ADVERTISEMENT

விதிமீறல் கட்டடங்கள்! அதிகாரிகள் லஞ்ச ஆட்டம்!

12:55 PM Feb 14, 2019 | Anonymous (not verified)

வர்கிரீன் சுற்றுலாத்தலமான கொடைக்கானலை நோக்கி சுற்றுலாப்பயணிகள் படையெடுப்பது வழக்கம். அவர்களுக்காகவே கோடைநகரில் மூஞ்சிக்கல், நாயுடுபுரம், லேக், டிப்போ போன்ற பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான லாட்ஜுகள், வணிகவளாகங்கள், வீடுகள் கட்டப்பட்டுள்ளன.இவை, “"நகரின் குறிப்பிட்ட பகுதிகளில் கட்டடங்கள் கட்டக்கூடாது, ஒரு மாடிக்கு மேல் எழுப்பக்கூடாது. லேக்கைச் சுற்றி 200 மீட்டர் தொலைவில்தான் கட்டடங்கள் இருக்கவேண்டும்'’போன்ற விதிமுறைகளை மீறி கட்டப்பட்டவை. இதுதொடர்பாக சமூகஆர்வலர்கள் சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், 45 விதிமீறல் கட்டடங்களுக்கு சீல்வைத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. இதனடிப்படையில் கோடை நகராட்சி கமிஷனர் முருகேசன் தலைமையிலான குழு உட்டீஸ், சன்சைன், கிரீன்பார்க், ராயல் காட்டேஜ் உள்ளிட்ட 45 கட்டடங்களுக்கு சீல்வைத்து வருகிறது.

ADVERTISEMENT

""இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ‘ப்ளசன்ட்ஸ்டே’ ஏழுமாடி ஓட்டலுக்கு விதிகளை மீறி அனுமதி தந்ததற்காக, முதல்வர் பதவியை இழந்து ஜெயிலுக்கு சென்றார் ஜெயலலிதா. அந்த ஓட்டலும் இடிக்கப்பட்டது. அப்படியிருந்தும் விதிமீறல் கட்டடங்கள் பெருகியபடியே இருக்கின்றன. அதைத் தடுக்காமல் லட்சங்களில் லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதித்ததே இங்கிருந்த அதிகாரிகள்தான். இதற்கு முன்பு நகராட்சி கமிஷனராக இருந்த சரவணன் காலத்தில்தான் ஏராளமான கட்டடங்கள் பெருகின. இது அரசுக்கு தெரியவந்ததும் அவர் இங்கிருந்து தூக்கியடிக்கப்பட்டார். இப்போதுகூட ஐகோர்ட்டில் முழுமையான கட்டட விவரங்களைக் கொடுக்காமல் மறைத்திருக்கிறார்கள். விதிமீறல் கட்டடங்களை சீல் வைக்காமல் ப்ளசன்ட்ஸ்டே ஓட்டலைப் போல இடிக்கவேண்டும்''’என்றார் சமூகஆர்வலர் பேத்துப்பாறை மகேந்திரன்.

ADVERTISEMENT


ஆயிரக்கணக்கான விதிமீறல் கட்டடங்களின் மீதான நடவடிக்கை குறித்து நகராட்சி கமிஷனர் முருகேசனிடம் கேட்டதற்கு, ""அதைப்பற்றி இப்போது ஒன்றும் சொல்லமுடியாது. கோர்ட் உத்தரவுப்படி நடக்கத் தயாராக இருக்கிறோம்''’என்றார். இந்நிலையில், சீல் வைக்கப்பட்ட 45 கட்டடங்களுக்கான அறிக்கையை கடந்த ஜன.31 அன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல்செய்த அதிகாரிகளிடம், விதிமீறலில் ஈடுபட்டுள்ள 1,417 கட்டடங்களின் மின்இணைப்பைத் துண்டித்து சீல் வைத்ததற்கான அறிக்கையை மார்ச் 11-க்குள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, கொடைக்கானலைச் சேர்ந்த லாட்ஜ் உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்களிடம் பேசியபோது, ""1976-ல் போடப்பட்ட மாஸ்டர் ப்ளான்தான் இன்னமும் இருக்கிறது. ஐந்து வருடத்திற்கு ஒருமுறை அதை மாற்றியமைக்க வேண்டும். இது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரப் பிரச்சனை. கோர்ட் உத்தரவை வைத்துக்கொண்டு சீல் நடவடிக்கை தொடர்ந்தால் ரேஷன் கார்டுகளை ஒப்படைப்போம்''’’ என எச்சரித்தனர்.விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டிய அதிகாரிகளால் ஏற்பட்ட பிழையை சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை. நெறிப்படுத்துமா?

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT