Skip to main content

இவன் மட்டும் காரணமில்லை... காசி வழக்கில் சிக்கிய முக்கிய பிரபலம்... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

 

kasi


பல பெண்களை ஏமாற்றி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைதாகி, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைபட்டுள்ளான் காசி. மீண்டும் 6 நாட்கள் அவனை கஸ்டடி எடுக்க அனு மதித்துள்ளது, நாகர்கோவில் போக்சோ நீதிமன்றம்.
 


இந்நிலையில், தமிழ்நாடு கடந்து, பிற மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையில் காசி ஈடுபட்டிருப்பதால், இவ்வழக்கினை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு, கடந்த 18-ஆம் தேதி அவர்கள் அனுமதி கேட்டபோது, நாகர்கோவில் காவல்துறை மறுத்துவிட்டது.

மீண்டும் அனுமதி கேட்டு, 21-ஆம் தேதி மனு அளிக்க முற்பட்ட போது, மனுவை வாங்கவே இல்லை. அதனால், அனுமதி பெறாத நிலையிலும், 21-ஆம் தேதி தடையை மீறி, குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, சம இடைவெளி விட்டு, பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதுகாத்திடு! என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக மாதர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத் தலைவர் உஷா பாசி நம்மிடம், "இத்தனை பெண்கள் மீதான பாலியல் கொடூரத்தை, காசி என்ற ஒரு நபரால் மட்டும் நிகழ்த்தியிருக்க முடியாது என்பதை எங்களால் ஆணித்தரமாகச் சொல்ல முடியும். காசி மீது கோட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்த நாளிலிருந்தே, காசியின் பின்னணியில் மேலும் பலர் இருக்கிறார்கள் என்று மாதர் சங்கத்தினர் ஆன்லைனில் புகார் அனுப்பி வருகிறோம். இதுவும் பொள்ளாச்சி சம்பவம் போலவே இருக்கிறது. அதனால், சம்பந்தப்பட்ட அத்தனை குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்தோம். மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்திக்க பலமுறை முயன்றும் முடியவில்லை.
 

incident

 


அதன்பிறகே, புகார்தாரர் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் என்பதால், ஜனநாயக மாதர் சங்க மையம் இதில் தலையிட்டது. மாநில மையம், முதல்வருக்கும் உள்துறை செயலாளருக்கும் புகார் அனுப்பியது. அதுபோல, தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களைச் சேர்ந்த ஜனநாயக மாதர் சங்கத்தினர் சி.பி.ஐ. விசாரணை கேட்டு உள்துறை செயலாளருக்கு மனு அனுப்பினார்கள். காசி வழக்கில், மாதர் சங்கம் படிப்படியாக ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வருகிறது. இவ்வளவு நடந்தும், அதிகாரிகள் தரப்பில், அலட்சியம் காட்டியே வருகின்றனர். சி.பி.ஐ. விசாரணை நடத்தினால்தான், காசியோடு கூட்டு சேர்ந்திருந்த மொத்த கும்பலையும் சட்டத்தின் பிடியில் கொண்டுவர முடியும். அதுவரை எங்களுடைய போராட்டம் தொடரும்'' என்றார் ஆதங்கத்துடன்.

குமரி மாவட்ட மாதர் செயலாளர் ரகுபதி, "இந்த வழக்கில் காவல்துறை உள்நோக்கத்தோடு செயல்படுகிறது. அரசியல் பிரமுகர்களின் தலையீடும் அதிகமாக இருக்கிறது. இல்லையென்றால், இந்த அளவுக்குக் கொடுமையான சம்பவங்கள் நடந்தும், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றாமல் காலத்தைக் கடத்து வார்களா? முதலில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கேட்டுத்தான் மனு கொடுத்தோம். பெங்களூரு, பாண்டிச்சேரி போன்ற பிற மாநிலங்களிலும் பாதிக்கப்பட்ட பெண்கள் இருப்பதாகத் தகவல் வந்துள்ளதால், தற்போது சி.பி.ஐ. விசாரணை கேட்கிறோம். அப்போதுதான், அந்தந்த மாநிலங்களில் உள்ள பாதிப்புக்கு ஆளான பெண்களைக் கண்டறிய முடியும். வி.வி.ஐ.பி.க்களின் தலையீட்டையும் அறிய முடியும். காசி பெண்களை வெளிநாட்டிற்கு கொண்டுபோன தகவலெல்லாம் வருகிறது'' என்று வேதனையை வெளிப்படுத்தினார்.
 

http://onelink.to/nknapp


முன்னாள் எம்.எல்.ஏ. லீமா ரோஸ், "காசி நடத்திய பாலியல் கொடுமைகளில் பல பிரபலங்களுக்கும் சம்பந்தம் உண்டு. அந்தப் பிரபலங்களை விசாரிக்கக்கூடிய ரீதியில் போலீசார் விசாரிக்கவில்லை. குறிப்பிட்ட அந்தப் பிரபலங்களின் வீடு களுக்கு போலீசார் போனார்கள். ஆனால், அவர்களுக்கு ரிசார்ட், பங்களாவெல்லாம் இருக்கிறது. அங்கெல்லாம் போலீசார் போகவில்லை. காசிக்கு நெருக்கமான வழக்கறிஞர் ஒருவர் அளித்துள்ள பேட்டியில், அவருடைய வீட்டுக்குச் சென்ற போலீசார், ‘ஷோ’ காட்டிவிட்டு திரும்பினார்கள். இத்தனைக்கும் அந்த வழக்கறிஞர், பகிரங்கமா எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்கிற பிரபலமான ஆள். காவல்துறை வட்டாரத்திலும் பிரபலமானவர்தான். அவரை காசி வழக்கோடு சம்பந்தம் இல்லாதவர் எனக் காட்டும் காவல்துறை, திரும்பத் திரும்ப சம்பந்தமில்லாதவரை சமூக ஊடகங்களில் பதிவு செய்யக்கூடாது என்றும் சொல்கிறது. இந்த வழக்கு போகிற போக்கைப் பார்த்தால், சும்மா விட்டுவிடுவார்கள் என்பதுபோல் தெரிகிறது'’ என்று கணித்துப் பேசினார்.

காசி மற்றும் அவனது கூட்டாளிகளால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள், மாதர் சங்கத்தினர்.


-மணிகண்டன்


 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்