Skip to main content

நிலத்தின் உப்புத் தன்மையை நீக்கும் கடலாரை!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

The kadalarai plant that removes the salinity of the land!

 

கடற்கரை மற்றும் ஆற்றுப் பகுதிகளில் இயற்கையாக வளர்ந்து வரும் கடலாரைக் கொடி கை, கால் வலி, வீக்கம் ஆகியவற்றுக்கு மருந்தாகவும், விளைநிலத்தின் உப்புத்தன்மையை நீக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

 

கடலாரை:

 

தாவரவளம் நிறைந்த தமிழ்நாட்டில், எண்ணற்ற அரியவகை மூலிகைத் தாவரங்கள் இயற்கையாகவே செழித்து வளர்ந்து வருகின்றன. பாரம்பரியமிக்க பல தாவரங்கள் பற்றிய தகவல்கள் சங்க இலக்கியங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. 

 

கடலோரங்களிலும் ஆற்றோரங்களிலும் மணற்பாங்கான இடங்களிலும் வளர்ந்துவரும் கடலாரை எனும் மூலிகைக் கொடி சங்க இலக்கியங்களில் அடும்பு, அடம்பு, அடப்பங்கொடி, அடும்புக்கொடி எனக் குறிப்பிடப்படுகிறது. சித்த மருத்துவத்தில் இதை கடலாரை, காட்டாரை என்கிறார்கள். குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடும் 99 மலர்களில் இதுவும் ஒன்று. 

 

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை முனைவர் பட்ட  ஆய்வாளருமான வே.ராஜகுரு கூறியதாவது,

 

அமைப்பு:

 

குதிரையின் கழுத்து மணியைப் போல் உள்ள இக்கொடியின் மலர், செந்நீல நிறமுடையது. சங்க இலக்கியங்கள் மானின் குளம்பு போல் பிளவுபட்ட இலைகளுடன் இருப்பதாக இதை வருணிக்கின்றன. இக்கொடி மண் அரிப்பைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் அடியில் வலிமையான நீண்ட கிழங்கு இருக்கும். 

 

சங்க இலக்கியங்களில் அடும்பு:

   
நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, பட்டினப்பாலை, அகநானூறு, குறிஞ்சிப்பாட்டு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பொருநராற்றுப்படை ஆகிய சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் நெய்தல் திணைக்குரிய கொடியாக அடும்பு குறிக்கப்படுகிறது. 

 

கடலில் நீராடிய பின் அடும்பு, நெய்தல் ஆகிய மலர்கள் கலந்து செய்த மாலைகளை மகளிர் தங்கள் கூந்தலில் அணியும் வழக்கம் இருந்துள்ளது. தெய்வத்தை வேண்டி நோன்பிருப்பதற்காக நெய்தல் நில மகளிர் கடற்கரையில் படர்ந்துள்ள அடும்புக்கொடிகளைக் கொய்து அழிப்பர். அடும்பின் கொடியில் முட்டையிட்டு கடற்காகம் அடைகாக்கும். வளைந்த காலையுடைய நாரை, அடும்பின் கொடியில் மலர்ந்த அழகிய மலரை சிதைத்து கழியின் அருகில் உள்ள மீனை உண்ணும். 

 

The kadalarai plant that removes the salinity of the land!

 

கடலில் எழும் அலை கரையில் உள்ள அடும்புக் கொடியை விரைந்து சேர்வது போல தலைவியை விரைந்து மணந்து கொள்ள, தோழி தலைவனை வேண்டினாள். ஆமை, அடும்புக்கொடி சிதையுமாறு அதை இழுத்து வெண்மையான மணல் மேட்டில் முட்டை இட்டு மறைத்து வைக்கும். உப்பங்கழியில் மீன் பிடித்து உண்ணும் அன்னப்பறவை அடப்பங்கொடி பொருந்திய மணல் மேட்டில் தனது அழகிய சிறகினைக் கோதி உலர்த்தும். மகளிர் அடப்பங்கொடியைப் பறித்து விளையாடுவர்.

 

நெய்தல் நிலத் தலைவனுடைய தேர் ஊர்ந்து செல்லும் போது அழகிய அடும்புக்கொடிகளை அதன் சக்கரங்கள் அறுக்கும். இவ்வாறு சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் அடும்பு பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன.

 

மருத்துவச் சிறப்புகள் :

 

கடலாரையின் வேர், இலை இரண்டும் மருத்துவக் குணமுடையவை. இதன் வேர் சிறுநீர் பெருக்கியாகச் செயல்பட்டு வயிறு மற்றும் கால்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். இதன் இலை மூட்டுவலி, வீக்கம், சர்க்கரை நோய், வயிறு தொடர்பான நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. ராமநாதபுரம் மாவட்ட மக்கள் இக்கொடியின் வேர், இலையை மருந்தாகத் தயாரித்து பயன்படுத்தி வருகிறார்கள். 

 

Ad

 

உவர்ப்புத் தன்மையை நீக்கும் கடலாரை:

 
விளைநிலங்களில் ஏற்படும் உவர்த் தன்மையை நீக்க கடலாரைக் கொடியை சிறியதாக வெட்டி நீர் நிறைந்துள்ள வயலில் மக்கச் செய்கிறார்கள். தொளியடித்தலின் போது மண்ணோடு கலந்து அழுகி அந்த நிலத்தின் உவர்த்தன்மையை கடலாரை சமப்படுத்தி விடுகிறது. இயற்கையான முறையில் மண்ணின் உவர்த்தன்மையை நீக்க, தொண்டி உள்ளிட்ட கடலோரப்பகுதிகளில் விவசாயிகள் இம்முறையைப் பின்பற்றி வருகிறார்கள்.

 

நமது கடமை:
 

நமக்கான மருந்தாக நாம் குடியிருக்கும் இடங்களின் அருகில் கிடைக்கும் மூலிகைகளையே நம் முன்னோர் அதிகளவில் பயன்படுத்தி வந்ததால் நோயின்றி நீண்ட காலம் வாழ்ந்தனர். அவர்கள் காட்டிய வழியில் பாரம்பரியமான நமது மூலிகைகளை இன்றைய இளைஞர்கள் பயன்படுத்தத் தொடங்கினால் மட்டுமே, அவற்றை அழிவில் இருந்து காக்கமுடியும். சாலை விரிவாக்கம், புதிய குடியிருப்புகள் உருவாகி வருவதன் காரணமாக கவனிப்பாரின்றி அழிந்து வரும் அடும்பு போன்ற மூலிகைத் தாவரங்களை போற்றி பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இவ்வாறு அவர் கூறினார்.