Skip to main content

கம்ப்யூட்டர், செல்போனை தொடும் முன்பும், தொட்ட பின்பும் கைகளை கழுவ மறக்காதீங்க! அமெரிக்க பல்கலை அறிவுரை!!

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கணினி, செல்போன், சுவிட்ச் போர்டு உள்ளிட்ட பொருள்களை தொடுவதற்கு முன்பும், பயன்படுத்திய பிறகும் கைகளை நன்றாக சோப்பு அல்லது ஆல்கஹால் கொண்டு கழுவ வேண்டும் என எச்சரிக்கிறது, அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலை. 

கரோனா வைரஸ் நோய்த்தொற்றை தவிர்ப்பது குறித்து அமெரிக்காவின் மேரிலாண்டில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் விரிவான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்தில் உள்ள அந்த அறிக்கையை, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ம.கருணாகரன் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:

JOHNS HOPKINS UNIVERSITY RESEARCH CENTRE CORONAVIRUS

வைரஸ் கிருமி தனித்து வாழக்கூடிய உயிரினம் அல்ல. ஆனால், லிபிடுகள் எனப்படும் ஒருவித கொழுப்புப் பொருளை பாதுகாப்பு அடுக்காக மூடப்பட்ட, ஒரு புரத மூலக்கூறு (ஆர்என்ஏ) ஆகும். இது கண், மூக்கு அல்லது வாயில் உள்ள மெல்லிய மியூக்கஸ் சவ்வுகளில் இருக்கும் செல்களில் உறிஞ்சப்படும்போது அவற்றின் மரபணு குறியீடு மாற்றப்பட்டு (பிறழ்வு வினை), தீவிர மற்றும் அதிக பெருக்கம் அடையும் (மியூடேசன்) செல்களாக மாறுகிறது.

முன்பே சொன்னதுபோல், வைரஸ் கிருமி தனித்து வாழக்கூடிய உயிரினம் அல்ல. ஆனால் அது ஒரு புரத மூலக்கூறு என்பதால், கொல்லப்படாமலேயே அது தானாகவே சிதைவு அடைகிறது. வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் அது எந்தவகை பொருளின் மீது உள்ளது என்பதைப் பொருத்து வைரஸ் கிருமிகளின் சிதைவுறும் நேரம் மாறுகிறது.

வைரஸ் கிருமி வலுவற்றதே. ஆனால், அதை கொழுப்பினால் ஆன மெல்லிய உறை, வைரஸின் வெளிப்புறமாக அமைந்து கவசம்போல் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. அதனால்தான் குளியல் சோப்பு அல்லது சலவை சோப்பு போட்டு நன்றாக கை, கால்களைக் கழுவும்படி பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் சோப்பு நுரை கொழுப்பினால் ஆன வைரஸின் மேலுறையில் வெட்டுகளை உருவாக்குகிறது. அதனால் 30 வினாடிகள் வரை தொடர்ந்து சோப்பினால் கழுவும்போது வைரஸின் மேலுள்ள கொழுப்பினால் ஆன அடுக்கும், புரத மூலக்கூறுகளும் சிதைவுற்று, அழிந்து விடுகிறது.

JOHNS HOPKINS UNIVERSITY RESEARCH CENTRE CORONAVIRUS

கொழுப்பை வெப்பமூட்டும்போது உருகிவிடும் என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான். அந்த அடிப்படையான புரிதல்தான் இப்போதும் நமக்குக் கைகொடுக்கிறது. இதனால்தான், கைகள் கழுவ, உடைகள் மற்றும் எல்லாவற்றையும் கழுவுவதற்கு 25 டிகிரி செல்சியஸூக்கு மேல் வெப்பநிலையில் உள்ள நீரைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. சூடான நீர், அதிக நுரைகளை வரச் செய்வதால், அது மேலும் பயனுள்ளதாக இருக்கும். அதனால்தான் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சோப்பு போட்டு கைகள், கால்களைக் கழுவச் சொல்கிறோம். 

ஆல்கஹால் அல்லது 65 சதவீதத்திற்கும் மேல் ஆல்கஹால் கலந்த எந்த ஒரு திரவமும் கொழுப்பைக் கரைக்கக்கூடிய வல்லமை கொண்டது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் எனில், வைரஸ் கிருமிகளுக்கு வெளிப்புற பாதுகாப்பு கவசம்போல் உள்ள கொழுப்பினால் ஆன உறையை ஆல்கஹால் அடியோடு கரைத்து விடும். அதேபோல், ஒரு பங்கு பளீச்சிங் பவுடர் உடன் 5 பங்கு தண்ணீர் கலந்த திரவமும் நேரடியாக வைரஸின் உள்ளே சென்று புரதத்தைக் கரைத்து, உடைக்கிறது.

சோப்பு, ஆல்கஹால் மற்றும் குளோரின் போல் ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட நீரும், நீண்ட காலத்திற்கு பயன்படுகிறது. ஏனெனில், பெராக்ஸைடுக்கும் வைரஸ் கிருமிகளில் உள்ள புரதத்தை கரைக்கும் சக்தி இருக்கிறது. பெராக்சைடை பயன்படுத்தும்போது கொஞ்சம் கவனமாகவும் செயல்பட வேண்டியது அவசியம். ஏனெனில், பெராக்சைடை எதனோடும் கலக்காமல் நேரடியாகத்தான் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும்போது உங்கள் சருமத்தை பாதிக்கும் அபாயமும் இருக்கிறது. 

சிலர் கருதுவதுபோல் பாக்டீரிசைடு நுண்ணுயிர்க்கொல்லிகளால் எந்த பயனும் இல்லை. வைரஸ், பாக்டீரியா போன்ற உயிரினம் அல்ல என்பதால், ஆண்டிபயாடிக்குகளால் உயிருடன் இல்லாததைக் கொல்ல முடியாது என்பதை நாம் சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடியும். அதேநேரம், நாம் மேலே சொன்ன வழிமுறைகள் மூலம் வைரஸ்களின் கட்டமைப்பை விரைவில் உருத்தெரியாமல் சிதைத்து விட முடியும். 

பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தப்படாத ஆடை, தாள்கள் அல்லது துணியை எப்போதும் எடுத்து உதறக்கூடாது. இப்பொருள்களின் நுண்ணிய மேற்பரப்புகளில் வைரஸ் ஒட்டிக் கொண்டிருக்கும். துணிகள் மற்றும் தாள்கள் மீது வைரஸ் கிருமி 3 மணி நேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும். காகித அட்டைகளில் 24 மணி நேரம், உலோகங்களில் 42 மணி நேரம், பிளாஸ்டிக் பொருள்கள் மீது 72 மணி நேரம் வரையிலும் வைரஸ்கள் உயிர்ப்புடன் இருக்கும். இயற்கையிலேயே தாமிரம் கிருமி நாசினியாகவும் இருந்தாலும்கூட தாமிரத்தின் மீது 4 மணி நேரம் வைரஸ்கள் உயிருடன் இருக்கும். காய்ந்த மரங்களில் ஈரப்பதன் இருக்காது என்பதால் அதிலிருந்து வைரஸ் கிருமிகள் பிரிந்து சிதற வாய்ப்பு இல்லை.

ஆடைகளையோ, தாள்களையோ உதறினாலோ அல்லது துடைப்பத்தால் தட்டினாலோ அதன் மீதுள்ள வைரஸ் மூலக்கூறுகள் 3 மணி நேரம் வரை காற்றில் மிதந்து கொண்டிருக்கும். அவை உங்கள் மூக்கின் வழியாக நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும். குளிர்ந்த வெளிப்புறச் சூழல், வீடுகள் மற்றும் கார்களில் செயற்கையாக வைக்கப்பட்டுள்ள ஏர்கண்டிஷன்களில் வைரஸ் கிருமிகள் நிலையாக இருக்கும். 

ஈரப்பதமாக இல்லாமல் இருக்க வேண்டும். காய்ந்த, வறண்ட, சூடான மற்றும் சூழல்கள் வைரஸ் கிருமிகளை விரைவாக அழிக்கக்கூடியவை. எந்த ஒரு பொருளின் மீதும் புற ஊதாக்கதிர்கள் படும்போது அங்குள்ள வைரஸ் கிருமிகளின் புரதத்தை உடைக்கிறது. உதாரணமாக, புற ஊதாக்கதிர்கள் முறையில் முகக்கவசத்தை கிருமி நீக்கம் செய்துவிட்டு மீண்டும் பயன்படுத்தலாம். அதேநேரம், நம் சருமத்தில் உள்ள கொலாஜன் எனும் புரதங்களையும் சிதைக்கும் அபாயம் இருக்கிறது. அவ்வாறு நிகழும்போதுதான் சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. 

நல்ல, ஆரோக்கியமான தோல் வழியாக வைரஸ் கிருமி செல்ல முடியாது. வினிகருக்கு கொழுப்பினால் ஆன பாதுகாப்பு அடுக்கை உடைக்கும் ஆற்றல் கிடையாது. அதனால் வினிகர் கொண்டு வைரஸ் கிருமிகளை அழிப்பது என்பது தேவையற்ற வேலை.

கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலத்தில் சில நாடுகளில் மதுபானங்களைக் கொண்டு கை, கால்களை கழுவினால் வைரஸ் கிருமிகளை அழித்து விடலாம் என்ற தகவல்கள் பரவின. அந்த முறையை பலர் பயன்படுத்தவும் செய்தனர். உண்மையில் மதுபானங்களால் வைரஸ் கிருமிகளை சிதைக்க முடியாது. ஏனெனில், வோட்கா, ஸ்பிரிட் போன்ற மதுபானங்களில் அதிகபட்சமாக 40 சதவீத ஆல்கஹால்தான் உள்ளது. நாம் மேலே சொன்னபடி, குறைந்தபட்சம் 65 சதவீத ஆல்கஹால் உள்ள திரவங்களைக் கொண்டு கழுவினால்தான் வைரஸ் கிருமிகளை முற்றாக சிதைக்க முடியும். 

குறைந்த பரப்புகளில் வைரஸ்கள் அதிக செறிவுடன் இருக்கும். திறந்த மற்றும் காற்றோட்டமான பகுதியில் வைரஸ் கிருமிகளின் தாக்கம் குறைவாக இருக்கும்.  கண், மூக்கு, வாய் உள்ளிட்ட மெல்லிய சவ்வுத்தோல்களைக் கொண்ட உறுப்புகள் மட்டுமின்றி உணவுப்பொருள்கள், பூட்டுகள், கைப்பிடிகள், சுவிட்சுகள், ரிமோட் கண்ட்ரோல், செல்போன், கைக்கடிகாரங்கள், கணினி, மேஜைகள், டிவி போன்றவற்றைத் தொடுவதற்கு முன்பும், பின்பும் உங்கள் கைகளைக் சோப்பு உள்ளிட்ட ஏற்கனவே சொல்லப்பட்ட பொருள்களைக் கொண்டு நன்றாக கழுவுவது என்பது எப்போதும் சிறந்தது.

அடிக்கடி கைகளைக் கழுவுவதால், கைகள் உலர்ந்து போகும். அவ்வாறான நிலையில் விரிசல்களின் வழியாக வைரஸ் மூலக்கூறுகள் மறைந்து இருக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதனால் மாய்ச்சுரைஸிங் கிரீம்களை பயன்படுத்தலாம். 

நகங்களின் வழியாகவும் வைரஸ் பரவக்கூடும் என்பதால், நகங்களை வளர்க்காமல் இருப்பது நல்லது. இவ்வாறு ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்