Skip to main content

கலைஞரும் இல்லை... ஷாலினியும் இல்லை... வலியோடு பேசுகிறேன்! - கலங்கிய கனிமொழி

இளம் பத்திரிகையாளராக சிறப்பாக செயல்பட்டு வந்த ஷாலினி எதிர்பாராத விதமாக சில மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கவிதை எழுதுவதில் அதீத விருப்பம் கொண்டிருந்த அவரின் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக அவரின் கவிதைகள் அனைத்தையும் தொகுத்து 'பாரதி யாழ்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட அவரின் ஊடக நண்பர்கள் முடிவு செய்தனர். இந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி சிறப்புரையாற்றினார். கவிதையை பற்றி புகழ்ந்து பேச ஆரம்பித்த அவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை நிறைவாக ஆட்சியாளர்கள் பற்றி கொஞ்சம்  காட்டமாகவே பேசினார். அவரது பேச்சு...

"ஷாலினியை பற்றி தெரிந்த, பழகிய நபர்கள் அதிகம் இருக்கும் இந்த இடத்தில், அவரை பற்றி பேச வேண்டிய நெகிழ்வான தருணமாகவே இதை பார்க்கிறேன். வார்த்தைகளை தேடித்தேடி பேச வேண்டிய நிலையில்தான் நான் உங்கள் முன் நிற்கிறேன். நான் இந்த அரங்கிற்குள் நுழைந்த போது ஷாலினி்யின் பெற்றோர்கள் என்னிடம் வந்து, ஷாலினி தலைவர் கலைஞரோடு ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டாள் என்று கூறினார்கள். அவர்கள் அவ்வாறு கூறியதும், நான் கலைஞரிடம் கூட்டிச் செல்கிறேன் என்று கூற, என் உதடுகள் எத்தனித்தது. ஆனால், அதை சாத்தியமாக்க அவர்கள் இருவருமே இல்லை என்று அதன் பிறகே நான் உணர்ந்தேன். அவருடைய பெற்றோரின் வலி, வேதனை ஆகியவற்றை இங்கே பேசக்கூடாது. ஆனாலும், அதை என்னால் உணர முடிகிறது. யார் வேண்டுமானாலும் கலைஞரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலையில், ஷாலினி கலைஞரோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியாமல் போனதும், அந்த செய்தி எனக்கு தெரியாமல் போனதும் மிக வருத்தமான ஒன்று. எனக்கு தெரிந்திருந்தால் நிச்சயம் அதை ஷாலினிக்கு நிறைவேற்றிக் கொடுத்திருப்பேன். அவ்வாறு செய்ய முடியவில்லையே என்ற வலியோடுதான் நான் உங்கள் முன் நிற்கிறேன்.
 

  kanimozhi speaks about kalaigar karunanidhi
இத்தனை நண்பர்கள் ஒன்றுகூடி அந்த பெண்ணை பற்றிக் பேசக்கூடிய, அந்த பெண்ணின் புத்தகத்தை வெளியிடக் கூடிய வாய்ப்பு என்பது, ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்குக் கூட கிடைக்காது. அந்த வகையில் ஷாலினி நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். அதற்கு அரங்கத்திற்கு வந்துள்ள அவளின் நண்பர்களே சாட்சி. இதைவிட ஒரு பெருமையான வாழ்வை யாராலும் வாழ்ந்திருக்க முடியாது. இதற்காக ஷாலினியின் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதைவிட அதிகமாக ஷாலினியின் பெற்றோருக்கு யாரும் செய்துவிட முடியாது. இன்று சமூகம் என்ன பிரச்சனைகளை எதிர்கொண்டு இருக்கிறது என்கிற சமூக அக்கறை இந்தப் பெண்ணுக்கு அதிகம் இருந்திருக்கிறது. ஷாலினி இன்று நம்மோடு இல்லாமல் இருப்பது நமக்கு நேர்ந்திருக்கின்ற பெரிய இழப்பு. ஷாலினி போல தமிழ் மீது அதிக பாசமும், சமூக அவலங்களை கலைய வேண்டும் என்ற நோக்கமும் பத்திரிகைதுறை நண்பர்கள் அனைவருக்கும் வர வேண்டும். இத்தகைய ஆர்வத்தை அவரின் எழுத்துக்கள் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த புத்தகத்தில் உள்ள சிறப்பான செய்திகளை அனைவரும் கூறினார்கள். நானும் சிலவற்றை மேற்கோள் காட்ட வேண்டும். அந்த வகையில், நட்பையும் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்க அருகில் இருப்பவர்களுக்கு கொடுத்துவிடுங்கள் என்ற ஒரு வரியும், நாம் வாழ்வில் செய்யக்கூடாத ஒன்று பிறரை வேதனைபடுத்துவதுதான் என்ற மற்றொரு வரியும் முக்கியமானதாக நான் பார்க்கிறேன். ஆனால், அதை எல்லாம் மறந்துவிட்டு வேறு வேலைகளில் நம்முடைய கவனத்தை திருப்பிக்கொண்டுதான் நாம் இருக்கிறோம். நம்மை தாக்கும் விஷயங்களை எல்லாம் நாம் எப்படி தாண்டிப்போய் கொண்டிருக்கிறோம் என்பதை எல்லாம் இந்தப்  புத்தகத்தில் தெளிவாகக் கூறியிருக்கிறார். நாம் மேஜையில் உணவுக்காக காத்திருக்கும் போது, நமக்கு கிடைக்கும் அந்த புல் மீல்ஸ் உணவில், உடைந்திருக்கிற அப்பளத்துக்காக மட்டுமே நாம் கவலை கொள்கிறோம். அது நம்முடைய கைக்கு வருவதற்கு கஷ்டப்பட்ட விவசாயிகளை நினைத்து பார்க்கவில்லை என்பதை ஒரு கவிதையாக இந்தப் புத்தகத்தில் ஷாலினி கூறியுள்ளார். சிலப்பதிகாரத்தை பற்றி்ய ஒரு கவிதையில் கண்ணகியிடம் ஒரு கேள்வியை கேட்டுள்ளார். தவறு செய்த கோவலனை எரிக்காமல், மதுரையை எரித்தது எந்த விதத்தில் நியாயம் என கேட்டுள்ளார்.

இன்று இந்த சமூகத்தை எதிர்நோக்கி உள்ள அனைத்து கேள்விகளையும் தன்னுடைய இந்தப் புத்தகத்தின் வாயிலாக ஷாலினி கேட்டுள்ளார். இந்த கேள்விகளுக்கு விடைகாண வேண்டும் என்ற கட்டுப்பாடு அனைவருக்கும் இருக்க வேண்டும். இங்கு பேசிய தோழர் ஒருவர் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சுடுகாடு என்று பேசிவிட்டார். ஒரே சுடுகாடு என்பதை அவர் தவறாக சொல்லியிருக்கக்கூடும். அதற்கு, இங்கு இருக்கின்ற ஆட்சியாளர்கள் ஒத்துக்கொள்ளப்போவதில்லை. ஒற்றை சுடுகாட்டை இந்த ஆட்சியாளர்கள் அனுமதிக்கவே மாட்டார்கள். அவர்கள் மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் மனிதர்கள் பிரிந்து கிடப்பதையே விரும்புகிறார்கள்".

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்