Skip to main content

"நடிகர் சூர்யா வீட்டில் ரெய்டு நடத்துவார்கள்" சிபிஎம் கனகராஜ் பேச்சு

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

புதிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகர் சூர்யாவுக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் தமிழக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சூர்யா வன்முறையை தூண்டுவதாக ஹெச்.ராஜாவும், அரைவேக்காட்டு தனமாக பேசக்கூடாது என்று தமிழிசையும், நடிகர்களுக்கு என்ன தெரியும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூவும், சூர்யாவின் பேச்சுக்கு எதிர்வினை ஆற்றியுள்ளனர். இதுக்குறித்து சிபிஎம் கட்சியை சேர்ந்த கனகராஜ் அவர்களிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். அவரின் அதிரடி பதில்கள் வருமாறு,

புதிய கல்வி கொள்கை பற்றி இந்தியா முழுவதும் தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது. புதிய கல்வி கொள்கையை நீங்களும் எதிர்க்கிறீர்கள், அதற்கான காரணம் என்ன?

புதிய கல்வி கொள்கையில் நடைமுறைக்கு ஒத்துவராத பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது. முந்தைய கலைஞர் ஆட்சியில், ஒன்றரை கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்ப பள்ளி அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இது எதற்காக கொண்டு வரப்பட்டது என்றால், பள்ளிக்கு செல்லும் தூரம் அதிகமாக இருந்தால், குழந்தைகளின் கல்வி நிச்சயம் பாதிக்கப்படும், இடைநிற்றல் கண்டிப்பாக அதிகரிக்கும் என்பதாலேயே கொண்டுவரப்பட்டது. ஆனால், புதிய கல்விக்கொள்கையில் குழந்தைகளின் ஆரம்ப கல்வியை உறுதி செய்வதற்கு எந்த திட்டமும் இல்லை. மாறாக அதனை குலைக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை புதிய கல்வி கொள்கையில் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. உதாரணமாக, ஆரம்ப பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சரியாக இல்லை என்றால், அதாவது சேர்க்கை எண்ணிக்கை குறைந்தால் அந்த பள்ளியை அருகில் இருக்கும் மற்றொரு பெரிய பள்ளியுடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன காரணத்துக்காக பள்ளியில் குழந்தைகள் சேரவில்லை என்று பார்க்காமல், பள்ளியின் தரம், செயல்பாட்டில் குறைபாடு இருக்கிறதா என்று ஆராயாமல் பள்ளிகளை மூடுவேன் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. மேலும் மூன்றாவது படிக்கும் குழந்தைகளுக்கு தேர்வு வைத்து அவர்கள் வடிகட்ட படுகிறார்கள். இடைநிற்றலை குறைப்பதற்கு என்ன வழி என்று ஆராய்ந்து கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில், இந்த கல்விக்கொள்கை அதனை சீரழித்துவிடும். நாடு முழுவதும் 13,000 பள்ளிகளை ஆர்எஸ்எஸ் நடத்தி வருகிறது. இந்த பள்ளிகளில் 35,00,000 மாணவர்கள் படிப்பதாக அவர்களே வெளிப்படையாக கூறுகிறார்கள். இந்தியாவில் இந்துத்துவத்தை வளர்ப்பதற்கு திறமையுள்ள மாணவர்களை உருவாக்குவதே எங்களின் நோக்கம் என்று அவர்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். அங்கு 'அ' என்பதற்கு அம்மா என்று சொல்லிக் கொடுப்பதற்கு பதிலாக அகத்தியர் அல்லது அத்திவரதர் என்று மாற்றி சொல்லி தரலாம். யாரும் கேட்க போவதில்லை. அதை போன்றதொரு நிலையை இந்தியா முழுவதும் ஏற்படுத்தவே இந்த புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படுகிறது. நீங்கள் இந்து, கிருஸ்துவம், முஸ்ஸிம் மதங்களை சார்ந்தவராக கூட இருக்கலாம், ஆனால் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் வார்த்தை ஒரு பொதுத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

 

 IT raids at Tamil actor Surya's house



இதைக் குலக்கல்வி திட்டத்தின் மற்றொரு வடிவமா நீங்கள் பார்க்கிறீர்களா?

