Skip to main content

தர்மயுத்தம் அல்ல! சிவமாகிய சித்தம்! -இது வேற ராஜேந்திரபாலாஜி!

 

உடுத்தியிருந்த மஞ்சள் உடையும், மாலையும் கழுத்துமாக தரையில் அமர்ந்திருந்த விதமும், ‘என்ன இது? தர்மயுத்தத்துக்கு தயாராகிவிட்டாரா ராஜேந்திரபாலாஜி?’ எனக் கேள்வி கேட்க வைத்தது. ‘அப்படியெல்லாம் கிடையாது, இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அவரது ஆன்மிக ஈடுபாடு..’ என்று பதில் கிடைத்தது.  

 

எடப்பாடி ஆதரவு ட்வீட் மூலம், அதிமுகவில் கலகத்தை ஏற்படுத்திவிட்டு, தனது தொகுதியான சிவகாசிக்கு திரும்பிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தங்கமுலாம் பூசிய கலசம் ஒன்றைக் கையில் ஏந்தியபடி அந்தக் கோவிலை நோக்கிச் சென்றார். வாசலில் அவர் கால் பதித்ததும், மங்கல இசையால் அந்தக் கோவிலே அதிர்ந்தது. அங்கிருந்த இருவர் முணுமுணுத்ததும் கேட்டது. 

 

“அந்தக் காலத்துல கோவில்களைக் கட்டினதெல்லாம் மன்னர்கள்தான். இங்கே என்னடான்னா.. மந்திரியா இருக்கிற ராஜேந்திரபாலாஜி.. கோடிகளைக் கொட்டி ஒரு கோவில் கட்டிருக்காரு. இன்ஜினியரிங் காலேஜ்.. மெடிக்கல் காலேஜ்னு கட்டிய முன்னாள்.. இந்நாள் மந்திரிங்க எத்தனையோ பேரு தமிழ்நாட்டுல இருக்காங்க. ஏன்னா.. கல்விச் சேவைங்கிறது இங்கே பணம் காய்க்கிற மரம். ஆனா.. ஊருக்கு ஒதுக்குப்புறமா.. ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்துல.. மந்திரி ஒருத்தர்  இம்புட்டு செலவழிச்சு  ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறது  ஆச்சரியமா இருக்கு.” என்று விழிகளை விரித்தனர். 

 

‘இதோ இந்த அமாவாசை.. இல்ல.. அடுத்த அமாவாசை.. நிச்சயமா கட்டம் கட்டிருவாங்க..’ என்று விருதுநகர் மாவட்டத்தில் சிலர் ராஜேந்திரபாலாஜி மீதான நடவடிக்கையை எதிர்பார்த்திருக்க, அவரோ, முழு முயற்சி எடுத்து, பழைய கோவில் ஒன்றை முற்றிலுமாக புனரமைத்து, வரும் 28-ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடத்தவிருக்கிறார்.  

 

சிவகாசியை அடுத்துள்ள ஆமத்தூர் - மூளிப்பட்டியில் அமைந்திருக்கிறது, ஸ்ரீ தவசிலிங்க சுவாமி திருக்கோவில். பல சமூகத்தினரும் வழிபாடு நடத்திவரும் இந்தக் கோவில், ராஜேந்திரபாலாஜிக்கு குலதெய்வக் கோவிலாம். பேட்டியோ, அறிக்கையோ,  ட்வீட்டோ, எதிலும் வம்பிழுப்பதில் வல்லவராக இருப்பதால், சர்ச்சையில் சிக்கிக்கொள்வது அவருக்கு வாடிக்கையாகிப் போனது.  இந்த அரசியல் அக்கப்போர், நிம்மதிக்கு வேட்டு வைக்கும்போதெல்லாம், மனதுக்கு நிறைவையும், அமைதியையும் தருவது ஆன்மிகம் மட்டுமே என்பதை அனுபவ ரீதியாக அவர் உணர்ந்திருக்கிறார். உண்மையைச் சொல்வதென்றால், ரஜினி பயணிப்பது போல்,  ஆன்மிகத் தேடலோடு,  இவரும் சத்தமில்லாமல் அடிக்கடி வடக்கே போய்விடுகிறார். 

 

மஹா கும்பாபிஷேகத்துக்கு முன், கோயில் மூலஸ்தானத்தில் கலசங்களை வைத்து, விக்ரகங்களுக்கு சொர்ணாபிஷேகம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், மூலஸ்தான ராஜகோபுரம், பெரிய அளவில் உயரமாக எழுப்பப்பட்டுள்ள சிவன் சிலை, முருகன், வள்ளி, தெய்வானை சிலைகள், அய்யனார் சிலை போன்றவற்றைக் காட்டி,  “முழுக்க முழுக்க ஆகம விதிகளின்படி கட்டப்பட்டுள்ள கோவில் இது..” என்றார் பரவசத்துடன்.   


 
‘கரோனா காலக்கட்டத்தில் கும்பாபிஷேகமா?’ என்று கேட்டபோது, சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தவறாமல் கடைப்பிடிக்கப்படும்.” என்றார். 

 

இறைவன் வாழுமிடம் என்றும், ஆன்மாக்கள் இறைவனை ஒரு மனதுடன் வணங்குவதற்கான இடமென்றும், கோவிலுக்கு விளக்கம் தரப்படுகிறது. அரசியல் என்பது மக்கள் சேவை! ஆன்மிகம் என்பது தன்னை இயக்கும் சக்தியை தனக்குள்ளே பயணித்து உணர்வது! அப்படியென்றால், ‘ஆன்மிக அரசியல்’ என்பது என்னவாம்? தன்னை உணர்ந்து மக்கள் சேவையாற்றுவதே! ஆம்.. மக்கள் சேவையே மகேசன் சேவை!