Skip to main content

ஜெயலலிதா... வாஜ்பாயின் பதிமூன்று மாத தலைவலி! 

Published on 18/08/2018 | Edited on 18/08/2018

நாளிதழில் இன்று வெளியான ‘வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது’ என்ற செய்தியைப் படித்துவிட்டு, “மனதிலும் யாருக்கும் துளியும் இடையூறு செய்ய நினைக்காதவர் வாஜ்பாய். கட்சி கடந்து அரசியல் தலைவர்கள் பலராலும் போற்றப்படுபவர்.  விதிவிலக்காக, தமிழகத் தலைவர் ஒருவர் அவரைப் படாதபாடு படுத்திவிட்டார். 1998, மே 19-ஆம் தேதி இந்தியப் பிரதமராக அவர் பதவியேற்ற நாளிலிருந்து, ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஆட்சி கவிழ்ந்த 1999, ஏப்ரல் 17-ஆம் தேதி வரையிலும் அவரை நிம்மதியாகத் தூங்கவிடாமல் செய்துவிட்டார்.” என்று பெருமூச்சுவிட்டார் அந்த  பா.ஜ.க. பிரமுகர்.

 

 

vajpayee jeya




‘யார் அந்தத் தமிழகத் தலைவர்? அப்படி என்ன செய்தார்?’ என்று பார்ப்போம்!

டான்சி வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு, பிளஸன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு, கலர் டிவி வழக்கு, ஸ்பிக் பங்கு விற்பனை வழக்கு, நிலக்கரி ஊழல் வழக்கு வெளிநாட்டில் இருந்து 3 லட்சம் டாலர் நன்கொடை பெற்ற வழக்கு, மீனா அட்வர்டைசிங் வழக்கு, கிரானைட் ஊழல் வழக்கு என ஜெயலலிதா பல வழக்குகளைச் சந்தித்து வந்த காலம் அது!

 

 


ஆனாலும், 1998 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக 18 தொகுதிகளைக் கைப்பற்றியது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க. – 4, பா.ஜ.க. – 3, மதிமுக – 3, ஜனதா கட்சி -1 மற்றும் தமிழக ராஜீவ் காங்கிரஸ் -1 என மொத்தம் அதிமுக கூட்டணி 30 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழக வாக்காளர்கள், அதிமுக கூட்டணி தங்களுக்கு நல்லது செய்யும் என்று நம்பிக்கை வைத்து வாக்களித்ததாலேயே இது சாத்தியமாயிற்று. வெற்றி பெற்ற அதிமுக கூட்டணி, அந்தக் காலக்கட்டத்தில், தமிழக மக்களுக்கும் சரி, இந்த தேசத்துக்கும் சரி எந்த அளவுக்கு விசுவாசமாக நடந்துகொண்டது?

  bjp alliance



அப்போது, வாஜ்பாய் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு பா.ஜ.க.வுக்கு அதிமுக ஆதரவு தேவையாக இருந்தது. முதலில் வெளியிலிருந்து ஆதரவு தருவதாகச் சொன்ன ஜெயலலிதா, பிறகு அதிமுக எம்.பி.க்களை  அமைச்சரவையில் இடம்பெறச் செய்தார். சேடபட்டி முத்தையா, தம்பிதுரை ஆகிய இருவரும் மத்திய அமைச்சர்கள் ஆனார்கள்.  அதே நேரத்தில், பூட்டாசிங், ராமகிருஷ்ண ஹெக்டே, ராம் ஜெத்மலானி போன்ற அமைச்சர்களை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று கொடி பிடித்தார். இதனால், வாஜ்பாய் மிகுந்த தர்மசங்கடத்துக்கு ஆளானார். ஆனாலும், பூட்டாசிங்கை மட்டும் அமைச்சரவையிலிருந்து நீக்கினார். இதேரீதியில், நினைத்த மாத்திரத்தில் ஏதாவது ஒரு கோரிக்கையை முன்வைத்து, நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வந்தார். தன் மீதான வருமான வரி வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும் என்றார். அடுத்து, இந்திய அரசியலமைப்பு விதி 356-ஐ பயன்படுத்தி, அப்போது கலைஞர் தலைமையில் தமிழகத்தில் நடந்துவந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று அழுத்தம் தந்தார். ஜெயலலிதாவை சமாதானப்படுத்துவற்காக, டெல்லியிலிருந்து பா.ஜ.க. பிரதிநிதிகள் போயஸ் கார்டனுக்கு வருவதும் போவதுமாக இருந்தனர். ஜெயலலிதாவோ, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் பதவி விலக வேண்டும், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமியை நிதியமைச்சராக்க வேண்டும், வாழப்பாடி ராமமூர்த்தி வசம் இருந்த பெட்ரோலியத்துறையை பறித்தாக வேண்டும் என்று நிபந்தனைகளை அடுக்கிக்கொண்டே போனார். பிரதமராக இருந்த வாஜ்பாய், செய்வதறியாது திக்குமுக்காடினார்.

 

 


இந்தநிலையில்தான், டெல்லி அசோகா ஓட்டலில், சுப்பிரமணியன் சாமி ஏற்பாடு செய்த தேநீர் விருந்தில் கலந்துகொண்டார் ஜெயலலிதா. சோனியா காந்தி உட்பட, சந்திரசேகர், நரசிம்மராவ், குஜ்ரால், தேவகவுடா, முலாயம்சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் போன்ற தலைவர்கள் அந்த விருந்தில் பங்கேற்றனர்.

ஜெயலலிதா அடுத்து டெல்லிக்கு கிளம்பியது 1999, ஏப்ரல் 12-ஆம் தேதி. ‘எதற்காக டெல்லி விஜயம்?’ என்று சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “வாஜ்பாய் அரசை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் ஒரு புதிய அரசை நிறுவப் போகிறோம். அதற்காகவே டெல்லி செல்கிறேன்” என்று குண்டைத் தூக்கிப் போட்டார்.

  jeyalalitha sonia meeting



1999, ஏப்ரல் 17, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. பா.ஜ.க. அரசுக்கு ஆதரவு வாக்குகள் 269 ஆகவும், எதிரான வாக்குகளாக 270-ம் விழுந்தன. ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாய்பாயின் 13 மாத பா.ஜ.க. அரசு கவிழ்ந்தது. ஜெயலலிதாவின் சுயநலப் போக்கினால், அதே ஆண்டில், பாராளுமன்றத்துக்கு  மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை நடத்த வேண்டிய நிலைக்கு தேசம் ஆளானது.

1999-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் திமுக 12 இடங்களில் வென்றது. பா.ம.க., பா.ஜ.க., மதிமுக, எம்.ஜி.ஆர். திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் 14 இடங்களில் வென்றன. திமுக கூட்டணி மொத்தம் 26 இடங்களையும், அதிமுக கூட்டணி மொத்தம் 13 இடங்களையும் கைப்பற்றியது. கடந்த தேர்தலில்,  தமிழக மக்கள் அளித்த வாக்குகளை வைத்து டெல்லியில் ‘அரசியல் ஆட்டம்’ ஆடிய ஜெயலலிதாவுக்கு மக்கள் தந்த ஆதரவு பாதியாக சுருங்கிப் போனது.

ஆட்சி கவிழ்ந்த 1999 ஏப்ரல் 17-ஆம் தேதி வாஜ்பாய் என்ன சொன்னார் தெரியுமா? “இன்று நான் நிம்மதியாக உறங்குவேன்.” என்றார்.

 

 

Next Story

வாஜ்பாய் பயோ பிக்கின் டீசர் வெளியானது

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
vajpayee biopic teaser released

இந்திய சினிமாவில் பல பயோ-பிக் படங்கள் வெளியாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு தற்போது படங்களாகவும், வெப் சீரிஸ்களாகவும் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழக்கையைத் தழுவி படங்கள் எடுக்கப்பட்டன. 

அந்த வரிசையில் பாஜகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் வாழ்க்கை படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் ரவி ஜாதவ் இயக்கியுள்ளார். இப்படத்தில் வாஜ்பாய் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி நடித்துள்ளார். இப்படத்தை பானுஷாலி ஸ்டுடியோஸ் மற்றும் லெஜண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த வருடம் வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதி வெளியானது.  

மேலும், படத்தை இந்த ஆண்டு வருகிற கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் இப்படம் 2024 ஜனவரி 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ‘மெயின் அதல் ஹூன்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலர் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

டிச. 24 நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளுக்கு பா.ஜ.க. ஏற்பாடு

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
former PM Atal Bihari Vajpayee, on 25th December - celebrated as Good Governance Day

பா.ஜ.க. சார்பில் இந்தியாவில் முதன்முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்றவர் அடல் பிகாரி வாஜ்பாய். 1924ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி மத்தியப் பிரதேசம் மாநிலம், குவாலியர் பகுதியில் பிறந்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். இவர் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த தினமான டிசம்பர் 25 ஆம் தேதி வாஜ்பாயின் நல்லாட்சி தினமாக அனுசரிக்கப்படுகிறது. அடல் பிகாரி வாஜ்பாய்க்கு கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது.

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்யின் பிறந்தநாள் அன்று பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அவருக்கு அமைக்கப்பட்ட 25 அடி உயர சிலையைத் திறந்து வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாளான டிச. 24ம் தேதி பா.ஜ.க.வினர் சிறப்பாகக் கொண்டாடுவர். பா.ஜ.க.வை தாண்டி மாற்றுக் கட்சியினருடனும் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நல்ல நட்புறவை மேற்கொண்டார். இதன் காரணமாக மாற்றுக் கட்சியினரும் அவருக்கு மரியாதை செய்வர். 

former PM Atal Bihari Vajpayee, on 25th December - celebrated as Good Governance Day

இந்த வருடம் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்யின் பிறந்த தினமான டிச. 24ம் தேதி நல்லாட்சி தினமாக இந்தியா முழுவதும் பாஜக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை பா.ஜ.க. தலைமை வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாய்யின் வாழ்க்கை வரலாறு படமாகவும் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்திற்கு ‘மெயின் அடல் ஹூன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.