Skip to main content

நாங்கள் சம்பள உயர்வுக்கா போராடுகிறோம்...

Published on 07/02/2019 | Edited on 07/02/2019

மாணவர்களின் நலன்கருதி 9 நாட்களாக நடந்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள். ஆனால் பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஊதிய உயர்விற்காகதான் போராடுகிறார்கள்... அரசு மிரட்டியதால்தான் தற்போது வாபஸ் பெற்றுள்ளனர் என்று நினைக்கிறார்கள். போராட்டத்திற்கான காரணம் என்ன என்பதை அறியும் வகையில் நக்கீரன் பேட்டி கண்டது...
   

 

jacto geo protest

 

ஒன்பது நாட்களாக நடந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. பொதுவெளியில் இது சம்பள உயர்வுக்கான போராட்டம் என்ற எண்ணம் இருக்கிறது. உண்மையில் உங்களுடைய கோரிக்கைதான் என்ன? 

 

பொதுவாக எந்தத் துறையை சார்ந்த தொழிலாளர் போராட்டமாக இருந்தாலும் ஊதிய உயர்வு ஒரு கோரிக்கையாக இருக்கும். ஆனால் இதில் சம்பள உயர்வு ஒரு கோரிக்கை இல்லை.  ஊதிய உயர்வுக்கான போராட்டம் 2016ல் நடந்தது. அதன் விளைவாய் ஊதிய மாற்றம் செய்யப்பட்டது. அதில் உள்ள முரண்பாடுகளை களைய ஊதிய குழுவும்  அமைக்கப்பட்டது. குழுவின் பரிந்துரைகளை வெளியிட்டு முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது 9 அம்ச கோரிக்கைகளில் ஒன்றே ஒழிய ஊதிய உயர்வு எங்கள் கோரிக்கை இல்லை .

 

பொதுவாக நாட்டினுடைய எந்த பிரச்சனைக்காக இவர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். இப்ப சொந்த பிரச்னைக்காக போராடுறாங்க. என்ற குற்றச்சாட்டும் இருக்கே.

 

இது ஒரு தவறான பார்வை. ஊதிய உயர்வாக கூட இருக்கட்டுமே, மக்கள் இதை எப்படி பார்க்கவேண்டும் என்றால், இது ஒரு சமூகம். இதற்கு ஒட்டு மொத்த உற்பத்தி என்பது உண்டு. இந்த உற்பத்தியை மக்களுக்கு பிரித்துக் கொடுக்க அரசாங்கம் இலவசங்கள் போன்ற பல திட்டங்களை வகுக்கிறது.  அதை செயல்படுத்துவது அரசு இயந்திரம் அதாவது அரசு ஊழியர்கள்.  நம்நாடு சுதந்திரம் பெற்ற போதே முழுவதும் அரசுக்காக பல நிபந்தனைகளுடன் வேலை பார்க்கும் அரசு ஊழியர்களுக்கு தேவைக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்று நேரு அவர்களாலும், நாட்டிற்காக போராடி தன்  உடமைகளை இழந்த மகத்தான தலைவர்களாலும் முடிவெடுக்கப்பட்டு Dr. அக்ராய்டு தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி 1994ல் அரசு ஊழியர்களுக்கான வாழ்க்கை ஊதியம், நியாய ஊதியம், தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம் என விஞ்ஞான அடிப்படையிலான ஊதிய முறையை பரிந்துரைத்தது. அவ்வாறு பெரும் தலைவர்களால் அறிவிக்கப்பட்ட ஊதியத்தை அரசால் இன்றளவும் வழங்கமுடியவில்லை. அதுபோல வாழ்நாள் முழுவதும் அரசுக்காக உழைத்தவர்கள் ஓய்வுக்கு பிறகு வேறெந்த வேலையும் செய்யமுடியாது என்பதற்காக அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை பிடித்தும் அதோடு அரசு ஒரு தொகை சேர்த்து தொகுப்பூதியம் கொடுக்கும் முறையும் பரிந்துரைக்கப்பட்டது.


 
ஆனால் நமது அரசு அக்ராய்டு கமிட்டி கூறியது போல வாழ்க்கை, நியாய, தேவைக்கேற்ப குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றை கொடுக்க முடியாது. அதே சமயத்தில் கொடுக்கப்படும் ஊதியம் கலைவாணர் என்.எஸ்.கே கூறுவது போல மாதம் ஒன்றில் கொண்டாட்டம், மாச கடைசியில் திண்டாட்டம் என போதியதொன்றாக இருக்காது என்பதனால் மாத ஊதியத்தில் பிடித்தம் இல்லாமல் ஊழியரின் சேவையை பாராட்டும்படி ஓய்வுபெறும் போது பணிக்கொடை என்பதையும், கடைசியாக அவர் வாங்கிய ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகவும் கொடுத்தால் இவர்கள் பசி, பட்டினியின்றி வாழ்வார்கள் என்பது பாராளுமன்றத்தில் எடுத்த முடிவு. 