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு என்பதை நீண்ட காலமாகவே நாம் பேசி வருகிறோம். குழந்தைகளை பணியில் ஈடுபடுத்தினால் தண்டனைக்குரிய குற்றமாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. இருந்தும், வறுமையின் காரணமாக குழந்தைகள் வேலைக்கு செல்கிறார்கள். இந்த புதிய கல்வி கொள்கையிலும் குழந்தை தொழிலாளர்கள் முறையை மறைமுகமாக கொண்டுவரும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதில், எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மண் பாண்டம் செய்தல், பூந்தொட்டி செய்தல் போன்றவை கற்றுக்கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். படிக்கும்போதே அவர்களுக்கு ஒரு தொழில் தெரிந்திருக்க வேண்டும் என்று அவர்கள் காரணம் கூறுகிறார்கள். குழந்தை தொழிலாளர் முறையை மீண்டும் திணிக்கின்ற முயற்சி தான் இது.

வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குழந்தைகள் தான் தற்போது அரசு பள்ளியில் அதிகம் படிக்கிறார்கள். தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகரிப்பதற்கோ, கல்வி தனியார் மயம் ஆக்கப்படுவதற்கோ இங்கு கண்டனங்களோ, எதிர்ப்போ எழுவதில்லையே?

இந்தியா முழுவதும் கல்வியையும், மருத்துவத்தையும் தனியார் மயம் ஆக்கக் கூடாது என்பதை எங்கள் கட்சி நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். நீங்க திமுக, அதிமுகவில் சிலர் கல்வி நிறுவனங்கள் நடத்துகிறார்கள் என்ற அடிப்படையில் அதுகுறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். நீங்கள் அவர்களிடமே நேராக சென்று கல்வியை வியபாரம் ஆக்கி விடலாமா? என்று கேட்டால் அவர்கள் வேண்டாம் என்றுதான் கூறுவார்கள்.  இங்கு ஏற்பட்டுள்ள ஒரு சிறு தவறுக்கு பதிலாக, இந்தியா முழுவதும் நாங்கள் அதை அதிகாரமாக செய்வோம் என்பது எப்படி நியாயம் ஆகும். நீங்கள் தமிழகத்தில் வியபாரம் செய்யுங்கள், நாங்கள் இந்தியாவை வியபாரம் செய்ய ஆள் பிடித்து விடுகிறோம் என்று கூறுவது போல் உள்ளது. இன்று, ஒரு கோடி இல்லாமல் தனியார் கல்லூரியில் மருத்துவம் படித்து ஒரு மாணவனால் வெளியே வர முடியாது என்ற நிலைமை உள்ளது. அப்படி வரும் மாணவனை 50 ரூபாய் வாங்கி கொண்டு மருத்துவம் பார் என்று கூறும் தார்மீக உரிமையை நாம் இழந்து விடுகிறோம். பணம் இருந்தால் படித்துக்கொள்ளலாம் என்ற நிலை இருந்தால், கூடுதல் பணம் கொடுத்தால் நாட்டை கூட காட்டிக்கொடுத்துவிட்டு போய் விடுவான்.

இந்த புதிய கல்வி கொள்கை தொடர்பாக இந்த மாதம் இறுதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதை பற்றி உங்களின் கருத்து என்ன?

யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இது எப்படி இருக்குன்னா ஐந்து நட்சத்திர உணவகத்தில் யார் வேண்டுமானாலும் உணவருந்தலாம் என்று கூறுவதை போன்று உள்ளது. கருத்து சொல்லுங்கள் ஆனால், இந்தி, ஆங்கிலத்தில் மட்டும், என்று இவர்கள் கூறுவது யாரை ஏமாற்ற. இந்த இரண்டு மொழிகளும் தெரியாதவர்கள் கருத்து சொல்வதற்கே தகுதியில்லாதவர்கள் என்று கருதுகிறார்களா என்று தெரியவில்லை.
 

 

புதிய கல்வி கொள்கை தொடர்பா நடிகர் சூர்யா கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு பாஜக தரப்பில் இருந்து தமிழிசை, ஹெச்.ராஜா ஆகியோர் கண்டனம் தெரவித்துள்ளனர். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழ்நாட்டில் யார் வன்முறையை தூண்டுகிறார்கள் என்று தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். ஹெச்.ராஜா போன்றவர்கள் வன்முறை பேச்சுக்களை தவிர வேறு எதையும் அவர் பேச மாட்டார். தமிழக அரசு தன்னுடைய நிலையை இதுவரைக்கும் தெளிவுப்படுத்தவில்லை. அதுவரை அமைச்சர்களின் கருத்துக்களை நாம் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. நடிகர் சூர்யாவுக்கு ஒரு திரைக் கலைஞராக மற்றவர்களை விட இந்த விஷயத்தில் பொறுப்புக்கள் அதிகம். அதை தற்போது அவர் வெளிப்படுத்தி உள்ளார். அவரை மிரட்டுவதற்காக அவர் வீட்டில் ரெய்டு நடத்தப்படலாம். ஏற்கனவே நடிகர்கள் அரசியல் பேசியதற்காக அவர்கள் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதையும் நாம் பார்த்துள்ளோம். அப்படி சூர்யாவுக்கு நிகழ்ந்தால் அந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் முதல் ஆளாக நாம் இருக்க வேண்டும்.

 

Next Story

‘கங்குவா’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
Release of the second look poster of the movie 'Kangua'

சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 10 மொழிகளுக்கு மேலாக 3டி முறையில் சரித்திரப் படமாக வெளியாக உள்ள இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.  

இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, கொடைக்கானல், உள்ளிட்ட பகுதிகளைத் தொடர்ந்து தாய்லாந்தில் நடந்ததாகத் தகவல் வெளியானது. இதையடுத்து சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அதில் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி ரோப் கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் மோதியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, விபத்து குறித்து விளக்கமளித்த சூர்யா, உடல் நலம் தேறி வருவதாகவும், உங்கள் அன்புக்கு நன்றி எனவும் குறிப்பிட்டிருந்தார். 

இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதாராபாத்தில் நடைபெற்று சமீபத்தில் முடிந்தது. இது குறித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் குறிப்பிடும்போது, ‘இந்த படத்தை நீங்கள் திரையில் பார்க்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், பொங்கல் தினத்தை முன்னிட்டு கங்குவா படத்தின் புதிய போஸ்டரை வெளியிடுவதாக நேற்று (15-01-24) படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில், மாட்டுப் பொங்கல் தினமான இன்று (16-01-24) கங்குவா படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யா இடம்பெற்ற இந்த போஸ்டரால் ரசிகர்கள் மத்தியில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. 

Next Story

சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்; பரிதாபமாக உயிரிழந்த 2 ரசிகர்கள்

Published on 23/07/2023 | Edited on 23/07/2023

 

Suriya's two fans lost their lives

 

சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இரு ரசிகர்கள் உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவிற்குத் தமிழ் மொழியைத் தாண்டி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா எனத் தென்னிந்திய மாநிலங்களிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்கள் கேக் வெட்டி, அன்னதானம், உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும், சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது. 

 

இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவரது ரசிகர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் நாசராவ் பேட்டையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்காகப் பேனர் கட்டும்போது இரும்பு கம்பி அருகிலிருந்த மின்கம்பி மீது உரசியதில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர்களான வெங்கடேஷ், சாய் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.