Skip to main content

காஞ்சிபுரம் டூ தலைமைச் செயலாளர்! யார் இந்த சிவ்தாஸ் மீனா?

Published on 29/06/2023 | Edited on 29/06/2023

 

Kanchipuram To Chief Secretary! Who is this Sivdas Meena?

 

தமிழகத்தின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து அடுத்த தலைமைச் செயலாளராக யார் வருவார் என தீவிரமான விவாதங்கள் எழுந்து வந்தன. இதில் அடுத்த தலைமைச் செயலாளர் பதவிக்கு அதுல்யா மிஸ்ரா, விக்ரம் கபூர், சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட சில பெயர்கள் பரிந்துரையில் இருந்தன. இந்நிலையில் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகத்தில் 49வது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட சிவ்தாஸ் மீனா ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். சிவ்தாஸ் மீனா 1964 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி அன்று பிறந்தவர். ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றுள்ளார். அதன் பின் ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர் ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் ஜப்பானிய மொழிகளில் சரளமாகப் பேசும் வல்லமை படைத்தவர்.

 

இதனிடையில், 1989 ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக கேடரில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். காஞ்சிபுரத்தில் உதவி ஆட்சியராக பயிற்சியை தொடங்கிய சிவ்தாஸ் மீனா, கோவில்பட்டி உதவி ஆட்சியராக பணிபுரிந்துள்ளார். அதைத் தொடர்ந்து வேலூர் கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் என அடுத்தடுத்து பணி உயர்வு பெற்றுள்ளார். மேலும் இவர் கடந்த 10 ஆண்டுகளில் ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்துத் துறை என அனைத்து துறைகளிலும் சிறப்பாக தனது பணியை செய்துள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் என பல முக்கிய துறைகளில் சிவ்தாஸ் மீனா பதவி வகித்துள்ளார். 30 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ் பணியில் அனுபவம் கொண்ட சிவ்தாஸ் மீனா, 2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா தலைமையில் 4 தனிச் செயலாளர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார். தமிழ்நாடு கேடரில் இருக்கும் அதிகாரிகளில் சிவ்தாஸ் மீனா தான் பதவி அந்தஸ்தில் மூத்தவர்.

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பின் சிவ்தாஸ் மீனா மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மாசுக் கட்டுப்பாடு மத்திய வாரியத்தின் சேர்மன் பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின் 2021 ஆம் ஆண்டில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்பு மீண்டும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார். ஏனெனில் சிவ்தாஸ் மீனா எப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலும் மிகவும் திறமையாகச் செயல்படக் கூடியவர் என்று நற்பெயரைப் பெற்றுள்ளதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

 

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக தற்போது வரை பதவி வகித்து வந்துள்ளார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்தாஸ் மீனா புதிய தலைமைச் செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

Next Story

வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப்பை வழங்கிய கூடுதல் தலைமைச் செயலாளர் (படங்கள்)

Published on 01/04/2024 | Edited on 01/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதன் பிறகு, ஒவ்வொரு கட்டங்களாக பல்வேறு மாநிலங்களில் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் நடைபெறும் வாக்குப்பதிவுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், இன்று (01-04-24) காலை 11.30 மணி அளவில் மாவட்ட தேர்தல் அலுவலர் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வேப்பேரி ரித்தர்டன் சாலையில் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணிகளை பார்வையிட்டு பூத் ஸ்லிப் வழங்கினார்.

Next Story

நிவாரணத் தொகை வழங்கும் பணி; அரசு அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர்  அறிவுரை

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
The work of granting relief; Chief Secretary Advice to Government Officers

இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை பருவத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய இரு தினங்களில் பெய்த அதிகனமழை காரணமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பாதிப்பின் அடிப்படையில் நிவாரணத் தொகையாக 6 லட்சத்து 63 ஆயிரத்து 760 குடும்பங்களுக்கு, குடும்ப அட்டையின் அடிப்படையில் ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை மற்றும் 5 கிலோ அரிசி வழங்கவும், 14 லட்சத்து 31 ஆயிரத்து 164 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க அரசு ஆணைகள் பெறப்பட்டது. அதன் அடிப்படையில், இந்த 4 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் ஆணையாளர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று (28.12.2023) முன்னேற்பாடுகள் கூட்டம் நடத்தி இப்பணியினை சிறப்புடன் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கினார்.

இப்பணியில் குறைபாடுகள் ஏதுமின்றி உரிய தேதிகளில் கூட்ட நெரிசல் இன்றி, அட்டைதாரர்கள் நிவாரணத் தொகை பெறும் வகையில் சுழற்சி முறையில் விநியோகம் மேற்கொள்ளும் வண்ணம், 26.12.2023 முதல் அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை பெறவேண்டிய நாள் மற்றும் நேரம் குறித்து, அட்டைதாரரின் வீடுகளில் நேரடியாக டோக்கன்கள் வழங்கப்பட்டன. 29.12.2023 முதல் தொடர்புடைய நியாய விலைக் கடைகளில் அட்டைதாரர்கள் குறிப்பிடப்பட்ட நாட்களில் குறித்த நேரத்தில் குடும்ப அட்டையுடன் நியாய விலைக் கடைகளுக்கு வருகை தந்து அவர்களுக்குரிய நிவாரண உதவிகளைப் பெற்றுச் செல்லலாம்.

இந்த நிவாரணத் தொகை பொதுமக்களுக்கு எவ்வித புகாருக்கும் இடமின்றி வழங்கிடவும், புகார் எழும் சூழலில் அதனை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு நல்கிட ஏதுவாகத் திருநெல்வேலி மாவட்டத்திற்கு 93424 71314, 97865 66111 எண்களிலும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு 94864 54714, 1077 எண்களிலும், தென்காசி மாவட்டத்திற்கு 04633-290548 எண்ணிலும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 04652-231077 எண்ணிலும், கட்டுப்பாட்டு அறைகள் 26.12.2023 முதல் செயல்பட்டு வருகின்றன.

மேலும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் அலுவலகத்தில் 044-28592828 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு அறை அலுவலகப் பணி நேரத்தில் செயல்படும். பொதுமக்களுக்கு வெள்ள துயர் துடைக்கும் நோக்குடன் வழங்கப்படும் நிவாரண உதவிகள், பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும் நிலையில், பொதுமக்கள் இப்பணிக்கு போதுமான ஒத்துழைப்பு நல்கி நிவாரணம் பெற வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. என அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.