Advertisment

அப்பல்லோ சந்திப்பு... எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டு அறிவிப்பு... - ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள்!

j

ஜெயலலிதா மறைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. மறைந்த பின்னர் கட்சியிலும் ஆட்சியிலும் எத்தனையோ மாற்றங்கள். பல கணிப்புகள் உடைந்தன, பல ஆரூடங்கள் சிதைந்தன. ஜெ. மறைவின்போது நக்கீரன் இதழில் வெளிவந்த கட்டுரை இது. அனைத்தையும் சரியாகவே சொல்லியிருக்கிறது நக்கீரன். சசிகலா பதவியேற்பு, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு குழு செயல்பட்டது... இப்படி.

Advertisment

""ஜெ.வுக்கு சுவாசம், இதயத்துடிப்பு ஆகியவற்றை சீராக வைத்திருப்பதற்கே அப்பல்லோ டாக்டர்கள் பெரும்பாடு படுகிறார்கள்'' என்கிற முத்திரை வாசகங்களுடன் கடந்த 2016 டிசம்பர் 4-ம் தேதி அன்று வெளிவந்த நக்கீரனில் "அதே கண்டிஷன்! அடுத்தகட்ட சிகிச்சை" என்கிற அட்டைப்பட கட்டுரையில் எழுதியிருந்தோம். அன்று மாலை 4.30 மணிக்கு ஜெ.வின் இதயப் பகுதியில் பிரச்சினை வெடித்தது.

Advertisment

அப்பல்லோ மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் ஜெ.வுக்கென அமைக்கப்பட்டிருந்த அறையில் படுத்திருந்த ஜெ.வின் மார்புப் பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது. ஜெ.வின் துடிப்பு மிகுந்த அசைவுகளில் ஏதோ ஒன்று விபரீதமாக நடப்பதை அந்த அறையிலிருந்த மெர்ஸி என்கிற நர்சுக்கு உணர்த்தியது. உடனே ஜெ.வுக்கு சிகிச்சையளிக்கும் இதய நோய் நிபுணர் டாக்டரையும் மற்றவர்களையும் அந்த அறைக்கு வரும்படி அழைப்புகள் பறந்தன. அவர்கள் வருவதற்குள் அந்த அறைக்கு எதிர்புறம் உள்ள கிரிட்டிக்கல் கேர் யூனிட்டிற்கு ஜெ.வை கட்டிலுடன் நகர்த்திக் கொண்டு சென்றார்கள் டாக்டர்கள். உடனடியாக செயற்கை சுவாசத்தை அவர் தொண்டையுடன் இணைக்கப்பட்டிருந்த டிராக்கோஸ்டமி ட்யூப் மூலமாகக் கொடுத்தார்கள். செயற்கை சுவாசம் அளித்தபிறகும் அவரது இதயத் துடிப்பை காட்டும் கருவி கிட்டத்தட்ட இதயம் நின்றுபோனதைப் போல மெதுவாக இயங்குவதைக் காண்பித்தது. அதற்குள் இதய மருத்துவர் அங்கு வந்தார். அவர்தான் ஜெ.வுக்கு இதயத்தில் கோளாறு இருக்கிறது என கண்டுபிடித்தார்.

டாக்டர்கள் உடனடியாக அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என முடிவு செய்தார்கள். நெஞ்சுப் பகுதியைத் திறந்து இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய முடியாது என்பதால் உடனடியாக இதயத்தை இயங்க வைக்க தொண்டை வழியாக இயந்திரங்கள் மூலம் இதயத்தை மசாஜ் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தார்கள். அவசர அவசரமாக செய்த இந்த ஆபரேஷன் இதயப் பாதிப்பு வந்த 12 மணி நேரம் கழித்து 5-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடந்தது. அதன்பிறகும் ஜெ.வுக்கு இதயத்துடிப்பு சீராகவில்லை. அவரது இதயத்தையும் நுரையீரலையும் "எக்மோ' என்கிற கருவியில் இணைத்தார்கள். எந்தவிதமான அசைவும் இல்லாமல் துணியால் முகத்தை மூடி 5-ஆம் தேதி காலை படுக்க வைக்கப்பட்ட ஜெ.வின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகத் தொடங்கியது. ஏற்கனவே நுரையீரல் மற்றும் இதய நோய் தொற்றுகளால் பாதிக்கப்பட்ட ஜெ.வின் உடல்நிலை எந்த விதமான முன்னேற்றத்தையும் காட்ட மறுத்தது. எக்மோ என்ற எந்திரத்தின் உதவியால் இயங்கினாலும் உடலின் மற்ற உறுப்புகள் இயங்க மறுத்து ஒவ்வொன்றாக செயலிழக்கத் தொடங்கின.

டெல்லியிலிருந்து பறந்து வந்த கவர்னர் 4-ம் தேதி நள்ளிரவு ஜெ.வை பார்த்தபிறகு ஜெ.வுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை வைத்த கோரிக்கையை ஏற்று எய்ம்ஸ் மருத்துவர்களை டெல்லியில் இருந்து அனுப்பி வைத்தனர்.

எய்ம்ஸ் மருத்துவர்கள் 5-ம் தேதி மதியம் வந்தார்கள். எய்ம்ஸ் மருத்துவர்களும் லண்டனில் இருந்த டாக்டர் ரிச்சர்ட் பேலும் ஜெ.வுக்கு என்ன சிகிச்சை செய்ய வேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஜெ.வின் உடல்நிலை மிக மோசமானவுடன் அதைப் பார்த்து சசிகலா மயங்கி விழுந்து விட்டார். தஞ்சையில் ஒரு திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு சென்றிருந்த சசிகலாவின் தம்பி திவாகரன், மற்றும் சசிகலாவின் சொந்தங்கள் திரும்ப வந்து சசிகலாவை தேற்றி ஆறுதல்படுத்தினர். ஜெ. இறந்தால் என்ன செய்ய வேண்டும் என்கிற பாதுகாப்பு ஏற்பாடுகளை ஷீலா பாலகிருஷ்ணன் மூலம் தமிழகம் முழுவதும் சசிகலா ஏற்பாடு செய்தார். அதேநேரம் அ.தி.மு.க. தலைவர்கள் அனைவரையும் சென்னைக்கு வரவைத்தார்கள் சசிகலாவின் உறவினர்கள்.

jj

ஜெ. இறந்தால் என்ன செய்வது, எம்.எல்.ஏ.க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ஒட்டுமொத்த அ.தி.மு.க.வினரின் எண்ண ஓட்டத்தை சசி உறவினர்கள் நாடி பிடித்து பார்க்க ஆரம்பித்தனர். 5-ஆம் தேதி காலை பத்து மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையின் ஆடிட்டோரியத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ் அதிகமாகப் பேசவில்லை என்றாலும் அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமும் ஒரு நோட் புத்தகத்தில் கையெழுத்து வாங்கினார்கள். ஒரு பக்கம் எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெ.வைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருந்த மாலை 5.30 மணிக்கு மீடியாக்களில் ஜெ. இறந்து விட்டார் என செய்தி வெளியானது.

அந்தச் செய்தியை அப்படியே மறுத்தது அப்பல்லோ நிர்வாகம். அந்த செய்தி வெளியான பிறகு இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அப்பல்லோவில் நடந்தது. அதில் ஏகப்பட்ட முட்டல் மோதல்கள் நடந்தன. ஜெ.வுக்குப் பிறகு யார் முதல்வர் என்கிற கேள்விக்கு ஓ.பி.எஸ். என்கிற பெயர் உச்சரிக்கப்பட்டவுடன் ஒரு சில எம்.எல்.ஏ.க்களிடம் எதிர்ப்பு எழுந்தது என்கிறார்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்கள். அதேபோல் கட்சி அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களைக் கூட்டி எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் என்கிற கோஷத்தையும் எழுப்பினார்கள். தற்காலிக முதல்வராக ஓ.பி.எஸ். கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா என்கிற புரிதலோடு கலைந்தார்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்.

அனைத்து வேலைகளும் முடிந்ததும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்து புதிய முதல்வர், எதிர்கால கட்சியின் தலைவர் யார் என முடிவு செய்ததும் ஜெ.வின் மறைவை இரவு 11.30 மணி அளவில் அறிவித்தார்கள். ஜெ.வின் மரணம் பற்றிய அறிவிப்பு வருவதற்கு முன்பாக ஐந்தாம் தேதி மாலையிலேயே ராஜாஜி ஹாலில் புதிய சாலைகள் போடப்பட்டன. கவர்னர் மாளிகையில் ஓ.பி.எஸ். பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்தன. கட்சி, ஆட்சி என அனைத்து மாற்று ஏற்பாடுகளையும் செய்தபிறகு அறிவிப்பு வந்தது என்கிறார்கள் கார்டன் வட்டாரத்தினர்.

"ஜெ.வின் துக்க நிகழ்ச்சிகள் முடிந்ததும் அ.தி.மு.க.வின் பொதுக்குழு நடக்கும். அந்த பொதுக்குழுவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் குறித்த அறிவிப்புகள் வரும். அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளராக ஜெ.வின் மறைவுக்குப் பிறகு சசிகலா அரசியல் பிரவேசம் செய்வார்" என்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.

70 நாட்களுக்கும் மேலாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெ.வின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது. செப்டம்பர் 22-ஆம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டதை யாரும் பார்க்கவில்லை. ஆனால் அவர் நலமுடன் மீண்டு வருவார் என்ற எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்த அ.தி.மு.க. தொண்டர்கள் கடைசியில் தங்கள் தலைவியின் உடலை சுமந்து செல்லும் வாகனத்தைத்தான் அப்பல்லோ வாசலில் பார்க்க வேண்டிய துர்பாக்கியத்திற்கு ஆளாகினர்.

sasikala jayalalitha memorial jayalalitha
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe