Skip to main content

மதுரையை மீட்ட முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு கண்டுபிடிப்பு

 

inscription discovery of maravarman sundarapandian first to recover madurai

 

புதுக்கோட்டை மாவட்ட எல்லையிலுள்ள சிவகங்கை மாவட்டம் சானாவயலில் உடைந்து கிடக்கும் துண்டு கல்வெட்டு குறித்து பொறியாளர் மா. இளங்கோவன் அளித்த தகவலையடுத்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனரும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளருமான மங்கனூர் ஆ. மணிகண்டன் தலைமையிலான குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டு மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனின் ஆறாவது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

 

இந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு குறித்து ஆ. மணிகண்டன் கூறியதாவது:

 

கல்வெட்டு அமைவிடம் : 

புதுக்கோட்டை மாவட்ட எல்லையிலுள்ள சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை வட்டம், கொடுவூர் ஊராட்சி சானாவயல் என்னும்  சிற்றூரின் வயல்வெளி பகுதியில் பெருமாள் கோவில் மேட்டில் எழுத்துப் பொறிப்புடன் உடைந்த பலகை கல்வெட்டின் கீழ்ப்பகுதி நடப்பட்ட நிலையிலும்,  கல்வெட்டின் மேற்பகுதி இரண்டு உடைந்த துண்டுகளாக கண்டுபிடிக்கப்பட்டு படியெடுக்கப்பட்டது.

 

கல்வெட்டு   :
 

inscription discovery of maravarman sundarapandian first to recover madurai

 

கல்வெட்டு நான்கரை அடி உயரத்துடனும் ஒன்றே முக்கால் அடி அகலத்துடனும் ஒரு அடி தடிமனுடன் உடைந்த நிலையில் மூன்று புறங்களில் 114 வரிகளுடன் கூடிய எழுத்து கற்பலகைத்தூணில்  உள்ளது. இவற்றில் 103 வரிகள் தெளிவாகவும், கல்வெட்டின் இறுதிப்பகுதி முழுவதுமாக சிதைந்த நிலையில்  உள்ளது.

 

கல்வெட்டின் காலமும் செய்தியும் : 


பிற்கால பாண்டியர்களில், சோழர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர் கோமாறன் திருபுவன சக்கரவர்த்தி என்ற பட்டம் கொண்ட முதலாம் சுந்தர பாண்டியன் (பொ. ஆ.1216 முதல் 1239 வரை) ஆவார். இவரது ஆறாவது ஆட்சியாண்டில் (பொ. ஆ.1222 ) தை மாதம் தாழையூர் நாடு, சிற்றானூர், திருத்தெங்கூர் உடையார் திருநாகீஸ்வரமுடைய நாயனார் கோவிலுக்காக ஸ்ரீ கோயில் ஸ்ரீ ருத்ர, ஸ்ரீ மாகேஸ்வரர்கள், படிகாரியஞ் செய்வோர்கள் உள்ளிட்ட அனைவரும் செம்பொன்மாரி அரசு மாளவ மாணிக்கம், திருக்கான பேருடையாரான உடையார் மாளவ சக்கரவர்த்திகளிடம் கலிதாங்கி மங்கலத்துப் பொன்பற்றி உடையான் சேந்தனுய்ய வந்தான் செம்பியன் பல்லவரயர் என்பவர் பெயரில் காணி நிலத்தை பிடிபாடு அதாவது பதிவு செய்து கொடுத்த செய்தியை இக்கல்வெட்டு பதிவு செய்கிறது.

 

வரி நீக்கமும் கடமை கொள்ளும் அளவும்:
 

inscription discovery of maravarman sundarapandian first to recover madurai

 

இந்நிலத்திற்கு தாழையூர் நாட்டு சிற்றானுர் கடமையந்தராயமும் மற்றும் எப்பேற்பட்ட விநியோகங்களும், வரி நீக்கம் செய்த தகவலையும் இந்நிலத்தில் விளைந்த  பொருட்களை, சிற்றானூர் கோவில்  வாசலிலே அளவு கொண்டு  குறுவை நெல் நட்ட நிலத்திற்கு, கண்ணழிவு நீக்கிப் பாத்து நிச்சயித்து விளைச்சலில் ஒன்று பாதி கடமை கொள்வதெனவும்; தினை, வரகு நட்ட நிலத்தில் கண்ணழிவு நீக்கிப் பயிர் நிச்சயித்து ஒன்றிலே கால் கடமையாக கொள்வதாக அறிவிக்கப்பட்டு, ஏற்றுக்கொண்டமையை இக்கோவிலிலும் திருமலையிலும், சிற்றானூரிலும் கல்வெட்டு  வெட்டி  நாட்டிக் கொள்ளவதற்கு ஏற்பளித்து சந்திராதித்தவற்கு (சூரியன் சந்திரன் உள்ளவரை) செல்வதாகவும்  இக்கல்வெட்டு தகவல் பகிர்கிறது.