 

இப்போது இருக்கிற சமூக சூழலில் வேலை இல்லா திண்டாட்டம் நிறையவே இருக்கிறது. அதுபோக தனியார் பள்ளிகளில் குறைவான ஊதியமே கொடுக்கப்படும்போது ஆண்டு வருமானத்தில் 70 சதவீதத்தை அரசு ஊழியர்களுக்கு ஊதியமாகவே கொடுப்பது நியாயமா என்கிற கேள்விகளும் எழுகின்றன.

 

இதற்கு இரண்டு விதமாக பதில் கூறவேண்டும்.  தனியார் நிறுவனம் ஒரு ஊழியரின் உழைப்பை சுரண்டுவதை அரசு உதாரணம் காட்டி நானும் அப்படித்தான் சுரண்டுவேன் என்பது சரியல்ல.  உலகளவில் ஒரு கோட்பாடு உள்ளது. அரசு ஒரு மாதிரி முதலாளி. அது தனது ஊழியர்களை எவ்வாறு நடத்துகிறதோ அதில் 70 சதவீதமாவது தனியார் பின்பற்ற வேண்டும். அதோடு தனியாருக்கு லாப உச்சவரம்பு என்பதே கிடையாது. ஏதாவது முறைகேடு நடந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் மாதம்  25000 ரூபாய் சம்பளம் வாங்குகிற அரசு ஊழியரை பற்றி பேசக்கூடிய சமூகம், நிமிடத்திற்கு 25000 ரூபாய் சம்பாதிக்கிற தனியார் ஊழியர்களை பற்றி பேசுவதில்லை.  இரண்டாவது,  அரசு வருமானத்தில் 70 சதவீதத்தை ஊதியமாக தருவது என்பது தவறு. இவ்வாறு  கூறுபவர்களுடன் பொதுவெளியில் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.  உண்மையில் 25 லிருந்து 30 சதவீதம் மட்டுமே அரசு ஊழியருக்காக ஒதுக்கப்படுகிறது. இவர்கள் காட்டும் கணக்கு என்னவென்றால் அரசு ஊழியர்களில் ‘ஏ,பி,சி,டி’  என்ற நான்கு பிரிவுகள் உள்ளன. உலகில்  எங்கும் இல்லாத ‘டி’ பிரிவுக்கு கீழான ஒரு பிரிவும் இங்கு உள்ளது. இப்போது போராடுகிறவர்கள் ‘சி,டி’ மற்றும் ‘பி’ ல் ஒரு பிரிவினர்தான்.  மக்கள் ஒரு சேமிப்பு நிறுவனத்தில் தங்கள் பணத்தை போட்டு அது ஏமாற்றப்பட்டால் அதற்காக எவ்வளவு தூரம் போராடுகிறார்கள்.  21 மாதங்களாக அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் பிடித்த நிலுவைத் தொகையை  அரசு தர மறுக்கிறதே. இப்போது மட்டும் இல்லை, ஒவ்வொரு ஊதிய குழு முடிந்தவுடனே அந்த நிலுவை தொகை தரப்படுவதில்லை. இதற்காக நாங்கள் போராட வேண்டாமா. IAS, IPS போன்று மேல் மட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு இந்த பணம் கிடைத்துவிடும். ஆனால் ‘பி,சி,டி’ அதற்கும் கீழ் உள்ள அன்றாடங்காட்சி ஊழியர்களுக்கு இது கிடைப்பதில்லை. தமிழகத்தில் 8 லட்சம் அரசு ஊழியர்கள் இருந்தால் அதில் 4 லட்சம் பேர் இவ்வாறு வஞ்சிக்கப்படுகிற ‘டி’ பிரிவுக்கும் கீழே உள்ளவர்கள்.

 


ஆசிரியர்களை பொறுத்தவரைக்கும் அரசு ஊதியம் வாங்குகிறார்கள். ஆனால் அவர்களின் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். ஏன் அரசு பள்ளிகளில் சேர்க்கலாம்ல.

 

இது அவரவர் உரிமை. ஒன்றை கவனிக்க வேண்டும், அரசு பள்ளிகளை மூடக்கூடிய போக்கு அரசினுடையது. மூடக்கூடாது என ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தொடர்ந்து போராடி வருகிறோம்.  மேலும் அரசு ஊழியர்கள் மட்டுமல்ல, ஆட்டோ ஓட்டுபவராக இருந்தாலும், கூலி வேலை செய்பவராக இருந்தாலும்கூட அரசு பள்ளிகளை புறக்கணிக்கின்றனர். அந்த அளவுக்கு பள்ளிகள் தரம் குறைந்ததாக இருப்பதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.  எத்தனையோ பள்ளிகளில் சமூக அக்கறை கொண்ட ஆசிரியர்கள் தங்கள் ஊதிய பணத்தை செலவு செய்து பள்ளியையும் அங்குள்ள குழந்தைகளையும் பராமரிக்கின்றனர். இன்னொன்றும் இங்கே சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா போன்ற பிரபல தலைமை பண்பு கொண்டவர்கள், போராட்டங்களில் எங்கள் உணர்வுகளை புரிந்து  வேண்டியதை செய்துகொடுத்தார்கள். இப்போது உள்ளவர்களிடம் அது இல்லை என்பதால் நாங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எப்படி தனியார் குறைத்து கொடுப்பதால் நானும் அப்படியே செய்வேன் என்று ஒரு அரசு சொல்கிறதோ, அதே போல் ஒரு போராட்டத்தை ஊணப்படுத்தி அதை வென்றுவிட்டதாக கூறுகிறது. இது திராவிட பண்புக்கே கேடு.  இந்தி எதிர்ப்பு போராட்டம் முதலிய ஜனநாயக போராட்டங்கள் நடந்த மண்ணில் இப்படி ஒரு ஜனநாயக போராட்டம் அனுமதிக்கபடவில்லை என்பது வருத்தத்திற்குறிய ஒன்று.

 


மாணவர்கள் தேர்வுக்காக காத்திருக்கிறார்கள், பல பாடங்கள் புதிதாக இருப்பதால்தான் அரசு, போராட்டத்தை கைவிட கூறுகிறது என்கிறார்களே.

 

அந்த அக்கறை அரசுக்கு இருக்கணும். ஒரு கோரிக்கைக்காக திரும்ப திரும்ப வீதியில் இறங்கி போராட வைத்தது யார்.?  ஒரு ‘டி’ பிரிவை சேர்ந்த ஊழியர் 18000 ஊதியம் வாங்கினால் அவரின் ஆண்டு அதிகரிப்பு 3% மட்டும். அதாவது 200 லிருந்து 250 இருக்கும். அவர் தொடர்ந்து 25 ஆண்டுகள் வேலை பார்த்தால் ஒய்வு பெறும்போது 12500 ரூபாய் ஓய்வூதியம் பெற தகுதியடைவார்.  அரசுக்காக 30 ஆண்டுகாலம் வேலை பார்த்த ஒருவருக்கு 12500 கூட ஓய்வூதியம் வழங்காத அரசு ஒரு அரசா ? 

 


ஒருவர் ஒரே ஒருநாள் சட்டமன்ற, நாடாளுமன்ற அல்லது உள்ளாட்சி பொறுப்புகளில் இருந்தாலும் அதை அரசு வேலையாக கணக்கிட்டு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இன்றைக்கு சமையல் எரிவாயுவிற்கான மானியம் கொடுக்க முடியல கொடுத்த மானியத்தை திரும்ப கொடுங்கன்னு மத்திய அரசு கேட்கிறது. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இலவச காஸ் எண்ணிக்கையை குறைத்துள்ளார்களா ? எதையுமே மேல் மட்டத்துல செய்ய மாட்டாங்க. ஏதாவது பாதிப்புகள் இருந்தால் யார் ஏற்கனவே அடுக்கிய மூட்டைகளில் அடி மூட்டையாக இருந்து கஷ்டப்படுகிறானோ அவன் மீதே மேலும் சுமைகளை சுமத்துவார்கள். இந்த கேள்விகளை அரசு ஊழியர் சங்கம் கேட்பதால் அரசுக்கு பிடிக்காது. அதனால் தான் இன்றைக்கு சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

 

பெரிய கொலை செய்தவர்கள், திருடியவர்கள், பெண்களை மானபங்கம் படுத்திய குற்றவாளிகள் கூட தண்டனை காலம் முடிவதற்குள் தலைவர்கள் பிறந்தநாளுக்காக விடுவிக்கப்படுகிறார்கள். அரசு ஊழியர்கள் அப்படி என்ன செய்தார்கள்.  நியாயமான கோரிக்கைக்காக தானே போராடினார்கள். தன்  பணம் இவ்வளவு அரசுகிட்ட முடங்கி கிடக்கிறது என்றபோதும் அவர்கள் தெருவில் இறங்கி கோஷம் தானே போட்டார்கள். வன்முறையில் ஈடுபடவில்லையே, கல்லெடுத்து அடிக்கவில்லையே.  அவர்களை ஏன் கைது செய்ய வேண்டும்.

 


மாணவர்கள் பாதிக்கப்படுவதால் தானே இந்த நடவடிக்கை.?

