Skip to main content

மாணவர்களை கிறங்கடிக்கும் போதை ஸ்டாம்ப்! முதல்வர் ஏரியாவில் புது அபாயம்!

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் காவல்துறையினர் ஒருபுறம் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டுக்குள் கொண்டு வந்தாலும், மற்றொருபுறம் குற்றம் புரிவதையே வாழ்வியல் நடைமுறைகளாகக் கொண்ட கும்பல், புதுப்புது உத்திகளில் குற்றச்செயல்களை கட்டவிழ்த்து விடுவதும் குறைந்தபாடில்லை. கஞ்சா, ஹெராயின், கொகெய்ன் போன்ற போதைப்பொருள்கள் நடமாட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகக் தமிழகக் காவல்துறை சொன்னாலும், அவை வெவ்வேறு வடிவங்களில் தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களையும், பெரும் கோடீஸ்வரர்களின் வீட்டுப் பிள்ளைகளையும் குறிவைத்து விற்பனை செய்து வருவதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 

salem



மெட்ரோ நகரங்களில் மேல்வர்க்கத்து இளைஞர்கள், கல்லூரி மாணவர்களிடையே பரவி வரும் புதுவித போதை கலாச்சாரம், தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலும் எட்டிப்பார்க்கத் தொடங்கி இருப்பது, காவல்துறைக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் மண்டல போதைப்பொருள் தடுப்புப்பிரிவு டிஎஸ்பி திருநாவுக்கரசுவுக்குக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ஆய்வாளர் அம்பிகா தலைமையில் காவலர்கள் தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் சுங்கச்சாவடி அருகே, கடந்த பிப்ரவரி மத்தியில் தணிக்கையில் ஈடுபட்டனர். சந்தேகத்தின்பேரில், மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களை தடுத்து, அவர்களிடம் பையை சோதனை செய்தபோது 2.60 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.


ஒரு இளைஞரின் பேன்ட் பாக்கெட்டில் உள்ள பொருள்களை எடுத்து சோதித்தபோது, அதில் தபால்தலை வடிவத்தில் உள்ளங்கை அளவிலான ஒரு அட்டையைக் கைப்பற்றினர். விசாரணையில், அது தபால்தலை வடிவிலான போதைப்பொருள் என்பதை அறிந்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். சேலம் போதைப்பொருள் காவல்துறைக்கு, அந்த வடிவிலான போதைப்பொருள் பிடிபடுவது இதுதான் முதல்முறை என்பதோடு, அப்படியான பொருளும் சேலம் கள்ளச்சந்தையில் புழங்கி வருவதும்கூட அவர்களுக்கு புதிய தகவலாக இருந்தது.


பிடிபட்டவர்களில் ஒருவர், சேலம் சின்னத்திருப்பதியைச் சேர்ந்த சரண் (22); மற்றொருவர், ஓமலூரைச் சேர்ந்த கோகுல் (25). இவர்களில் கோகுல், பி.எஸ்சி., மல்டி மீடியா முடித்துவிட்டு, பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். மற்றொரு குற்றவாளியான சரண், பி.இ., மெக்கானிக்கல் படித்துவிட்டு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் திரிவேணி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட தபால்தலை வடிவிலான பொருள் 'எல்எஸ்டி' எனப்படும் 'லைசர்ஜிக் ஆசிட் டைஎத்திலமைடு' என்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருள் என்பது தெரிய வந்துள்ளது.


இது தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ''வழக்கமாக கஞ்சா, கொகெய்ன், அபின் போன்ற போதைப்பொருள்கள் நடமாட்டம் தமிழகத்தில் இருக்கிறது. எங்களுக்குக் கிடைக்கும் தகவலின்பேரில் அத்தகைய போதைப் பொருள்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்து வருகிறோம். ஆனால், எல்எஸ்டி போதைப்பொருள் பயன்பாடு என்பது, கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் மெதுவாக எட்டிப்பார்க்கத் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் சென்னை பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் இதுபோன்ற எல்எஸ்டி பொருளை விற்பனை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு முன்பு கோவையில் இதுபோல் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.


இந்த வழக்குகளில் பிடிபட்ட எல்லோருமே 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்ற ஒற்றுமை மட்டுமின்றி, பெங்களூரு, கோவா, புனே நகரங்களில் இருந்து ஸ்டாம்ப் வடிவத்தில் எல்எஸ்டி போதைப்பொருளை வாங்கி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இப்போது சேலத்திலும் அதேபோன்ற வழக்கில் இருவர் பிடிபட்டுள்ளதைப் பார்க்கையில், தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, திருப்பூர், ஓசூர் போன்ற முக்கிய நகரங்களை குறிவைத்து ஒரு கும்பல் கள்ளச்சந்தையில் எல்எஸ்டி போதை வஸ்துவை புழக்கத்தில் விட்டு வருவதாக சந்தேகிக்கிறோம்,'' என்கிறார்கள்.


சேலம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு டிஎஸ்பி திருநாவுக்கரசுவிடமும் பேசினோம்.

 

salem


 

''எங்களிடம் பிடிபட்ட கோகுல், சரண் இருவருமே நெருங்கிய நண்பர்கள். ரெண்டு பேருமே சாதாரண குடும்பத்து பசங்கதான். கைது செய்யப்படுவதற்கு நான்கு நாள்களுக்கு முன்புதான் அவங்க கோவாவுக்கு டூர் போயிருந்திருக்காங்க. அங்கே இருந்துதான் எல்எஸ்டி போதைப்பொருளை வாங்கி வந்ததாகச் சொன்னார்கள். பறிமுதல் செய்யப்பட்ட எல்எஸ்டி போதைப்பொருளின் மொத்த எடையே 0.400 கிராம்தான். எல்லாமே குட்டி குட்டி ஸ்டாம்ப் போல ஒரு அட்டையில் வைத்திருந்தனர். (செல்போனில் எடுக்கப்பட்ட படத்தைக் காண்பித்தார்).


ஒவ்வொரு போதை ஸ்டாம்பும் 1500 ரூபாய்க்கு விற்கப்படுவது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 30 ஆயிரம் மதிப்புள்ள 20 போதை ஸ்டாம்புகளை பறிமுதல் செய்திருக்கிறோம். சேலத்தில் சில கல்லூரி மாணவர்களிடம் விற்பதற்காகத்தான் வாங்கி வந்திருக்கிறார்கள். சம்பவத்தன்று காலை 7.30 மணியளவில் அவர்களை கைது செய்து, அன்று மாலையிலேயே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துவிட்டோம். நல்லவேளையாக ஆரம்பத்திலேயே அவர்களின் முயற்சியைத் தடுத்து விட்டோம்,'' என்கிறார் டிஎஸ்பி திருநாவுக்கரசு.

 

salem



நமது கள விசாரணையில், சேலத்தில் உள்ள மூன்று தனியார் கலை அறிவியல் கல்லூரி மற்றும் ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் படித்து வரும் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் சிலருக்கு எல்எஸ்டி போதைப்பொருள் நுகரும் பழக்கம் இருந்து வருவதும், அவர்களிடம் பிடிபட்ட இரு இளைஞர்களும் ஒவ்வொரு போதை ஸ்டாம்பையும் தலா 2000 ரூபாய் வரை பேரம் பேசி விற்று வந்திருப்பதும் தெரிய வந்தது. காவல்துறை தரப்பில் கேட்டபோது, இப்போதுதான் கோகுலும், சரணும் முதன்முதலாக இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுவதாகச் சொல்கிறார்கள். உண்மையில், போதை ஸ்டாம்ப் விற்பனையில் வேறு சில குழுக்களும், உள்ளூர் காவல்துறை ஆசியுடன் எவ்வித தடையுமின்றி உலா வந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்கிறார்கள் போதை உலகவாசிகள்.


ஹான்ஸ் புகையிலையை உதட்டை இழுத்து உள்ளே சொருகிக் கொள்வதுபோல எல்எஸ்டிக்கு மெனக்கெட வேண்டியதில்லையாம். எல்எஸ்டி பவுடர் தடவிய போதை ஸ்டாம்பை நாக்கில் ஒட்டிக்கொண்டால், அடுத்த 8 மணி நேரத்திற்கு அரை மயக்க நிலைக்குச் சென்று விடுவார்கள் என்கிறார்கள் இதன் வீரியம் அறிந்தவர்கள்.


எஸ்எல்டி போதைப்பொருளின் தன்மைகள் குறித்து சேலம் அரசு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவர் ஜோதி ஆனந்திடம் கேட்டோம்.
 

salem


''எல்எஸ்டி என்பது முழுக்க முழுக்க போதைக்காகத்தான் பயன்படுத்தப்படுகிறது. இதை உட்கொண்டவர்கள், பிரமை (ஹாலுசினேஷன்) பிடித்தவர் போல் இருப்பார்கள். அந்தரத்தில் பறப்பது போன்ற உணர்வு ஏற்படும். அந்தரத்தில் பறப்பது போன்ற உணர்வென்பது சிலருக்கு மோசமான பயணம்போலவும் அமைந்து விடும். எல்எஸ்டியின் இன்னொரு பிரச்னை என்னவென்றால், இவ்வகை போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் அதை உட்கொள்ளாதபோதும்கூட போதையில் இருப்பதுபோலவே உணர்வார்கள். பவுடர், ஊசி மருந்து வடிவத்திலும் கிடைக்கிறது.


இந்த போதைக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்டு வருவது கடினம். மது அருந்தினால் மற்றவர்களுக்கு தெரிந்து விடும். இந்த வகை போதையை எடுத்துக்கொண்டால் யாருக்குமே தெரிய வராது. யு.எஸ். போன்ற நாடுகளில் இவ்வகை போதை பயன்பாடு அதிகம். இந்தியாவில் கூட வசதியான வீட்டு பையன்கள், படிக்கும் காலத்தில் இத்தகைய போதைக்கு அடிமையானதுண்டு. ஆனால் சேலத்தில் எல்எஸ்டியுடன் 2 பேர் பிடிபட்டுள்ளனர் என்பதே ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது,'' என்றார் மருத்துவர் ஜோதி ஆனந்த்.


'விவசாயி மகன்', கொஞ்சம் போதை விஷச்செடிகளையும் அகற்ற கவனம் செலுத்த வேண்டும் என்பதே எண்ணற்ற பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார். 

Next Story

“பா.ஜ.க.வுக்கு பேரழிவுக் காலம் தொடங்கப் போகிறது” - மோடிக்கு டி.ஆர். பாலு பதிலடி!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Disastrous period is about to begin for BJP tR to Modi Balu retaliation

பிரதமர் மோடி சேலத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், பாரத அன்னை வாழ்க. எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே எனத் தமிழில் பேச்சை தொடங்கினார். மேலும், “கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் தி.மு.க.வுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றித்தான் நாடு முழுவதும் இப்போது பேச்சாக இருக்கிறது. ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்கவே முடியாது. கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்துவிட்டார்கள். ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை பா.ஜ.க. கூட்டணிக்கு உதவியாக இருக்கும். வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த தமிழகத்தை அமைக்க 400 இடங்களைத் தாண்ட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தி.மு.க.வினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்து பாருங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம்தான் எனக்கு உத்வேகம் அளித்தது. ஜி.கே. மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது காங்கிரஸ்தான்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சேலத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரைக்கு திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாரம் தோறும் தமிழ்நாட்டுக்கு வருவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் பிரதமர் மோடி. இந்த வாரம் சேலத்தில் முழங்கிவிட்டுப் போயிருக்கிறார். பத்தாண்டு காலம் பிரதமராக இருந்தவர், தனது சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டிருக்க வேண்டும். அப்படி ஏதும் இல்லாததால் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி இருக்கிறார். ‘தமிழகத்தில் பாஜகவுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கம் தொலைந்து விட்டது’ எனப் பேசியிருக்கிறார். மோடி அவர்களே! உங்களுக்குத்தான் தூக்கம் தொலைந்துவிட்டது. அதனால் தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து புலம்பிவிட்டுப் போகிறீர்கள்.

கடந்த தேர்தல் காலங்களில் இந்திய பிரதமர்கள் ஓரிரு முறைதான் தமிழ்நாட்டு வந்து பிரச்சாரம் செய்துவிட்டு போனார்கள். ஆனால், உங்களுக்குத் தூக்கம் வராததால் பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி, கோவை, சேலம் என அடிக்கடி தமிழகம் வந்து பிரசாரம் செய்கிறீர்கள். உங்கள் பிரதமர் பதவிக்கு நிரந்தர ஓய்வு கொடுக்க தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் அனைவரும் தயாராகி விட்டார்கள். சேலம் ஆடிட்டர் ரமேஷ் குறித்து பேசி கண்ணீர் விட்டிருக்கிறார் மோடி. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது தான் சேலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் 2013 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். 11 ஆண்டுகள் கழித்து இப்போது நினைவுகூறுவது ஏன்? கோவையில் ரோட் ஷோ நடத்திய போது, 1998இல் நடந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து இப்படியான நாடகத்தை தேர்தலுக்காக பா.ஜ.க. நடத்த ஆரம்பித்திருக்கிறது. ரோட்டில் ஷோ காட்டினாரே தவிர அதைப் பார்க்கத்தான் ஆள் இல்லை.

Disastrous period is about to begin for BJP tR to Modi Balu retaliation

ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் சேலம் ஆடிட்டர் ரமேஷ், பரமக்குடி முருகன், மதுரை சுரேஷ், வேலூர் அரவிந்தன், வெள்ளையப்பன், சென்னை சுரேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. ஆதரவாளர்கள் பலர் கொலை செய்யப்பட்டனர். இதை எல்லாம் பழைய பாஜகவினரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். அந்த ஜெயலலிதாவை தான் சேலம் கூட்டத்தில் புகழ்ந்து பேசி இருக்கிறார் பிரதமர். ‘ஜெயலலிதாவை திமுகவினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்துப் பாருங்கள்’ எனப் பேசியிருக்கிறார் மோடி. அந்த ஜெயலலிதா ஆட்சியில்தான் இவர்கள் கொல்லப்பட்டனர் என்பதை மோடி அவர்களே நினைத்துப் பாருங்கள். எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மோடி புகழ்வதைப் பார்த்து அ.தி.மு.க.வினர் மிக ஏளனமாக பேட்டி அளித்தார்கள். எதற்காக இவர்கள் பேரை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்று கூட வெளிப்படையாக பேட்டி அளித்தார்கள். ஆனாலும் ஜெயலலிதாவை மறக்கவில்லை மோடி.

‘குஜராத் மோடியா? தமிழ்நாட்டு லேடியா?’ என்று ஜெயலலிதா கேட்டதை தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை. மோடி வேண்டுமானால் மறந்திருக்கலாம். பதவி ஆசை அவரை பாடாகப் படுத்துகிறது. போகிற போக்கைப் பார்த்தால் ஜெயலலிதாவின் சமாதிக்கே சென்று கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து விடுவார் போல!. ‘திமுக, காங்கிரசின் ஊழலைப் பற்றி பேச ஒருநாள் போதாது’ எனச் சொல்லியிருக்கிறார் மோடி. ஊழலைப் பற்றி பேச மோடிக்கு தகுதி இருக்கிறதா? தேர்தல் பத்திரம் திட்டத்தில் பா.ஜ.க. நடத்திய தில்லுமுல்லு நாடு முழுவதும் நாறிக் கொண்டிருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த நிதியில் 50 சதவிகிதத்திற்கு மேல் பாஜகதான் வாங்கியது. சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமானவரித் துறை போன்ற அதிகார அமைப்புகளை ஏவி, அதன் மூலம் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடைகளை மிரட்டிப் பறித்த பா.ஜ.க. உத்தமர் வேஷம் போடுகிறது. கொள்ளையை சட்டப்பூர்வமாக ஆக்கிய கட்சி பா.ஜ.க.

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 2 ஜி அலைக்கற்றை பற்றிப் பேசியிருக்கிறார் மோடி. 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் 2017இல் விடுதலை செய்துவிட்டது. அதன் பிறகும் தி.மு.க.வின் பங்கு பற்றி மோடி வலிந்து பேசிக்கொண்டிருக்கிறார். 2022 ஆகஸ்டில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போக வேண்டிய 5ஜி அலைக்கற்றை 1 ½ லட்சம் கோடி ரூபாய்க்குத்தான் ஏலம் போனது. மீதி பணம் யார் பாக்கெட்டிற்கு போனது? என மோடி பதில் சொல்வாரா?. பெண் சக்தி பற்றியெல்லாம் பெருமை பொங்கப் பேசியிருக்கிறார் மோடி. ‘பெண்களுக்குச் சேவை செய்ய உறுதி ஏற்று இருக்கிறோம். பெண்கள்தான் பாஜகவின் கவசமாக உள்ளது’ என்றெல்லாம் பொய்களைக் கொட்டியிருக்கிறார் மோடி. மணிப்பூரில் நின்று மோடியால் இப்படிப் பேச முடியுமா?. மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற காட்சிகள் சர்வதேச அளவில் இந்தியாவிற்குத் தலைகுனிவை ஏற்படுத்தியது. அந்த மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் சொன்னாரா? அந்த பாவம் எல்லாம் எந்த கங்கையில் குளித்தாலும் போகாது.

‘தமிழகத்தை புண்ணிய பூமியாக மாற்றுவோம்’ என்கிறார் மோடி. திருநெல்வேலியும் தூத்துக்குடியும் சென்னையும் பெரு வெள்ளத்தில் சிக்கி பேரிடர் நிவாரணம் கேட்டு தமிழ்நாடு கையேந்தியபோது ஒரு பைசாவும் தராத மோடிதான், தமிழகத்தைப் புண்ணிய பூமியாக மாற்ற போகிறாராம். ‘ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்திலிருந்துதான் எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கப் போகிறது’ என சொல்லியிருக்கிறார் மோடி. பத்தாண்டு அழிவு ஆட்சியில் இருந்து மக்கள் விடுதலை பெற இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள். ஏப்ரல் 19 ஆம் தேதிதான் பாஜகவுக்கு பேரழிவுக் காலம் தொடங்கப் போகிறது. ஒரு பிரதமர், அவர் தனது தகுதிக்கு ஏற்ப பேச வேண்டும். பா.ஜ.க.வின் நாலாந்தரப் பேச்சாளரைப் போல பேசக்கூடாது. மீறி மோடி அப்படி பேசுகிறார் என்றால் தோற்கப் போகிறோம் என்பதை அவரே உணர்ந்து விட்டார் என்பது தெரிகிறது. 400 தொகுதிகள் வெற்றி பெறப் போவதாக அவர் சொல்லிக் கொள்கிறார். உண்மையில் 400 தொகுதிகள் வெற்றி பெறப் போகிறவர் இப்படி தரந்தாழ்ந்து பேசமாட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.