 

கல்வெட்டில்  ஒப்பமிட்டவர்கள் :
 

inscription discovery of maravarman sundarapandian first to recover madurai

 

இந்தக் கல்வெட்டிற்கு கோப்பலை பட்டன் திருநாஹீஸ்வரமுடையான், மும்முடி சோழன் ஐய்ய நம்பி, திருவேகம்பந் கூத்தாடி கொற்றபட்ட நனாந திருஞாநசம்பந்தப்பட்டந், ஆழித்தேர் வித்தகந், பொந்மா மாளிகைய பிள்ளை, சிகாரியம் சுந்தரப்பெருமாள், கோயிற்கணக்க நாகதேவந், ஸ்ரீமாளவச்சக்கரவத்திகள், கோயிற் தளத்தார்(தேவரடியார்) முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது.

 

கல்வெட்டு கூறும் நிலவியல் சான்றுகள் : 

பாம்பாறு, கடந்த 800 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததே பாம்பாறு என்று அழைக்கப்பட்டிருந்ததையும், மிழலை கூற்றத்தில் தாழையூர் நாடு தற்போது தாழனூர் என்றும், சிற்றானுர் சிறுகனூர் என்றும், கலிதாங்கி மங்கலம் கதிராமங்கலம் என்றும், பொன்பற்றி பொன்பேத்தி என்றும், மாளவ மாணிக்கம் என்ற ஊர் வாளரமாணிக்கம் என்றும் மாறியுள்ளதையும் செம்பொன்மாரி, திருத்தெங்கூர் அதே பெயருடனும் அழைக்கப்படுவதையும் கல்வெட்டு மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. 

 

செம்பொன்மாரி : 

பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் செம்பொன்மாரியில் தான் சோழரை (பொ. ஆ. 1219) மூன்றாவது ஆட்சியாண்டில் வென்றதாக இலங்கை வரலாறு கூறுகிறது. அச்செய்தியை மெய்ப்பிக்கும் வகையில் அவரின் ஆறாம்  ஆட்சியாண்டில்  இக்கல்வெட்டு நடப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. செம்பொன்மாரி அரசு மாளவ மாணிக்கம், திருக்கான பேருடையாரான உடையார் மாளவ சக்கரவத்திகள் என்பார் சுந்தர பாண்டியன் ஆட்சிக்காலத்தில் மிக முக்கிய  அரசியல் அதிகாரம் பெற்றவராக அலுவலராக இருந்துள்ளார். அவருடைய நிலமே கோவில் திருப்பணிக்காக பெறப்பட்டுள்ளதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

 

பொன்பற்றி காவலன் சேந்தன் : 

inscription discovery of maravarman sundarapandian first to recover madurai

 

பாண்டி நாட்டில் மிழலை கூற்றம் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் பகுதிகளை உள்ளடக்கிய நாட்டுப் பிரிவாக இருந்துள்ளது. இக்கூற்றத்திலிருந்த பொன்பற்றி (பொன்பேத்தி) எனும் நகரில் சிற்றரசனாய் இருந்த புத்த மித்திரன் என்பார் வீர ராசேந்திரன் ஆட்சிக்காலத்தில் ஐந்திலக்கணம் அடங்கிய நூலெழுதி அதற்கு வீர சோழியம் என்று பெயரிட்டார். வீர சோழியம் எனும் இலக்கண நூலிற்கு உரை எழுதிய புத்த மித்திரரின் மாணவரான பெருந்தேவனார் தமது உரையில், புத்தமித்திரரின் முன்னோர்களில் ஒருவனான பொன்பற்றி (பொன்பேத்தி) காவலன் சேந்தன் என்பவன் தொண்டைமானின் படைத்தலைவனாக இருந்து சிங்களத்து அரையன், வில்லவன் ஆகியோரை வென்ற செய்தியைக் கலிப்பாவில் குறிப்பிடுகிறார். இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் மிழலை கூற்றத்து வட பாம்பாற்று கலிதாங்கி மங்கலத்துப் “பொன்பற்றி உடையான் சேந்தனுய்ய  வந்தான்” என அழைக்கப்பட்ட செம்பியன் பல்லவரயர் என்பார், பொன்பற்றி (பொன்பேத்தி) காவலன் சேந்தன் என்பாரின் புகழை நிலைநாட்ட வந்தவன் என்று குறிப்பிடப்படுவதன் மூலம் அவரது முன்னோரில் நிலைத்த புகழோடு இருந்தவரான பொன்பற்றி காவலன் சேந்தன் வழி வந்தவர் என இக்கல்வெட்டு சான்று பகிர்கிறது.

 

இதுபோன்ற மிக முக்கியமான வரலாற்று தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ள இக்கல்வெட்டு வரலாற்று ஆய்வுகளுக்கு மிக முக்கிய சான்றாக இருக்கும் என்றார். இந்த ஆய்வின் போது பொறியாளர் மா. இளங்கோவன், ச.சாகுல் ஹமீது, உள்ளூர் இளைஞர் அ. தளபதி அஸ்வின் ஆகியோர் உடனிருந்தனர். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !