Advertisment

தேசத்தின் எதிர்காலத்தோடும், மக்களின் நலனோடும் மத்திய மாநில அரசுகள் விளையாடுகிறது! எம்.பி. ஜோதிமணி கடும் கண்டனம்!

Jothimani

கரோனா காலத்தில் மக்கள் தங்களது எதிர்காலத்தையே தியாகம் செய்துவிட்டார்கள். மத்திய, மாநில அரசுகள் என்ன தியாகம் செய்தது? தேசத்தின் எதிர்காலத்தோடும், மக்களின் நலனோடும் விளையாடுகிறது மத்திய, மாநில அரசுகள் என கரூர் எம்.பி. ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தலைமையில், எம்பிக்கள் திருப்பூர் கே.சுப்பராயன், நாமக்கல் ஏ.கே.பி.சின்ராஜ், கோவை பி.ஆர்.நடராஜன், சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன், கரூர் ஜோதிமணி, பொள்ளாச்சி கே.சண்முகசுந்தரம், திண்டுக்கல் ப.வேலுசாமி ஆகியோர் பங்கேற்ற மேற்கு மண்டல நாடாளுமன்ற எம்.பி.-க்கள் ஆலோசனைக் கூட்டம் கடந்த 15ஆம் தேதி நடந்தது.

Advertisment

இதுதொடர்பாகவும், கரோனா கால மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்தும் சில கருத்துகளை நக்கீரன் இணையதளத்திடம் பகிர்ந்து கொண்டார் கரூர் எம்.பி. ஜோதிமணி. ''எங்கள் பகுதியில் மின் கோபுரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதற்காக மேற்கு மண்டல எம்.பி.-க்கள் ஒருங்கிணைப்புக்குழு அமைத்திருக்கிறோம். அந்தக் குழுவின் ஆலோசனை ஜூன் 15இல் நடந்தது.

மேற்கு மண்டலம் தமிழகத்தின் தொழில் நகரமாக இருக்கிறது. சிறு குறு நடுத்தர தொழில் நிறைந்த இடமாக இருப்பதால் லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும் உள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கு வருவாய் ஈட்டித் தரும் மண்டலமாகவும் உள்ளது. மத்திய அரசின் தவறான கொள்கைகளினால் சிறு குறு நடுத்தர தொழில்கள் நசிவைச் சந்தித்து அழிவின் விளிம்பில் இருக்கிறது. இந்தநிலையில கரோனா தொற்று உலகளவில் பிரச்சனையாக இருப்பதனால், மேற்கு மண்டல தொழில்களுக்கு மேலும் பின்னடைவு வந்துள்ளது. ஆகையால் மேற்கு மண்டலத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் 30 சதவிகித மானியத்துடன் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

மேலும் மூன்று ஊரடங்கில் மக்கள் ஏராளமான தியாகங்களைச் செய்துவிட்டார்கள். ஓரளவு வசதியாக இருந்தவர்கள் வறுமைக்கு வந்துவிட்டார்கள். வறுமையில் இருந்தவர்கள் அதற்குக் கீழே போய்விட்டார்கள். வறுமையைப் பொறுத்துக் கொண்டார்கள், நோயைப் பொறுத்துக்கொண்டார்கள், குழந்தைகள் பசியால் அழுவதைப் பொறுத்துக் கொண்டார்கள் இப்படி அவர்கள் தங்களது எதிர்காலத்தையே தியாகம் செய்துவிட்டார்கள்.

ஆனால் மத்திய, மாநில அரசுகள் என்ன தியாகம் செய்திருக்கிறது. எரிகிற வீட்டில் புடுங்குறது லாபம் என்று சொல்லுவார்கள். அப்படிச் சொல்வதைப் போல இரண்டு அரசுகளும் கொள்ளையடிப்பதில்தான் நோக்கமாக இருக்கிறது. ஏன் அதிகளவில் பரிசோதனை நடக்காமல் போனது? பரிசோதனையைவிட பரிசோதனைக் கருவிகளில் ஊழல் செய்வதில் அதிக ஆர்வமாக இருந்ததினால்தான் பரிசோதனை நடக்கவில்லை. உலகத்தில் எந்த நாடாவது ஊரடங்கு 60, 70 நாட்கள் உள்ள நிலையில் பரிசோதனை செய்யாமல் இருக்கிறதா? நியூசிலாந்து போன்ற நாடுகள் ஜீரோ தொற்று உள்ள அளவிற்கு வந்துவிட்டார்கள். நம் நாட்டில் ஜீரோ தொற்று அளவுக்குக் குறையவில்லை என்றாலும், கணிசமான அளவுக்குக் குறைந்திருக்க வேண்டுமே, ஏன் குறைய வில்லை? இப்போது அபாயகரமான நிலையில் இருப்பதோடு, இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது. பரிசோதனைகள் செய்யாததால் அச்சப்பட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

ஊரடங்குக்குக் கட்டுப்பட்டு இருக்கும் மக்களுக்கு மாதாந்திர ரீதியாக உதவி செய்வது மத்திய மாநில அரசுகளின் கடமை. அரசுக்கு மக்கள் உழைத்துக்கொடுத்த வரிகள் வருவாயாக உள்ளது. இதைத்தான் ஒரு குடும்பத்திற்கு 10 ஆயிரம் வீதம் அனைத்துக் குடும்பங்களுக்கும் அடுத்த ஆறு மாதங்கள் கொடுக்க வேண்டும். விவசாயம், சிறு குறு நடுத்தர தொழிலுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் மற்ற எதிர்க்கட்சிகளும் கேட்டோம். அதையும் இந்த அரசாங்கம் கேட்கவில்லை.

மத்திய அரசாங்கத்திடம் காசு இல்லை என்கிறார்கள். ஆனால் மத்தியில் ஆளும் பாஜக இந்த நேரத்தில் பீகார்தேர்தலைச் சந்திக்க ரூபாய் 140 கோடி செலவு செய்கிறது. அதற்கு மட்டும் நிதி எப்படி வந்தது. இதையெல்லாவற்றையும் மக்கள் கேட்க வேண்டிய நிலை வருகிறது. ஊரடங்கையும் வீண் செய்து, நோய்த் தொற்றையும் அதிகரிக்கச் செய்து, மக்களுடைய தியாகத்தை அர்த்தமில்லாமல் ஆக்கியுள்ளனர். கரோனா காலத்தில் ஊழல், கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது.

http://onelink.to/nknapp

பத்து வெண்டிலேட்டர் வாங்குவதற்கும், துப்புறவுப் பணிகளுக்கு வேண்டிய உபகரணங்கள் வாங்குவதற்கும் கரூர் மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கியும் அதனை மாவட்ட நிர்வாகம் வாங்கவில்லை. ஏனென்று தெரியவில்லை. இப்படி நிர்வாகம் இருந்தால் என்ன செய்வது. உலகளவில் கரோனாவுக்கு மருந்து கிடையாது என்கிறபோது, தனியார் மருத்துவமனைகளில் லட்சக் கணக்கில் கட்டணம் வாங்குவது ஏன்? அதற்கு அனுமதித்து ஏன்? யாருக்கு அந்தப் பணம் போகிறது.

புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்கிறார்கள். ஊருக்குள்ளேயே இருக்கும் தொழிலாளர்கள் வறுமையில் சிக்கியிருக்கிறார்கள். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நடத்த முடியாத நிலைக்கு வந்திருக்கிறது. தொற்று அதிகமாகிக்கொண்டிருக்கிறது. மக்கள் தங்களைதாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். தேசத்தின் எதிர்காலத்தோடும், நாட்டு மக்களின் நலனோடும் தங்களது சுய லாபத்துக்காக மத்திய மாநில அரசுகள் விளையாடுகின்றன'' எனக் கண்டனம் தெரிவித்தார்.

issue corona virus karur jothimani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe