Skip to main content

2016 தேர்தலும் ஜெயலலிதாவின் மரணமும்!

Published on 26/12/2017 | Edited on 28/12/2017



தமிழக அரசியல் வரலாற்றில் 2016 தேர்தல் மிகவும் முக்கியமானது. இந்தத் தேர்தல் பிரச்சாரத்திற்கு கலைஞர் பொறுப்பேற்கவில்லை. முதன்முறையாக திமுக பொருளாளராக இருந்த மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

இந்தப் பிரச்சாரத்திற்கு முன்னதாக 2014 மக்களவைத் தேர்தலிலும் அவர்தான் கட்சியின் நட்சத்திர பிரச்சாரகராக இருந்தார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் இல்லாமல் திமுக சந்தித்தது. காங்கிரஸுடன் இணைந்து தேர்தலை சந்தித்திருந்தால் சுமாராக 7 முதல் 10 தொகுதிகள் வரை திமுக கூட்டணி ஜெயித்திருக்கலாம் என்ற உண்மை புரிந்தது. இந்நிலையில்தான் 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி அமைத்தது.

இந்தத் தேர்தலை சந்திப்பதற்காக மு.க.ஸ்டாலின் 2014 மக்களவைத் தேர்தல் முடிந்தவுடனேயே மிகப்பெரிய மக்கள் சந்திப்பு பயணத்திற்கு திட்டமிட்டார். நமக்குநாமே என்ற பெயரில் அவர் நடத்திய பயணம் தமிழ்நாடு முழுவதும் முக்கிய பகுதிகளை கடந்துவரும் வகையிலும், தமிழக சட்டமன்றத் தொகுதிகளின் முக்கிய பிரச்சனைகளை நேரில் அறியும் வகையிலும் நடைபெற்றது.





திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், தமிழகத்தின் அடுத்த தலைமுறை தலைவராகவும் ஸ்டாலின் உருவாக இந்த பயணம் வகைசெய்தது.

ஆனால், சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஜெயலலிதா தனது கட்சி தேர்தலை தனியாகவே சந்திக்கும் என்றும், அனைத்துத் தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னமே போட்டியிடும் என்றும் அறிவித்தார். இது மற்ற எதிர்க்கட்சிகளை அதிர்ச்சியடையச் செய்தது.

அதிமுக தனித்து போட்டியிடும் என்று ஜெயலலிதா அறிவித்து விட்டாரே தவிர, திமுக வலுவான அணி அமைத்துவிடக் கூடாது என்பதற்கான திட்டத்தையும் வகுத்தார். அவருடைய திட்டத்தை நடைமுறைப் படுத்த வைகோவை அவர் நியமித்தார் எனக் கூறப்பட்டது.

அதிமுக, திமுக இரண்டும் ஒன்றுதான் என்று கம்யூனிஸ்ட்டுகள் பிரச்சாரம் செய்தனர். அந்த பிரச்சாரத்தை திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்றுக்கொண்டது. மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் தொடங்கிய இந்த அமைப்பில் வைகோவும் தன்னை இணைத்துக் கொண்டார்.

காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, சமூக சமத்துவப் படை ஆகிய கட்சிகள் தவிர விஜயகாந்தின் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க திமுக விரும்பியது. ஆனால், விஜயகாந்தின் மனைவி திமுகவுடன் கூட்டணி அமைப்பதை விரும்பவில்லை. அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க முடியாத நிலையில் திமுகவுடன்தான் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடைசி நிமிடத்தில் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கத் தாயார் என்று வைகோ கூறியதைத் தொடர்ந்து, தேமுதிகவும் மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்தது. இந்தக் கூட்டணியை அமைக்க வைகோவிடம் ஜெயலலிதா சார்பில் 1500 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. கடைசி நேரத்தில் ஜி.கே.வாசன் தலைமையிலான தமாகாவும் மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்தது.





மக்கள் நலக்கூட்டணியில் சேர விஜயகாந்த் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, அந்தக் கட்சியைச் சேர்ந்த சந்திரகுமார் எம்எல்ஏ தலைமையில் மூன்று எம்எல்ஏக்கள் பிரிந்து மக்கள் தேமுதிக என்ற பெயரில் திமுக கூட்டணிக்கு வந்தனர்.

மாற்று அரசியல் என்ற முழக்கத்தோடு உருவாக்கப்பட்ட இந்தக் கூட்டணி அதிமுக எதிர்ப்பு வாக்குகள் திமுகவுக்கு போய்விடாமல் பிரிக்கவே உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஜெயலலிதாவின் நிபந்தனைக்கு உட்பட்டு கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை, தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவை, தமிமுன் அன்சாரி தலைமையிலான மனிதநேய ஜனநாயகக் கட்சி, தமிழ்மாநில முஸ்லிம் லீக், இந்திய தவ்ஹீத் ஜமா அத், இந்திய குடியரசுக்கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம் ஆகியவை இணைந்தன.

இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா ஹெலிகாப்டரை பயன்படுத்தினார். தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட தொகுதிகளுக்கு ஒரு இடமாகத் தேர்வு செய்து அவர் மேடைக்கு அருகிலேயே ஹெலிகாப்டர் இறங்கும் வகையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அவருக்காக சுட்டெரிக்கும் வெயிலில் மக்களை திரட்டி காக்க வைத்தனர். இதில் பலர் மாண்டனர்.








ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரை வரவேற்கவே அமைச்சர்கள் காத்திருந்தனர். ஹெலிகாப்டரை நோக்கி கும்பிடுபோட்ட கொடுமையும் நடந்தேறியது. பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா மட்டுமே பேசினார். குறிப்பிட்ட நேரமே பேசினார். அமர்ந்தபடி பேசினார். அந்தச் சமயத்திலேயே அவரால் நிற்க முடியவில்லை. அவருடைய உடல்நிலை மோசமடைந்திருந்தது.

இந்தத் தேர்தலில் திமுக தரப்பில் மதுக்கடைகளை உடனடியாக மூடுவோம் என்று உறுதியளிக்கப்பட்டது. விவசாயக் கடன்களும், மாணவர்கள் கல்விக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முந்தைய தேர்தலைப் போல இலவச அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.

அதிமுக தரப்பிலோ, மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. தவிர, திமுக வாக்குறுதியைக் காப்பியடித்து கல்விக்கடன்களும், விவசாயக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டது. தவிர இளம்பெண்களுக்கு ஸ்கூட்டி இலவசமாக தரப்படும் என்றும் கூறப்பட்டது.

என்றாலும், இந்தத் தேர்தலில் திமுக வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகிக் கொண்டிருந்தன. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான போது இரண்டு அணிகளும் அடுத்தடுத்து முந்துவதும் பிந்துவதாகவும் இருந்தன. இழுபறியான கட்டத்தில் முடிவுகள் வெளியான நிலையில், தேர்தல் வெற்றிக்காக வாழ்த்துவதாக ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார். உடனே தேர்தல் முடிவுகள் வெளியாவது தாமதப்படுத்தப்பட்டது.

மாநில அரசு அதிகாரிகள் ஜெயலலிதாவின் வீட்டில் குவிந்தனர். வாக்கு எண்ணிக்கை நடந்த பல இடங்களில் திமுக வேட்பாளருக்கு சாதகமான தபால் வாக்குகளை எண்ணாமல் புறக்கணித்தனர். வெறும் 46 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதாக திமுகவைச் சேர்ந்த அப்பாவுவை துணை ராணுவத்தினர் குண்டுக்கட்டாக தூக்கிவந்து வெளியே போட்டனர். தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என்ற அவருடைய கோரிக்கையைக்கூ ஏற்க மறுத்தனர்.

மாநிலம் முழுவதும் அதிமுகவினர் போலீஸ் உதவியோடு தாராளமாக பணத்தை பட்டுவாடா செய்தனர். அப்படி செய்தும் ஒரு மோசடியான வாக்கு எண்ணிக்கையின் மூலமாக ஆட்சியைக் கைப்பற்றினர்.

திமுக கூட்டணியில்  திமுக தனித்து 89 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், முஸ்லிம் லீக் 1 இடத்திலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் போட்டியிட்ட 41 இடங்களில் வேட்பாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதிமுகவைப் போல திமுகவும் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று கூறப்பட்டது.

திமுக தலைவர் கலைஞர் தான் போட்டியிட்ட திருவாரூர் தொகுதியில் இரண்டாவது முறையாக தமிழகத்திலேயே மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

அதிமுக அணிக்கும், திமுக அணிக்கும் இடையில் ஒரு சதவீதம் அளவே வாக்கு வித்தியாசம் இருந்தது.

இந்தத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக உருவாக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணியில் வைகோ கடைசி நேரத்தில் போட்டியிடுவதைத் தவிர்த்தார். முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்தின் நடவடிக்கைகள் நகைப்புக்கு இடமாக்கப்பட்டன. பேசவே முடியாத அவரைத் தூக்கிக்கொண்டு வைகோவும் கம்யூனிஸ்ட்டுகளும் பிரச்சாரம் செய்தது மிகப்பெரிய வேடிக்கையாக அமைந்தது.

அந்தக் கூட்டணி தங்களுடைய ஒரிஜினல் வாக்குச் சதவீதத்தைக்கூட பெறமுடியவில்லை. மறைமுகமாக அந்தக் கூட்டணிக் கட்சியினர் அதிமுகவுக்கே வாக்களித்துவிட்டனர் என்று குற்றம்சாட்டப்பட்டது.

புதிய வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்று மாற்று அரசியல் பிரச்சாரம் தமிழகத்தில் ஏற்கப்படவில்லை. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையில்தான் மக்கள் வாக்களித்திருந்தனர். ஆனால், அதிமுக ஆயிரம் ரூபாய் கொடுத்த இடத்தில் திமுக குறைந்தபட்சமாக 200 ரூபாயாவது வாக்காளர்களுக்கு கொடுத்திருந்தது.

தேர்தல் அரசியல் என்பது பண அரசியலாக மாறியிருந்தது. தேர்தலில் 134 இடங்களுடன் வெற்றிபெற்ற அதிமுக மீண்டும் ஆட்சியை அமைத்தது. தமிழக சட்டமன்ற வரலாற்றில் மிகப்பெரிய எதிர்க்கட்சி என்ற பெருமையோடு திமுக இடம்பெற்றது. எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். ஜெயலலிதா அமைச்சரவை பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய இடம் தராமல் புறக்கணிக்கப்பட்டது. இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா பின்னர் வருத்தம் தெரிவித்தார். இருந்தாலும் இதுபோலவே முன்பு ஒருமுறை ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் பேராசிரியரும் புறக்கணிக்கப்பட்டதை நடுநிலையாளர்கள் நினைவூட்டினார்கள்.





சட்டமன்றத்தில் கலைஞர் எளிதாக வந்துசெல்ல வசதியாக முன்வரிசையில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜெயலலிதா அரசு புறக்கணித்தது. ஜெயலலிதா இந்த முறை சட்டப்பேரவைக்கு வரும்போது மெதுவாக, நகர்ந்து நகர்ந்து வந்தார். அவருடைய உடல்நிலை ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டிருந்தது எளிதில் புரியும் வகையில் அவருடைய நடவடிக்கைகள் இருந்தன.

வழக்கமாக கலைஞர் கருணாநிதி என்றும், தீயசக்தி என்றும் மரியாதை இல்லாமல் பேசும் ஜெயலலிதா இந்தமுறை சட்டமன்றத்தில் கலைஞரை குறிப்பிடும்போது, திமுக தலைவர் திரு.கருணாநிதி என்று அழைத்தது அனைவருக்கும் வியப்பாக இருந்தது.

மிகப்பெரிய எதிர்க்கட்சியாக திமுக இடம்பெற்றாலும், அவர்களை வெளியேற்றும் வகையில் திமுகவை ஏதேனும் ஒரு வகையில் குற்றம்சாட்டி பேசினார். அதைத் தொடர்ந்து திமுகவினர் வெளியேறியவுடன் எதிர்க்குரல் இல்லாமல் குறுக்கீடு இல்லாமல் ஜெயலலிதா தனது விருப்பப்படி பேசினார். இதில் எந்த மாற்றமும் இல்லை. அதுபோலவே, அமைச்சர்கள் யாரையும் பேசவிடாமல், அனைவருடைய துறைகள் சார்பிலும் ஜெயலலிதாவே 110 விதியின் கீழ் அறிக்கைகளை வாசித்தார்.

திமுகவின் மிகப்பெரிய எழுச்சி ஜெயலலிதாவை ரொம்பவே கலங்கடித்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். வெற்றிக்குப் பிறகு கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, கட்சியின் நிலை குறித்து மிகவும் கவலைப்பட்டிருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் திமுக இதைக்காட்டிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் நிலை இருக்கும். அப்படி ஒரு நிலை வந்தால் ஆட்சி நடத்துவது ரொம்பவும் கடினம் என்று நேரடியாகவே கூறியிருக்கிறார்.

இதையடுத்தே, பேரூராட்சி, ஒன்றியத்தலைவர், நகராட்சித் தலைவர், மேயர் என எல்லா பொறுப்புகளுக்கும் கவுன்சிலர்களை வைத்தே தேர்வு செய்வது என்ற முடிவை எடுத்தார். தவிர, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தடை பெற வசதியாக பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு என்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் ஒதுக்கீட்டில் மாற்றம் செய்தும் திருத்தங்களை வெளியிட்டார். இதையடுத்து மாற்றப்பட்ட விதிகளை எதிர்த்து திமுக நீதிமன்றம் சென்றது.

புதிய விதிகளை திருத்தி தேர்தலை நடத்தும்படி உயர்நீதிமன்றம் சொன்னதை நிறைவேற்றாமல் அதிமுக அரசு தாமதம் செய்தது. இந்நிலையில்தான் ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கே மாதங்களில் 2016 செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவருடைய உடல்நிலை குறித்து பல்வேறு மர்மமான தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன. சளி மற்றும் நீர்ச்சத்து குறைபாடுகளுக்காக அனுமதிக்கப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை அறிவித்தது. ஆனால், இஸட் பிளஸ் பாதுகாப்புப் பெற்ற முதல்வர் ஜெயலலிதா தனது வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு வரும்போதும் சரி, மருத்துவமனையிலும் சரி அந்த பாதுகாப்புப்படையினர் இடம்பெறவே இல்லை.





ஜெயலலிதா குறித்த பல்வேறு தகவல்கள் பரவிய நிலையில் அவர் சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், மருத்துவமனையில் ஜெயலலிதா அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்ட படத்தை வெளியிட வேண்டும் என்றும் கலைஞர் கேட்டபோது அவரை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஒரு பெண் சிகிச்சை பெறும் படத்தை எப்படிக் கேட்கலாம் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் கேட்டார்கள்.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்க சென்ற யாருமே அவரை பார்க்கவில்லை. டாக்டர்களும், அமைச்சர்களும், சசிகலா குடும்பத்தினரும் சொல்வதை கேட்டுவிட்டு திரும்பினார்கள். ஒரு கட்டத்தில் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார் என்றும், டிஸ்சார்ஜ் ஆவது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அப்போலோ உரிமையாளர் பிரதாப் ரெட்டியே கூறினார்.

ஆனால், அடுத்து வந்த திருப்பரங்குன்றம், அரவாக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் விண்ணப்பத்தில் ஜெயலலிதாவின் கைரேகை இருந்தது. தேர்தல் முடிந்தவுடன் வெற்றிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அறிக்கையில் ஜெயலலிதா கையெழுத்து  இட்டிருந்தார்.

இதுகுறித்தெல்லாம் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால், அவர் இட்லி சாப்பிட்டதாக அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.





இந்நிலையில்தான், 2016 டிசம்பர் 4 ஆம் தேதி ஜெயலலிதாவின் உடல்நிலை தீடீரென்று மோசமடைந்ததாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதையடுத்து டிசம்பர் 5 ஆம் தேதி அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

(ஜெயலலிதா மரணத்துக்கு பிந்தைய தமிழக அரசியல் நிலை குறித்து வியாழக்கிழமை பார்க்கலாம்)

-ஆதனூர் சோழன்

முந்தைய பகுதி :

சார்ந்த செய்திகள்