ADVERTISEMENT

கேமராக்காரன் கண் வழியே காஷ்மீர் துயரங்கள்!

05:37 PM Aug 28, 2019 | santhoshkumar

காஷ்மீர் இன்னிக்கு மட்டுமல்ல அது இந்தியாவோடு சேர்ந்த நாளில் இருந்தே கண்ணீரும் செந்நீரும் சிந்திக் கொண்டுதான் இருக்கிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

எனது அனுபவத்தில் ரேடியோவிலும், நாளிதழ்களிலும் ஒரு வரியோ, ஒரு பத்தியோ, எட்டுப்பத்தியோ காஷ்மீர் செய்தி இல்லாமல் ஒருநாள் கூட விடிந்தது இல்லை.

சினிமாக்களில் வெண்பனி படர்ந்த இமயமலையில் மின்னும் காஷ்மீருக்கு பின்னால் ரத்தக்களறி படிந்த இன்னொரு முகம் இருப்பதை கேமராக்காரர்கள்தான் வெளிக்கொண்டு வந்தார்கள். இன்றைக்கு காஷ்மீர் இரும்புத் திரையால் மூடப்பட்டு, உள்ளே நடக்கும் நிகழ்வுகளை மக்கள் தலைவர்களே பார்க்க முடியாத அளவுக்கு தடை செய்யப்பட்டிருக்கிறது.

2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு திடீரென்று காஷ்மீரிகள் அனைவரையும் வீட்டுச் சிறையில் அடைத்துவிட்டது. உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அடக்குமுறையாக, அங்கு என்ன நடக்கிறது என்ற விவரமே வெளியே வராமல் தடுக்கிறது அரசு.

1975ல் இந்திரா காந்தி இந்தியா முழுவதும் நெருக்கடி நிலை அமல்படுத்தினார். ஆனால், இந்தியா முழுவதும் சுதந்திரமான பொதுப்போக்குவரத்து இருந்தது. அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் இயங்கின.

காஷ்மீரில் 22 நாட்களுக்கு மேலாக தெருக்களில் ராணுவம் மட்டுமே நடமாடுகிறது. பொதுமக்கள் யாரும் வெளியில் நடமாட முடியவில்லை. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கூட காஷ்மீருக்குள் நுழையவிடாமல் தடுக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில்தான், காஷ்மீரில் பணிபுரிந்த சில மீடியா புகைப்படக்காரர்களின் அனுபவங்களை தி ஹிண்டு மேகஸினில் ஷகோனி சர்கார் தொகுத்துள்ளார். அதைப் படிக்கப்படிக்க கண்களில் ரத்தம் கசிகிறது…


பொதுவாக காஷ்மீரில் மீடியா கேமராக்காரராக வேலை செய்வது துப்பாக்கிக் குண்டுகளுக்கு இடையே உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலைதான். ஆனால், இப்போதோ முழுமையான அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை உருவாகி இருப்பதாக கூறுகிறார்கள்.

25 வயதாகும் சயது ஷாஹிரியார் ஹுசைனி, “காஷ்மீரில் போட்டோகிராபர்கள் எப்போதுமே சந்தேகத்தோடுதான் பார்க்கப்படுவார்கள். ராணுவத்தினர் மட்டுமல்ல, காஷ்மீர் மக்களும்கூட சந்தேகத்தோடுதான் பார்ப்பார்கள். காஷ்மீர் போராட்டக்காரர்கள் எங்களை அரசாங்க ஏஜெண்டுகளாக பார்ப்பார்கள். ராணுவத்தினரோ தீவிரவாதிகளின் அனுதாபிகளாக நினைப்பார்கள்.

2016 ஆம் ஆண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி கொல்லப்பட்ட சமயத்தில் அந்த ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி நானும் என்னுடன் மூன்று போட்டோகிராபர்களும் ஸ்ரீநகரில் உள்ள ரெய்ன்வாரிக்கு நடந்து போனோம். அங்குதான் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியிருந்தார்கள். போராட்டக்காரர்களை போலீஸார் கலைக்கத் தொடங்கினர். போட்டோகிராபர்களும் கலைந்தோம். அப்போது, ஒரு போலீஸ்காரர் எங்களை நோக்கி துப்பாக்கியால் குறிபார்த்ததை கவனித்தேன். அவருக்கு நாங்கள் போட்டோகிராபர்கள் என்பது தெளிவாகத் தெரியும். உடனே நான் ஒரு இடத்தில் ஓடி ஒளிந்தேன். ஆனால், எனது சகாவான ஸுஹைப் மக்பூல் இன்னும் படம் எடுத்துக்கொண்டிருந்தார். திடீரென்று ஒரு சத்தம் கேட்டது. மக்பூலின் கேமரா ஷட்டர்மீது குண்டு பாய்ந்தது. எனது சாகா அலறல் சத்தம் தொடர்ந்தது. அவருடைய இடதுகண்ணில் ஒரு பெல்லட் குண்டு பாய்ந்து ரத்தம் வடிந்தது. அப்போதும் சமயோசிதமாக தன்னை படம்பிடிக்கும்படி என்னை நோக்கி கத்தினார்.

வன்முறை வாடிக்கையாகிவிட்டது. தொடக்கத்தில் காஷ்மீரின் புறநகப் பகுதிகளில் மட்டுமே வன்முறை நடக்கும். இப்போது நகரின் அனைத்து தெருக்களின் முனைகளிலும் கோபம் கொப்புளிக்கிறது. குழந்தைகளும்கூட கோபப்படுகிறார்கள். காஷ்மீர் போராட்டங்கள் குறித்து செய்தி சேகரிப்பது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும். தொடர்ந்து ஒரே மாதிரியான நிகழ்வுகளை பார்த்துப்பார்த்து வெறுத்துப் போவோம். எனது மனநிலையே பாதிக்கப்பட்டது. அதற்காக சிகிச்சையெல்லாம் எடுத்தேன். பாதிக்கப்படுகிறவர்கள் நமது சொந்த மக்கள் என்பது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்” என்கிறார் வேதனை கலந்த குரலில்.


இன்னொரு போட்டோகிராபரின் பெயர் ஈஸஷன் பீர். இவரும் ஹுஸைனிக்கு ஏற்பட்ட மாதிரியான அனுபவங்களை சந்தித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு இடத்தில் கல்வீச்சு சம்பவம் நடப்பதை படம்பிடிக்க பத்திரிகையாளர்கள் சென்றார்கள். பீர், தி வர்முல் போஸ்ட் என்ற வார இதழ் சார்பாக சென்றிருந்தார். அனைவரும் அடையாள அட்டையை கழுத்தில் அணிந்திருந்தனர். கூட்டம் கூடியிருந்த இடத்துக்கு சென்றபோது, போலீஸார் அவர்களை கலைந்து செல்லும்படி தடிகளை வீசினர். அவர்கள் கலைய மறுத்தபோது கண்மூடித்தனமாக அடிக்கத் தொடங்கினர். இந்தத் தடியடியில் பீரின் கால்கள் முறிந்தன. “ஆயுதப்படையினருக்கு எங்களை பத்திரிகையாளர்கள் என்று தெரியும். ஆனால், மீடியா ஆட்கள் தங்களைச் சுற்றி இருப்பது அவர்களுக்குப் பிடிக்காது” என்கிறார் பீர்.

இப்போதைய நிலை அப்படியில்லை. அதைவிடக் கொடூரமானது. அச்சமும், குழப்பமும் நிறைந்து வழிகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தெருக்களில் வந்தாலும் முன்னெப்போதும் காணாத அளவுக்கு நடுக்கம் நிறைந்திருக்கிறது. 2019 ஆகஸ்ட் 16 ஆம் தேதி, தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் பீர் காஷ்மீரை விட்டு டெல்லிக்கு புறப்பட்டார். பத்திரிகையாளர்கள் சிலரின் பட்டியல் தயாரிக்கப்படுவதாகவும், அவர்களை கைது செய்யப் போவதாகவும் வதந்திகள் பரவியதால் அவர் டெல்லிக்கு புறப்பட்டார். அவர்கள் கைது செய்யப்பட்டார்களா? அவர்களுடைய கதி என்னாயிற்று என்று தெரியவில்லை என்கிறார் பீர்.

போராட்டங்கள் நடக்கும்போது பாதுகாப்புப் படையினர் மக்கள் மீது கொடூரமாகத் தாக்குவது காஷ்மீரில் தொடர்கதைதான் என்கிறார் வலீத் ஷபிர். பிபிஏ மாணவரான இவர் போட்டோகிராபராகவும் பணிபுரிகிறார். “போராட்டாக்காரர்கள் போலீஸார் மீது கற்களை வீசுவார்கள். அப்போது ஆயுதம் வைத்திருப்பவர்கள் சுடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், ஒரு முழுஅடைப்புச் சமயத்தில் இளைஞர்கள் சிலர் தெருவில் கேரம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். எந்த எச்சரிக்கையும் செய்யாமல் சரமாரியாக சுட்டார்கள். எல்லோரும் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் இறந்தார். போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் அரசாங்கத்தின் அடிமைகள்தானே. வேறு என்ன செய்வார்கள்?” என்கிறார் ஷபிர்.

பர்தானா பட் என்ற போட்டோகிராபர், “நான் காஷ்மீர் லைஃப் என்ற பத்திரிகையில் வேலை செய்கிறேன். எனது வேலை சமயத்தில் ஏராளமான பெல்லெட் குண்டுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்த்திருக்கிறேன். 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளில் பலர் பெல்லெட் குண்டுகளால் பார்வை இழந்திருக்கிறார்கள். பலர் மார்பிலும், அடிவயிற்றிலும் பலத்த காயமடைந்திருக்கிறார்கள். மக்களிடம் பேசும்போது, தங்களுடைய சுய நிர்ணய உரிமைகளுக்காகவும், பாதுகாப்புப் படையினரின் மேலாதிக்கத்தை எதிர்த்தும் போராடுவதாக சொல்வார்கள்” என்கிறார்.

காம்ரன் யூசுப் என்ற ஃப்ரீலேன்ஸ் போட்டோகிராபர் 2017 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டார். அதற்கு சொல்லப்பட்ட காரணம் என்ன தெரியுமா? காஷ்மீரில் நிலவும் கலவர சூழ்நிலையை மட்டுமே படம் பிடிப்பதாகவும், அரசின் வளர்ச்சிப் பணிகளை படம்பிடிப்பதே இல்லை. எனவே அவர் நிஜ போட்டோகிராபர் இல்லை என்பதும்தான் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள். அவருக்கு 2018 மார்ச் மாதம் ஜாமீன் கிடைத்தது. “போராட்டம் நடக்கும் இடத்தில் ஒரு போட்டோகிராபர் இருந்தார் என்பதாலேயே அவர் போராட்டத்தை தூண்டியதாக குற்றம்சாட்ட முடியாது” என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியிருந்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT