Advertisment

நிலத்தை பறிக்க பிணத்தை புதைக்கும் ஜக்கி! நக்கீரன் புலனாய்வில் அதிர்ச்சி! 

Jaggi Ashramam issue

சுபஸ்ரீயை அடுத்து ஈஷாவிலிருந்து மாயமாகியுள்ளார் கணேசன் என்கிற சுவாமி பவதுத்தா. சுபஸ்ரீ விஷயத்தில் அவரது கணவர் பழனிக்குமாரை புகாரளிக்க வைத்து, இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் சாதுர்யமாக தப்பித்த ஜக்கியின் ஈஷா நிர்வாகம்.,இந்த முறை சுவாமி பவதுத்தா மாயமான விவகாரத்தில் தானே நேரடியாக ஆலந்துறை காவல் நிலையத்தில் புகாரளித்து நிம்மதியடைந்துள்ளது. அதை நோக்கி ‘நக்கீரன்’ பயணித்தபோது ஈஷாவில் கட்டப்பட்டு வரும் கால பைரவர் கோவிலில் பிணங்கள் புதைக்கப்பட்டிருக்கும் (EXCLUSIVE) தகவல்கள் படங்களுடன் கிடைக்கப்பெற்றுள்ளது.

Advertisment

"தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்கிற சுவாமி பவதுத்தா (வயது 45, த.பெ. செல்லையா) என்பவர் ஈஷா யோகா மையத்தில் தங்கியிருந்து தன்னார்வத் தொண்டு செய்துவந்தார். அவர் கடந்த 28.02.2023 அன்று இரவு சுமார் 07.30 மணிக்கு ஈஷா யோகா மையத்திலிருந்து புறப்பட்டு வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலுள்ள பூண்டி கோவில் வரை ஆட்டோ ரிக்‌ஷாவில் சென்றுள்ளார். எங்கள் மையத்திலிருந்து புறப்பட்டுச் சென்று மூன்று நாட்களாகியும் அவர் இன்னும் மையத்துக்கு திரும்பவில்லை. சொந்த ஊரிலிருக்கும் அவரது உறவினரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் அங்கு வரவில்லை என்று தெரிவித்தார்கள். அவர் ஆட்டோ ரிக்‌ஷாவில் பூண்டி கோவில் வரை சென்றதால் அந்த பகுதியிலும், வெள்ளியங்கிரி மலைப் பகுதியிலும் நாங்கள் மையத்திலிருந்து ஆட்களை அனுப்பித் தேடினோம். அவர் கிடைக்கவில்லை. இருக்குமிடம் தெரியவில்லை. கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் இங்கு தங்கி தன்னார்வலராக இருக்கிறார். எனவே அவரை கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு ஈஷா அறக்கட்டளைக்காக பொறுப்பாளர் தினேஷ்ராஜா, ஈஷா யோகா மையம், வெள்ளியங்கிரி மலையடிவாரம், கோயம்புத்தூர்' என்கின்றது காவல் நிலைய முதல் தகவலறிக்கை.

Advertisment

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சமுத்திராபுரம் கிராமத்தினைச் சேர்ந்த குறும்பலாப்பேரியில் (குலசேகரப்பட்டி) சுவாமி பவதுத்தாவின் சகோதரர்கள் வசித்து வருகின்றனர். மாயமான கணேசன் தற்பொழுது வரை பூர்வீக இடத்திற்கு வரவில்லையென ஆலந்துறை காவல் நிலையத்திற்கு குறிப்பு எழுதியுள்ளது பாவூர்சத்திர போலீஸ்.

பேராசிரியர் காமராஜோ, "ஆதியோகியே சிவனாக ஈஷா யோகா மையத்தில் இருக்கிறார். அந்த ஆதியோகியே ஜக்கிதானே என திருட்டு ஜக்கியை ஏற்றுக்கொண்டு சாமியாராக ஆகியிருக்கின்றனர் பலர்! அந்த வகையில் சாமியாரான பவதுத்தா ஏன் அங்கு செல்லவேண்டும்? ஈஷாவில் உள்ளவர்கள் ஜக்கிக்கு அடிமையாக இருக்கும்வரை எவ்விதப் பிரச்சினையும் இல்லை. புத்தி தெளியும்போது காணாமல் போய்விடுவார்கள். அப்படியே தெரியாமல் வெளியே வந்து ஏதாவது சொன்னால் அவ்வளவு நாட்கள் அவருடன் இருந்தவர்களாலேயே பைத்தியக்காரப் பட்டம், திருட்டுப் பட்டம் கட்டப்படுவார்கள். அதையும் மீறி ஏதாவது செய்தால் மிரட்டல் அல்லது கொலைதான். அந்த மாதிரிதான் கணேசன் என்கிற சுவாமி பவதுத்தா மாயமானது'' என்கிறார்.

ஈஷா வகுப்புக்குச் செல்பவர்கள் அங்கேயே வலுக்கட்டாயமாகத் தங்க வைக்கப்பட்டு கட்டாய சந்நியாசம் தரப்படுகிறார்கள். போதை வஸ்துக்கள் வழங்கி சொத்துக்கள் எழுதி வாங்கப்படுகின்றது. எதிர்ப்பவர்கள் மாயமாகிறார்கள் அல்லது பிணமாகக் கிடைக்கின்றனர் போன்ற பல குற்றச்சாட்டுகள் ஜக்கியின் மீது வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அரசு விதிமுறைகளை மீறி தன்னுடைய ஈஷா மையத்திற்குள்ளேயே 2020, ஜூலை 2 தொடங்கி தான் கட்டிவரும் காலபைரவர் கோவில் அருகிலேயே பிணங்கள் பலவற்றைப் புதைத்துள்ளார் ஜக்கி என்கின்ற புதிய குற்றச்சாட்டு உருவாகியுள்ளது.

Jaggi Ashramam issue

"ஈஷா அமைந்துள்ள இக்கரை போளுவம்பட்டி - செம்மேடு கிராமத்திலிருக்கின்றது எனக்குச் சொந்தமான 2 ஏக்கர் 51 சென்ட் அளவிலான நிலம். இதில் பாக்கு மரங்கள் பயிரிட்டு வளர்த்து வருகிறேன். என்னுடைய நிலத்திற்கு அடுத்த நிலம் ஈஷா மையமே! என்னுடைய நில எல்லையில் தான் ஈஷாவில் தற்பொழுது கட்டிவரும் காலபைரவர் கோவில் இருக்கின்றது. நிலத்தை விலைக்கு கேட்டுப் பார்த்தான், நான் மசியவில்லை. அடுத்ததாக ஆதிவாசி பழங்குடி மக்களுக்கு வழங்கிய 44 ஏக்கர் நிலத்தை திருட்டுத்தனமாக கையெழுத்து வாங்கி ஆக்ரமித்துக்கொண்டான். சமீபத்தில் அதனை அரசு எடுத்துக்கொண்டது. இருப்பினும் ஜக்கி அதனை வெளிக்காட்டவில்லை. இந்த நிலையில் பட்டாவோடு இருக்கும் நிலங்களை வளைத்துக் கொள்ள வேண்டும் என்கிற திட்டத்தில் இந்த காலபைரவர் கோவில் அருகே மின்மயானம் கட்டத் திட்டமிட்டான் ஜக்கி. இங்கு மின்மயானம் வந்துவிட்டால் அருகிலுள்ள நிலங்கள் எல்லாம் மதிப்பிழந்து அவன் கேட்கும் விலைக்கு கிடைக்கும் என்கிற எண்ணம் அவனுக்கு.

