/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4317.jpg)
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு அவை விசாரணையில் இருக்கின்றன. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் கைது தொடர்பாக அரசியல் விமர்சகர் மருத்துவர் காந்தராஜை பேட்டி கண்டோம். அவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதி...
எதைக் கண்டு செந்தில் பாலாஜியை குறிவைத்து தாக்குகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 60 இடங்களைக் கைப்பற்றியது. அந்த 60 இடங்களும் கொங்கு மண்டலம் தான். அப்படி அவர்கள் பலம் வாய்ந்த கொங்கு மண்டலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் ஒரு இடத்தில் வெற்றி பெற முடியவில்லை. அதற்கு காரணம் செந்தில் பாலாஜி. நமக்கு ஒரே ஆதரவான கொங்கு மண்டலமும் நம் கையை மீறி போய்விட்டது என்று அமித்ஷாவிடம் கூறி இந்த ரெய்டு நடத்தியுள்ளார்கள். 25 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறிய அமித்ஷாவிற்கு தெரியும் ஒரு இடத்திலும் வெற்றி பெறாது என்று. அதனால், ஒரு இடத்திலாவது நம்முடைய செல்வாக்கு இருக்க வேண்டும் என்று இப்படி ரெய்டு நடத்தியிருக்கிறார்கள்.
மேற்கு மண்டலம் முழுவதும் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பை அமைப்பதற்கு காரணம் செந்தில் பாலாஜி. தேர்தல் நெருங்க நெருங்க எதிர்க்கட்சியின் வீட்டில் ரெய்டு நடத்துவார்கள். அர்விந்த்கெஜ்ரிவாலின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது எத்தனை வழக்குகள் போட்டு சிறையில் வைத்துள்ளார்கள். அவர் ஒவ்வொரு வழக்குகளிலும் இருந்து வெளியே வரும்போதெல்லாம் வேறு ஒரு வழக்கு போட்டு சிறையில் வைக்கிறார்கள். ‘அமலாக்கத்துறை ரெய்டு போன்றவற்றால் எதிர்க்கட்சியினர் மீது மக்கள் மிகவும் கோபமும்ஆத்திரமும் கொண்டுள்ளார்கள். அதனால் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் இது போன்ற தவறுகளை தட்டி கேட்க முடியும். மோடி அலை பெறுகிறது’ என்று கருத்துக்கணிப்பு சொல்லும். அதைக் கேட்டு தேர்தல் ஆணையமும் முடிவுகளைக் கொடுக்கும். செப்டம்பர் வரையிலும் இது போன்ற ரெய்டுகள்நடக்கும். பிறகு தீவிரவாதத்தாக்குதல் நடக்கும்.பிறகு மோடியின் உயிருக்கு ஆபத்து என்று சொல்லுவார்கள். இது தான் அவர்களின் தந்திரம்.
மல்லிகார்ஜுன கார்கே, அர்விந்த்கெஜ்ரிவால் உட்பட அனைவரும் செந்தில் பாலாஜி கைது குறித்து ஒன்றிய அரசையும்அமலாக்கத்துறையையும் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்களே?
இது யார் ஆட்சிக்கு வந்தாலும் நடக்கும். இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது காஷ்மீர் முதலமைச்சர் பாருக் அப்துல்லா மீதும் இப்படி தான் சோதனை செய்தார்கள். ஆனால், அதற்கு அவர் இந்திரா காந்திக்கு தக்க பதிலடி கொடுத்தார்.
2024 தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது போன்ற ரெய்டு நடக்கிறதே?
அது தான் அவர்களுடைய தந்திரமே. இது போன்று எதிர்க்கட்சியினர் வீட்டில் ரெய்டு நடத்தி அவர்களிடம் உள்ள பணத்தை எடுக்க முடியும். ஆனால், இவர்கள் வீட்டில் பணம் இருக்கும். அமலாக்கத்துறையினரிடம், ‘என் வீட்டில் ரெய்டு நடத்துவது சரி.ஆனால், என்னை எதிர்த்து நின்றவர் 400 ஏக்கரில் வீடு கட்டியுள்ளாரே. அவர் வீட்டில் ஏன் ரெய்டு நடக்கவில்லை’ என்று செந்தில் பாலாஜி கேட்டபோது அவர்களிடம் பதில் இல்லையே. அதற்கு என்ன அர்த்தம், இவரை எதிர்த்து நின்றவர் பணம் வைத்திருக்கலாம். ஆனால், செந்தில் பாலாஜி வீட்டில் எதுவும் இருக்க கூடாது.
இந்த ரெய்டு திமுகவுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
இதை விடவும் மிசாவில் அடக்குமுறைகள்செய்தார்கள். அன்றைக்கு காங்கிரஸும்அதிமுகவும் கூட்டணியில் இருந்தார்கள். ஆனால், இன்று அந்த இரண்டு கட்சியும் காணவில்லை. மிசாவில் துவம்சம் செய்யப்பட்ட திமுக தான் இன்றைக்கு நின்று கொண்டிருக்கிறது. இன்றைக்கு ஒற்றை ஆளை பிடிப்பதற்கு ராணுவத்தை இறக்குகிறார்கள். அதிலிருந்து தெரிய வேண்டாமா திமுகவை சேர்ந்தவர்கள் எவ்வளவு பலம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்று.
அதிமுக ஆட்சியில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பணம் வாங்கியதால் தானே அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துகிறார்கள்?
அதற்கு வழக்கு போட்டு அந்த ஆட்சியிலேயே கைது செய்திருக்க வேண்டியது தானே? அதன் பின்பு எத்தனையோ வருடம் ஆகிவிட்டது. திமுக ஆட்சியில் தேர்தல் வரும்போது தான் நடவடிக்கை எடுப்பார்களா?தேர்தல் வருவதன்காரணமாகத்தான் இது. ஒரு கட்சித்தலைவரை ஏ1 குற்றவாளி என்று கூறியதற்கு தொண்டர்கள் மத்தியில் ஒரு போராட்டம் கூட நடக்கவில்லை. அந்த அளவிற்கு தான் அதிமுக இருக்கிறது. மேலும், எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எதிர்க்கட்சித்தலைவர் பதவி போய்விடக் கூடாது என்ற பயத்தினால் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. அதனால் அதிமுக என்ற கட்சி மரணம் அடைந்துவிட்டது என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை பார்த்து முதல்வரும்அமைச்சர்களும் பதறிப்போய்விட்டார்கள் என்று எடப்பாடி கூறுகிறாரே?
அவர்கள் சாதரணமாகத்தான் இருக்கிறார்கள். மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை சந்தித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டுதானே இருக்கிறார்கள். தங்கமணி, வேலுமணி வீட்டில் ரெய்டு நடக்கும் போது எடப்பாடி என்ன செய்து கொண்டிருந்தார். அதன் பிறகு தான் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்கிறார்.
அமலாக்கத்துறை விசாரணை நடக்கும் போது முதல்வர் பார்க்கக் கூடாது என்று ஜெயக்குமார் கூறுகிறாரே?
ரெய்டு நடந்து முடிந்து அவரை மருத்துவமனையில் தானே பார்த்து விசாரித்தனர். அப்படியென்றால், ஜெயக்குமார் ஏ1 குற்றவாளியான ஜெயலலிதாவை சிறைக்கு சென்று ஏன் பார்த்தார்? கேள்வி கேட்பதற்கு முன்னால் நாம் என்ன செய்தோம் என்று யோசிக்க வேண்டும்.
அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன செந்தில் பாலாஜிக்கு திடீரென்று எப்படி உடல்நலக்குறைவு ஏற்படும்?
ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்க்கு எல்லாம் நோய் சொல்லிக்கொண்டா வந்தது. நோய் சொல்லிக்கொண்டு வராது.
2024 தேர்தலில் செந்தில் பாலாஜியை சந்திக்க பயந்து கொண்டு தான் இந்த சோதனையா?
ராகுல் காந்தியைக் கண்டு பயந்த மோடி அவர் இருக்கும் வரை நாடாளுமன்றத்திற்கு வர முடியாமல் போக, அவரை பதவி நீக்கம் செய்தார். அவர் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டது. அதுபோல், செந்தில் பாலாஜியைகண்டு அமித்ஷாவிற்கு பயம் ஏற்பட்டுள்ளது. அதனாலேயே இந்தச் சோதனை.
முழு பேட்டி வீடியோவாக:
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)