Skip to main content

தன் குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடாமலேயே இறந்த ஜீவிதா... 

Published on 07/03/2018 | Edited on 07/03/2018
jeevitha

நாளை வழக்கம்போல மீண்டும் ஒரு உலக மகளிர் தினம். எவ்வளவுதான் பெண்களும், ஆண்களும் சமம் என்று கூறினாலும், நடைமுறையில் இந்த சமூகத்தில் சமநிலை உள்ளது போல் ஒருவித மாயை மட்டுமே இருக்கிறதே தவிர, உண்மையில் ஆணாதிக்கம் பெண்களை வன்புணர்வு செய்துகொண்டும், வரதட்சணை கொடுமை செய்துகொண்டும்தான் இருக்கிறது. அதன் வெளிப்பாடாக சென்னையை சேர்ந்த 25 வயது ஜீவிதா, தன் கணவன் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாலும், வேறு பெண்ணுடன் தகாத உறவில்  இருந்ததாலும், கடந்த சனிக்கிழமை கடற்கரையிலிருந்து தாம்பரம் சென்ற மின்சார ரயிலில் பயணம் செய்த பொழுது அடையாற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தவர் 25 வயதான ஜீவிதா. இவருக்கும் ரோஸ் முரளி என்ற ஐ.டி. ஊழியருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஒரு வயதில் வைஷாலி என்ற பெண்குழந்தை உள்ளது. திருமணம் நடந்ததிலிருந்தே வரதட்சணை கொடுமை செய்துவந்துள்ளனர் முரளியும் அவரது குடும்பத்தாரும். ஜீவிதா, தன் குழந்தைக்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டு அவ்வப்போது தன் வீட்டிலிருந்து பணத்தை வாங்கிக்கொடுத்து சமாளித்து வந்துள்ளார். இந்த நிலையில் முரளி தான் பணிபுரியும் இடத்தில் ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததை அறிந்த ஜீவிதா அதைப்பற்றி முரளியிடம் கேட்டபொழுது. ஜீவிதாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். அதன்பின்  20 லட்சம் ரூபாய் வரதட்சணை கொண்டு வா இல்லை இறந்துவிடு என்று முரளி கூறியுள்ளார்.

இதனால் மிகுந்த வேதனை அடைந்துள்ளார் ஜீவிதா. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வேலைக்கு மின்சார ரயிலில் பயணித்தபொழுது ஓடும்  ரயிலிலிருந்து அடையாற்றில் குதித்து தற்கொலைசெய்துகொண்டார். அதன்பின் ஜீவிதாவின் அம்மா தன் மகளின் மரணத்திற்கு  முரளி மற்றும் அவர் குடும்பத்தார்தான் காரணம் என்றும், அவர்கள் என் மகளிடம் வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்தார்கள் என்றும் மாம்பலம்  ரயில்வே  போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனை உறுதிப்படுத்த ஜீவிதாவின் கைபேசியை கைப்பற்றிய காவல்துறையினர் அதனை ஆராய்ந்து பார்த்தபொழுது அதில் முரளி ஒரு பெண்ணிடம் கணவரை விட்டு விலகுமாறு கூறிய ஆடியோ பதிவை கேட்ட போலீசார், முரளி வேறுபெண்ணுடன் தொடர்பிலிருந்ததை உறுதி செய்தனர். தற்போது முரளி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதில் மற்றொரு வருத்தமான செய்தி என்னவென்றால் 5ஆம் தேதி தன் குழந்தையின் முதல் பிறந்தநாளைக்கூட கொண்டாட முடியாமல் இறந்து விட்டார் ஜீவிதா.