 


மாணவர்கள் வருடம் முழுவதும் படிக்கிறாங்க.  ஆனால் இதை இதற்கு மேலும் தள்ளி போட முடியாது. புதிய ஓய்வூதிய திட்டம் 2003 ல் அறிவிக்கப்பட்டு 2006 ல் கொண்டுவரப்பட்ட போது இதன் விளைவுகள் யாருக்கும் தெரியல. நல்ல பலன் இருக்கும் என்றுதான் கருதினோம்.  நங்கள் போராடிக்கொண்டிருந்த போது 2003 ல் 16500 பேர் வேலைக்கு சேர்க்கப்பட்டனர் அவர்கள் உடனடியாக நீக்கம் செய்யப்பட்டபோது நாங்கள் தான் நீதிமன்றத்தை அணுகி அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்துகொடுத்தோம். அந்த ஆட்சேர்ப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் நடந்தது. அதில் 30, 35 வயதினர் மட்டுமல்லாது 50 வயதுடையோரும் இருந்தனர். அவர்கள் ஓய்வுபெறும்போதுதான் புதிய ஓய்வூதியத்தின் கொடுமை அனைவருக்கும் புரிந்தது. எதுவுமே கொண்டுவரும்போது அதன் விளைவுகள் தெரியாது இப்போது தெரிந்துகொண்டார்கள் அதனால் தான் போராடவேண்டிய கட்டாயமும் வந்தது.

 

 
இந்த போராட்டத்தின்போதும் தற்காலிக ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது அரசிடம் 10 லட்சம் காலி  பணியிடங்கள் மட்டும் உள்ளன. அதுபோக தொகுப்பூதியம் பெறுபவர்கள், மதிப்பூதியம் பெறுபவர்கள், சிறப்பூதியம் பெறுபவர்கள் என பல்வேறு பிரிவினர் இருக்கின்றனர். சமமான வேலைகளுக்கு சமமான ஊதியம் என்பது அரசியல் அமைப்பு சட்டம். அதை நீதிமன்றமும் உறுதிசெய்துள்ளது. சட்டங்களை தனியார் அமல்படுத்துதோ இல்லையோ அரசு மதிப்பதில்லை.  ஒரு அரசு துறைக்குள் நுழைந்தால் நிரந்தர ஊதியம் பெறுபவர்கள் இருப்பார்கள், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பூதியம் என ஊதிய அடிப்படையில் வேறுபாடுகள் இருக்கின்றன.  இவ்வாறு இருப்பவர்கள்தான் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். இப்படி சமமான ஊதிய முறையையே அமல்படுத்ததை அரசிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்.   இங்கே ஆட்சேர்ப்பு இல்லை.  மத்திய அரசு வருடத்திற்கு 2 கோடி வேலை தருவதாக கூறியது.  5 வருடம் முடிந்துவிட்டது. அவர்கள் கூறியது போல் நாடு முழுவதும் வேலை கொடுத்திருந்தால் தமிழகத்திலும் கொடுத்திருக்க வேண்டுமே. இதுவரை இல்லாமல் நாங்கள் போராடும்போது ஒரே நாளில் ஆள் எடுக்கிறார்கள். 10000 சம்பளத்திற்கு வருவார்கள்தான், இவர்களுக்காவது 10000 ரூபாய் , 2003 ல் வந்தவர்களுக்கு 4000,5000 ரூபாய் தான் சம்பளம். பிறகு நாங்கள் போராடி நிரந்தர வேலையை  உறுதிசெய்தோம். இதையெல்லாம் மக்கள் பார்க்கிறார்கள். இப்போது வேலைக்கு சேர்பவர்கள் பின்னர் எங்களோடு சேர்ந்து போராடுவார்கள். 2003ல் வேலைக்கு சேர்ந்தவர்கள் இப்போது போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். இது வரலாறு.

 

பிடல் காஸ்ட்ரோ சொல்லுவார் ‘வரலாறு விடுதலை செய்யும்’ என்று. இப்போது சிறையில் இருப்பவர்களையும், பணி இடைநீக்கத்தில் இருப்பவர்களையும் வரலாறு விடுதலைசெய்யும். ஆனால் அரசு தன் கையில் அதிகாரம் இருக்கிற காரணத்தால் மக்களின் அறியாமையை பயன்படுத்தி எங்கள் மீது அரிதாரம் பூசுகிறது. இப்படி அரசுக்காக உழைப்பவர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் கார்ப்பரேட்களுக்கும், ஏன் அரசை ஏமாற்றுகிறவர்களுக்கும் கூட மடை மாற்றிவிடுகின்ற அரசையும், கட்சிகளையும் எதிர்த்து மக்களே போராடுவார்கள். அதில் நாங்களும் கலந்துகொள்வோம்.

 

 


 

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.