Advertisment

கள்ளச்சாராய உயிர்பலி; சிபிஐ விசாரணை கேட்கும் பாஜக !  

 Kallakurichi issue, BJP wants CBI investigation! .

Advertisment

கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிர்பலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், திமுக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டி வருகின்றன. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலிகள் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் தமிழக பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்.

அதில், "திமுக அரசின் அலட்சியம், நிர்வாக சீர் கேட்டால் தமிழகத்தில் 49-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளச்சாராயத்தால் பலியாகி உள்ளனர். கள்ளச்சாராய உயிர்பலி காரணமாக கலெக்டர்,எஸ்.பி , ஒட்டுமொத்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றம், மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் அமைத்த ஒரு நபர் நீதி ஆணையம் மற்றும் சிபிசிஐடி போலீசாரின் விசாரணை என தன் நிர்வாக சீர்கேடுகளை மறைத்து, கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்பது போல தமிழக மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றியுள்ளது. முதலமைச்சர் உத்தரவு என்று பெயருக்கு ஒரு உத்தரவு வந்த பின் ஏறத்தாழ 60 மணி நேரத்திற்கு பிறகு கள்ளக்குறிச்சியில் உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜீவால் ஆய்வு செய்ததும் ஆறுதல் கூறியதும் கடும் கண்டனத்துக்குரியது

கள்ளச்சாராய உயிர் பலியால் தமிழகமே கண்ணீரில் மிதக்கும் பொழுது தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா கள்ளக்குறிச்சிக்குச் சென்று, தானே முன் நின்று போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகளையும் மருத்துவ உதவிகளையும் செய்யாமல் நேற்று நடந்த காவல்துறை துப்பாக்கி சூடும் போட்டியில் கலந்து கொண்டது தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டின் அலட்சியத்திற்கு மிகப்பெரிய உதாரணம்*. 40 பேர் பலி 19 பேரில் நிலை கவலைக்கிடமாக உள்ளது சேலம், விழுப்புரம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் 98 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

இந்த சூழ்நிலையில் காவல்துறையியின் விழாவில் தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா கலந்துகொண்டு சிறப்பித்து மகிழ்ந்து, உயிர் பலியால் கண்ணீரில் தவிக்கும் கள்ளக்குறிச்சி மக்களுக்கு உதவிடாமல், காவல்துறையின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி கவலைப்படாமல் காவல்துறையில் விழாவில் கலந்துகொண்டு பெருமைப்பட்டுக் கொள்வது நியாயமா?. சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் தலைமைச் செயலாளர் உள்துறை செயலாளர், டி.ஜி.பி அனைவருமே பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று இருந்தால் தற்போது நடந்த உயிர் பலி பாதியாக குறைக்கப்பட்டிருக்கும்.

கள்ளச்சாராய உயிர் பலி வழக்கில் மெத்தனால் வழங்கியவர் மீது கடும் நடவடிக்கை எனும் வெற்று அறிவிப்புகள் மற்றும் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது ஏழை மக்களின் உயிருக்கு விலை பேசுவது போல இருக்கிறது. தமிழக முதல்வரிடம் கள்ளக்குறிச்சி மக்கள் எதிர்பார்ப்பது, பணம் அல்ல, உண்மையான அக்கறையுடன் உணர்வுடன் இனி உயிரிழப்பு நேராமல் தடுப்பேன் என்ற உத்தரவாதத்தை தங்களிடம் நேரில் வந்து முதல்வர் கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது தான்.

ஆனால் தமிழக முதல்வரோ, தனது அரசின் நிர்வாக சீர்கேட்டால் 40 பேர் பலியாகியும் ஒரு மாநில முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க வராமல், நிர்வாக இயந்திரங்களை முடிக்கி விட்டு கொள்வதாக விளம்பரப்படுத்திக் கொள்வது நியாயமா? சிபிஐ விசாரணை கேட்டு இன்று வழக்கு தொடுக்கும் அதிமுக, தங்களது ஆட்சிக் காலத்தில் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் கள்ளச்சாராய சந்தையாக மாற்றியதின் கோர முகம் தான் இன்றைய கள்ளச்சாராய உயிர் பலிக்கு காரணம்.அரசியல் கட்சிகளின் ஆதரவை விட, தற்போது அந்த மக்களுக்கு தேவை மனிதாபிமானத்துடன் செயல்படக்கூடிய தன்னார்வ அமைப்புகள் தான்.

தமிழகத்தில் உள்ள சிறந்த மனநல மருத்துவர் குழு, மது போதையில் இருந்து மது குடிப்பவர்களின் மனதை மாற்றி அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் முழு பயிற்சி அளித்து, குடிப்பழக்கத்தை முழுவதுமாக விடக்கூடிய ஆற்றல் படைத்த மருத்துவர்கள் சமூக நல ஆர்வலர்கள் இயக்கங்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வேண்டி வசதிகளைச் செய்து கொடுத்து கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று தன்னம்பிக்கையும் விழிப்புணர்வையும் அளித்து அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் மறுமலர்ச்சியும் உருவாக்கக்கூடிய செயல்பாடுகளைத்தமிழக அரசு உடனடியாக செய்ய வேண்டும்.

விஷ சாராய பலி குறித்த உண்மையை மறைத்து பொய் சொன்ன கலெக்டர், தமிழக அரசுக்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்று பொய் சொல்ல சொன்ன அரசியல்வாதிகள் அரசு எந்திரங்கள் குறித்த உண்மை தகவலை முன்னாள் கலெக்டர் ஸ்ரவன்குமார் ஆகியோரிடம்முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர் சம்பவம் நடைபெற்ற கர்ணாபுரத்திற்கு தகவல் கிடைத்தவுடன் சென்றிருந்தால்,பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, மருத்துவர்களிடம் விவாதித்துநான்கு பேர் இறந்தது கள்ளச்சாராயம் பிடித்ததனால் என்பதை அக்கறையுடன் கண்டறிந்து இருந்தால் முப்பதுக்கும் மேற்பட்ட உயிர்களை நாம் காப்பாற்றி இருக்க முடியும். வேறு யாரும் பாக்கெட் சாராயம் குடிக்காமல் தடுத்து இருக்க முடியும்.

நூற்றுக்கணக்கானோர் விஷ சாராயம் மேலும் பிடிப்பதற்கும் பலர் பலியாவதற்கு காரணமாக இருந்தது முன்னாள் ஆட்சியர் அவர்களின் பொய்ப்பிரச்சாரமும் பத்திரிகையாளர் சந்திப்பு தான். உண்மையை மறைப்பதில் காட்டிய ஆர்வத்தை, உணர்வுடன் தன் கடமையை செய்திருந்தால் நாலு பேர் பலி என்று செய்தி வந்த உடனே கர்ணாபுரத்திற்கு வந்திருந்தால் , மெத்தனால் விஷம் குறித்த ஆபத்தை எச்சரித்து இருந்தால் புதன்கிழமை வேறு யாரும் கள்ளச்சாராயத்தைக் குடித்து இருக்க மாட்டார்கள், உயிர் பலி எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்திருக்காது என்பதுதான் அப்பகுதி மக்களின் வாதம்.

தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டிற்கு மிகப்பெரிய உதாரணம், சாராய விற்பனை பற்றி கலெக்டர் போலீஸ் அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆறுதல் கூற வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கண்ணீருடன் பகுதி மக்கள் கூறியது அதிர்ச்சி அளிக்கிறது. கள்ளச்சாராய விற்பனை குறித்து தகவல் தெரிவியுங்கள் என்று டாஸ்மார்க் பணியாளர்களுக்கு டாஸ்மார்க் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது என்ன செய்திகள் வருகிறது. டாஸ்மாக் கடைகளிலேயே போலிமது விற்கப்படுவது விற்கப்பட்டு வந்தது நாடறிந்தது. அதற்கு காரணமானவர் ஒரு முன்னாள் அமைச்சரே என்பதும் நாடறிந்தது.

டாஸ்மார்க்கிற்குஇணையாக போலி மது தொழிற்சாலைகளும் போலி டாஸ்மாக் நிர்வாகமும் நடந்த போது தட்டிக் கேட்டிருந்தால் இன்றைக்கு இது போன்ற கள்ளச்சாராய் நிகழ்வுகள் வராமல் தடுக்கப்பட்டிருக்கும். தமிழகத்தில் சிறைச்சாலைகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் பயன்படுத்தி வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் புழல் சிறையில் நாலு கைதிகளிடம் போதை மாத்திரைகள், கஞ்சா பொட்டலங்கள்பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகமெங்கும் போதை மாத்திரைகள், கஞ்சா விற்பவர்கள் கள்ளச்சாராயம் காட்சிபவர்கள் மீது காவல்துறைக்கு துப்பு கொடுத்தால், காவல்துறைக்கு புகார் தெரிவித்தால் அவர்கள் நடு ரோட்டிலேயே கோரமான முறையில் வெட்டப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் காவல்துறையால் தடுக்கப்படாமல் இருந்தது தான் இந்தச் சூழ்நிலைக்கு காரணம்.

காவல்துறையால் கொலையாளிகள் கைது செய்யப்பட்டாலும் போலி கொலையாளிகள் ஆஜர் ஆகுவதும், கொலை செய்தவர்கள் குறுகிய காலத்திலேயே ஜாமீன் பெறுவதும், கொலையாளிகள் சாட்சிகளை மிரட்டி தொடர்ந்து தைரியமாக வழக்கு நடத்தி விடுதலையாவதும் இனி தடுக்கப்பட வேண்டும்*.அப்பொழுதுதான் கள்ளச்சாராயம் போதை மாத்திரைகளும் கஞ்சா பொட்டலங்களும் தமிழகத்தில் இருந்து முற்றிலும் நீங்கும்*

ஊட்டி, ஏற்காடுக்கு இணையாக அற்புதமான சுற்றுலா ஸ்தலமாக மாற வேண்டிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மிகச்சிறந்தபொக்கிஷமான கல்வராயன் மலை தற்போது கள்ளச்சாராயம் உற்பத்தி செய்யும் மலையாக மாறியதற்கு காரணம் திராவிட மாடல் அரசுகளே.எஸ்சி,எஸ்டி மக்கள் அதிகம் வசிக்கும் இந்த கிராமங்களில் வாழக்கூடிய குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. குழந்தைகள் நன்கு படிக்க அரசு பள்ளிகளில்லை. கல்வியால் தங்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்த முடியும் என்ற விழிப்புணர்வுமில்லை.

கட்டாய கல்விச் சட்டம் மூலம் கல்வராயன் மலையில் ,மலை கிராமங்களில் படிக்க விரும்பும் குழந்தைகளுக்கு, பள்ளிக்கு அனுப்ப விரும்பும் ஏழைப் பெற்றோர்களுக்கு சரியான முறையில் வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி மறுக்கப்பட்டு வருகிற அபாய சூழ்நிலை அங்கு உள்ளது.தமிழக அரசு கல்வராயன் மலை போன்ற மலை கிராமங்களில் ஏழை குழந்தைகள் கல்வி கற்பதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் பாஜக தொடர்ந்து குரல் கொடுத்தும் ஆட்சியாளர்கள் அதை சட்டை செய்யவில்லை*.

விவசாய கூலிகளாக இருக்கக்கூடிய இளைஞர்கள், வேலை கிடைக்காத எழை தொழிலாளர்கள்,மலை கிராமங்களில் கள்ளச்சாராய வியாபாரிகளின் சூழ்ச்சியால்,குடிசைத் தொழிலாக வீடு தோறும்அரசியல்வாதிகள் அதிகாரிகள் காவல்துறையினர் துணையுடன் கள்ள சாராயம் காய்ச்சக்கூடிய சூழ்நிலை பல ஆண்டுகளாக இருக்கிறது. இது பற்றி முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

மேலும் மாநில மனித உரிமைகள் ஆணையம், தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய பட்டியல் இன மற்றும் பழங்குடியின ஆணையங்கள், தேசிய மகளிர் ஆணையம் என அனைத்து அரசு இயந்திரங்களும் முழுமையான விசாரணையில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.தமிழக அரசு திறந்த மனத்துடன் உண்மை தன்மையுடன் நேர்மையுடன் இந்த அரசு ஆணையங்களுக்கு ஒத்துழைப்பு அளித்து இதுபோன்ற சட்ட விரோத செயல்பாடுகள், காவல்துறை மற்றும் அரசு இயந்திரங்களின் நிர்வாக சீர்கேடுகள் நடக்காதவாறு கள்ளச்சாராயம், போலிமது,போதை கலாச்சாரம் முழுமையாக ஒழிக்கப்பட முயல வேண்டும்.

"செய் அல்லது செத்து மடி" என்ற விடுதலைப் போராட்ட வெற்றி மந்திரத்தை பின்பற்றி தமிழக அரசும், தமிழக முதல்வரும் கள்ளச்சாராய உயிரிழப்பிலிருந்து தமிழகத்திற்கு விடுதலை கொடுக்கும் வண்ணம் இனி தமிழகத்தில் கள்ளச்சாராயம் சாவு என்ற செய்தி இல்லாமல் ஆட்சி நடத்தப்பட வேண்டும்.இனி எதிர்காலத்தில் இந்நிலை தொடர்ந்தால், கள்ளச்சாராயத்தால் இனி உயிர் பலி நிகழ்ந்தால், மரியாதைக்குரிய முதல்வர் அவர்கள் தார்மீக பொறுப்பேற்று தானாக முன்வந்து முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்.

மிக முக்கியமாக இனி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாவட்ட காவல்துறை அமைப்பாளர்கள், உயர் அதிகாரிகள் திமுக அமைச்சர்களின் அடிமை அதிகாரிகள் திமுக மாவட்ட செயலாளர்களின் பினாமி அதிகாரிகள் நியமிக்கப்படாமல் தமிழக மக்களின் நலனை காக்கக்கூடிய நேர்மையான அதிகாரிகளை கண்டறிந்து தமிழக முதல்வர் நியமிக்க வேண்டும்.அதிகாரிகளின் நியமனத்தில் அலட்சியம் காட்டுவதும், சிபாரிசு செய்பவர்களுக்கு பதவி அளிப்பதும்தமிழகத்தில் நடக்கும் தொடர் கொடூர குற்ற செயல்களுக்கும் சமூக விரோத செயல்களுக்கும் காரணம் .

தமிழக முதல்வர் கள்ளச்சாராயத்தால் உயிர் பலியான கிராமத்திற்கு சென்று குடும்பத்தினரையும், மக்களையும் சந்திக்கும் பொழுது அவர்களிடத்திலே துணிவுடன்இனி தமிழகத்தில் இது போன்ற துயர சம்பவங்கள் நடக்காது என்று உறுதி கூற வேண்டும்" என்று தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார் ஏ.என்.எஸ்.பிரசாத்.

kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe