Skip to main content

ஜல்லிக்கட்டு வகைகளும், விதிகளும்

Published on 13/01/2019 | Edited on 13/01/2019
JALLIKATTU


ஜல்லிக்கட்டுக்கு மஞ்சு விரட்டு, ஏறுதழுவுதல் என்ற வேறு பெயர்களும் உண்டு. கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்த பொங்கலை யாராலும் மறக்கமுடியாது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்திய மற்றும் மாநில அரசுடன் போராடி ஜல்லிக்கட்டுக்கு போடப்பட்ட தடையை நீக்கினர். இதனையடுத்து கடந்த வருடம் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தமிழர்களும் சந்தோசமடைந்தார்கள். இந்த வருடம் 15 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும், 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் நடைபெறுகிறது. அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிகட்டுக்காக பங்குபெற இருக்கும் ஹீரோக்களான காளைகளின் மருத்துவ பரிசோதனை நேற்றுடன் நிறைவடைந்தது. சுமார் 276 காளைகள் அவனியாபுர ஜல்லிக்கட்டில் பங்கேற்கிறார்கள். அதேபோல வீரர்களுக்கான முதல் கட்ட உடல் தகுதி தேர்வுகள் நடைபெற்று, அவர்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. தமிழரின் வீர விளையாட்டை டிவியில் காணவும், நேரில் காணவும் பலரும் ஆயத்தமாக இருக்கிறார்கள். சிட்டியிலிருந்துகொண்டு டிவியில் பார்க்கும் பலருக்கு, ஜல்லிக்கட்டு என்றால் வாடிவாசலில் திறக்கப்படும் மாட்டை ஒருவன் பிடிக்க வேண்டும் அவ்வாறுதான் தெரிந்திருக்கிறது. படங்களில் கூட அதிகம் இதுபோன்ற ஜல்லிக்கட்டைதான் காட்டுகிறார்கள். ஜல்லிக்கட்டு போன்றே இருக்கும் மற்ற விளையாட்டுகள் பற்றியும் அதன் விதிமுறைகள் என்னவென்றும் பார்ப்போம்...
 

வாடி மஞ்சுவிரட்டு (அல்லது) ஜல்லிக்கட்டு
 

இந்த வகை மஞ்சுவிரட்டு மதுரை, புதுக்கோட்டை, தேனி, தஞ்சாவூர், சேலம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இது மக்களிடையே நன்கு தெரியப்பட்ட ஒன்றாக இருக்கிறது காரணம் தொலைக்காட்சியிலும் திரைப்படங்களிலும் இந்த வகை விளையாட்டையே அதிகம் காட்டப்படுகிறது. "வாடிவாசல்" எனும் வாயில் வழியாக காளை திறந்துவிடப்படும். திறந்தவுடன் சீறிக்கொண்டு ஓடும் காளையை வீரர் ஒருவர் மட்டும் தாவி அதன் திமிலை பிடித்து கோர்த்து குறிப்பிட்ட தூரம் செல்லவேண்டும் அப்படி சென்றால் அந்த வீரர் வெற்றியாளர் பட்டத்தை தட்டிச் செல்வார். காளையை யாராலும் பிடிக்க முடியவில்லை என்றால் காளை வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்படும். காளையை ஒருவர் மட்டுமே பிடிக்க வேண்டும் என்பது பொதுவான விதிமுறை ஆகும்.

 

வேலி மஞ்சுவிரட்டு 


இந்த வகை மஞ்சுவிரட்டு மதுரை, மானாமதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பிரபலமாகும். திறந்தவெளியில்  காளையின் மூக்குக்கயிறை அவிழ்த்து விடுவார்கள், அது எந்த திசையை நோக்கி வேண்டுமானாலும் ஓடலாம், வீரர்கள் அதை அடக்கவேண்டும்.  இந்த விளையாட்டு ஐந்து நிமிடங்களில் இருந்து ஒரு மணிநேரம் கூட நடைபெறும்.  

 

வடம் மஞ்சுவிரட்டு 

 
வடம் என்றால் தமிழில் "கயிறு" என்று பொருள்படும். காளையை 15 மீட்டர் கயிற்றில் கட்டி அந்த விட்டத்துக்குள்ளே நடைபெறுவதுதான் வடம் மஞ்சுவிரட்டு. 7 அல்லது 8 பேர் கொண்ட அணி அந்த காளையை 30 நிமிடங்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.
 

தமிழரின் வீர விளையாட்டு என்று கருதப்படும் ஜல்லிக்கட்டு மற்றும் காளைகளை வைத்து விளையாடுவது மட்டுமல்ல, ஆடுகளை வைத்து கிடா சண்டை, கோழிகளை வைத்து சேவசண்டை என்றும் இருக்கிறது. தற்போதைய நிலையில் மக்களிடையே ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் போன்ற விளையாட்டுகளே அதிகம் தெரியப்படுகிறது.

 

ஜல்லிக்கட்டின் விதிமுறைகள்:
 

போட்டியாளர்கள் இருவரும் (காளை, வீரர்கள்) மருத்துவ பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுவர்.
 

வாடிவாசலில் இருந்துதான் காளைகள் போட்டிக்கு அவிழ்த்துவிட வேண்டும்.  
 

போட்டியாளர் மாட்டின் திமிலை மட்டும்தான் பிடிக்க வேண்டும்.  கழுத்து, கொம்பு, வால் ஆகியவற்றை  பிடித்தால் போட்டியாளர் ஆட்டத்தை விட்டு நீக்கப்படுவார்.
 

போட்டியாளர் மாட்டின் திமிலை  எல்லைக்கோட்டை மாடு தாண்டும் வரை பிடித்திருக்க வேண்டும். அப்படி பிடித்திருப்பவர் வெற்றியாளர் ஆவார்.
 

காளை, பிடியாளரை எல்லைக்கோடு தாண்டும் முன்பே தூக்கி வீசிவிட்டாலோ, அல்லது எல்லையை தாண்டும்வரை யாரும் பிடிக்கவில்லை என்றாலோ காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
 

காளையை ஒருவர் மட்டுமே பிடிக்க வேண்டும். எல்லோரும் பிடித்தால் காளை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.

 
காளையை அடிக்கவோ அல்லது எந்தவிதத்திலும் துன்புறுத்தவோ கூடாது.
 

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்வதற்கு என காளைகளுக்கும் வீரர்களுக்குமென தனியே தகுது தேர்வு நடைபெறுகிறது. அந்த பரிசோதனையை முடித்து தகுதி சான்றிதழல் பெற்றால் மட்டுமே ஜல்லிக்கட்டில் வீரர்கள் மற்றும் காளைகள் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

கீழக்கரை ஜல்லிக்கட்டு நிறைவு; முதலிடம் பிடித்த அபி சித்தர்

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
Completion of lower bank jallikattu; Abhi Siddhar topper

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் அலங்காநல்லூரில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டது. இந்த ஏறுதழுவுதல் அரங்கத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கினை இன்று (24.01.2023) திறந்து வைத்தார். இதன் ஒரு பகுதியாக மாடு பிடி வீரருடன் கூடிய ஜல்லிக்கட்டு காளை மாட்டு சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அமைச்சர்கள் ஐ. பெரியசாமி எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, பி. மூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆகியோர் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் சிலையையும் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கலைஞர் சிலையுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

vck ad

தொடர்ந்து அங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் தற்பொழுது போட்டியானது நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் 10 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் அபி சித்தர் முதலிடம் பிடித்துள்ளார். தலா 6 காளைகளை அடக்கி சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன், பரத் ஆகிய இருவர் இரண்டாவது இடத்தில் உள்ளனர். முதல் பரிசாக மஹிந்திரா தார் கார் வழங்கப்படவுள்ளது. இரண்டாம் பரிசாக பைக் வழங்கப்பட உள்ளது. அண்மையில் அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அரசியல் செய்யப்பட்டதாகவும், இதற்கு முழுக்க முழுக்க அமைச்சர் தான் காரணம் எனவும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த மாடுபிடி வீரர் அபி சித்தர்  குற்றச்சாட்டு வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.