Skip to main content

"கமல் கடந்ததும் கடக்க போவதும்..." வாழ்த்துக்கள் உலகநாயகன்!

1959 ஆம் ஆண்டின் மத்திய பகுதியில் கருப்பு வெள்ளை திரைப்படம் ஒன்று பரபரப்பாக தயாராகிக் கொண்டிருந்தது. அந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டிய சிறுவன் ஒருவன், உடல்நிலை சரியில்லாதக் காரணத்தால் படபிடிப்பு தளத்திற்கு வர முடியாமல் போனது. இது படத்தின் இயக்குநர் உள்ளிட்ட முக்கியமானவர்களுக்கு அந்த சிறுவனுடைய காட்சி எடுக்கும் சமயத்தில்தான் தெரிவிக்கப்படுகிறது. இவ்வளவு கால தாமதமாக கூறுகிறீர்களே? என்று அவர் மற்றவர்களை கடிந்து கொண்டாலும்,  முக்கியமான காட்சியை எடுக்க முடியவில்லையே என்ற வருத்த ரேகை அவர் முகத்தில் உடனடியாக பரவியது. என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்த அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டான் ஐந்து வயது கூட முழுதாய் நிறைவடையாத ஒரு சிறுவன். அவருக்கு நம்பிக்கை வரவில்லை. பல முறை ரிகர்சல் கொடுத்து தயார் நிலையில் வைத்திருந்த அந்த சிறுவனே பல முறை ரீடேக் வாங்கும் போது இந்த சிறுவன் என்ன செய்யபோகின்றானோ? என்ற அச்ச உணர்விற்கு இடையே டேக் சொல்கிறார் இயக்குநர். அடுத்த ஐந்து நிமிடம் கழித்து கட் சொல்கிறார்.

ஒரு நிமிடம் சிறுவனை ஏற இறங்க பார்க்கிறார் இயக்குநர். முன்னணி நடிகர்களே சோகமான காட்சியில் ஒரு முறையாவது தவறு செய்யும் போது இவன் எப்படி சிறு பிழையும் இல்லாமல் நடித்தான் என்று தனக்குதானே மனதில் கேட்டுக்கொள்கிறார். வந்த உடனேயே தவறாக கணித்தோமே, அதனால் எப்படி அவனிடம் இதை கேட்பது என்ற சஞ்சலம் வேறு அவரிடம். என்ன செய்வது என்று கையை பிசைந்தார். சரி என்று பெயரையாவது கேட்போமே என்று நினைத்து தம்பி! உன் பெயர் என்ன என்று கேட்டார், திரைப்பட காட்சியில் வெளுத்துவாங்கிய அவன், சற்று வெக்கத்தோடு தனது வீட்டில் அழைக்கும் பெயரை சொல்கிறான். நல்லா நடிச்சப்பா என்று அவர் சொல்லி முடித்த நொடியில் இருந்து, ஐந்தாவது மாதத்தில் அந்த சிறுவனுக்கு அந்த படத்தில் நடித்ததற்காக மத்திய அரசு ஜனாதிபதி விருதை அறிவிக்கிறது. அந்த சிறுவன் நடித்த திரைப்படம் களத்தூர் கண்ணம்மா... சிறுவனின் பெயரை இதற்கும் மேலும் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. இன்று பிறந்தநாளை கொண்டாடும் உலக நாயகன் தான் அவர்!

 

kamalதேசிய விருதோடு பயணத்தை ஆரம்பித்த அவருக்கு ஹீரோ என்ற ஸ்தானம் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. அவர் ஏறாத படிகள் இல்லை. போகாத தயாரிப்பாளர் அலுவலகம் இல்லை. காலம் அவரை அங்குல அங்குலமாக சோதித்தது. அதைவிட வறுமை விடாமல் வாட்டியது. பரமகுடியில் அம்மா பாத்துக்கொள்வார்கள். ஆனால் தலைநகரில்... வாலிப வயதில் மீண்டும் கையேந்த அந்த மீசை கூட சரியாத அரும்பாத அந்த இளைஞனுக்கு என்னமோ அதிகப்படியான கூச்சம். பள்ளிப்படிப்பை பாதியில் விட்டாலும் படித்தவர்களிடம் பேசுவது என்பது அவருக்கு தேனாக இனித்தது. தன்னுடைய திரை அரங்கேற்றம் எப்போது என்று காத்துக்கொண்டிருந்த அவரை, தன்னுடைய அரங்கேற்றம் படத்தின் மூலம் அரங்கேற்றம் செய்தார் இயக்குநர் சிகரம் பாலசந்தர். ஆம், அன்று அரங்கேற்றப்பட்ட அவர்தான் இன்று ஆட்சியாளர்களுக்கு எதிராக தன்னுடைய குரலை அனாயாசமாக கொடுக்கிறார், எல்லாவிதமான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும்!

சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமா என்ன ஆகுமோ? என்று உதறல் எடுத்துக்கொண்டிருந்த தமிழ் சினிமாவுக்கு "இதோ தலைவன் இருக்கிறேன்" என்று தன்னுடைய படங்களில் வாயிலாகவே பதில் சொன்னான் இந்த மகாநடிகன். "இவன் என்னைவிட சிறந்த நடிகன்" என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சொன்னதே அதற்கு அக்னிசாட்சி! கலைத்தாய் எங்களை எல்லாம் கையை பிடித்துக்கொண்டு நடந்து செல்கிறார், ஆனால் கமலை மட்டும் இடுப்பில் அமர வைத்து அழைத்து செல்கிறார் என்று ரஜினிகாந்த் சொன்னது சூப்பர்ஸ்டார் சாட்சி! 50 ஆண்டுகளாக தமிழகத்தில் கட்சி நடத்தி பழம்தின்று கொட்டை போட்ட கட்சிகளை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தி தலைநகரிலேயே அவர்களை தெறிக்கவிட்டதற்கு வரலாறே சாட்சி! ஆனால் ஆழ்வார் பேட்டையில் இருந்து செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குச் செல்வதற்கு இந்த சாட்சிகளைவிட மிக முக்கியமாக தேவைப்படுவது எதற்கும் குலையாத மனசாட்சி!  உங்களின் திரைப்பயணத்தில் காட்டிய அதே மன உறுதியையும், உத்வேகத்தையும் காட்டினால் "உன்னை வெல்ல இந்த உலகத்தில் யாரு" என்ற உங்களின் பாடல் வரிகளை உண்மையாக்கலாம். உங்களின் இரண்டாவது இன்னிங்ஸில் நீங்கள் இன்னிங்ஸ் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் விரும்பினாலும், அரசியல் சினிமா அல்ல என்பதைச் சொல்ல வேண்டிய பொறுப்பு ஒரு ரசிகராக எங்களுக்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது!

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்