Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

என்னை நையாண்டி செய்த கலைஞர் - பிரபு

indiraprojects-large indiraprojects-mobile

கலைஞரின் மறைவிற்காக பத்திரிகைத்துறை, இலக்கியத்துறை, கலைத்துறை என்று அனைவரும் புகழ் வணக்கம் செலுத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் சினிமாத்துறையினர் பங்கேற்ற கலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. 'இளைய திலகம் பிரபு' கலைஞரின் நகைச்சுவை உணர்வு பற்றியும், அவருக்கும் தன் தந்தைக்குமான நட்பு குறித்தும் நிறைய விசயங்களைப் பகிர்ந்துகொண்டார். அவரது பேச்சிலிருந்து...

 

 

"பெங்களூரில் படிக்கும்போது ஸ்கூலை கட் அடித்துவிட்டு பெரியப்பாவை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் முதல்முறை சந்தித்தேன். கொஞ்ச நேரம் பேசிவிட்டுப் புறப்படும் போது 'நீ இதுதான் முதல்முறையாய் என்னை பார்க்கிறாய் இல்லையா?' என்றார். 'ஆமாம் அப்பா, நான் ஒரு கேள்வி கேட்கணும், நீங்க ஏன் அப்பா படத்திற்கு வசனம் எழுதுவதில்லை' என்றேன். பெரியப்பாவிடம் எப்போதுமே நக்கல், நய்யாண்டி ரொம்பவே அதிகம். என்னை ஒரு முறை பார்த்துவிட்டு 'அதை உங்க அப்பாவிடமே கேள்' என்றார். சரிப்பா நான் கிளம்புகிறேன் என்றவுடன், 'கொஞ்சமிரு, அதோ அங்கு இருக்கும் புத்தகத்தை எடு' என்றார். அங்கிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துத் தந்ததும், 'என் மகனுக்கு அன்புள்ள பெரியப்பா' என்று அவரின் அழகான கீறல் கையெழுத்தில் என்னிடம் எழுதித்தந்துவிட்டு, அதைப் படி என்றார். நான் அன்புள்ள பெரியப்பா' என்றேன் 'அது இல்லை, புத்தகத்தின் தலைப்பை படி' என்றார். நான் 'தா....,ப.....,ச....,' என்று படித்தேன். 'ஏய் என்னய்யா நீ!' என்றார். எனக்கு தமிழ் அளவாகத்தான் தெரியும் என்றேன். 'அப்படியா? ஏன்யா என் நண்பனுக்கு ஐநூறு பக்கம் எழுதிக் கொடுத்தாலும், ஒரு நொடியில் மனசில் ஏத்திக்கொண்டு அப்படியே பேசிடுவார். நீ என்னய்யா இப்படி சொல்கிறாய்?' என்றார், 'என்னப்பா பண்றது இங்கிலிஷ் கத்துக்க இங்க அனுப்பிச்சு இருக்காங்க, இங்க தமிழ்ப் பாடமில்லை' என்றேன். 

 

kalaignar

 

பிறகு சில காலம் கழித்து நான் சினிமாவுக்குள் வருகிறேன். என் அப்பா 'நேராக கோபாலபுரம் போய், பெரியவரிடம் ஆசீர்வாதம் வாங்கிட்டுவா' என்று அனுப்பிவிட்டார். அங்கு கோபாலபுரத்தில், மிகவும் நெருங்கிய நண்பர்கள் எல்லாம் நேராக மேலே சென்றுவர அடுப்படி வழியாக ஒரு வழி இருக்கிறது. அந்த வழியாக மேலே சென்றேன். அவர், அவருடைய பாணியிலே, அந்த பனியன், லுங்கி, தோளில் துண்டுடன் 'ஏய் வாயா, உட்கருயா' என்றார். 'நான் படத்தில் நடிக்கப்போறேன்' என்றேன். 'இங்கிலிஷ் படத்திலா இல்லை தமிழ் படத்திலா?' என்றார். ரொம்ப நாள் முன்னாடி நான் தமிழில் தடுமாறியதை நினைவு வைத்து நான் விஷயத்தை சொன்னவுடனேயே அப்படி கேட்டார். அந்த நகைச்சுவை உணர்வு, அதுவும் உடனுக்குடன் பதில் கொடுப்பது இதெல்லாம் அவருக்குதான் வரும். 'தமிழில்தான் நடிக்கிறேன். அதற்காகத்தான் ஆசீர்வாதம் வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்' என்றேன். 'சரி நல்லபடியாய் பண்ணு, அப்பாவின் பெயரை காப்பாத்து' என்று ஆசீர்வாதம் செய்து அனுப்பினார்.

 

 

அதன் பிறகு சில வருடங்கள் கழிந்தது முப்பது படங்கள் பண்ணியிருந்தேன், அதில் பத்தொன்பது படங்கள் அப்பாவுடன் சேர்ந்து நடித்திருந்தேன். அதனால் எல்லாரும் இந்தப் பையன் அவங்க அப்பாவால்தான் வந்தான் என்று சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு அது மனசில் உறுத்திக்கொண்டே இருந்தது. அதனால் ஒரு எட்டு மாதங்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு, ஊரை சுற்றி புத்துணர்ச்சி பெற்று திரும்பி வந்தபோது, படங்கள் வரிசையாக வந்தது. என் தங்கச்சி படிச்சவ, மனசுக்குள் மத்தாப்பு, அக்னி நட்சத்திரம் என்று. அந்த சமயத்தில் பூம்புகார் ப்ரொடக்ஷன்ஸ் 'பாலைவன ரோஜாக்கள்' படம் வந்தது. இன்னிக்கு மேடையில் நிற்கிறேன் என்றால் அந்தப் படமும் ஒரு காரணம். அண்ணன் செல்வம் என்னை அழைத்துச் சென்றார். எனக்கு, மனதுக்குள் சந்தோசம், பெரியப்பாவின் வசனத்தைப் பேசி நடிக்கப்போகிறோம் என்று. படப்பிடிப்பு தொடங்கியது. என் அன்புக்குரிய சகோதரர் 'சத்யராஜ்'தான் முதல் ஹீரோ, நான் இரண்டாவது ஹீரோ. ஒரு நாள் அப்பா எல்லாரையும் பாக்க 'லொக்கேஷனுக்கு' வந்தார், நான் போய்  'என்னப்பா எல்லா வசனத்தையும் சத்யராஜுக்கே கொடுத்திட்டீங்க, எனக்கு ஒன்னும் வசனம் இல்லையா?' என்று கேட்டுட்டேன். 'உனக்கு வசனம் இங்கிலீஷ்ல வேணுமா தமிழில் வேணுமா?' என்று கேட்டார். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. என் தமிழ் குறித்து அவர் மறக்கவேயில்லை. 'இல்லப்பா உங்க வசங்களைப் பேச ஆசையா இருக்கு' என்றேன்.  'சரி கவலைப்படடாதே, நான் பண்றேன்' என்றார். 

 

kalaignar

 

பின் அண்ணன் ஆற்காடு வீராசாமி ஒரு படம் எடுத்தார் 'காவலுக்கு கெட்டிக்காரன்' என்று. அதில் நடிக்க என்னை கூப்பிட்டு, படத்தில் ஆண்டனி கிளியோபட்ரா நாடகக் காட்சி பண்ணப்போறன், நீதான் ரொம்பநாளாக ஆசைப்படுறியே, அதில் நல்ல வசனம் இருக்கு, நீ பேசு என்றார். 'வந்ததுடா சோதனை'னு நினைச்சுக்கிட்டேன். கலைஞர் பெரியப்பா வசனத்தை எழுதி, அதை அப்படியே அவரோட குரலிலே ஒரு ஆடியோ ரெகார்ட் பண்ணி தந்தார். 'பேரழகி கிளியோபாட்ரா என் உள்ளத்தில் இருக்கும்போது, போர் முனையில் எதிரிகளை பந்தாடும் வீரம் எனக்குத் தானாகவே வரும்' அப்படினு பேசினார். இதை நான் எப்படி பேச முடியும்? அந்தப் பதிவின் கடைசியில் 'இந்த வசனத்தை உங்க அப்பா கணேசனை பேசவைத்து நீ கற்றுக்கொள்' என்கிறார். நான் உடனே எங்க அப்பாகிட்ட போறேன், அவரு உடனே 'அவரு எழுதி இருக்காரா? எங்க கொடு..னு வாங்கி அவர் குரலில் அதை பதிவு பண்ணி கொடுக்கிறார். இவங்க ரெண்டு பேரும் பேசி பதிவு பண்ணித் தந்த கேசட் என்கிட்ட இருந்துச்சு, பாவி எவனோ ஒருத்தன் அழிச்சுட்டான்! பெரியப்பா வசனம் எழுதி என் அப்பா பேசுனாதான் பிரமாதமா இருக்கும்."          

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...