Skip to main content

’பெரியாரை எதிர்த்து பேசுபவர்களின் பேச்சுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும்’-ஜெயக்குமார்

Published on 23/01/2020 | Edited on 23/01/2020
j

 

துக்ளக் விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவரிடம் பெரியார் குறித்து ரஜினி பேசியது பற்றி கேள்வி எழுப்பினர்.

 
அதற்கு,   ’’ரஜினிகாந்த் சொன்னது போல, 1971-ல் எதுவும் நடக்கவில்லை. துக்ளக் பத்திரிகையில் எழுதிய சோ, நீதிமன்றத்துக்கு சென்று சில அமைப்புகள் எனக்கு கொடுத்த தகவலின் பேரில் தான் எழுதினேன் என்று தெரிவித்தார். எனக்கு அதை பற்றி ஒன்றுமே தெரியாது என்றும் கூறினார்.  நடைபெறாத ஒரு வி‌‌ஷயத்தை நடிகர் ரஜினிகாந்த் சொல்லி மக்களை திசை திருப்புகிறார். நாங்கள் ஏற்றுக்கொண்ட தலைவர்களில் பெரியாரும் ஒருவர். அதனைத் தொடர்ந்து அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரும் எங்கள் தலைவர்கள் ஆவார்கள்.  இந்த 4 பெரும் தலைவர்களின் புகழுக்கு சிறு அளவில் இழுக்கு ஏற்பட்டாலும் கூட அ.தி.மு.க. குரல் கொடுக்கும். எதிர்த்து பேசுபவர்களின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

 

ரஜினிகாந்த் தேவையில்லாத கருத்தை கூறி இதுபோன்ற சர்ச்சையை உருவாக்க வேண்டாம். அவர் வாயை மூடி மவுனமாக இருப்பது நல்லது. ரஜினிகாந்த் என்ன ஆதாயத்துக்காக இதை சொன்னார் என்று தெரியவில்லை.   மாறான கருத்தை சொல்லி மக்களை திசை திருப்பி மலிவான அரசியல் செய்யக்கூடாது என்று கண்டனம் தெரிவித்து இருக்கிறோம். எங்களை பொறுத்தவரையில் பெரியார் மதிக்கப்பட வேண்டியவர்.

 

நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கிறது. அதனை முன்னெடுத்து போக வேண்டும். நல்ல கருத்தை சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதை விட்டுவிட்டு, பிற்போக்கான வி‌‌ஷயத்தில் கவனத்தை செலுத்தி எல்லாருடைய நேரத்தையும் வீணடிக்கிறார் ரஜினி’’என்று கூறினார்.

 

Next Story

வடசென்னையில் வேட்புமனு தாக்கலின் போது நடந்தது என்ன? - ஜெயக்குமார் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Jayakumar has told what happened while filing nomination in North Chennai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று தமிழகத்தின் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், வடசென்னை தொகுதி வேட்புமனு தாக்கலின் போது திமுக, அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமியும், அதிமுக சார்பில் மனோவும் போட்டியிடுகின்றனர். அதனால் இருவரும் இன்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த நிலையில், திமுகவிற்கு 2 ஆம் நம்பர் டோக்கனும், அதிமுகவுக்கு 7 ஆம் நம்பர் டோக்கனும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இருவரும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் யார் முதலில் தாக்கல் செய்வது என்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

டோக்கன் வரிசைப்படி நாங்கள் தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வோம் என்று அமைச்சர் சேகர் பாபுவும், முதலில் நாங்கள் தான் வந்தோம் அதனால் எங்களுக்குத்தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் நேரடியாக வந்து டோக்கன் வாங்கியதாகவும், ஆனால் திமுக பினாமி மூலம் டோக்கன் வாங்கியதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதனால் அங்கு திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியாக அதிமுகவினர் முதலில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்தில் 5 பேர் மட்டுமே அனுமதி., ஆனால் திமுக சார்பில் அமைச்சர் சேகர் பாபு, வேட்பாளர், மேயர் பிரியா உள்ளிட்ட 20 பேரை அலுவலகத்திற்கு உள்ளே அனுமதித்துள்ளனர். நான் முதலில் இங்கே வந்தேன் அப்போது, வேட்புமனு டோக்கன் கேட்டேன். ஆனால் அலுவலர் வேட்பாளரிடம் தான் டோக்கன் வழங்குவோம் என்று தெரிவித்தார். நானும் சரி என்று வந்துவிட்டேன். ஆனால், எங்கள் வேட்பாளர் மனோ வந்தவுடன் 7 ஆம் நம்பர் டோக்கன் வழங்கப்பட்டது. எங்களுக்கு பிறகுதான் திமுக வேட்பாளர்கள் வந்தார்கள் அவர்களுக்கு 8 ஆம் நம்பர் டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் எங்களுக்கு முன்பு வேட்பு மனு தாக்கல் செய்ய முயன்றனர்.

திமுகவினர், வேட்பாளர்கள் வருவதற்கு முன்பே டம்பி வேட்பாளர் மூலம் 2 ஆம் நம்பர் டோக்கன் வாங்கியுள்ளனர். அதனால் நாங்கள் தான் முறையாக வந்தோம்; நாங்கள் தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வோம் என்றோம். ஆனால் திமுகவினர் தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய முயன்றனர். பின்பு தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் நடந்ததை கூறினார். பின்பு தலைமை தேர்தல் அதிகாரி, முதலில் அதிமுக தான் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார். அதன்பிறகு நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்தோம். ஆனால் அமைச்சர் சேகர்பாபு உள்ளே இருந்த தேர்தல் அதிகாரிகளை மிரட்டினார்” என்றார்.

Next Story

“இதற்கு பா.ஜ.க வெட்கப்பட வேண்டும்” - ஜெயக்குமார் ஆவேசம்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Jeyakumar raves on BJP should be ashamed of this

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வந்திருந்த பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து இரண்டாவது நாளாக தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 

அந்த வகையில் பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வணக்கம் எனக் கூறி பேசுகையில், “கடந்த 1991இல் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு இடையில் காஷ்மீரில் தேசியக்கொடியை ஏற்றினோம். நல்லாட்சியை நடத்தி தமிழகத்திற்கு கல்வி, சுகாதாரத்தை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை கொடுத்தார். ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றினார். என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது” என்று பேசினார். 

இதற்கிடையே, பா.ஜ.க லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்களுடன் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி அ.திமு.கவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பா.ஜ.கவினரின் செயலுக்கு புதுச்சேரி அ.தி.மு.க பிரிவு சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை பா.ஜ.க பயன்படுத்த வெட்கப்பட வேண்டும். எதற்காக இப்படி எங்கள் தலைவர்கள் படங்களை பயன்படுத்துகிறீர்கள்?. அதிமுக தலைவர்களை முன்னிலைப்படுத்தி, பா.ஜ.க வாக்கு பெற நினைப்பது கீழ்த்தரமானது. தங்கள் தலைவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்று இதன்மூலம் தெரிகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முகங்களைக் காட்டி மக்களை ஏமாற்ற முயன்றால் அது நடக்காது. அந்த இரண்டு முகங்களும் அதிமுகவுக்கு மட்டுமே சொந்தமானது” என்று கூறினார்.