Skip to main content

உயிரா? பசியா? -இது கொரோனா காலம்!

 

இதைத் தவிர இப்போதைக்கு வேறு எதையும் செய்ய முடியாது என்பதை அவனது மூளை அறிந்திருக்கிறது. அதனால், 21 நாள் தனிமைப்படுத்தலுக்கு அது தயாராகிவிட்டது. ஆனால், அவனது வயிறு ஓர் அடங்காப்பிடாரி. மூளையாவது வெங்காயமாவது என்று அது தன் வேலையிலேயே கவனமாக இருப்பதுதான் அவனுக்குப் பெரும் பிரச்சினை.
 

 

மாநகரத்து நெருக்கடியில் அவனுக்கான ஒரு வாடகை இடம் இருக்கிறது. ஒற்றை ஆள்தான். ஊரில் உள்ள குடும்பத்தினருக்கு அவன் செய்ய வேண்டிய கடமைகள் நிறைவேறிய பிறகுதான் தனக்கான வாழ்க்கை என்ற அவனது உறுதியால் காலம் கடந்து கொண்டிருந்தது.

 

தனித்திருப்பவன் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் இந்தப் பொழுதுகள் இதுவரை அவனால் கற்பனை செய்துகூட பார்த்திராதவை. சமைக்கத் தெரியாதவன். அவன் தங்கியிருக்கும் இடத்தில் ஸ்டவ்கூட கிடையாது. இத்தனை நாட்களாக அவனது வயிறு கூப்பிடும்போதெல்லாம் அதை ஆரியபவனுக்கோ முனியாண்டி விலாசுக்கோ, கையேந்தபவனுக்கு அழைத்துச் சென்று விடுவான். தோசை, ஆம்லேட், மட்டன்சுக்கா உள்ளிட்டவற்றால் வயிற்றின் குரலை அடக்கிவிடுவான்.
 

திடுதிப்பென்று ஏப்ரல் 1 வரை 144 என்றது மாநில அரசு. மாதக்கடைசி. அக்கவுண்ட்டில் பேங்க்காரனுக்குப் பயந்து மிச்சம் வைத்திருந்த சொற்பம் மட்டும்தான் இருந்தது. பஸ்ஸைப் பிடித்து ஊருக்குப் போகலாம் என்றாலும் வழியில்லை. அங்கே இங்கே முயற்சித்து கடன் வாங்கி, பணத்தைத்  தேற்றியபோது பஸ் இல்லை.

 

ஹோட்டல்களில் பார்சல் வாங்கிக் கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்திருந்ததால், கையிலிருக்கிற பணத்தை வைத்து ஒருவார காலத்தை எப்படியாவது கடத்திவிடலாம், ரொம்ப அவசரம் என்றால் நாயர்கடை டீயும் பன்னும் காப்பாற்றும் என வயிற்றுக்கு ஆறுதல் சொல்லியிருந்தது அவன் மூளை.
 

அந்த ஆறுதலையும் ஏமாற்றமாக்கிவிட்டது பிரதமரின் 21 நாள் முடக்கம் பற்றிய அறிவிப்பு. “3 வாரத்துக்கு என்ன செய்வது?” என வயிறு அவனிடம் கேட்டது. “ஒரு வாரகால 144 போல, மூணு வார ஊரடங்கை சமாளிக்கலாம், நான் கியாரண்டி” என்றது அவன் மூளை.
 

chennai
 

காலையில்தான் அது தேர்தல் நேர வாக்குறுதி என வயிற்றுக்குத் தெரிந்தது. நாயர்  டீக்கடை கதவு திறக்கவில்லை. வாசலில் ஒரு பிளாஸ்க்கில் டீ நிரப்பியிருந்தார். பேப்பர் கப்பில் பிடித்து அவனுக்குக் கொடுத்தவர், “கூட்டம் போடக்கூடாதுன்னு போலீஸ் மிரட்டுது. நாலைஞ்சு பேரா வரும் கஸ்டமரை கூட்டம் போடாதீங்கன்னு சொல்லவும் முடியாது. போலீஸ் டார்ச்சரையும் தாங்க முடியாது. அதனால கடையை மூடிட்டேன். நாளைக்கு இதுவும் கிடையாது” என்றார்.

 

ஒன்றுக்கு இரண்டு டீயாக வாங்கி வயிற்றை ஆறுதல் படுத்திவிட்டு வந்து படுத்தான்.  கவலையும் அசதியும் மனதை அழுத்த, தூங்கிப் போனான். மதியம், வயிறுதான் அவனைக் கிள்ளி எழுப்பியது. “எவ்வளவு நேரம் தூங்குவே? நான் இருக்கிறதையே மறந்துட்டியா?” என்றது. குளித்து முடித்து டூவீலரில் கிளம்பினான்.

 

chennaiஆரியபவன் திறக்கவில்லை. முனியாண்டி விலாஸ் மூடிக்கிடந்தது. மதிய நேரத்தில் அந்த கையேந்தி பவனும் கிடையாது.  வேறு ஓட்டல் ஏதாவது திறந்திருக்கிறதா என்று தேடினான்.
 

வயிறு அழ ஆரம்பித்துவிட்டது. “சோறு வாங்கிக் கொடுன்னு கேட்டா, சென்னையை சுத்திக் காட்டுறியா?” என்றது. அவன் மூளையோ, “ரொம்ப நேரம் சுத்தாதே.. வெளியிலே நடமாடினா வீட்டுக்குள்ளே கரோனா வந்து, உயிரே போயிடுனு அரசாங்கம் எச்சரிச்சிருக்கு” என்றது.
 

வயிற்றின் கோபம், அவன் மூளையை நோக்கித் திரும்பியது. “பட்டினிப் போட்டுக் கொல்லுறதைவிட, கரோனாவுல போய்ச் சேர்ந்திடலாம். இத்தனை காலம் தனியா இருந்தியே.. சொந்தமா சமையல் செய்ய கத்துக்கிட்டியா? உன்னோட அலட்சியத்தால எனக்கு தண்டனையா?” என்றது.


 

ammaவருமா வராதா என்று உறுதியாக சொல்ல முடியாத கண்ணுக்குத் தெரியாத நுண்ணியிரியால் அவன் வயிறும் மூளையும் வாய்த்தகராறில் ஈடுபட்டன. அவனோ பொறுக்க முடியாமல், “அம்மா...” என்றான்.
 

“கரெக்ட்’‘ என்றது அவன் மூளை. அம்மா உணவகம் திறந்திருக்கும் என்று அரசாங்கம் அறிவித்திருந்ததை நினைவுபடுத்தியது. வயிற்றிடம் அதைச் சொல்லி ஆறுதல்படுத்தியவன், அந்தப் பகுதியில் இருந்த அம்மா உணவகம் நோக்கிச் சென்றான்.
 

பூட்டிக் கிடந்தது.
 

அவன் கண்கள் பார்ப்பதற்கு முன்பாக அவன் வயிறு அதைப் பார்த்துவிட்டது. “அம்மான்னா சொன்னே.. மவனே!” என்று கோபத்தில் திட்டியது.
 

என்ன செய்வதென்று தெரியாதவன், அங்கே இருந்தவர்களிடம், “எப்ப திறப்பாங்க?” என்று கேட்டான்.
 

“யாருக்குத் தெரியும்? பூட்டுப் போட்டு மூணு மாசமாச்சு. என்ன காரணம்னு தெரியல. அந்தம்மா மாதிரியே இதுவும் மர்மம்தான்” என்றார் ஒரு பெரியம்மா.
 

வயிறு என்ன கேட்கப் போகிறது என்பது அவன் மூளைக்குத் தெரிந்துவிட்டதால், அமைதியானது. கண்தான் பதில் சொன்னது, கண்ணீர்த்துளிகளால்.
 

“ருசிக்காக எதுவும் கேட்கலை. பசிக்காகத்தான் கேட்கிறேன்” என்றது அவன் வயிறு.

 

chennaiமெடிக்கல் ஷாப் திறந்திருந்தது. உள்ளே சென்றான். உப்பு+சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகள் வாங்கினான். ரொட்டிப் பொட்டலங்கள் இருந்தன. அதையும் வாங்கிக் கொண்டான். அதைப் பார்த்ததும் வயிறு குலுங்கிச் சிரித்தது.
 

 “மாஸ்க் இருக்கான்னு கேளு?” என்று அவனை உசுப்பியது மூளை.
 

“ஸ்டாக் இல்லை” என்றார் பார்மசிஸ்ட். 

chennai7வெளியே வந்து பைக்கை எடுத்தான். கொஞ்ச தூரம்தான் வந்திருப்பான். போலீஸ்காரர் மறித்தார். கையெடுத்துக் கும்பிட்டார். “வீட்டுக்குள்ளேயே இருங்க.. உயிரைக் காப்பாத்திக்குங்க” என்றார் பரிதாபமாக.

 

“அப்படின்னா என்னை யாரு காப்பாத்துவாங்கன்னு கேளு” என்று அவனைக் கிள்ளியது வயிறு.

 

chennai


 

போலீஸ்காரரிடமிருந்து தலையாட்டிவிட்டு டூவீலரை ஓட்டினான். அடுத்த சிக்னல். இங்கும் ஒரு போலீஸ்காரர் இருந்தார். கையெடுத்துக் கும்பிடுவார் என அவன் எதிர்பார்த்திருக்க, “அடங்க மாட்டீங்களாடா நீங்க.. மாஸ்க்கும் போடலை.. .வூட்டுக்குள்ள கிடங்கடான்னா ஏண்டா இப்படி ஊரு தாலிய அறுக்குறீங்க?” என்றபடி லத்தியால் அவன் முதுகில் ஓங்கி ஒரு போடு போட்டார்.
 

டூவீலர் ஒரு பக்கமும், அவன் ஒரு பக்கமுமாக சாய, மறுபடியும் ஒரு போடு. துடித்து எழுந்தவன், தெறிக்க ஓடி, ஒரு கடையின் ஷட்டரில் மோதி, சரிந்தான்.

 

ccccc 

chennai


அங்கே உட்கார்ந்திருந்த நடைபாதைவாசிகள் அவனை நிமிர்த்தி உட்கார வைத்தனர். தண்ணீர் கொடுத்தவர்கள், தங்களிடமிருந்த சோற்றில் கொஞ்சம் அவனுக்குக் கொடுத்தனர்.
 

அவன் முதுகில் தடித்து சிவந்திருந்த ‘லத்தி’த் தழும்பைத் தடவிக் கொடுத்தனர்.
 

“ரொம்ப செவந்திருக்குல்ல” என்றான், முதுகில் வாங்கிய அடியின் வலியை வயிற்றில் உணர்ந்திருந்த அவன். 
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...