Skip to main content

சுத்தி போலீஸ்... ஒத்த ஆளாக கெத்து காட்டிய கே.பி.ஜானகி அம்மாள்...!

Published on 09/12/2020 | Edited on 10/12/2020

 

K B janaki ammal story


இந்தியாவின் விடுதலைக்கு அதிமுக்கியக் காரணமாகக் கருதப்படும் இரண்டாம் உலகப் போரின்போது, திருச்சி பொன்மலையில் நடந்த ஒரு போர் எதிர்ப்பு கூட்டத்தில் “இது ஏகாதிபத்திய போர். இதன் ராணுவத்தில் யாரும் இணையக்கூடாது. போருக்காக எந்த நிதியையும் அளிக்கக்கூடாது. இந்தப் போரில் நம் அனுமதியின்றி நம்மை வெள்ளையர்கள் ஈடுபடுத்திவருகின்றனர். நாம் வாழ வகைசெய்யாத ஏகாதிபத்தியம், நாம் போரில் சாக வழி செய்கிறது. மக்களே நாம் தள்ளி நிற்போம். வெள்ளையனையும் எதிர்ப்போம். போரையும் எதிர்ப்போம்” என போரின்வழி கையாளப்படும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முழங்கியவர் கே.பி.ஜானகி அம்மாள்.  

 

அவரின் முழக்கத்தின் வலிமையை அடக்க நினைத்த ஆங்கிலேய அரசு மறுநாளே அவரை கைது செய்தது. 

 

1917-ல் பிறந்த கே.பி.ஜானகி அம்மாள், தனது வாழ்நாள் முழுவதும் இதே துடிப்புடனும் வீரத்துடனும் வாழ்ந்து மடிந்தார். எட்டு வயதிலேயே தாயை இழந்தவர், பிறகு பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். கலையின் மேல் ஆர்வம் கொண்ட ஜானகி அம்மாள் 1930-ல் மதுரையில் எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸின் பழனியப்ப பிள்ளை பாய்ஸ் எனும் நாடக கம்பெனியில் இணைந்தார். 

 

பெண்கள் யாரும் மேடை ஏற்றப்படாத காலம் அது.  நாடகத்துறையில் முதல் பெண்ணாக மேடையில் தோன்றி புரட்சி செய்தார். கம்பெனியின் பிரதான நடிகரான விஸ்வநாத தாஸ் காங்கிரஸ் பற்றாளராக இருந்தார். இவரின் நாடகங்கள் பெரும்பாலும் சுதந்திர வேட்கையின் கருத்துடன்தான் இருக்கும். எனினும், அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவருடன் சேர்ந்து நடிக்க யாரும் முன்வரவில்லை. அந்த நேரத்தில்தான், கே.பி.ஜானகி அம்மாள் இவருடன் சேர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டு நடித்தார். அதன் பிறகு, கே.பி.ஜானகி அம்மாவின் ஒவ்வொரு நாளும் வரலாறானது. 

 

நாடக நட்சத்திரமாக வளர்ந்துவந்த ஜானகி அம்மாளுக்கு எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ் மூலம் காங்கிரஸ், விடுதலை உணர்வு ஏற்பட்டது. அதன்பின் மக்களுக்காகவும் விடுதலைக்காகவும் கே.பி.ஜானகி அம்மாள் தொடர்ந்து குரல் கொடுக்க ஆரம்பித்தார். முதலில் காங்கிரஸில் இருந்த இவர், பின் 1940ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து இறுதிவரை அங்கேயே பணியாற்றினார். 


கே.பி.ஜானகி அம்மாள் ஒரு கம்யூனிஸ்ட்டாக விவசாயிகளுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் கணக்கற்ற போராட்டங்களை நடத்தியுள்ளார். எனினும், அவரது வரலாற்றைப் பேசும்போது, மதுரை ஹார்வி மில்லை எதிர்த்தும், நிலப் பிரபுத்துவத்துக்கு எதிராகவும் அவர் நடத்திய போராட்டங்கள் நிராகரிக்க முடியாமல் நிச்சயம் இடம் பிடிக்கும்.