இதற்கு முன்னோட்டமாக கடந்த 2 வருடத்திற்கு முன்பு ஆதியோகி சிலைக்கு தெற்கேயும், என்னுடைய நிலத்திற்கு கிழக்கேயும், அதாவது காலபைரவர் கோவில் பின்புறமுள்ள ஈஷாவின் இடத்தில் வயதில் மூத்த பெண்மணி ஒருவரை புதைத்து செடி வைத்துவிட்டான். இது சட்டவிரோதம். அரசு விதிமுறைகளுக்கு முரணானது என ஆட்சியர் தொடங்கி அனைத்து உயரதிகாரிகளுக்கும் தகவல் கூறினேன். ஒரே ஒரு ரெவின்யூ அதிகாரி வந்தார். அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தார். அவ்வளவுதான். அத்தோடு புறப்பட்டு விட்டார். இன்னமும் பிணம் அங்கேயே தான் இருக்கின்றது. இதுபோல் எத்தனை பிணங்கள் இருக்கின்றன என்பது பிணங்களைப் புதைக்கவிட்ட அரசு அதிகாரிகளுக்குத்தான் வெளிச்சம்'' என்கிறார் சிவஞானம் என்பவர்.

Jaggi Ashramam issue

அரசு விதியோ, "தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1996 பிரிவு 242-ன் கீழ் விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 5.10.1999 அன்று ஊரக வளர்ச்சித்துறை அரசாணை எண் 213-ஐ வெளியிட்டது. மயானம் தொடர்பாக 7 விதிகள் அதில் சொல்லப்பட்டிருந்தன. இதன்படி எந்த இடம் மயானம் என முடிவு செய்யப்படுகிறதோ அந்த இடத்தில்தான் உடல்களைப் புதைக்கவும், எரிக்கவும் செய்யவேண்டும். மீறிச் செய்தால் 100 ரூபாய் அபராதம் - புதைக்கப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் தனியாக அபராதம் விதிக்கப்படும். அதோடு சிறைத்தண்டனையும் உண்டு' என்கிறது. இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் திருட்டு ஜக்கியிடம் கைக்கட்டி வேலை செய்கிறதோ என்னவோ.?

"ஜக்கியின் மூளைச் சலவையால் ஈர்க்கப்பட்டவர்கள் முதலில் தியான வகுப்பிற்கு வருவார்கள். இதில் யார் யார் எப்படிப்பட்டவர்கள்? பின்னணி? சொத்து மதிப்பு? பல தகவல்களைச் சேகரித்து பணம் இருந்தும், பின்னணி இல்லாத சிலரை மட்டும் தேர்வு செய்து அவர்களுடன் ஆராவில் நான் கலந்துவிட்டேன் என ஜக்கி வசியம் செய்துவிடுவார். மந்திரித்துவிட்ட கோழிபோல் என்பார்களே, அதுபோல்தான் ஈஷாவிலுள்ள ஜக்கியின் அடிமைகளும். ஜக்கி சொல்வதை மட்டும் கேட்பார்கள். மீறினால் அவர்கள் காணாமல் போவார்கள். அதுதான் கணேசன் எனும் சுவாமி பவதுத்தா விஷயத்திலும் நடந்திருக்கும். அதுபோல் நிறைய பணக்காரர்கள் தங்களுக்கு நிம்மதி வேண்டுமென நிறைய சொத்து பணங்களுடன் ஜக்கியைச் சரணடைந்து விடுவார்கள். அது நடந்த சில நாட்களிலேயே ஈஷாவில் பிணமாகப் புதைக்கப்படுவார்கள். இதுதான் ஈஷாவின் நடைமுறை. பிணம் இங்கே இருக்கின்றது எனக் கூறியும் அரசாங்கம் அமைதி காப்பது ஏன்?'' என்கிறார் ஜக்கியின் ஈஷா மையத்தில் அக்கவுண்ட் செக்சனில் பணியாற்றிய ஒருவர்.

Isha jaggi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe