ADVERTISEMENT

ஜப்பானின் சர்ச்சைக்குரிய போர்க்குற்றங்கள்! கொரியாவின் கதை #10

12:58 AM Aug 21, 2018 | Anonymous (not verified)



கொரியர்களுக்கும் சீனர்களுக்கும் ஜப்பான் இழைத்த அநீதி இரண்டாம் உலகப்போர் முடிந்தபிறகும் வெளியுலகிற்கு தெரியவில்லை. கன்பூசியஸ் கோட்பாடுகளைப் பின்பற்றும் நாடுகளில் திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவு அவமானகரமாக கருதப்படும்.

இந்நிலையில்தான், 1945ல் இரண்டாம் உலகப்போர் முடிந்து பல பத்தாண்டுகள் கழித்து கொரிய பெண்களை ஜப்பானிய ராணுவத்தினர் பாலியல் தொழிலாளிகளாக பயன்படுத்திய விவகாரம் வெளியானது. உடனே, அத்தகைய பெண்களை கொரியர்கள் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைத்தனர். கன்பூசிய கலாச்சாரத்தில் ஒரு பெண் தனது உயிரினும் மேலாக கற்பை நேசிப்பாள் என்றும், திருமணத்திற்கு முன் ஒரு பெண் கன்னித்தன்மையை இழக்க நேர்ந்தால், அவள் தற்கொலை செய்துகொள்வாள் என்றும் கற்பிக்கப்ப்டடிருந்தது. அப்படி ஒருவேளை உயிர்வாழ விரும்பும் பெண் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவாள்.

ADVERTISEMENT



1973ஆம் ஆண்டுதான் ஜப்பான் ராணுவத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பாலியல் முகாம்கள் குறித்த தகவல்கள் வெளியாகியது. ககவ் செண்டா என்ற ஜப்பானிய எழுத்தாளர் தான் எழுதிய புத்தகத்தில் இந்த முகாம்களைப் பற்றி எழுதினார். உடனே, தங்கள் பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதிய ஜப்பான் மற்றும் கொரியா வரலாற்று ஆசிரியர்கள் இந்த புத்தகத்தில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக கடுமையாக விமர்சித்தார்கள்.

1990களில் இந்த விவகாரம் மிகப்பெரிய உரிமைப் போராட்டமாக மாறியதற்கு இந்தப் புத்தகம்தான் அடித்தளமாக அமைந்தது. கொரியா பெண்கள் ஜப்பான் ராணுவத்தில் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக 1981ஆம் ஆண்டு கொரியர் ஒருவர் முதல் புத்தகத்தை எழுதினார். ஆனால், அந்த புத்தகம்கூட 1976 ஆம் ஆண்டு ஜப்பானிய கொரியர் கிம் இல் மியோன் எழுதிய புத்தகத்தில் இருந்த விவரங்கள் அடிப்படையில் எழுதப்பட்டது என்று கூறப்பட்டது.

ADVERTISEMENT


1989ஆம் ஆண்டு செய்ஜி யோஷிடா என்ற ஜப்பானியர் கொடுத்த வாக்குமூலம் கொரிய மொழியில் பெயர்க்கப்பட்டது. அந்த வாக்குமூலத்திலும் பொய்யான தகவல்கள் இருப்பதாக ஜப்பான் மற்றும் கொரியா பத்திரிகையாளர்கள் கூறினார்கள். நினைவுகளை பதிவுசெய்யும்போது கொஞ்சம் கற்பனைகளையும் கலந்தே எழுத வேண்டியிருப்பதாக செய்ஜி பின்னர் ஒப்புக்கொண்டார்.

ஒரு பக்கம் உண்மைகளை வெளிக்கொண்டு வந்து ஜப்பானை மன்னிப்புக் கேட்க வைக்கும் முயற்சிகளும், மறுபக்கம், தங்கள் நாடுகளின் பெண்களுக்கு அதுபோன்ற அவமானம் இழைக்கப்படவில்லை என்றுகூறி அவர்களை தூய்மையானவர்களாகக் காட்டும் முயற்சிகளும் தொடர்ந்து கொண்டிருந்தன. இப்படி உண்மைகளை வெளிக்கொண்டு வரும் பத்திரிகையாளர் ஒருவரை பணியிலிருந்து நீக்கும் அளவுக்கு உரிமையாளருக்கு நிர்பந்தம் கொடுக்கும் அளவுக்கு பிற்போக்குவாதிகள் செல்வாக்கு பெற்றிருந்தார்கள்.


இந்தக் கொடுமைக்கு ஊடாக, ஜப்பான் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மட்டுமே பேசவேண்டும், பிறநாட்டுப் பெண்களைப் பற்றி பேசக்கூடாது என்கிற அளவுக்கு ஜப்பானியரின் நிலை சென்றுகொண்டிருந்தது. ஆனாலும், 1993ஆம் ஆண்டு ஜப்பான் ராணுவத்தின் கொடுமைகளுக்கு ஆளான பல பெண்களின் வாக்குமூலங்கள் வெளியான நிலையில், அன்றைய ஜப்பான் அமைச்சரவைச் செயலாளர் யேஹேய் கோனோ ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ஜப்பான் ராணுவத்தினரின் பாலியல் இச்சைகளை நிறைவேற்றுவதற்காக பெண்களை வலுக்கட்டாயமாக சேர்த்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

ஷின்ஸோ அபே



இந்த அறிவிப்பை 2007ஆம் ஆண்டு ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே மறுத்தார். ஜப்பான் ராணுவத்தினரோ, அதிகாரிகளோ பெண்களை வலுக்கட்டாயமாக கைப்பற்றியதற்கு ஆதாரமில்லை என்று அவர் கூறியிருந்தார். இதுகுறித்து பலவிதமான சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில், 2014ஆம் ஆண்டு யோஷிஹிடே சுகா ஒரு குழுவை அமைத்தார். அதைத்தொடர்ந்து, பாலியல் தொழிலில் கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பெண்களை பலவந்தமாக பயன்படுத்தியது உண்மை என்று மீண்டும் ஜப்பான் ஒப்புக்கொண்டது. இதே ஆண்டு சீனாவிலும் மன்சூரியாவிலும் இருந்த ஜப்பானிய ராணுவ முகாம்களில் பாலியல் அட்டூழியங்கள் நடைபெற்றதற்கு ஆதாரங்கள் இருப்பதாக சில ஆவணங்களை சீன அரசு வெளியிட்டது.

ஜப்பான் ராணுவம் கொரியா பெண்களுக்கு இழைத்த கொடுமைகளை எதிர்த்து அதுவரை ஒதுக்கப்பட்டு யார் கண்ணுக்கும் படாமல் வாழ்ந்த பெண்கள் 1990களில்தான் எழுச்சி பெற்றனர். தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை அம்பலப்படுத்தத் துணிந்தனர். ஜப்பான் அரசுக்கு எதிராக 1992ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி புதன்கிழமை அன்றைய ஜப்பான் பிரதமர் கிய்ச்சி மியாஸாவாவுக்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். 2011ஆம் ஆண்டு ஆயிரமாவது புதன்கிழமை போராட்டத்தை முன்னிட்டு, ஜப்பான் தூதரகம் முன்பாக பாலியல் தொழிலில் பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளப்படுத்தும் ஒரு சிலையை நிறுவினார்கள். இந்தச் சிலையை ஜப்பான் மிகப்பெரிய அவமானமாகக் கருதியது. அதை நீக்கும்படி பலமுறை வற்புறுத்தியது. ஆனால், அந்தச் சிலையை தென்கொரிய அரசு நீக்க மறுத்துவிட்டது.




1990களில் இந்தப் பெண்களுக்கு கிடைத்த சர்வதேச ஆதரவுதான் அவர்களுடைய எழுச்சிக்கு காரணமாக அமைந்தது. அதன்பிறகுதான் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பராமரிப்பு இல்லம் தொடங்கப்பட்டது. அந்த இல்லங்களில் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

அவர்களுடைய தொடர்போராட்டத்தில் வைக்கப்படும் கோரிக்கைகள் இவைதான். போர்க்குற்றங்களை ஜப்பான் ஒப்புக்கொள்ள வேண்டும். ஜப்பான் ராணுவம் நடத்திய பாலியல் அடிமைத் துன்புறுத்தல்கள் தொடர்பான முழு உண்மைகளையும் வெளியிட வேண்டும். ஜப்பான் அரசு சார்பில் அதிகாரபூர்வமான மன்னிப்புத் தெரிவிக்க வேண்டும். தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போர்க் குற்றங்களுக்கு காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும். இந்தக் குற்றங்களை மிகச்சரியாக வரலாற்று புத்தகங்களில் பதிவு செய்ய வேண்டும். இந்த பாலியல் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டோருக்காக ஒரு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும். இந்த வரலாறு தொடர்பான வரலாற்று அருங்காட்சியகம் நிறுவ வேண்டும்.


அவர்களுடைய போராட்டத்தின் விளைவாக, ஜப்பான் அரசுடன் கொரியா அரசு நடத்தும் பேச்சுவார்த்தைகளில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளான பெண்களின் பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள். 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி, பாலியல் கொடுமைகளுக்கு ஆளான பெண்களுக்காக தென்கொரியாவில் முதல் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

அதேசமயம் இன்றுவரை கொரியாவில் ஜப்பானிய எதிர்ப்பு மனப்பான்மை கொஞ்சம்கூட குறையாமல் இருப்பதற்கு கொரியாவின் பழம்பெருமை முக்கிய காரணமாக இருக்கிறது. 1592 முதல் 1598 வரையில் கொரியா மீது ஜப்பான் போர்தொடுத்து, அதில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. அந்த அளவுக்கு போர்த்திறன் மிக்கவர்களாக கொரியா மக்கள் இருந்தனர். அதன்பிறகு சிறுகச் சிறுக கொரியாவில் முடியாட்சிக் குழப்பங்களைப் பயன்படுத்தி ஜப்பான் தனது ஆதிக்கத்தை வளர்த்தது. கொரியா அரசுடன் ஒப்பந்தம் என்ற பேரில் கொரியாவை முழுவதுமாக ஆக்கிரமித்தபோது, விடுதலை இயக்கம் தோன்றி ஜப்பான் எதிர்ப்புக் கிளர்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற்றன.


எல்லாவற்றுக்கும் மேலாக, வடகொரியா தென்கொரியா என்று பிரிந்து கிடக்கும் இன்றைய நிலையிலும், கொரிய மக்கள் ஜப்பான் எதிர்ப்பில் உறுதியாக இருப்பதற்கு ஆன் ஜங்-ஜியன் முக்கியமான ஹீரோவாக வாழ்கிறார். ஜப்பானின் ஏமாற்று ஒப்பந்தங்கள் மூலம் கொரியா கபளீகரம் செய்யப்படுவதை அறிந்து கொதித்த இவர் 1909ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 26ஆம் தேதி ஜப்பானின் முதல் பிரதமர் இடோ ஹிரோபுமியையும், கொரியாவுக்கான ஜப்பானிய கவர்னர் ஜெனரல் கவாகாமி டோஷிஹிகோவையும் சுட்டுக் கொன்றவர்.

சீனாவில் உள்ள ஹர்பின் ரயில்வே ஸ்டேஷனில் ரஷ்ய பிரதிநிதியுடன் பேச்சு நடத்த இருவரும் வந்தனர். பேச்சு நடத்திவிட்டு திரும்பிய சமயத்தில் அவர்களுடைய பாதுகாவலர்களை ஊடுருவி நுழைந்த ஆன் முதலில் பிரதமர் இடோவை சுட்டார். அடுத்து கவர்னர் ஜெனரலை சுட்டார். இருவரும்போக, உயரதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்றார். பின்னர் ரஷ்ய மொழியில் புரட்சி ஓங்குக என்று முழக்கமிட்ட ஆன் கொரிய கொடியை ஏந்தி அசைத்தார். உடனே இவரை போலீஸார் கைதுசெய்தனர். நீதிமன்றத்தில் பேசி இவர், தன்னை அரசியல் குற்றவாளியாக நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆன்

ஜப்பானிய பிரதமர் இடோவை ஏன் கொன்றேன் என்று இவர் 15 காரணங்களை நீதிமன்றத்தில் தெரிவித்தார். 1.கொரிய பேரரசி மியோங் சியோங்கை சதிசெய்து கொலை செய்தார். 2.பேரரசர் கோஜோங்கை பதவியிலிருந்து தூக்கி எறிந்தார். 3.சமத்துவமற்ற 14 ஒப்பந்தங்களை கொரியா மீது திணித்தார். 4.அப்பாவிக் கொரிய மக்களை கொன்று குவித்தார். 5.படைகளை பயன்படுத்தி கொரிய அரசாங்கத்தை அபகரித்துக் கொண்டார். 6.கொரியாவுக்கு சொந்தமான ரயில் ரோடுகளையும், சுரங்கங்கள், வனங்கள், நதிகளை கொள்ளையடிக்க காரணமாக இருந்தார். 7.ஜப்பான் பணத்தை பயன்படுத்தும்படி கொரியர்களை நிர்பந்தப்படுத்தினார். 8.கொரியாவின் ஆயுதப்படையை கலைத்தார். 9.கொரியர்கள் கல்வி பெறுவதை தடுத்தார். 10.கொரிய மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதை தடை செய்தார். 11.கொரிய பாடப்புத்தகங்களை பறிமுதல் செய்து தீவைத்துக் கொளுத்தினார். 12.ஜப்பானியர்களின் பாதுகாப்பை கொரியர்கள் விரும்புகிறார்கள் என்ற பொய்யை உலகம் முழுவதும் பரப்பினார். 13.கொரியா ஜப்பான் இடையிலான உறவு அமைதியாக இருப்பதாக உண்மைக்கு மாறான தகவல்களைச் சொல்லி ஜப்பான் பேரரசரை நம்ப வைத்தார். 14.ஆசியாவின் அமைதியை தகர்த்தார். 15.ஜப்பான் பேரரசர் கோமேயை கொன்றார்.

இந்தக் காரணங்களுக்காக, கொரிய எதிர்ப்பு படையின் தளபதி என்ற வகையில் நான் கொன்றேன். கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளின் அமைதியை சீர்குலைத்து உறவுகளை நாசம் செய்தார். இருநாடுகளும் நட்போடு அமைதியாக ஆட்சி செய்தால் உலகுக்கே முன்னுதாரணமாக இருக்கலாம் என்று ஆன் ஜங் நீதிமன்றத்தில் கூறினார். தன்னை அரசியல் கைதியாக விசாரித்து, ராணுவத்தால் சுட்டுக்கொல்ல வேண்டும் என்றார். ஆனால், அவரை சாதாரண குற்றவாளியைப் போல விசாரித்து, தூக்கிலிட்டனர். அவரை புதைத்த இடம் இன்றுவரை கண்டறியப்படவில்லை. இருந்தாலும், அவருடைய தியாகத்தை இரண்டு கொரிய அரசுகளும் இன்றும் போற்றுகின்றன.

ஒன்றாய் இருந்த கொரியா எப்படி இரண்டாக பிரிந்தது என்பதை அடுத்து பார்ப்போம்.

(இன்னும் வரும்)

முந்தைய பகுதி:

கொரியா பெண்களை சூறையாடிய ஜப்பான் ராணுவம்!!! -கொரியாவின் கதை #9

அடுத்த பகுதி:

கொரியா ஒற்றுமையை நிராகரித்த அமெரிக்கா! கொரியாவின் கதை #11

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT