Advertisment

உலக தாய்மொழி தினம் : தமிழ் வித்துவான் பெரியசாமித் தேவர் பற்றி அறிவோம்!

ts-periyasaamy-devar

நாலுகோட்டை பாளையத்தின் விரிந்த பகுதியாகச் சிவகங்கை உருவாகி இருந்தாலும் சிவகங்கைக்கு முன்னரே படமாத்தூர் பகுதி நாயக்கர் கால 72 பாளையங்களில் ஒன்றாக இருந்ததாகக் கருதப்படுகிறது. 1801ல் சிவகங்கையின் முதல் ஜமீன்தாரான கௌரிவல்லவரும் இவ்வூரைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சங்க காலம் தொட்டே சிவகங்கைப் பகுதியில் பல புலவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இதில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவராக அறியப்படுபவர் தமிழ் வித்துவான் பெரியசாமித்தேவர்.

Advertisment

இவர் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுள் விவேகானந்தரை அமெரிக்காவின் சிகாகோ நகருக்குப் பேசுவதற்காக அனுப்பிவைத்தமையாலும் புகழ் பெற்ற பாஸ்கர சேதுபதிக்குக் கண்ணாக விளங்கியதாக அறியப்படுகிறார். கவியோகி சுத்தானந்த பாரதியார் தன் இளமைக் காலத்தில் கண்ட சிவகங்கையை மிக அழகாகப் பதிவு செய்து எழுதியுள்ளார், அதை எங்கள் ஊர் எனும் தலைப்பில் உ.வே. சாமிநாதரின் மாணாக்கர் தமிழறிஞர் கி.வா.ஜ. தொகுத்தளித்துள்ளார். அந்நூலில் சிவகங்கை நகர் பழமை மாறாமல் படம் பிடித்துக் காட்டப்படுகிறது. தமிழ் வித்துவானான பெரியசாமித் தேவரின் இல்லமும் அவரின் தனித்திறமும் இவ்வாறாக எடுத்துரைக்கப்படுகிறது.

Advertisment

சிவகங்கையில் கௌரி வல்லவரின் பெரிய அரண்மனை மதிலைச் சுற்றிப் பல சிறிய அரண்மனைகள் இருந்தன. அவற்றில் மறக்குலச் செல்வர்கள் வசித்து வந்தனர். அவர்களில் அக்காலத்தில் புகழ்பெற்றவர்கள் சிங்கத்துரை, குழந்தைத்துரை பெரியசாமித் தேவர் மாப்பிள்ளைத்தேவர் வீரனத்தேவர் முதலியோர் ஆவார்கள் இவர்கள் சிறந்த தமிழன்பர்கள். இவர்களில் பெரியசாமித்தேவர் வீட்டுத் திண்ணை தமிழ் மன்றம் என்றே சொல்ல வேண்டும். சாப்பாட்டு நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் அங்கே புலவர் விருந்து நடக்கும், பெரியசாமித் தேவர் இராமநாதபுரம் பாஸ்கர சேதுபதிக்குக் கண்ணாயிருந்த செல்வப்புலவர், தமிழில் கரை கண்ட படிப்பாளர். 

ts-periyasaamy-devar-1

எந்தப் பாட்டை எடுத்தாலும் வரி பிளந்து பார்த்து புதிய பொருள் சொல்லுவார் அவரிடம் வராத புலவர் இல்லை. நான் அடிக்கடி அங்குச் சென்று என் நூல்களைப் படிப்பதுண்டு அங்கு நடக்கும் பா விருந்துகளை ஆவலாக அருந்துவது உண்டு, புலவருள் போட்டி, பொறாமை வரும் வாய்ச்சிலம்பம் வலுக்கும் அப்போது அவர்கள் நாவிலிருந்து புறப்படும் பழமொழிகளும் மேற்கோள்களும் அணிகளும் கதைகளும் தெவிட்டாது இனிக்கும். நான் ஒரு கைக்குறிப்பில் எல்லாம் எழுதி வைத்துக் கொண்டு பாடம் செய்வது உண்டு என்று பதிவு செய்துள்ளார்.

ஒரு துறைக் கோவை அரங்கேற்றம் : 

அமிர்த கவிராயர் நாணிக் கண்புதைத்தல் எனும் ஒரு துறைக்கோவையில் நானூறு  பாடல்களை இரகுநாத சேதுபதி மீது பாடியுள்ளார், அதேபோன்று சேது சமஸ்தான புலவரான இரா.இராகவ ஐயங்கார் முத்துராமலிங்க சேதுபதி என்ற இராசராச சேதுபதியின் மீது நாணிக் கண் புதைத்தல் எனும் ஒரு துறைக் கோவையில் 400 பாடல்களைப் பாடி அரங்கேற்றம் செய்தார். இந்த அரங்கேற்ற நிகழ்வானது இராமநாதபுர சமஸ்தானத்தில் சிவகங்கை பெரியசாமித் தேவர், செந்தமிழ் பத்திரிகையாசிரியர் மு. இராகவா ஐயங்கார், வேம்பத்தூர் பிச்சு பாரதி மற்ற சமஸ்தான புலவர்கள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

ts-periyasaamy-devar-guide

பெரியசாமித்தேவர் நன்னூல் போன்ற இலக்கண நூல்களிலும் சங்க இலக்கியம், சைவ சித்தாந்தம், தேவாரம் திருவாசகப் பாடல்களிலும் புலமை பெற்றிருந்தார். இவரது தனிப்பாடல்கள் புகழ்பெற்று விளங்கியுள்ளன. இன்று உலகத் தாய்மொழி நாளில் இவரை மறவாது போற்றுவது சிவகங்கைக்கும் தமிழுக்கும் செய்யும் தொண்டாகும் என்கிறார் சிவகங்கை தொல்நடைக் குழு. நிறுவனர் புலவர் கா. காளிராசா.

mother language day sivagangai Tamil language
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe