Skip to main content

காலா - இந்த மூவரில் யார்? 

Published on 02/03/2018 | Edited on 02/03/2018

சினிமா என்றாலும், அரசியல் என்றாலும், ரஜினி சம்மந்தப்பட்டிருந்தால் ஆதரவு இருக்கும் அளவுக்கு எதிர்ப்புகளும் பரபரப்புகளும் இருக்கும். காலா டீசர் வெளியாகிவிட்டது. டீசரில் மும்பை தாராவியில் வாழும் தமிழர்களின் தலைவராக, நெல்லையை சேர்ந்தவராக ரஜினி இருக்கிறார்.

 

Kala - rajinikanth


கடந்த ஜூன் மாதம்  'காலா - கரிகாலன்' என்று  டைட்டிலுடன் ரஜினி ஜீப்பில் அமர்ந்திருக்கும்  ஃபர்ஸ்ட் லுக் வெளியான பொழுதே படத்தின் கதை பற்றி பல யூகங்கள் வந்தன. தமிழ்நாட்டிலிருந்து மும்பை சென்று, அங்கு பெரிய 'டானா'க உருவெடுத்தவர் பற்றிய கதை என அடிப்படையாய் சில தகவல்களை இயக்குனர் ரஞ்சித் கூற, அது மும்பை  தமிழ் நிழலுலக தாதா ஹாஜி மஸ்தானின்  கதை எனவும் திருநெல்வேலியில் இருந்து மும்பை சென்று அங்கு ஒரு பகுதி  தமிழர்களின் தலைவராகத் திகழ்ந்த திரவிய நாடார் என்பவரின் கதை எனவும் கூறப்பட்டது. உடனே இதன் எதிர்வினையாக, ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகனாகிய சுந்தர் சேகர் என்பவர் ரஜினிகாந்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பினார். "என் வளர்ப்புத் தந்தை ஹாஜி மஸ்தான் அவர்களைத் தவறாக சித்தரித்து படமெடுத்தால், பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்" என பேட்டியும் அளித்தார்.

திரவிய நாடாரின் மகள் விஜயலட்சுமி, "திருநெல்வேலியிலிருந்து மும்பை சென்று தாதாவான ஒரே தமிழர் என் தந்தை தான். இது அவர் கதையாக இருந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்", என்று கூறியுள்ளார். படத்தைத் தயாரிக்கும் நடிகர் தனுஷ், தன்  'வுண்டர்பார்' நிறுவனத்தின்  சார்பாக, 'காலா மும்பையில் நடப்பதாக எழுதப்பட்ட  ஒரு கற்பனை கதை. எந்த தனி மனிதரையும் குறிப்பிடுவதல்ல' என்று அறிக்கை வெளியிட்டார். அந்த பிரச்சனை முடியும் முன் அடுத்த பிரச்சனையாக, 'காலா- கரிகாலன் எனது கதை, 1995இல் நான் ரஜினியிடம் அவரது வீட்டில் வைத்து  இந்தக் கதையை கூறினேன். தலைப்பையும் பதிவு செய்துள்ளேன்' என்று திரையுலகைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் வழக்குத் தொடுக்க, பின்னர் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

 

sundar sekar


பிரச்சனைகளைத்  தவிர்ப்பதற்காக கற்பனை கதை என்று கூறப்பட்டு, பல உண்மை சம்பவங்களுடன் எடுக்கப்பட்ட பல படங்களை தமிழகம்  பார்த்துள்ளது.  காலா வந்தால் தான் தெரியும், அது கற்பனை கதையா, இல்லை உண்மைக் கதையா என்று. சரி, தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்குச் சென்று அங்கு பெரும்புள்ளியாக, டானாக மாறியவரின் உண்மைக்கதையைத் தழுவி 'நாயகன்' எடுக்கப்பட்டுவிட்டதே...அதன் பிறகும் 'காலா - கரிகாலன்' அப்படி சொல்லப்படுவதன் காரணத்தை ஆராய்ந்தால், 'நாயகனை'த் தவிர இன்னும் இருவரும் தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு சென்று பெரும் புள்ளிகளாய் திகழ்ந்திருக்கிறார்கள். 'நாயகன்' கதை வரதராஜ முதலியாரின் கதையை சில இடங்களில் தழுவி எடுக்கப்பட்டது. வரதராஜ முதலியாரைத் தவிர ஹாஜி மஸ்தான், திரவிய நாடார் ஆகியவர்களும் இங்கிருந்து சென்று மும்பை நிழலுலகத்தில் முக்கிய புள்ளிகளாகினர். 

 

Haaji masthan



மஸ்தான் ஹைதர் மிர்சா, ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் 1926 ஆம் ஆண்டு பிறந்து கடலூரில் சிறிது காலம் வாழ்ந்து, பின் பிழைப்பு தேடி தன் தந்தையுடன்  பம்பாய் சென்றார். சைக்கிள் பழுது பார்க்கும் வேலை செய்த அவர்களுக்கு வருமானம் பற்றாமல் போக, பம்பாய் துறைமுகத்தில் கூலி வேலை செய்யப் போனார். அங்கு கிடைத்த தொடர்புகளின் மூலம் சின்ன சின்ன கடத்தல் வேலையில் ஈடுபட்டவர் மெல்ல வளர்ந்தார். ஆப்கானிஸ்தானிலிருந்து மும்பைக்கு புலம் பெயர்ந்த  கரீம் லாலா என்பவருடன் இணைந்து பல பெரிய வேலைகளைச் செய்து பணம் சம்பாரிக்கத் தொடங்கினார். தங்கக் கடத்தலில் பணம் கொட்ட, எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட பல கடத்தல் தொழில்களிலும் ஈடுபட்டு விரைவில் பெரும் புள்ளியானார். வெள்ளை பென்ஸ் கார், வெள்ளை ஆடை, வெளிநாட்டு சிகரெட், என இவர் தான் மும்பையின் முதல் 'ஸ்டைலிஷ்' தாதா. பணப்புழக்கம் அதிகரிக்கவும், புதுப் பழக்கங்களும் அதிகரித்தன. இந்தி திரையுலகிலும் நுழைந்தார். படங்களுக்கு நிதியளித்தார், பின் தயாரிக்கவும் செய்தார். ராஜ் கபூர், திலீப் குமார், தர்மேந்திரா என பாலிவுட் பிரபலங்கள் இவரது நண்பர்களாகினர்.

 

thiraviya nadar



இவரது தொடர்புகள் வேறு தளங்களில் இருந்தாலும் மும்பையில் இருந்த தமிழர்களுக்கும் பாதுகாப்பாய் இருந்தார். இன்னொரு  தமிழ் புள்ளியான  வரதராஜ முதலியரிடம்  மிகுந்த நட்புடன் இருந்தார். ஒரு கட்டத்தில், முதலியாரின் கூட்டாளிகள் பெரும்பாலும் கைது செய்யப்பட்டு, அவரும் சென்னைக்கு வந்து 1988இல் உயிரிழந்த பொழுது, அவரின் விருப்பப்படி, அவரது உடலைத்  தனி விமானத்தில் மும்பை கொண்டு சென்று அடக்கம் செய்தார் ஹாஜி மஸ்தான். அந்த அளவுக்கு நட்புடன் இருந்தனர் இவர்கள். 1984இல் 'தலித் முஸ்லீம் சுரக்ஷா மகா சங்' என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்தினார். ஆண் வாரிசு இல்லாததால், சுந்தர் சேகர் என்பவரை தன் தத்துப் பிள்ளையாக வளர்த்தார். அவர் தான் இப்பொழுது ரஜினிக்கு நோட்டீஸ் விட்டவர். ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையைத் தழுவி, இந்தியில் 'தீவார்' (Deewar)  , 'ஒன்ஸ் அபான் அ டைம் இன் மும்பை'  (Once upon a time in Mumbai) ஆகிய படங்கள் வந்தன. 

 

varadharaja mudhaliyar



வரதராஜ முதலியார், ஹாஜி மஸ்தான் ஆகியோரிடமிருந்து சற்று மாறுபட்டவர் திரவிய நாடார். சின்ன வயதில் வறுமையினால் திருநெல்வேலியில் இருந்து பம்பாய் சென்றது, ஆரம்பத்தில் சின்னச் சின்ன சட்டவிரோத செயல்கள் செய்தது என இவரது தொடக்க காலமும் அவர்களைப் போலவே இருந்தாலும், பின்னாட்களில், அவர்கள் அளவுக்கு பிரபலமான நிழலுலக மனிதராக இவர் திகழவில்லை. மாறாக தாராவி மக்களுக்கு அரணாய் அமைந்து, தமிழ்க் குழந்தைகளுக்காக பள்ளி ஒன்றையும் காட்டியுள்ளார். திருநெல்வேலியில் இருந்து தன் பதினாறு வயதில் சென்னைக்கு சென்று, அங்கு தன் அண்ணன் ஏற்றுக்கொள்ளாததால், ரயிலேறி பம்பாய்க்கு சென்றார். கள்ளச்சாராயத்துக்குத் தேவைப்படும் வெல்லம் விற்கும் வேலையில் ஈடுபட்டு வளர்ந்ததால், 'ஃகூடு வாலா  சேட்' எனவும் அழைக்கப்பட்டாராம்.  ஒரு கட்டத்தில் கடத்தலில் இருந்து விலகி, காலியாக இருந்த நிலங்களைக் கைப்பற்றி கடைகள் கட்டியுள்ளார். அங்கிருந்த தமிழர்களுக்கு உதவியாகவும் இருந்துள்ளார். காமராஜரின் தீவிர ஆதரவாளராகவும் இருந்துள்ளார். ஹாஜி மஸ்தான், வரதராஜ முதலியார் ஆகியோருடனும் நல்ல உறவில் இருந்துள்ளார்.  

