Skip to main content

"எந்த சித்தாந்தமும் யாருடைய கைகளுக்குள்ளும் வந்துவிடாது... திராவிடம் என்பது நிலப்பரப்பு மட்டுமல்ல... அது ஒரு வாழ்க்கை முறை” - கனிமொழி பேட்டி!

Published on 09/11/2021 | Edited on 09/11/2021

 

jk

 

திராவிடம் என்ற வார்த்தையையும் தமிழ்நாட்டு அரசியலையும் பிரித்துப் பார்ப்பது என்பது மிகக் கடினம். கடந்த 50 ஆண்டுகாலமாக திராவிடக் கட்சிகளே தமிழ்நாட்டு அரசியலில் கோலோச்சி வந்துள்ளன. ஆனால் இன்றைக்குத் திராவிட அரசியலுக்கு மாற்றாக நாங்கள் இருக்கிறோம் என்று பலரும் தற்போது தமிழ்நாட்டு அரசியலில் களமாடிவருகிறார்கள். இந்த சூழ்நிலையில், திராவிட அரசியல் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு முக்கியம், அதன் தேவை என்ன என்பது குறித்து பல்வேறு கேள்விகளை திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

திமுகவின் முப்பெரும் விழா சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றபோது நீங்கள் ட்விட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தீர்கள். அது இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. திராவிடம் என்பது எண்ணம், ஒரு உணர்வு என்பதையெல்லாம் தாண்டி அது ஒரு வாழ்க்கை முறை என்று கூறியிருக்கிறீர்கள். திராவிடம் வாழ்க்கை முறை என்பதை எப்படி நீங்கள் வரையறுக்கிறீர்கள்?

 

எந்த ஒரு கருத்தியலுமே ஒரு காலகட்டத்தில் வாழ்க்கை முறையாக மாறுகிறது. திராவிடம் என்பது சமூகநீதி, எல்லோருடைய வாழ்க்கை நெறிமுறைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். திராவிடம் என்பது நிலப்பரப்பு சார்ந்தது மட்டும் இல்லை, அதைத்தாண்டி ஒரு வாழ்வியல் முறையாக மாற வேண்டும் என்று விரும்புகிறோம். 

 

பெரியார், அண்ணா, கலைஞர் இவர்களால் வளர்க்கப்பட்ட திராவிடம் என்பது இன்றைக்கு உங்கள் கைகளிலும், உங்கள் சகோதரர் கைகளிலும் வந்துள்ளது. அதை எப்படி இன்றைய இளைஞர்களிடம் கொண்டு செல்ல போகிறீர்கள்? 

 

யாருடைய சித்தாந்தங்களும் யாருடைய கைகளுக்குள்ளும் வந்துவிடாது. சமூகநீதி பற்றி, சுயமரியாதை பற்றி பேசிய பெரியார் கூட அது என்னுடைய கைகளில் இருக்கிறது என்று கூறியதில்லை. அம்பேத்கார் பேசியதும் அதுதான், எனவே அது மக்கள் இயக்கமாக கருத்துகள் கொண்டு சேர்க்கப்படுமே தவிர, குறிப்பிட்ட நபர்கள் அதை உரிமை கோர முடியாது. அதை நெறிப்படுத்தக்கூடிய, ஒரு தூண்டுதலாக இயக்கத் தலைவர்கள் இருக்க முடியும். தற்போது முதலமைச்சர் அதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்துவருகிறார். நிச்சயம் மக்கள் நலன் சார்ந்த, இயக்கம் சார்ந்த பணிகளை விரைந்து செய்வார்.

 

திராவிடம் என்பது புதிய பரிமாணம் பெற்றுள்ளது என்று நினைக்கிறீர்களா? அதற்கான தேவை இருப்பதாக உணர்கிறீர்களா?

 

நிச்சயமாக, எந்த ஒரு விஷயமுமே காலத்தின் போக்கில் அது தேங்கிவிடக் கூடாது. வரலாறு கூட மாறிக்கூடியதாகவே தற்போது இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு கீழடி என்பது தெரியாமல் இருந்தது. தற்போது தமிழ் பண்பாட்டின் சிறப்புக்கள் அங்கிருந்து நாம் அறிந்துகொண்டுவருகிறோம். இன்றைக்கு ஆதாரங்களோடு நம்முடைய தொன்மை பற்றி பேசக்கூடிய இடத்தில் நாம் இருக்கின்றோம். நாம் பெருமை மட்டும் பேசவில்லை, கார்பன் டேட்டிங் ஆதாரத்தோடு வரலாற்றைப் பேசிவருகிறோம். ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் கண்டெடுக்கப்படும் விஷயங்களும் நம்முடைய தொன்மையை உலகுக்கு எடுத்துக்காட்டக் கூடியதாக இருக்கிறது. எந்த ஒரு சித்தாந்தமாக இருந்தாலும் மாறுதல்கள் வரத்தான் செய்யும். நாம் எந்த தளத்தில் இருந்து போராடிக்கொண்டிருக்கிறோம் என்பது முக்கியம். 

 

நீங்கள் தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறீர்கள். காலையில் அங்கு மக்கள் பணி செய்கிறீர்கள், மாலையில் சென்னையில் பொதுமக்களோடு பேசி அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்கிறீர்கள். இரவு டெல்லி சென்று அங்கிருந்து மக்கள் பணியாற்றுகிறீர்கள். உங்களுக்கான நேரத்தை எப்படி தகவமைத்துக் கொள்கிறீர்கள்? 

 

நாம் செய்ய வேண்டும் என்று நினைக்க கூடிய விஷயங்களை செய்கின்றபோது அனைவருக்கும் அதற்கான நேரம் நிச்சயம் இருக்கும். தலைவர் கலைஞர் அப்படியாகத்தான் இத்தனை ஆண்டுகாலம் மக்கள் பணியாற்றினார். அந்த வழியில்தான் நாமும் பணியாற்ற வேண்டியுள்ளது. தூத்துக்குடி மக்கள் எனக்கு வாக்களித்த மக்கள், என்னை வெற்றிபெற வைத்துள்ளனர். எனவே அவர்களுக்கு நான் பணியாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கட்சியில் இருக்கின்ற அனைவரும் பணியாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். என்னை மட்டும் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. 

 

சமீபத்தில் தமிழ்நாட்டில் புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் முருகன் ஆகியோர் பின்வரிசையில் அமர்ந்திருந்தனர். அவர்களை முன்வரிசையில் அமர நீங்கள் வற்புறுத்தியிருந்தீர்கள். இந்த ஜனரஞ்சக அரசியலை எப்படி கையாள்கிறீர்கள்?

 

இந்த விழாவில் அவர்கள் அமர்ந்தது புரோட்டோகால்படிதான். இருந்தாலும் அவர்கள் முன்வரிசையில் அமர திமுக சார்பாக நான் அவர்களிடம் பேசினேன். இதில் ஜனரஞ்சக அரசியல் என்று எதுவுமில்லை. இயல்பாக அந்த நிகழ்வை அருகில் இருந்து பார்த்ததால் தோன்றிய ஒன்று. எல்லோரும் மனிதர்கள்தான். ஒருத்தர் வருத்தப்படுகிறார் என்ற நிலையில் அதை சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குத் தோன்றியது. அதைத்தான் செய்தேன். இதில் வேறு எந்த அரசியலும் இல்லை.