ப.சிதம்பரம் கைதுக்கு காரணமான ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கின் முழுப் பின்னணி...

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ நேற்று கைது செய்தது.

inx media case full details

கடந்த 2007 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு முறைகேடான அந்நிய முதலீடுகளை பெற அனுமதி வழங்கப்பட்டதாககடந்த 2017 ஆம் ஆண்டு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

கடந்த 2007 ஆம் ஆண்டுஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோர் தங்கள் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை விற்று, வெளிநாட்டிலிருந்து நிதி திரட்ட அனுமதி வேண்டி நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தை அணுகினர். அப்போது அவர்களது இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்திராணி முகர்ஜி, அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்தை அணுகினார். அதன்பின் 4.6 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகளை பெற அந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு கைமாறாக, மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்கு பீட்டர் முகர்ஜி உதவ வேண்டும் என சிதம்பரம் கூறியதாக கைது செய்யப்பட்டபின் கொடுத்த வாக்குமூலத்தில் இந்திராணி தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக 3.6 கோடி ரூபாய் கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

inx media case full details

மேலும் அதே ஆண்டில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு, மொரிஷியஸ் நாட்டை சேர்ந்த 3 நிறுவனங்கள் மூலம் 305 கோடி ரூபாய் வரை அந்நிய நேரடி முதலீடு வழக்கப்பட்டிருப்பதாக சோதனை மூலம் கண்டறியப்பட்டது. இந்தியாவின் அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் தான் இந்த முதலீட்டுக்கான ஒப்புதலை அளித்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த 305 கோடி அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக சந்தேகப்பட்ட நிதி அமைச்சகத்தின் புலனாய்வுத்துறை, சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தது. பின்னர் இந்த வழக்கு அமலாக்கத்துறைக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் சில வருடங்களுக்குப் பிறகு கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது அவரின் ஆடிட்டர் பாஸ்கர்ராமன் என்பவரின் கணினியில் ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான சில ஆவணங்கள் அமலாக்கத் துறைக்கு கிடைத்தது. அதில் ஐஎன்எக்ஸ் மீடியா மூலமாக கார்த்தி சிதம்பரம் பெற்ற நிதி குறித்து தகவல்கள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை பரிந்துரையின் பெயரில் கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு, பின்னர் டெல்லி உயர் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு மத்தியில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐயின் ஊழல் வழக்குக்கு எதிராக முன்ஜாமீன் மனுவினை தாக்கல் செய்தார் சிதம்பரம். பின்னர் அமலாக்கத்துறையின் பண மோசடி வழக்கிலும் முன்ஜாமீன் பெற மனு தாக்கல் செய்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தை சேர்ந்த இந்திராணி முகர்ஜி தனது மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.

தற்போது சிறையில் உள்ள அவர், கடந்த ஜூலை மாதம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக மாறுவதாக அறிவித்தார். இதன்பின் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என நீதிமன்றம் மறுத்தது. அதன்பின் ப.சிதம்பரம் தரப்பு நேற்று உச்சநீதிமன்றத்தை அணுகியது. ஆனால் உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என கைவிரித்து நிலையில், நேற்று இரவு ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

INX media karthi chidambaram P chidambaram
இதையும் படியுங்கள்
Subscribe