Skip to main content

தயவு செய்து வாயை மூடுங்கள்..! கமல்ஹாசனுக்கு ராஜேஸ்வரி ப்ரியா கண்டனம்..!

Published on 13/01/2021 | Edited on 13/01/2021
RAJESWARI PRIYa

 

"எங்கள் ஆட்சி அமைந்தால், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் தருவோம்" என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிவித்திருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை வன்மையாக கண்டிப்பதாக அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி ப்ரியா கூறியுள்ளார்.

 

கடந்த 15 வருடங்களில்தான் பெண்கள் புதுப்புது துறைகளில் கால்பதித்து சாதித்துக் கொண்டிருக்கின்றனர். ராணுவத்தில் இதுவரை பதவி உயர்வே இல்லாமல் இருந்தது. இந்த வருடம்தான் பதவி உயர்வு உண்டு என்பதை அறிவித்திருக்கிறார்கள். பெண்கள் வேலைக்கு செல்ல காரணமே குடும்ப பாரத்தை குறைக்கணும், பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டுவர வேண்டும், தங்களுக்கு உள்ள திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்குத்தான். 

 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் திரும்பவும் கரண்டியை பிடித்தால் சம்பளம் உண்டு. அடுப்பங்கறையில் இருந்தால் சம்பளம் உண்டு என்பது என்ன நியாயம்? பெண்களை மீண்டும் அடிமையாக்கி, அடுப்பங்கறையில் இருங்கள் என்று சொல்வதா? பெண்கள் வீட்டு வேலைக்குத்தான் சரியாக இருப்பார்கள். வேறு எந்த வேலைக்கும் சரியாக இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறார். ஒரு அரசியல் கட்சி நடத்துபவர் என்ற வகையிலும், ஒரு பெண் என்ற வகையிலும் இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கமலுடன் இருப்பவர்கள் வசதிப்படைத்தவர்கள், பணபலம் உள்ளவர்கள். நடுத்தர, பாமர மக்களின் வாழ்க்கைப் பற்றி அவருக்கு தெரியாது. 

 

குடும்பம் என்பது பாசத்தால் பிணைக்கப்பட்டது. பிள்ளைகளுக்கு, கணவருக்கு, பெற்றோர்களுக்கு மற்றும் வீட்டில் உள்ளவர்களுக்கு பாசத்தால், அன்பால் சமைக்கிறார்கள் பெண்கள். இதில் வேலை செய்வதற்கு சம்பளம் என்று சொல்வது மலிவான அரசியல் என்றே பார்க்கத் தோன்றுகிறது. தமிழகம் எவ்வளவு கடனில் உள்ளது? அதனை எப்படி அடைப்பது? கஜானா காலியாக உள்ளதால் அடுத்து எந்த கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும் சிக்கல்தான். ஒரு கட்சித் தலைவராக அந்த கடன்களை எப்படி தீர்ப்பது என்று நான் யோசிக்கிறேன். 

 

ஆனால் கமலுக்கு இதெல்லாம் தெரியுமா? கமலுக்கு அரசியல் தெரியாது. அதனால்தான் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் தருவோம் என்றெல்லாம் பேசி வருகிறார். புதிய அரசியல் என்கிற பெயரில் பெண்களுக்கு நல்லது செய்வதாக இதுபோன்ற கருத்துக்களை சொல்ல வேண்டாம். தயவு செய்து உங்கள் வாயை மூடுங்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துவதுபோலவே நினைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கிறார் என கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார விவரம் வெளியீடு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Kamal Haasan election campaign details release

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். மேலும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை வண்ணாங்கோயில் என்ற இடத்தில் பரப்புரையை தொடங்க உள்ளார்.

இந்நிலையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏபரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.