காலா டீசரில்  ரஜினிகாந்தின் தோற்றமும், கதையைப் பற்றி  ரஞ்சித் கூறியிருக்கும் தகவல்களும் இந்த இருவரையுமே நினைவு படுத்துகின்றன. அதைத் தாண்டி, படத்தின் காட்சிகளில் பின்புலத்தில் காவி, நீலம், ஒடுக்கப்பட்டோர் அமைப்பின் தட்டி என பல விஷயங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் பார்க்கும்பொழுது, மும்பை டான் என்ற கதையைத் தாண்டி படம் அரசியலை பேசும் என்பது உறுதியாகத் தெரிகிறது. அது ரஜினியின் அரசியலா ரஞ்சித்தின் அரசியலா என்பது படம் வந்தால் தான் தெரியும்.        

 

 

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார். 

Next Story

“இரு மொழிப் பிரச்சனை; நிச்சயமா இந்த படம் விவாதத்தை உருவாக்கும்” - பா. ரஞ்சித்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
pa.ranjith speech in gv prakash rebel movie audio launch

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரெபல். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க கருணாஸ், வெங்கடேஷ்.விபி, ஷாலு ரஹீம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷே இசைப் பணிகளையும் கவனித்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான நிலையில், ட்ரைல்ர் நேற்று வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள இப்படம் மார்ச் 22 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இதில் படக்குழுவினரோடு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பா. ரஞ்சித் கலந்து கொண்டுள்ளார்.  

அவர் பேசுகையில், “இப்படத்தின் விஷுவல், டிரெய்லர், எடிட்டிங் எல்லாமே மிக நன்றாக இருக்கிறது. முல்லைப் பெரியாறு பகுதியில் இரு மாநிலங்கள் கலக்கும் பகுதியில் அங்குள்ள பிரச்சனையைப் பேசும் பின்னணியில் இந்தக் கதையை செட் செய்துள்ளார்கள். வாழ்த்துகள். ஜிவியை எனக்கு தங்கலான் மூலமாகத்தான் பழக்கம். எல்லோரும் அவரை நல்ல மனிதன் எனச் சொல்வார்கள். ஆனால் நேரில் பழகிய பிறகு தான் தெரிந்தது, மிக மிக நல்ல மனம் கொண்ட மனிதர். அவர் இன்னும் நிறைய ஜெயிக்க வேண்டும். நிறைய பேருக்கு நல்லது செய்ய வேண்டும். தயாரிப்பாளர் ஞானவேல் பலரது வாழ்வில் மிக முக்கியமான மனிதராக இருந்துள்ளார். என் வாழ்வில் அவர் முக்கியமானவராக இருந்துள்ளார்.

இந்தப் படத்தில் நிறைய முக்கியமான மனிதர்கள் பங்கேற்றுள்ளார்கள். எல்லோருக்கும் என் வாழ்த்துகள். இன்றைய சினிமாவில் சின்ன படங்களைக் கொண்டு சேர்ப்பது என்பது மிகக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. என்னைப் போன்ற தயாரிப்பாளர்களுக்கு ஏதோ ஒரு பலம் இருக்கிறது. அதன் மூலம் தியேட்டருக்கு கொண்டு வந்துவிடுகிறோம். ஆனால் கஷ்டப்படுகிற சின்ன படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய உதவுகிறார் சக்தி பிலிம் சக்திவேலன். அவர் தொடர்ந்து நல்ல படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இப்போது ஜெ. பேபி படம் வணிக ரீதியாக வெற்றியா என கேட்டால் அதில் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. படம் பார்த்தவர்களுக்கு எல்லாருக்குமே பிடித்திருந்தது. நிறைய பேர் கொண்டாடுறாங்க. அதை பார்க்கும்போது வணிக ரீதியாக வெற்றியை விட ஒரு படம் முக்கியமானதாக பார்க்கப்படும் போது படத்தில் பணியாற்றியவர்களுக்கு இன்னொரு வாழ்க்கை ஆரம்பிக்கும். இது போலத்தான் அட்டகத்தி எனக்கு ஆரம்பித்தது. 

ஒரு தயாரிப்பாளராக ஆக வேண்டும் என்ற நோக்கத்தில், நான் இந்த துறைக்கு வரவில்லை. எனக்கென்று சில வேலைகள் இருந்தது, அதை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு தான் வந்தேன். அதன் பிறகு தயாரிப்பு பொறுப்பு வந்தவுடன் ரசித்து தான் பணியாற்றுகிறேன். ஒவ்வொரு கதைகளிலும் சரி, கதாபாத்திரங்களிலும் சரி, அனைத்திலும் என்னுடைய தலையீடுகள் இருக்கும். ஆனால் அது இயக்குநருக்கு பாதிப்பு ஏற்படாமல் தேவையான விஷயத்தை ஆதரிக்கிற வகையில் இருக்கும். நிகேஷ் இப்படத்தில் இரு மொழிப் பிரச்சனையைக்  கவனமுடன் பேசியிருப்பார் என நம்புகிறேன். நிச்சயமா இந்த படம் ஒரு விவாதத்தை உருவாக்கும் என நினைக்கிறேன். அந்த விவாதம் சரியான இடத்தை நோக்கி நகர வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.