ADVERTISEMENT

ஜக்கி போடும் மாஸ்டர் ஸ்கெட்ச்! நட்டாவுடன் நடந்த 70 நிமிட சந்திப்பு!

01:17 PM Jan 02, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

“யானைகள் வழித்தடத்தை மறித்து சட்டவிரோதமான மிகப்பெரிய கட்டுமானங்களைக் கட்டி ஆக்ரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என ஈஷாவிற்கு எதிராக கடந்த 19-ம் தேதி நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன் புயலை கிளப்பிய வேளையில், பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா செவ்வாய்க்கிழமையன்று ஈஷாவில் தங்கி, ஜக்கியுடன் மந்திராலோசனை மேற்கொண்டு புதனன்று புறப்பட... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமல்லாது பா.ஜ.க.விலேயே ஜக்கிக்கு எதிராக பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

“ஏற்கனவே பலமுறை வருவதாக சொல்லப்பட்ட, நட்டாவின் கோவை பயணம் கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து தேசியத்தலைவர் நட்டா அலுவலகத்திலிருந்து வந்த தகவலின்படி, நட்டா வருகைக்காக 11 மணிக்கு கோவை விமானநிலைய வரவேற்பிற்கு மாவட்டத் தலைவர்கள் பாலாஜி, உத்தமராமசாமி, கோட்டை ஈஸ்வரன் கோவில் தரிசனத்திற்கு இளங்கோவன், மதிய உணவிற்கு மாநில பொருளாளர் சேகர், அன்னூர் - மேட்டுப்பாளையம் ரோட்டில் நடை பெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு நாகராஜ் மற்றும் நந்தகுமார், மாலை வேளையில் உள்ள தேநீர் நிகழ்விற்கு ஜெயபால் என நிகழ்ச்சியின் பொறுப்பாளர்கள் அமர்த்தப்பட்டனர்.

ஈஷாவில் இரவு தங்கல் என அதனைப் பார்த்துதான் எங்களுக்கு தெரியவந்தது. அன்றைய இரவு தங்கலி-ருந்து மறுநாள் காலை மணி 9.30 வரை நட்டா, ஈஷா கட்டுப்பாட்டில் இருந்தது கண்கூடான ஒன்று. ஏற்கனவே ஜக்கி வாசுதேவ் கட்டிய கட்டிடங்களால் யானைகள், மனிதர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதும், ஈஷாவில் நடக்கும் கொடூரங்கள் மக்களை களேபரப்படுத்தியுள்ளது என்பதும், எங்களைப் போல மாவட்ட நிர்வாகிகளுக்கு தெரியும். அதனை வைத்து வாக்குகள் பெற முடியாது. இந்தச்சூழலில் நட்டா - ஜக்கி சந்திப்பு தேவைதானா..? மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தாதா..?” என்கிறார் பா.ஜ.க. மாவட்ட நிர்வாகி ஒருவர்.

27-12-2022 அன்று மேட்டுப்பாளையம் - அன்னூர் தென்திருப்பதி நாலு ரோடு சந்திப்பில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஜே.பி.நட்டாவோ, “தி.மு.க. ஒரு குடும்ப கட்சி. கலைஞருக்குப் பிறகு அவர் பேரன் அரசுக்கு வந்துவிட்டார். தனித் தமிழ்நாடு கேட்கும் நபர்கள் ராகுல்காந்தியின் நடைபயணத்தில் பங்கு பெற்றுள்ளார்கள். விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் 6 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு கொடுத்து வருகிறது. ஒரு லட்சம் கோடி ரூபாயை விவசாய நலனுக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது” என்றவர் தொடர்ந்து, “மத்திய அரசு பட்டியல் இன மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்து அவர்களையும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்ல உறுதுணையாக இருந்துவருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாரிசு அரசுக்கு முடிவுகட்ட அனைவரும் பா.ஜ.க.விற்கு வாக்களிக்க வேண்டும்” என பொத்தாம் பொதுவாக பேசியவர், கோவை வருகையின் நோக்கத்தை மக்களிடையே கூறாமல் ஏமாற்றிவிட்டு அங்கிருந்து தரை மார்க்கமாகவே 60 கி.மீ தொலைவிலுள்ள ஈஷாவிற்கு சென்றார்.

முன்னதாக, சமீபத்தில் மங்களூரில் நடந்த ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பின்போது கைப்பற்றிய ஆவணத்தில் ஈஷாவின் புகைப்படமும் இருந்ததால், அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழலாம் என எஸ்.ஐ.யூ. போலீஸ் குறிப்பெழுதி இருந்தது. தற்பொழுது பா.ஜ.க.வின் தேசியத் தலைவரின் வருகையின்போது வழக்கமான பாதுகாப்புடன், கூடுதலாக 500-க்கும் அதிகமான போலீஸாரை வழியெங்கும் காவலுக்கு நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கோவை வந்த ஜே.பி.நட்டா, அங்கிருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரின் இல்லத்துக்குச் சென்று அவர்களோடு பேசி, புகைப்படம் எடுத்துக்கொண்டு விடைபெற்றார். “இரவு 8 மணிக்கெல்லாம் ஈஷாவிற்கு வந்த ஜே.பி.நட்டாவை வரவேற்றவர்கள், அவருடன் வந்த கோவை பா.ஜ.க.வினரை தனியே ஒதுக்கி வேறிடத்திற்கு மாற்றினர். முதலில் டைம்ஸ் ஆப் பில்டிங்கில் தங்குவதாக இருந்த நட்டா, ஜக்கியுடனான 70 நிமிட சந்திப்பிற்கு பிறகு ஜக்கி அறைக்கு அருகிலுள்ள அறையில் தங்கியுள்ளார். மறுநாள் அதிகாலையில் எழுந்த நட்டா, சூரியக் குன்றில் குளித்துவிட்டு, தியான லிங்கத்தை வழிபட்டு, லிங்க பைரவியையும் தரிசித்து, அங்கிருந்து சில ஆவணங்களை கொண்டுசென்றார்” என்கின்றது உளவுத்துறை குறிப்பு ஒன்று.

இது இப்படியிருக்க, கோவை பாராளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக தான்தான் இருக்க வேண்டுமென சி.பி.ஆரும், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையும் தங்களுக்குண்டான மதிப்பீட்டை நட்டாவிடம் கூறிவைத்த நிலையில், “எனக்கு வாய்ப்பளியுங்கள்! எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு வென்று காட்டுகிறேன்” என வானதியும், தன் பங்கிற்கு நட்டாவிடம் புலம்பி வைத்ததும் பா.ஜ.க.வினர் மத்தியில் எள்ளி நகையாடப்பட்டு வருவது தனிக்கதை.

பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகி ஒருவரோ, “காவேரி காலிங், மண் வளம் பாதுகாப்போம் எனக்கூறி பா.ஜ.க. அரவணைப்பில் ஏற்கனவே பலநூறு கோடிகளை கொள்ளையடித்துவிட்டார் ஜக்கி. போதாதற்கு அதனைக்கொண்டு, உலகம் முழுவதும் பல வணிகத் தொடர்புகளையும் உருவாக்கியுள்ளார். இதில் கடந்தமுறை கர்நாடக பா.ஜ.க. முதல்வர் ரூ.300 கோடி கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது. துவக்கத்தில் ஆகம விதிகளை மதிக்காத ஜக்கி, நாளடைவில் கோவில் கட்டி கையில் கயிறு கட்டல், வேண்டுதல் என பலவற்றிலும் நித்யானந்தா வழியைப் பின் பற்றினார். தற்பொழுது அவருடைய ஒரே குறி ஈஷாவில் ஜி20 துணை மாநாட்டை நடத்துவதே! ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்ற நிலையில், மாநிலங்கள் முழுவதும் 200 துணை மாநாடுகளை நடத்த பா.ஜ.க. திட்டமிட்டது. அதன்படி தமிழ் நாட்டில் சென்னை, திருச்சி, தஞ்சை, நாகர்கோவில் உள்ளிட்ட 4 இடங்கள் முதற்கட்டத் தேர்வில் இருந்த நிலையில், எப்படியாவது கோவை ஈஷாவில் ஜி20 மாநாட்டை நடத்துவது ஜக்கி திட்டம். அதற்கான அனைத்து கட்டமைப்புகளும் ஈஷாவில் உள்ளது. இதன்மூலம் தமிழக அரசுடன் இணக்கமாவதும், உலகம் முழுவதும் பல கோடி ரூபாய்களை நன்கொடை எனும் பெயரில் வசூலிப்பதுமே ஜக்கியின் திட்டம். இதற்காக நரேந்திர மோடியின் அலுவலகத்திலுள்ள சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஜக்கிக்காக பணி செய்து வருகிறார்கள். அதன் ஒரு கட்டம்தான் நட்டாவுடனான சந்திப்பு. தமிழக அரசிற்கு இதில் துளியும் விருப்பமில்லை. இது அறிந்துதான் நாடாளுமன்றத்தில் தயாநிதி பேசினார். அதுபோல் எங்களுக்கும் இதில் விருப்பமில்லை என்றாலும் ‘இந்துமித்’தாக இருப்பதால் ஜக்கியை ஆதரிக்க வேண்டிய சூழல். எனினும் சி.டி. ரவி உள்ளிட்ட தலைவர்கள் மூலம் இங்கு வேண்டாமென பேசி வருகின்றோம்” என்றார் அவர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT