காக விசாரணை ரகசியமாக கையாளப்பட்டு வருகிறது. ஹரிக்கு எதிரான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனாலும், தீவிரமாக விசாரித்து வருகிறோம்''’என்று நழுவிப் பேசினார்.
 

lawyer


‘நாகர்கோவில் பாட்ஷாவாக செல்வாக்கு பெற்றிருக்கும் வழக்கறிஞர் ஹரிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடமே கேட்டோம்.

"காசி எனக்கு ஜிம்மில் வச்சி தான் பழக்கம். அதுவும் ஓண்ணரை வருஷம்தான் ஆகுது. எல்லோரும் சொல்லலாம். யாரு வேணும்னாலும் சொல்லலாம். என்ன வேணும்னாலும் சொல்லலாம். அத நிரூபிக்கணும் இல்லையா? என்னைப் பற்றி எல்லோரும் பக்கம் பக்கமாக சொல்லட்டும். இவங்க விசாரிச்சி புலன் விசாரணை எல்லாம் பண்ணட்டும். அந்த பொண்ணு இருக்குது இல்லையா? அந்த (பாதிக்கப்பட்ட) பொண்ணை யாராவது விசாரிச்சாங்களா? அந்த பெண்ணின் வழக்கறிஞர் முதல்ல என்கிட்ட இந்த மேட்டரை சொன்னார். உடனே நான் அந்த பையன்(காசி)கிட்ட பேசினேன். இது உனக்கு தேவையில்லாத வேலை. நாளைக்கே நீ உள்ளே போயிடுவனு சொன்னேன். வம்பா சப்பட்டை ஆயிடுவனு சொன்னேன். அத அவன் கேட்கல. அதன் பிறகு நான்தான் அந்த வழக்கறிஞர் கிட்ட, போலீசுக்கு போகச் சொன்னேன். இத நான் எதுக்கு மறைக்கணும்? அந்த அட்வகேட்டுகிட்ட நீங்களே கேளுங்க. அவன் அடி குடுத்தாதான் திருந்துவான். நீங்க என்ன ஆக்ஷன் வேணும்னாலும் எடுங்க. இதுக்கு நான் என்ன உதவி செய்யணும்னு கேளுங்க.. செய்றேனு' சொன்னேன்.

அவன போலீஸ் புடிச்சிட்டு போனதும், அவங்க அம்மா என்கிட்ட போன் பண்ணி புடிச்சிட்டு போயிட்டாங்கனு சொன்னாங்க. "அப்படியா? என்னத்துக்கு'னு கேட்டேன்.என்னதுனு தெரியல. சரி கேட்டு சொல்லுங்கனு சொன்னாங்க. பிறகு, நான் விசாரிச்சி, பொண்ணு மேட்டர்னு சொன்னேன். நான் கிரிமினல் கூடவே பேசக் கூடாதுனா நான் என்ன தொழில் பண்ணனும்?

2019-ல் காசி தப்பு பண்ணியிருந்தானா? அப்பம்தானே என் கிட்ட பழகுறான். இந்த கேஸில் டாக்டர்கிட்ட பழகினது எப்பமா? அதுபோல ரெண்டு பெட்டிசன் மூணு பெட்டிசன் குடுத்தவங்ககிட்ட எப்பம் பழகினான்? போலீஸ்காரன் பொண்ணுகிட்ட பழகினது 2008, 2009, 2010-ல இருக்கும். என்கிட்ட பழகினது 2019லதாங்க. சும்மா யார் வேணும்னாலும் சொல்லலாம். நானும் சொல்லலாமே. அவன என் கிட்ட வச்சி பேச சொல்லுங்க.

என் கூட பெரம்பலூர், சென்னை ஹைகோர்ட், நெல்லை, நாகர்கோவில் கோர்ட்டுக்கு வந்திருக்கான். அவன் கேரக்டர் எனக்குத் தெரியாது. அத தெரிஞ்சியிருந்தா... என் குடும்பத்துக்குள்ள நிக்க விட்டிருப்பேனா? இவனோட கேரக்டர் பற்றி முதன் முதல்ல ஒரு எஸ்.ஐ.தான் சொன்னார். இவன் கேரக்டர் சரியில்லையினு. அதன்பிறகு தான் இவன 4 மாசமா அவாய்ட் பண்ண தொடங்கினேன். அத வச்சி என் கிட்ட, நான் வேற ஜாதியினுதான் என்ன அவாய்ட் பண்ணுறீங்களானு கேட்க தொடங்கினான்.

என்கூட பழகின எல்லார்கூடயும் நின்னு போட்டோ எடுத்திருக்கேன். ஆம்பளகூட தானே போட்டோ எடுத்திருக்கேன். பொம்பளகூட எடுக்கலையே? காசி, ஒன் பாத்ரூம் போறத கூட வீடியோ எடுக்கிறவன். என்னோட கிளையன்ட் என்கிட்ட பேசிட்டு இருந்தாலும்கூட வீடியோ எடுக்கிறவன். தப்பாட்டு இருந்திருந்தது தெரிஞ்சினா இவன வீட்டுக்குள்ளே கொண்டு வந்திருப்பேனா? எனக்கு குடும்பம் இல்லயா? நான் 50 வருஷமாட்டு காத்தத ஒரு வருஷத்துல நாசமாக்கியதுக்காக இவன்ட்ட வருவேனா?

எனக்கு தெரிஞ்சதுல, எனக்கு எதிரா மத ரீதியிலதான் வருவாங்க. அவர்கள் இந்து மதத்தைப் பற்றி சொல்லும் போது நான் நிறைய பதில் கொடுப்பேன். கோட்சேகூட காந்தி போட்டோ எடுத்திருந்தா, காந்தி கெட்டவர்னு சொல்ல முடியுமா? எல்லார் கூடயும் எல்லாரும் இருப்பாங்க இல்லையா? 50 வருஷ வாழ்க்கைய, கஷ்டப்பட்டு கொண்டு வந்து சம்பாதித்தத, 10 நிமிஷத்துல மீடியா வந்து கலைக்குறது இப்பம்தான் தெரியுது. எங்கேயும் நான் லேடீஸ் விசயத்துல போனது இல்ல. போகவும் மாட்டேன். லேடீஸ் கூட எந்த புகைப்படத்துலையும் இருக்க மாட்டேன்.

எனக்கு வீட்டுல சர்ச் பண்ண வந்த போலீஸ் எதுவும் எடுக்கலையினு எழுதித் தந்திட்டுதான் போனாங்க. எல்லா வீடியோவும் வச்சியிருக்காங்க. பையன்மார்கூட இருக்கிற போட்டோ இருக்கும் போது, பொண்ணுங்க கூட இருக்கிற போட்டோவும் இருக்கணும் இல்லையா? அப்புறம் ஒரு விஷயம்.. காசி வீட்டுக்கு போன போலீஸ் அவனோட லேப்டாப் கேட்டு வீட்டுக்குள் தேடினாங்க. ஆனால், லேப்டாப்பை அவங்க அம்மா கஸ்டடியில் மறைச்சு வச்சிட்டு, இல்லையினு சொல்லி போலீசை அனுப்பி வச்சிட்டு, இந்த விசயத்தை என் கிட்ட சொன்னாங்க. இதை என் வீட்டுக்கு வந்த போலீஸ்கிட்ட நான் சொல்லிட்டு, பின்னர் அவனுக்கு அம்மாகிட்ட நானே சொல்லி லேப் டாப்பை குடுக்க சொன்னேன். அதுக்கு அவன் அம்மா லேப்டாப் என் கிட்ட இல்லியேனு பொய் சொல்லிட்டாங்க. இதுல கொஞ்ச நேரத்திலேயே அவனுக்கு அம்மா பல்டி அடிச்சிட்டாங்க. உடனே நான் அவங்ககிட்ட சொன்னேன். "அந்த லேப் டாப்ப போலீஸ்கிட்ட கொடுத்திருங்க. இல்லையினா, போலீஸ் உங்களயும் தூக்கிட்டு போயிரு வாங்க'ன்னு அவங்கள வார்ன் பண்ணினேன்.

நாகராஜா திடலில் அந்த மதில் இடிச்சது, அது எல்லோரும் போறத, அத கட்டி காங்க்ரீட் போட்டது, ஒரு பாதைக்கு வேண்டி அந்த பக்கம் இடிச்சது, அத கூட கட்டல. எனக்க பக்கம் மட்டும் கட்டி விட்டேன். இவ்வளவுதான். இது பாட்சா படம் ரேஞ்சுக்கு வந்திடுமா? பஞ்சாயத்துனா என்கிட்ட கேஸ் கொண்டு வரும் கிளைன்டுக்கு என்ன பண்ணி கொடுக்கணும்னு, அத செய்து கொடுத்தால் அது கட்ட பஞ்சாயத்தா? ஹார்லி டேவிட்சன் பைக் மேட்டர் எனக்கு இப்பம்தான் தெரியும். அத ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே காசி பணம் கொடுத்து வாங்கினது. இதுக்கு கேஸ் கொடுக்க சொன்னதே நான் தான். என்னை அவன் ஒரு கேசுக்கும் கூட்டிட்டு போகல.
 

http://onelink.to/nknapp


லேடீஸ் விசயத்தில்... என்கூட பழகின யாரையும், ஒரு ஆள்கூட தப்பா நடக்க விடமாட்டேன். ஒரு பைசா, ஓண்ணரை பைசா, ரெண்டு பைசா கொடுக்கிறது அவசிய மல்ல. என் கிட்ட பைசா வாங்கின ஆளோ தந்த ஆளுட்டையோ கேட்கணும். நான் பொம்பளைய திரும்பி பார்க்காதவன். ஆர்.ஆர்.எஸ்-ல நான் உண்டு. அந்த சாகா மேல நான் இருக்கிறதுனால லேடீஸ்கிட்ட பெரிய விருப்பம் இல்லை. நான் சிகரெட் பிடிச்சா என்னை யாரும் யாசிடுவாங்கனு இல்ல. எனக்கு சிகரெட் பிடிக்காது, கஞ்சா பிடிக்காது. அதுபோல்தான்.. நான் எந்த ஒரு புள்ளையவும் காசிய வச்சி வளைக்கிறதுக்கு நான் அழகில்லையானு அர்த்தமில்லையா? காசி எனக்கு 50 வயசில் வாரான். அப்பம் 50 வயசுக்கு முன்னாடி என்னால ஒண்ணும் பண்ண முடியலையா? என்னைவிட இவன் பயங்கர கிளாமரா? அழகா? அவன பாருங்க.. நான் கூட்டத்துல நிக்கிறதுலதான் நிப்பான். பொள்ளாச்சி மேட்டர்ல எதோ பேசியிருந்தான். அந்த மேட்டர்லதான் எனக்கு தெரிய தொடங்கிச்சி. பொள்ளாச்சி பற்றி அவன் பேசினத அழிக்க சொல்லி ஏசினேன். பொள்ளாச்சி மேட்டர் விசயத்தை வச்சிதான் டாக்டர் மேட்டரை.. அந்த வீடியோவ அழிக்க சொல்லுறேன். அவன் அழிக்கவே இல்லை. அதுல அவன் என்ன மனுஷனாட்டே நினைக்கல.

அந்த டாக்டர் பொண்ணு வீடியோவை இன்ஸ்டா கிராமில் இருந்து அழிக்க சொல்லி என்கிட்ட அந்த பொண்ணு பாவம் போல கேட்டுச்சு. அவ என்னை ஏமாத்தினதுக்கு நான் விடவேமாட்டேனு.. என்னை அவ லவ் பண்ணுறான்னு காசி சொன்னான். அப்பம் நீ அவள லவ் பண்ண போறியா? அப்படியினா நான் உன் வீடடுல பேசட்டா? அவ உன்ன நம்பி தானே வந்தா... அது என்னை பற்றி ப்ரண்ட்ஸ்கிட்ட தப்பா எல்லாம் சொல்லிட்டா என சொன்ன காசி கிட்ட, நீ அப்பம் இன்ஸ்டாகிராமில் போட்ட போட்டோ எல்லாம் நீ நல்லவனு நிரூபிக்கக் கூடிய போட்டோவா? சோறா தின்னியா? நீ சாவம்புல.. ஏன் உயிர வாங்கிட்டு இருக்கிய.. கண்டிப்பா நீ ஓரு வாரத்துல உள்ளே போவேனு ஏசினேன்'' என்று பேசிக்கொண்டே போனார் ஹரி.

புகார்தாரரான சென்னை பெண் மருத்துவரின் வழக்கறிஞர் புருஷோத்தமனிடம் "வழக்கறிஞர் ஹரியிடம் தான் காசி விவகாரத்தை முதலில் சொன்னீர்களாமே? அவர்தான், உங்களை போலீசுக்கு போகச் சொன்னா ராமே?" என்று கேட்டோம். "என்ன கொடுமையா இருக்கு? அந்த ஹரி யாருன்னே எனக்குத் தெரியாது. இதுவரைக்கும் அவர் என்கிட்ட எதுவும் பேசினது இல்ல. எல்லாம் பொய்'' என்று மறுத்தார். காசி வழக்கில் உண்மைகள் பலவும் மறைக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

மணிகண்டன்


 

 

Next Story

இரக்கமின்றி பெண்ணை தடியால் அடித்த கும்பல்; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
The gang beat the woman mercilessly in madhya pradesh

பொதுவெளியில் பெண் ஒருவரை, அடையாளம் தெரியாத நபர் தடியால் கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தில், இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோவில், நான்கு பேர் கொண்ட கும்பல், ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். மற்றொரு ஆண், ஒரு தடியால் தொடர்ந்து அந்தப் பெண்ணை கடுமையாகத் தாக்குகிறார். இந்தச் சம்பவத்தை அங்குள்ள மற்ற சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுக்கின்றனர். இந்த வீடியோ மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் தெரிவிக்கையில், ‘தெரியாத ஆண் ஒரு பெண்ணை அடிப்பதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. வீடியோ வைரலானவுடன், எனது குழுவினர் இந்த விஷயத்தை அறிந்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த பகுதியை நாங்கள் கண்டுபிடித்தோம். முக்கிய குற்றவாளி கோக்ரி நிர்சிங் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், வீடியோவில் காணப்படும் மற்ற நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. 

Next Story

நிர்வாணமாக இளம்பெண்ணின் சடலம்; அதிர்ச்சி சம்பவத்தால் பரபரப்பு!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
the shocking incident on corpse of a young woman in andhra pradesh

ஆந்திரப் பிரதேச மாநிலம், பாபட்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் இன்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள பள்ளி அருகே முட்புதரில் நிர்வாண நிலையில் அப்பெண்ணின் உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த அப்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.