Skip to main content

உள் இடஒதுக்கீடு! ஓட்டா? வேட்டா?

 

ddd

 

தேர்தல் களத்தில் முதல் தொகுதிப் பங்கீடாக, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 சீட் என்பதை உறுதி செய்திருக்கிறது, வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் வகையில், முதல்வர் எடப்பாடி தனது ஆட்சியின் கடைசி நாள் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதா. தேர்தல் தேதி அறிவிக்கப்டுவதற்கு சற்று முன் இந்த மசோதா நிறைவேற்றப்பட, அரசியல் களம் பரபரப்பானது.

 

மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலத்துக்கான தேர்தல் தேதியை 26-ந்தேதி அறிவிக்க தேர்தல் ஆணையம் தயாராகியுள்ளது என்கிற செய்தியை அறிந்து, ஏகத்துக்கும் பதட்டமானது எடப்பாடி அரசு. இந்தச் சட்ட மசோதாவை வைத்துதான் அ.தி.மு.க. கூட்டணிக்குள் பா.ம.க.வை நிலை நிறுத்திக்கொள்ள முடியும் என எடப்பாடி திட்டமிட்டிருந்தார். அதற்கு தேர்தல் ஆணையம் உலை வைத்துவிடுமோ என யோசித்தும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பதை உணர்ந்தும், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக அவசரம் அவசரமாக மசோதாவை நிறைவேற்றினார். அப்போது பேசிய எடப்பாடி, ‘இந்த இடஒதுக்கீடு தற்காலிகமானது. 6 மாதத்திற்குப் பின்னர் சாதிவாரியான புள்ளி விவரங்கள் அடிப்படையில் மாற்றியமைக்கப்படும்‘’ எனத் தெரிவித்தார்.

 

நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டமசோதா, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நடத்திய தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், "தமிழக அரசின் அமைச்சர்கள் குழுவினருக்கும் பா.ம.க.வினருக்கும் 10-க்கும் மேற்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதன் தொடர்ச்சியாகவே வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பிலுள்ள பிற சமூகத்தினருக்கு 2.5 சதவீதமும் சீர்மரபினருக்கு 7 சதவீதமும் வழங்கப்பட்டுள்ளது. அனைத்துச் சாதியினருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை.

 

உள் இடஒதுக்கீடு மூலம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்குரிய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும். வன்னியர்களின் சமூக நிலையும் வாழ்க்கைத்தரமும் மேம்படும். இதற்காகத்தான் 40 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன்.

 

வன்னியர்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கை. இதுகுறித்து தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். அரசும், அடுத்த 6 மாதங்களுக்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி உரிய இடப்பங்கீடு வழங்க உறுதியளித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சட்டப்பேரவைத் தேர்தலின் வெற்றியைத் தொடர்ந்து அந்த இலக்கையும் பாட்டாளி மக்கள் கட்சி வென்றெடுக்கும்!" என அழுத்தமாகக் குறிப்பிடுகிறார் டாக்டர் ராமதாஸ். தனது தந்தைக்கு கண்ணீர் நன்றியுடன் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட வீடியோவும் வைரலானது.

 

அதே நேரத்தில், இந்தச் சட்ட மசோதா அரசியல் களத்திலும் வழக்கறிஞர்கள் மத்தியிலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் இளங்கோவனிடம் விவாதித்தபோது, "தமிழகத்தில் சாதிவாரியான புள்ளி விவரங்களைச் சேகரிப்பதற்காக எடப்பாடி அரசு அமைத்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் கமிட்டியின் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்படாத நிலையில், உள் இடஒதுக்கீட்டின் அளவாக 10.5 சதவீதத்தை எப்படி முடிவு செய்தார்கள்?

 

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் தலைவரின் பரிந்துரையின்படி 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வன்னியர் சமூகத்துக்கு வழங்குவதாக சட்டமுன்வடிவில் தெரிவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆணையத்தின் இந்தப் பரிந்துரை அரசுக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்டதல்ல; சில வருடங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கையில், உள் இடஒதுக்கீடு சட்ட மசோதாவை முந்தைய பேரவை கூட்டங்களில் நிறைவேற்றாதது ஏன்?

 

ஆணையத்தின் பரிந்துரையின்படி உள்இடஒதுக்கீடு வழங்க முடியுமெனில், சாதிவாரி கணக்கெடுப்பிற்காக ஒரு கமிட்டியை அண்மையில் அமைக்க வேண்டியதன் அவசியம் எதற்கு? ஆணையத்தின் பரிந்துரையிருந்தாலும் சாதிவாரி புள்ளிவிவரங்களைச் சேகரித்த பிறகே உள்இடஒதுக்கீட்டின் அளவைத் தீர்மானிக்க முடியும் என்பதால்தானே? அதனால், இந்தச் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது அரசியல் உள் நோக்கம் கொண்டது.

 

6 மாதங்களுக்கு தற்காலிகச் சட்ட மசோதா எனச் சொல்கிறார் எடப்பாடி. 6 மாதங்களுக்கு ஒரு சட்டமசோதா என்பது விந்தையாக இருக்கிறது. ஏனெனில், சட்டமன்றம் கூட்டப்பட முடியாத அசாதாரணமான சூழல்களில்தான் குறிப்பிட்ட காலத்துக்கான அவசர சட்டம் நிறைவேற்றமுடியும். இப்போது தமிழகத்தில் எந்த அசாதாரணமான சூழலும் இல்லை. எனவே இப்படி ஒரு சட்ட முன்வடிவை நிறைவேற்றுவது சட்டச் சிக்கல்களை உருவாக்ககூடும். அதனால், அரசியல் மற்றும் கூட்டணி காரணங்களுக்காகவே மசோதாவை நிறைவேற்றியிருக்கிறார் எடப்பாடி. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே இதற்கு உயிர் இருக்கிறதா? வன்னியர் சமூகத்துக்குப் பலனளிக்குமா? என்பது தெரியும்'' என்கிறார்.

 

இந்தநிலையில், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக நிறைவேற்றப்பட்ட சட்டமசோதாவிற்கு கவர்னர் ஒப்புதலளிப்பாரா என்கிற சர்ச்சைகள் எதிரொலித்த நிலையில், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ச்சியாக எடுத்த அதீத முயற்சியில் சட்டமசோதாவுக்கு ஞாயிறு இரவு 1 மணி அளவில் ஒப்புதலளித்திருக்கிறார் கவர்னர் பன்வாரிலால். மசோதா நிறைவேற, சி.வி.சண்முகத்தின் உழைப்பும் அதிகமிருந்தது.

 

உள் இடஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க முடியும் என்கிற நிபந்தனைகளை விதித்திருந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து அ.தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதிசெய்தார். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 இடங்களை ஓ.பி.எஸ்.சும் இ.பி.எஸ்.சும் ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள்.

 

இதுகுறித்து பேசிய பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி, "இந்த தேர்தலில் எங்களின் ஒரே நோக்கம் இட ஒதுக்கீடுதான். அதை அரசு நிறைவேற்றித் தந்துள்ளது. அதனால் நாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துப் பெற்றுள்ளோம். ஆனாலும், எங்கள் பலம் குறையாது. எங்கள் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும்'' என்கிறார்.

 

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வில் கடந்த 2001-ல் கூட்டணி வைத்த பாமகவுக்கு 27 இடங்கள் கிடைத்தன. அதில், 20 இடங்களில் ஜெயித்தது பாமக. அதன்பிறகு நடந்த தேர்தல்களில் திமுக கூட்டணியிலும் தனித்தும் போட்டியிட்ட பாமக, 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது மீண்டும் ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது. அந்த கூட்டணி, உள் இடஒதுக்கீடு மசோதாவால் தற்போது சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்கிறது.

 

இந்த சட்ட மசோதாவால் அ.தி.மு.க.-பாமக கூட்டணிக்கான சாதக-பாதகங்கள் குறித்து அரசியல் விமர்சகர்கள் மற்றும் பாமக தரப்பில் விசாரித்தோம். நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள், "வட தமிழகத்தில் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக பா.ம.க.விலும், அடுத்து தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளிலும் இருக்கிறார்கள். அந்த வகையில், உள் இடஒதுக்கீடு மசோதா ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். மறுப்பதற்கில்லை. பா.ம.க.விற்கு பலம்தான். ஆனால், திமுகவிலுள்ள வன்னியர்கள் கட்சி நலனைக் கடந்து அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணிக்கு வாக்களிப்பார்களா? என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. அதேசமயம், அ.தி.மு.க.வை இதுவரை ஆதரித்து வரும் பிற சமுகத்தினரின் மனநிலை மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு. இதுபோன்று பல காரணிகள் தேர்தல் களத்தில் எதிரொலிக்கும்'' என்கின்றனர்.

 

இது குறித்து பா.ம.க. செய்தித் தொடர்பாளர் வினோபா பூபதியிடம் நாம் கேட்டபோது, "சமூக நீதிக்கான மருத்துவர் அய்யா ராமதாசின் 40 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி இது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இதுநாள் வரை வன்னியர் சமூகத்தினருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், தற்போது நிறைவேற்றப்பட்ட உள் இடஒதுக்கீடு மசோதாவால் ஓரளவு துடைத்தெறியப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வரும் கல்வியாண்டுகளில் அதிகப்படியான பலன்கள் வன்னியர் சமூகத்தினருக்கு கிடைக்கும்.

 

அந்தவகையில், அரசியல் காழ்ப்புணர்வுகளைக் கடந்து ஒட்டுமொத்த வன்னியர் சமூகமும் ஒருமுகமாக இணைவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது. இந்த இணக்கம் அ.தி.மு.க.-பாமக கூட்டணிக்கு 100 சதவீத வெற்றியைத் தரும். காரணம், தி.மு.க.வின் கட்சிப் பொறுப்புகளில் இருக்கும் வன்னியர்கள், திமுக ஆதரவாளர்களாக இருக்கும் வன்னியர்கள் என பலரும் அய்யா ராமதாசை தொடர்புகொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருப்பதால் எதிர்காலத்தில் நமக்கும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையைப் பிற சமூகத்தினருக்கு கொடுத்துள்ளது இந்தச் சட்டமசோதா. அதனால் பிற சமூகத்தினரின் ஆதரவும் முன்பை விட அதிகமாகவே பாமக-அ.தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்கும்'' என்கிறார்.

 

"வன்னியர் வாக்கு போதுமா, அந்நியர் வாக்கும் இணையுமா" என்பதே தேர்தல் களத்தை தீர்மானிக்கும்.