ADVERTISEMENT

கமல் சொன்னது நடக்கலையே... கரோனாவுக்கொரு முடிவில்லையே...

04:06 PM Sep 24, 2020 | prithivirajana

ADVERTISEMENT

ADVERTISEMENT

01 ஜனவரி 2020, 12:00 AM “விஷ் யூ எ ஹேப்பிஈஈஈஈஈஈஈஈ நியூ இயர்” என உச்சஸ்தாயியில் கத்திக்கொண்டே, உற்சாகமாய் கமலஹாசன் புத்தாண்டு வாழ்த்துச் சொன்னார். அவர் வாழ்த்துச் சொல்லாமல் ஒரு வருடமும் விடிவதில்லை. ஆனால், இந்த வருடம், முடியவே போகிறது, இன்னும் விடியலைக் காணவில்லை. கரண்டு கம்பியில் கட்டி வைத்து அடித்துத் துவைக்கும் ஆனந்தராஜாக கரோனா அராஜகம் செய்ய, பாவப்பட்ட ரஜினியாய் நாம் வலுவிழந்து நிற்கிறோம். பீசு பீசா கரோனா கிழிச்சாலும், பச்ச குழந்தைமாதிரி சிரிக்கிறோம்.

கரோனா நோய்ப் பரவல் இந்தியாவில் பரவ ஆரம்பித்ததும், உங்க டூத் பேஸ்ட்டுல உப்பு இருக்கா, உங்க டாய்லெட் சுத்தமா இருக்கான்னு தடாலடியா கதவ உடச்சிட்டு உள்ள வர்ற சமந்தா, அப்பாஸ் மாதிரி இந்தக் கரோனாவும் சொல்லாம கொள்ளாமா வந்துடும்னு ஆராய்ச்சியாளர்கள் அதிர வைத்தார்கள். வின்வெளியில் படை கட்டி பந்தா காட்டும் ட்ரம்ப் முதல் அம்மா வழியில் அசால்ட்டாக ஆட்சி நடந்தும் எடப்பாடி வரை, யாராலும் இந்த ஆனந்தராஜ கட்டுப்படுத்த முடியல.

கரோனா ஒரு இலுமினாட்டி சதின்னு சிலர் சொல்ல, இல்ல இல்ல இது பயோ வாரு’ன்னு பலர் சொல்ல, அதெல்லாம் இல்லப்பா இது சீனா வைரசுனு 'பெரியண்ணன்' ட்ரம்ப் ஒரே போடா போட, ‘போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்குனு’ ஜின்பிங் சொல்ல, முன்னாடில்லாம் காரணத்த சொல்லிட்டு அடிப்பாய்ங்க ஒரு ஆறுதலா இருக்கும், இப்ப ஏன் எதுக்குனு சொல்லாமலே அடிக்கிறாய்ங்களேனு மண்டைய பிச்சுட்டு நாமல்லாம் சுத்த, ச்சா... அதெல்லாம் ஒரு அழகிய நிலாக் காலம்.

சரி, நமக்கு எதுக்கு ஊர் வம்புனு ஆஃபிஸ் போனா, தம்பி நாளைலேந்து லாக்டவுன் நீங்க வீட்லேந்தே பாக்கலாம்னு ஆபிசர் சொன்னார். அப்பாடா, வீட்டுக்குப் போயி மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகமா இருக்கும்னு நெனச்ச உடனே, ஊர்களுக்குச் செல்ல போக்குவரத்துத் தடை செய்யப்படுவதாகக் 'கரும்பு மனிதர்' பழனிசாமி அறிவித்தார். அடப் போங்கப்பா, எங்க ‘குலதெய்வம்’ மோடி காப்பாத்திடுவாருனு நம்பி இருந்துட்டேன்.

அடுத்த நாள் ‘இரவு 8 மணிக்கு’ மோடி பேசுறாருன்னு என் நண்பன் பதறி துடிச்சு சொல்ல, இருடா, இரு... எனக்கும் ஒரு மாதிரியாதான் இருக்கு, என்னன்னுதான் கேப்போம்னு அவன சமாதானப்படுத்தினேன். கொஞ்ச நேரம் கழிச்சு, மாண்புமிகு பிரதமர் தொலைக்காட்சியில் உதயமானார். அனைவரும் 21 நாள்கள் வீட்டுக்குள்ளேயே இருங்க, சமூக இடைவெளியோட இருங்க என அறிவுறுத்தியவர், சில நாட்களுக்குப் பிறகு மொட்டை மாடிக்குச் சென்று ‘அகல்’ விளக்கோ, செல் வெளிச்சமோ, 9 நிமிடம் காட்டச் சொன்னார். உடனே மொட்ட மாடிக்குப் போய் செல் வெளிச்சம் அடிச்சு பாத்தா, ஆத்தி! ஒரு ஊரே நெருக்கமா நிக்குது மாடியில. பிரதமர் கோச்சிக்கிட்டாலும் பரவா இல்லன்னு அந்தக் கூட்டத்துலேந்து தப்பி ஓடியாந்துட்டேன்.

அப்பறம் ஒரு நாள், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் எனும் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது. சரி, இ- பாஸ் எடுத்து ஊருக்குப் போகலாம்னு பார்த்தா, யாருக்காச்சும் ‘கல்யாணம்’ ஆகணும், இல்லன்னா ‘கருமாதி’ ஆகணும் அப்போதான் விடுவோம்னு அந்த அரசு இணையத்தில் போட்டுருந்துச்சு. ‘நண்பனுக்கு கல்யாணம்னு’ போட்டா கல்யாண பத்திரிகையைப் பதிவேற்ற சொல்லது... நண்பனோட கல்யாண பத்திரிகையைப் பதிவேற்றினால், உங்க அப்ளிகேஷன் ரிஜெக்ட்னு வந்துடுச்சு. அப்போ நல்ல வேலையா தூரத்துச் சொந்தத்துல ஒரு தாத்தா காலாவதியாக, கல்யாணத்துக்குதான் பாஸ் தரல, இப்ப மறைவுனு போட்டா அப்ரூவ் பண்ணிடுவாங்கனு நம்பி... அப்ளை பண்ணேன். ஆனா, அவரோட மரணச் சான்றிதழ் கேட்டதும், ‘எனக்கு அப்படியே ஒரு நிமிஷம் தல சுத்திடுச்சு’. அவர் சாகப் போறாருன்னு முன்கூட்டியேவா சான்றிதழ் எடுத்து வச்சிக்க முடியும், என்னங்க சார் உங்க சட்டம்னு கதவ மூடிக்கிட்டு ரூம்லேயே தங்கிட்டேன்.

இந்தக் கரோனாவுக்கு மருந்தே இல்லன்னு உலக நாடுகள், உதட்ட பிதுக்கிட்டு நின்னப்ப நம்ம ‘தேவ்’... அதாங்க பாபா ராம் தேவ்...., நாங்க இருக்கோம்னு சொன்னாரு. புதுசா மருந்து கண்டுபுடிச்சேன்னு சொல்லி நம்ம வயித்துல பால வாத்தாரு. ஆனா, அவரோட நெருக்கமா இருக்குற மத்திய அரசே அத கள்ளாட்டம் கள்ளாட்டம்னு சொல்லி எல்லா கோட்டையும் அழிச்சிடுடிச்சு. நமக்கு இருந்த ஒரே நம்பிக்க நட்சத்திரமும் ஃபியூஸ் போய்ட்டு. இப்போ ரஷ்யாவின் தடுப்பூசி வரட்டும்னு நாஞ்சில் போல காத்திருக்கோம். ஆனா, இன்னும் சிலர் கோமியம் குடிச்சா கோவிட் குணமாகும்னு சொல்லி குடிச்சே காமிச்சாங்களே.

இந்த மாதிரி ஒரு கொடூர நோய் வரும்னு ஒருத்தர் முன்னாடியே சொல்லிட்டதா சில விவாதங்கள் போனது. உலக நடப்ப தெரிஞ்சிக்க ட்விட்டருக்குள்ள போனப்பதான் அந்த ரகசியம் தெரிஞ்சது. ஆமா, '#அன்றே_சொன்னார்_சூர்யா'. ஆனா சூர்யா எப்படித் தான் எல்லா நோயையும் முன்னாடியே சொல்றாருன்னு தெரியல, ‘கரோனா’ முதல் ‘நீட்’ வரை அத்தனையும் முன்னாடியே உணர்ந்து எச்சரித்துள்ளார். நாமதான் பெருசா எடுத்துக்கல. அதேநேரம், நீட் வேணாம்னு சொல்ற சூர்யாதான் நீட் உள்இடஒதுக்கீட்ட ஆதரிச்சு ட்வீட் போட்றாரு. அப்போ நீட் வேணுமா? வேணாமா? என புற்றீசல் போல பெருகிவரும் யூ- டியூபர்கள் சூடு பறக்க விவாதம் நடத்தி வருகின்றனர்.

முகத்துக்கு போட்ட மாஸ்க், வழுக்கி வழுக்கி வாய்க்கு வந்து இப்போ தாவாய்ல செட்டில் ஆயிடுச்சு. சானிடைசர் போட்டு போட்டு உள்ளங்கை தோல் எல்லாம் உறிஞ்சு போய்டுச்சு. இந்தக் கரோனா தான் நம்மை இப்படிப் படபடப்பா வச்சிருக்குன்னா, நம்ம அரசுகள் அதுக்கு மேல, நம்மை பதட்டமா வச்சிருக்கு. திடீர்னு ‘சுற்றுச் சூழல் வரைவு அறிக்கை’, ‘புதிய கல்விக் கொள்கை’, ‘மாஸ்க் வாங்கியதில் ஊழல்’, ‘கிசான் ஊழல்’, ‘விவசாய சட்ட மசோதா’ என எல்லாமே புது ஐட்டமா இருக்கு. இதுலேந்து நம்மள காப்பாத்த ஒரு ‘குருநாதர்’ வரமாட்டாரா?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT