Advertisment

"சிறையை காட்டி அஜித் பவாரின் கதையை முடித்துள்ளார்கள்.." - மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன் அதிரடி!

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மராட்டிய தேர்தல் முடிவுகள் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி அனைத்து கட்சிகளுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தேர்தலில் தனித்தே அபாரமான வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாஜக 105 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. அதன் கூட்டணியில் இருந்த சிவசேனா முதல்வர் பதவி கேட்டு நெருக்கடி கொடுக்கவே, ஆட்சி அமைப்பதில் இருந்து பாஜக பின்வாங்கியது. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், நடுஇரவில் என்சிபி-யின் அஜித் பவாருடன் இணைந்து பாஜக ஆட்சி அமைத்துள்ளது. அரசியல் அரங்கில் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் பற்றி பல்வேறு கேள்விகளை மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன் அவர்களிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

Advertisment

sf

மராட்டியத்தில் என்.சி.பி-காங்கிரஸ்-சிவசேனா கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது யாரும் எதிர்பாராத வகையில், என்.சி.பி உடன் இணைந்து பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இந்த விவகாரத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

Advertisment

ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிராக தற்போது இந்த கூட்டணியை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். எந்த அடிப்படையில் அவர் இந்த முடிவை எடுத்தார் என்ற கேள்வி தற்போது பெரிய அளவில் எழுந்துள்ளது. தேர்தல் முடிவு வெளியாகி இரண்டு வாரத்துக்கு மேல், பாஜகவுக்கு ஆட்சி அமைப்பதற்கு அவகாசத்தை ஆளுநர் வழங்கிய போது, பாஜக என்ன சொன்னது, எங்களால் போதிய பெரும்பான்மை நிரூபிக்க முடியாது என்று சொன்னார்களே? தற்போது மட்டும் அவர்களால் எப்படி பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். சிவசேனா, என்.சி.பி உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு குறைவான நேரம் கொடுத்துவிட்டு தற்போது நடுஇரவில் குடியரசு தலைவர் ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டு, அவசர கதியில் பதவியேற்புக்கு என்ன அவசியம் வந்தது. இது ஜனநாயகத்துக்கு உகந்ததா? கடந்த தேர்தலில் எதிராகநின்ற என்.சி.பி-யுடன்தற்போது எந்த அடிப்படையில் பாஜக கூட்டணி வைத்துக்கொண்டது.

ஊழலின் ஊற்றுக்கண் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று தேர்தல் பிரச்சாரத்தில் கூறிய அமித்ஷா, எப்படி நள்ளிரவில் அவர்களுடன் கூட்டணி வைக்க சம்மதம் தெரிவித்தார். தன்னோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த சிவசேனா விலகி கொண்டதை அடுத்து, பாஜக-வை எதிர்த்து அரசியல் செய்தாலும் பரவாயில்லை என்று நினைத்து, என்.சி.பி-யின் தேந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற தலைவரை மிரட்டி, இத்தகைய காரியத்தை பாஜக செய்துள்ளது என்றால், இதை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள யாராவது ஏற்றுக்கொள்வார்களா? இது அனைத்தும் முற்றிலும் ஜனநாயகத்துக்கு விரோதமாக நடைபெற்று உள்ளது. எப்போது அஜித் பவாருடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பாஜக செய்தது. இவர்கள் ஜனநாயகத்தை ஏமாற்றியது மட்டுமல்லாது மராட்டிய மக்களையும் ஏமாற்றியுள்ளனர்.

நிலையான ஆட்சி அமைவதற்கே நாங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்தோம் என்று என்சிபி சொல்வதை மக்கள் ஏற்றுக்கொள்ளும் படியாகத்தானே இருக்கிறது?

நிலையான ஆட்சியை தானே 2014ல் பட்னாவிஸ் கொடுத்தார். அப்போது கிட்டதட்ட 153 இடங்களில் பாஜக - சிவசேனாகூட்டணி வெற்றி பெற்றார்கள். தற்போது ஏன் குறைவான இடங்களில் வெற்றி பெற்றார்கள். மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்றால் அவர்கள் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டுமே? ஆனால், கடந்த தேர்தலை விட காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் தற்போது அதிக தொகுதிகளில் எவ்வாறு வெற்றிபெற்றார்கள். தேர்தலில் மக்கள் வாக்களித்து தான் பாஜகவோ அல்லது மோடியோ வெற்றி பெறுகிறார்கள் என்பது எல்லாம் கற்பனை. இது ஈவிஎம் காலம். சரத் பவாரே இதை தேர்தலின் போது நேரடியாக சொன்னார். வாக்குப்பெட்டி இருக்கும் இடங்களை சுற்றிலும் இணையதள சேவையை முடக்க வேண்டும் என்று கூறியிருந்தார். பட்னாவிஸ் ஆட்சி அங்கே ஒழுங்காக இருந்தது என்றால், ஏன் இத்தனை விவசாயிகள் உயிரிழக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பலபேர் உயிரிழந்துள்ளார்கள்.

இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்பது. பாஜக அரசு தான் அதற்கு முழுமுதல் காரணம். அப்புறம் என்ன நிலையான அரசு, நிலையில்லாத அரசு என்ற பேச்சு ஏன் எழுகிறது. இவர்கள் தான் எதுவுமே செய்வதில்லையே? மோடி கூடத்தான் ஆறாவது ஆண்டாக பிரதமராக இருக்கிறார். என்ன நடந்துவிட்டது, நாட்டு பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டதா? மக்கள் எல்லாம் மகிழ்ச்சி கடலில் இருக்கிறார்களா? நிலையான அரசு என்பது ஒரு பித்தலாட்டம். இவர்கள் எதை பயன்படுத்தி வெற்றி பெறுகிறார்கள் என்பது அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரியும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார்கள். இதில் யார் பாதிக்கப்பட்டார்கள். அப்பாவி மக்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். எனவே, அஜித் பவாருக்கு சிறை கதவுகள் திறந்தே இருக்கிறது, அவர் எந்த நேரம் வேண்டுமானாலும் சிறைக்கு செல்லலாம் என்று அவரை மிரட்டியே அவரிடம் இருந்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை திருட்டு தனமாக வாங்கி பாஜகவினர் ஆட்சி அமைத்துள்ளார்கள்.

Maharashtra
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe