Skip to main content

மீண்டும் முருங்கை மரம் ஏறிய ஜெ.வேதாளம்!

Published on 22/12/2017 | Edited on 22/12/2017



தேமுதிக, கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் ஆதரவோடும், திமுக எதிராகப் பரப்பப்பட்ட 2ஜி உள்ளிட்ட பொய்ப் பிரச்சாரங்களின் உதவியோடும் வெற்றிபெற்ற அதிமுக கொஞ்ச நாள்கூட தனது முகத்தை மாற்றியிருக்கவில்லை.

கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பிரமாண்டமாய் கட்டப்பட்ட புதிய சட்டமன்றக் கட்டிடத்திற்கு பதிலாக, கோட்டையில் உள்ள பழைய சட்டமன்றக் கட்டிடத்திற்கே சபை நடவடிக்கைகளை மாற்றினார் ஜெயலலிதா. அந்தக் கட்டிடத்தில் அரசு பல்நோக்கு மருத்துவமனை தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த முடிவை விமர்சிக்கக்கூட பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் முன்வரவில்லை. இதையடுத்து, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அடையாளத்தையும் மாற்ற ஜெயலலிதா முயற்சி மேற்கொண்டார். நூலகத்தின் கூட்ட அரங்கை வட இந்தியர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விட்டது. ஆனால், அவருடைய முயற்சியை சென்னை உயர்நீதிமன்றம் தடுத்து நிறுத்தியது.



அண்ணா நூற்றாண்டு நூலகம்

இப்படிப்பட்ட அராஜக நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் கண்டிக்க முன்வந்தன. கலைஞர் தனது ஆட்சிக்காலத்தில் தனது பெயர் சொல்லும் பல அடையாளங்களை ஏற்படுத்திச் செல்வார். அந்த வகையில் காலத்திற்கும் அவருடைய பெயர் சொல்லும் வகையில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றக் கட்டிடத்தையும், ஆசியாவின் மிகப்பெரிய நூலகத்தையும் ஜெயலலிதாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மீண்டும் தனது பழைய சுபாவத்துக்கே சென்றார் ஜெயலலிதா. கூட்டணிக் கட்சிகளை உடனடியாக கழற்றிவிட்டார். தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்தாலும், அதற்குரிய மரியாதையை கொடுக்க மறுத்தார். தேமுதிக உதவியோடுதான் இவ்வளவு பெரிய வெற்றியை அதிமுக பெற்றது என்ற உண்மையை ஒப்புக்கொள்ள மறுத்தார்.

தனது வீட்டிலிருந்து சசிகலா குடும்பத்தினரை வெளியேற்றி ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். தனக்கு எதிரான வழக்குகள் அனைத்துக்கும் சசிகலா குடும்பம்தான் காரணம் என்ற தோற்றத்தை உருவாக்கவே ஜெயலலிதா இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறினார்கள்.

சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூரு நீதிமன்றத்தில் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையின் மூலம் அவர் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள செய்த நாடகம் என்று கூறப்பட்டது.

போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றியதுடன் அனைவரையும் கட்சியிலிருந்தும் வெளியேற்றினார். ஆனால், சில மாதங்களிலேயே சசிகலா மன்னிப்புக் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து அவரை மட்டும் சேர்த்துக் கொள்வதாக ஜெயலலிதா அறிவித்தார். சசிகலா போயஸ் இல்லத்திற்குள் நுழைந்துவிட்டால் மன்னார்குடி குடும்பமே நுழைந்த மாதிரிதானே என்று அரசியல் விமர்சகர்கள் கூறினார்கள்.



பல்நோக்கு மருத்துவமனையாவதற்கு முன்பு புதிய தமிழக சட்டப்பேரவை கட்டிடம்

இந்த ஆட்சிக் காலத்தில் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் கொடுக்கப்பட்டது. கிரைண்டர், மிக்சி, மின்விசிறி ஆகியவையும், வீட்டுக்கு 4 ஆடுகளும், பசு மாடும் கொடுக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி ரேசன் கடைகளில் திமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட 20 ரூபாய்க்கு 20 கிலோ அரிசி என்ற திட்டத்தை 20 கிலோ இலவச அரிசித் திட்டமாக மாற்றினார்.

இந்த இலவச திட்டங்களால் மக்கள் யாரும் தன்னை கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற ஆணவம் மீண்டும் ஜெயலலிதாவிடம் தலைதூக்கியது. எதிர்க்கட்சிகளை மதிக்காத போக்கு அதிகரித்தது. பொது நிகழ்ச்சிகளில்கூட மக்களைச் சந்திக்காமல் தவிர்த்தார். எல்லா அரசு நிகழ்ச்சிகளையும் வீடியோ கான்பரன்சிங் மூலமாகவே நடத்தினார்.

சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சிகளை பேசவே அனுமதிக்க மறுத்தார். எல்லா பிரச்சனைகளுக்கும் 110 விதியின் கீழ் அறிக்கையை வாசிப்பதை வழக்கமாக கொண்டார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் சட்டமன்றத்தில் நாக்கைக் கடித்து எச்சரிக்கும் வகையில் பேசினார். அதையே காரணமாக காட்டி அவரை சபை நடவடிக்கைகளில் பங்கேற்க விடாமல் தடை செய்தனர். அவரும் அதன்பிறகு சபைக்கு வருவதையே தவிர்த்தார். கூட்டணிக் கட்சியான தேமுதிக உறுப்பினர்களையே அதிமுக ஆதரவாளர்களாக மாற்ற ஜெயலலிதா முயற்சி செய்தார்.

தன்னை சந்திப்பவர்களுக்கு மட்டுமே சலுகை காட்டி, மற்றவர்களையும் இழுக்கப்பார்த்தார். ஆனால், பெரும்பாலான தேமுதிக உறுப்பினர்கள் தலைமைக்கு விசுவாசமாகவே இருந்தனர்.



அழுதுகொண்டே பதவியேற்ற அதிமுகவினர்

இந்நிலையில்தான், 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கியது. இந்தத் தேர்தலில் அதிமுக தனித்தே போட்டியிடும். புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளையும் கைப்பற்றி அடுத்த பிரதமராக ஜெயலலிதா பதவியேற்பார் என்று அதிமுகவினர் பிரச்சாரத்தை தொடங்கினார்கள். பாஜக மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருந்தது. அதற்கு போட்டியாகவே ஜெயலலிதா தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டார்.

கூட்டணி ஆட்சிதான் அமையும், அப்படி அமைந்தால் மத்திய அரசை தீர்மானிக்கும் சக்தியாக அதிமுக உருவாக வேண்டும். அதன்மூலம் தன்மீதான சொத்துக்குவிப்பு வழக்கிற்கு முடிவு கட்ட வேண்டும் என்றெல்லாம் ஜெயலலிதா திட்டமிட்டார்.

2014 மக்களவைத் தேர்தலை தமிழ்நாட்டில் நடத்திய தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கு முதல் நாள் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்தது. அதிமுகவினர் மட்டும் பணம்பட்டுவாடா செய்ய தமிழக போலீஸ் உதவி செய்தது.

இந்தத் தேர்தலில் திமுக காங்கிரஸை விட்டு விலகியது. விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் அணி அமைத்தது.  கம்யூனிஸ்ட்டுகளை திமுக எதிர்பார்த்தது. ஆனால், 2ஜி விவகாரத்தை காரணம் காட்டி சிபிஎம் இந்த கூட்டணியை தவிர்த்தது. அதிமுக தனித்துப் போட்டியிட்டது. சிபிஎம், சிபிஐ தனியா அணி அமைத்தன. பாஜக, மதிமுக, பாமக, தேமுதிக ஆகியவை அணி அமைத்திருந்தன. காங்கிரஸ் தனியாக போட்டியிட்டது.

தேர்தல் முடிவில் அதிமுக தனியாக 37 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக, பாமக தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன.

இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றும் ஜெயலலிதாவின் உதவி தேவைப்படாத அளவுக்கு பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது. அப்படியும்கூட அதிமுகவை தக்கவைப்பதற்காக அந்தக் கட்சிக்கு துணை சபாநாயகர் பதவியை பாஜக கொடுத்தது.

இந்நிலையில்தான், 2014 செப்டம்பர்  27 ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்புக்காக ஜெயலலிதாவும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்றார்கள்.

தீர்ப்பை வாசித்த நீதிபதி குன்ஹா நான்கு பேருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து நான்குபேரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இரண்டாவது முறையாக ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். அவருக்குப் பதிலாக இரண்டாம் முறையாக ஒ.பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். ஒ.பன்னீர் உள்பட அமைச்சர்கள் அனைவரும் அழுதுகொண்டே பதவியேற்று மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றினார்கள்.

20 நாட்கள் சிறையில் இருந்த ஜெயலலிதா மற்றும் சசிகலா கும்பலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து ஜெயலலிதா சென்னை திரும்பினார். வீட்டைவிட்டு வெளியே வரவே இல்லை. தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அந்த விசாரணை இந்திய நீதித்துறை வரலாற்றில் இல்லாத வகையில் அவசரஅவசரமாக விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்ட நான்குபேரையும் விடுவிப்பதாக ஒரே வரியில் தீர்ப்பு கூறி சாதனை படைத்தார்.



வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் மட்டுமே ஆட்சி செய்த ஜெ.

இதையடுத்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார்.

ஆனால், குமாரசாமியின் தீர்ப்பில் இருந்த கணக்கு குளறுபடிகள் கடுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கை நடத்திய கர்நாடக அரசு, ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இந்த அப்பீல் மனு மீதான விசாரணையில் அவசரம் காட்டவில்லை.

விசாரணை இழுத்துக்கொண்டே சென்றது. முதல்வரான ஜெயலலிதா கொடநாட்டிற்கே தலைமைச் செயலகத்தை மாற்றினார். ஆறு மாதங்கள் அங்கேயே தங்கி அரசு நிர்வாகத்தை நடத்தினார். அதிகாரிகளும், அமைச்சர்களும் கொடநாடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கிருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலமாக அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இதையும் யாருமே கேள்வி கேட்கவில்லை. ஜெயலலிதாவை எதிர்த்து யாரும் பேசவே பயந்தார்களா அல்லது ஜெயலலிதாவை எதிர்த்தால் திமுக பயன்பெற்றுவிடும் என்று பயந்தார்களா என்பதை கணிக்கவே முடியவில்லை.

ஒருவழியாக 2016 சட்டமன்றத் தேர்தலும் நெருங்கியது.

- ஆதனூர் சோழன்

முந்தைய பகுதி:

சார்ந்த செய்திகள்