 

அரசு, நில உச்சவரம்பைச் சட்டமாக்குவதற்கு முன்பாக, நிலப்பிரபுத்துவம் மிகவும் கொடிய அளவில் மாநிலம் முழுக்கப் பரவியிருந்தது. 

 

கே.பி.ஜானகி அம்மாள் அதனை எதிர்த்துப் பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்களை நடத்தியிருக்கிறார். மதுரை துவரிமான் குத்தகை விவசாயிகளின் நிலமீட்புப் போராட்டத்தில், நிலத்தைச் சுற்றி காவல்துறையினர் துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருந்தபோது, அங்கிருந்த ஆண் பெண் இளைஞர்கள் என பலரும் ஆங்கிலேயே காவல்துறையின் மிரட்டலுக்கும் துப்பாக்கிக்கும் பயந்து ஒதுங்கி நின்றனர். அந்த நேரத்தில் ஜானகி அம்மாள் எந்தவித அச்சமுமின்றி ஏர்பிடித்து நிலத்தில் இறங்கி உழுது ‘உழுபவனுக்கே நிலத்தை சொந்தமாக்கு’ என போராடியது அங்கிருந்த காவல்துறையினரையே மிரளவைத்தது. இன்று, நினைக்கும்போதும் ஜானகி அம்மாளின் வீரம், உடலெல்லாம் சிலிர்க்க வைக்கிறது.

 

தொடர்ந்து, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ மற்றும் ஃப்ராங்க் சகோதரர்களால் துவக்கப்பட்ட ‘ஹார்வி மில்’ தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்று, அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்.

 


ஸ்காட்லாந்தில் விவசாய குடும்பத்திலிருந்துவந்த ஆண்ட்ரூ மற்றும் ஃப்ராங்க் சகோதரர்கள் துவங்கிய ஹார்வி பருத்தி மில் ஆலை அன்று பெரும் லாபத்தைப் பார்த்தது. ஆனால், அதில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு போதுமான ஊதியமும் முறையான வேலை நேரமும் இல்லாமல் அடிமைகள் போல் பணி புரிந்துக்கொண்டிருந்தனர். இதனை எதிர்த்து கே.பி.ஜானகி அம்மாள், ஆங்கிலேயே அரசையையும் ஹார்வி நிர்வாகத்தையும் கலங்கடிக்க செய்தார். இந்தப்போராட்டத்திற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் 1940-ல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தபோது, கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதும், திருச்சி பொன்மலையில் போர் எதிர்ப்பு குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது மதுரையிலிருந்த ஜானகி அம்மாள் தன் கணவருடன் பொன்மலைக்குச் சென்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். 

 

அங்கு அவர் பேசிய மேற்குறிப்பிட்ட போர் எதிர்ப்பு முழக்கம், ஆங்கிலேயரிடையே அதிர்வுகளை ஏற்படுத்தியது. கூட்டம் முடிந்து மதுரைக்குத் திரும்பி வரும்போது, அவர் கைது செய்யப்பட்டார். ஆங்கிலேய அரசின் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் தென் இந்தியப் பெண் கே.பி.ஜானகி அம்மாள். இதன் பிறகும், இதற்கு முன்பும் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். எத்தனை முறை சிறை சென்றாலும், ஒருமுறையும் அரசிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலையை நாடியதில்லை.

 

cnc

 

சுதந்திர இந்தியாவிலும் இவரது போராட்டம் ஓய்ந்தபாடில்லை. 1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகும், சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களில், இவர் அதிகம் பேசியது, விவசாயிகளின் துயரத்தையும், தொழிலாளர்களின் உரிமையையும்தான்.

 

விடுதலை இந்தியாவில், பெண்களுக்குப் பல உரிமைகளும், சுதந்திரமும் கிடைப்பதாகக் கூறப்படும் தற்போதைய சூழலிலும், அரசியல் மற்றும் சமூகப் போராட்டக்களத்தில் இயங்கும் பெண்கள், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும்போது, பிற்போக்குச் சிந்தனைகள் நிறைந்ததாகவும், ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டும் கிடந்த இந்தியாவில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வெற்றிகண்ட கே.பி.ஜானகி அம்மாள் போன்றோரின் வரலாறு போராடும் பெண்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது.