Advertisment

20 வருடத்திற்கு வேலை இல்லை...ரயில்வே சதி அம்பலம்...அதிர்ச்சி ரிப்போர்ட்!

திருச்சி பொன்மலை ரயில்வே காலியிடங்களில் வட இந்தியர்களை நிரப்பு வதற்கெதிராக மறியல் போராட்டம் நடத்தியது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்காக மாறியது. அந்த சூடு ஆறுவதற்குள்ளாகவே திருச்சி ரயில்வே கோட்டத்தில் காலியாக உள்ள 800 ஹெல்பர் உள்ளிட்ட குரூப் டி பணியிடங்களுக்கு ரயில்வே பணியாளர் தேர்வாணையம் அண்மையில் தேர்வு நடத்தியது. இந்தத் தேர்வு முடிவின்படி, புதிதாக நியமிக்கப்பட்ட 528 பேரில் 475 பேர் வெளிமாநிலத்தவர் என்கிற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 53 பேர் மட்டுமே புதிதாக பணியில் சேர்க்கப் பட்டுள்ளனர். இதுதொடர்பாக அதிர்ச்சி தெரிவித்துள்ள திருச்சி ரயில்வே கோட்ட எம்.பி.க்கள் குழுத் தலைவர் திருச்சி சிவா, "நியமனம் தொடர்பாக குழுவுக்கு எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை'' என்கிறார்.

Advertisment

railway

இரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் நம்மிடம், "இரயில்வே அப்ரண்டிஸ் தேர்வில் பொன்மலையிலும் போத்தனூரிலும் சேர்த்து மொத்தமாக 813 பழகுனர் இடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. தமிழகத்திலிருந்து பெரிதாக யாருமே விண்ணப்பிக்கவில்லை. இந்த பயிற்சியின்போது தரப்படும் உதவித்தொகை மிகவும் குறைவு என்பதாலும், பயிற்சி மட்டுமே என்பதாலும் தமிழர்கள் ஆர்வம்காட்டவில்லை. இந்த வாய்ப்பு களுக்கு வடஇந்தியர்கள் அதிகம் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுவது உண்மைதான்'' என்கின்றனர்.

Advertisment

politicians

வைகோ தன்னுடைய அறிக்கையில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த பலர், முகவர்கள் உதவியுடன் ரயில்வே பணிகளைப் பெற்று இருப்பதைக் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் நம்மிடம், "இந்த ரயில்வே நிறுவன விதியில் விளம்பரம் என்கிற தலைப்பில் விதி எண் 110-ல் 4,600 ரூபாய் ஊதியத்திற்கும், அதற்கு கீழுள்ள பணியாளர் தேர்வுக்கும் அந்தந்த பிராந்தியத்தில் விளம்பரம் வெளியிட வேண்டுமென தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. தொடர்புடைய பிராந்தியத்தில் போதுமானோர் விண்ணப்பிக்கவில்லை என்றால் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பிற பிராந்திய ரயில்வே வாரியத்தில் வெளியிடலாம்.

ஆனால் ரயில்வே வாரியம் இந்த விதியைப் பின்பற்றாமல் நாடு முழுவதும் விளம்பரம் வெளியிட்டதாலே பிற மாநிலத்தார் தெற்கு ரயில்வே வாரியத்தில் சேருவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் தற்போது கடைநிலை ஊழியர்களாக நியமனம் செய்ய 2393 முன்னாள் ராணுவத்தினரை சென்னை ரயில்வே தேர்வாணையம் தேர்வு செய்திருக்கிறது. இவர்கள் மாதாந்திர தொகுப்பு ஊதியம் பெறும் ஒப்பந்த தொழிலாளர்கள். இதனால் இன்னும் பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு தெற்கு ரயில்வேயில் இவர்கள் பணியாற்றுவார்கள்.

இதனால் நிரந்தரப் பணியாளர்கள் எண்ணிக்கை குறையும். இளைஞர்களின் ரயில்வே பணிக்கான வாய்ப்பும் பறிபோகிறது. இந்தியாவிலேயே தமிழக கேரள பகுதிகள் அடங்கிய தெற்கு ரயில்வேயில்தான் மிக அதிக அளவு இந்த மாதிரியான ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியமனம் நடக்கிறது. ரயில்வே பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியமனத்தை எதிர்த்து மிகப் பெரிய அளவில், தெற்கு ரயில்வே முழுவதும் தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் போராட்டத்தை முன்னெடுக்கும்'' என்கிறார்.

வட மாநிலங்களின் ஊடே ரயில்போகும்போது, ரிசர்வ் செய்த இருக்கை களில் அப்பகுதி மக்கள் ஏறியமர்ந்துகொண்டு இறங்கமறுப்பர் என்று பேச்சுண்டு. இப்போதோ தமிழர்களுக்கான ரயில்வே வேலைகளிலும் ஏறியமரத் தொடங்கிவிட்டனர் வடஇந்தியர்கள். இன்னும் 20 ஆண்டுகளுக்கு ரயில்வேயில் தமிழ்நாட்டுக்கு இடமில்லை என்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. தங்கள் சீட்டுகளைப் இறுகப் பற்றிக்கொள்வதிலே அக்கறை செலுத்தும் மாநில ஆட்சியாளர்கள், மக்களின் பிரச்சினைகள் குறித்து எப்போது யோசிக்கப் போகிறார்கள் என்பதுதான் விடைதெரியாத புதிர்.

conspiracy job north indian railway Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe