Skip to main content

இந்தியாவின் ஒரே ஏழை முதல்வர் ஏன் தோற்றார்?

"இந்தத் தேர்தலுக்குப் பிறகு  மாணிக் சர்க்காருக்கு மூன்று வழிகள்தான் உள்ளன. ஒன்று, அவர் மேற்கு வங்கத்துக்குப் போகலாம். கம்யூனிஸ்ட் கட்சி கொஞ்சம் மிச்சமிருக்கிறது அங்கே. இரண்டு, அவர் கேரளாவுக்குப் போகலாம். அங்கு அவர்களிடம் ஆட்சி இருக்கிறது. இரண்டும் பிடிக்காவிட்டால் நாட்டை விட்டு வங்கதேசத்துக்குச் சென்று விடலாம்." பாரதிய ஜனதா கட்சிக்காக திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்த அஸ்ஸாம் மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கூறியது இது.

 

manik sarkarஆம், 2410 ரூபாய் வங்கி கையிருப்போடு, சொந்தமாக காரோ பெரிய வீடோ இல்லாமல், இதுவரை வருமான வரி கட்டவேண்டிய அளவுக்கு வருமானமே பார்த்திராமல், இளமையில்  தொடங்கிய கம்யூனிஸ்ட் கட்சிப் பணியை இப்பொழுது வரை முதன்மையாகக்  கருதி செய்து, முதல்வர் பதவிக்கான சம்பளத்தை தன் கட்சி வழக்கப்படி கட்சி நிதிக்குக் கொடுத்துவிட்டு மாத சம்பளமாக 9700 ரூபாய் மட்டும் வாங்கி,  முன்னாள் மத்திய அரசு அலுவலரான மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்ஜீயிடம் கூட 20 கிராம் நகை மட்டுமே வைத்து வாழ்ந்த ஒரு முதல்வர் இந்தியாவுக்கு அந்நியமானவர் தானே? ஒரு முறை கவுன்சிலர் ஆனவரே கோடீஸ்வரனாகும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நமக்கு இன்னும் அந்நியம்தான். 

1998ஆம் ஆண்டு முதல் முறை மாணிக் சர்க்கார் பதவியேற்ற போது, திரிபுரா இருந்த நிலை வேறு. பழங்குடி மக்களுக்கும் வங்காளிகளுக்கும் இடையே பிரிவினை, வேற்றுமை, பதற்றம் என்று இருந்த மாநிலத்தில் அமைதியைக் கொண்டு வந்ததில் மாணிக் சர்க்காரின் பங்கு முக்கியமானது. வங்காளிகள் ஆதிக்கம் அதிகமான பொழுது, எதிராக உருவெடுத்த செங்ராக் அமைப்பு, திரிபுரா தேசிய முன்னணியாளர் படை, திரிபுரா தேசிய விடுதலைப் படை (என்.எல்.எஃப்.டி), அகில திரிபுரா புலிகள் படை (ஏ.டி.டி.எஃப்) என பல ஆயுதமேந்திய கிளர்ச்சிக் குழுக்கள் செயல்பட்டுவந்தன. வங்காளிகளுக்கு ஆதரவாக  வங்காளப் புலிகள் படை (பி.டி.எஃப்.), ஐக்கிய வங்காளிகள் விடுதலைப் படை (யு.பி.எல்.எஃப்.) என இரு புறமும் வன்முறை குழுக்கள் பெருகின.

tripuraகார்கில் போரை ஒட்டி 1999 ஆண்டு சமயத்தில் மாநிலத்தில் பாதுகாப்புக்கு இருந்த ராணுவமும் பெருமளவில் குறைக்கப்பட, மாநில காவல்துறையை வைத்தே சிறப்பாக கட்டுப்படுத்தினார் மாணிக் சர்க்கார். தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த என்ற பெயரில் பழங்குடியினருக்கு ஆபத்தாக இருந்த ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை திரும்பப் பெற்றது திரிபுரா. தன் எளிமையாலும் நேர்மையாலும்  தொடர்ந்து மக்களின் நம்பிக்கையைப் பெற்று 2013ஆம் ஆண்டு நான்காவது முறையாக பதவியேற்றார் மாணிக்.

தேயிலை, ரப்பர், காடுகள், நதிகள் என இயற்கை வளம் நிறைந்தது திரிபுரா. இன்றும் 50% மேல் விவசாயத்தை நம்பியிருக்கும்  மக்கள், கல்வி சதவிகிதத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியாவிலேயே அதிகமாக 94.65% இருந்தது, இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்காதது என பல விதங்களிலும் எடுத்துக்காட்டாக இருந்த ஆட்சியை மாற்ற மக்கள் விரும்பியது ஏன்? கல்வி வளர்ச்சிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு இல்லாதது, இயற்கை வளங்களைக் காத்த அரசு தொழில்துறையில் கவனம் செலுத்தாதது, அரசு பணிகளிலும் பதவிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அதிகமாக இருந்த வங்காளிகள் 30% மேலான மக்கள்தொகை உள்ள திரிபுரா பழங்குடிகளை ஆதிக்கம் செய்தது என பல காரணங்கள்.  7 லட்சம் வேலையில்லாத இளைஞர்கள், வேலையில்லா திண்டாட்டத்தில் நாட்டில் நான்காவது இடம், புதிய தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் என எதுவும் வராத நிலை...இப்படி மறுபுறம் சரிவுகள் பெருகின.  'இன்வெஸ்ட் திரிபுரா', 'திரிபுரா கான்க்ளேவ்' என்று பல திட்டங்களை முயன்றும் சரியான செயல்படுத்தல் இல்லாததால் நிறுவனங்களை ஈர்க்க முடியவில்லை.     

 

manik with modiபொதுவாகவே கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவாக இருக்கும் இடங்களில், அதன் தொண்டர்கள் தீவிரமாக இருப்பதைக் காண முடியும். நமக்கு அருகே உள்ள கேரளாவில் இதை பார்க்கிறோம். அந்தத் தீவிரம் எதிர் சித்தாந்தங்களையும் கட்சிகளையும் நசுக்கும் அளவுக்கு திரிபுராவில் இருந்ததால், அங்கு எதிர்க் கட்சி என்று எதுவும் பலமாக இல்லை. அந்த இடத்தைப் பயன்படுத்திக் கொள்ள வந்தது பாஜக. ஆர்.எஸ்.எஸ். தன் நடவடிக்கைகளை பழங்குடியினரிடமிருந்து தொடங்கியது. 2014ஆம் ஆண்டு திரிபுரா வந்த பாஜகவின் தேர்தல் ஸ்பெஷலிஸ்ட்டுகளில் ஒருவரான சுனில் தியோதர் தீவிரமாக வேலை பார்த்தார். அவருக்கு நெருக்கமாக இருந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த சன்மோகன் திரிபுரா 2016ஆம் ஆண்டு  கொல்லப்பட்டார். கொலைகளில் அரசியல் செய்வதில் வல்ல பாஜக, அதை சரியாகக் கையில் எடுத்து மாநிலத்தின் அத்தனை தொகுதிகளிலும் போராட்டங்களைச் செய்து 42000 பேர் கைதாகி, திரிபுராவில் தன் இருப்பை வலுப்படுத்தியது. காங்கிரஸ், தன்னிடம் இருந்த 7 எம்.எல்.ஏ க்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குப் பறிகொடுத்தது. பின்னர் அவர்கள், பாஜகவில் இணைந்தனர். 

 

sunil dheodharதிரிபுராவின் பூகோள அமைப்பும் அதன் வளர்ச்சிக்கு முழுமையாகக் கைகொடுக்கவில்லை. சரியான சாலை அமைப்புகள் இல்லை. ஆனால், எத்தனை காரணங்கள் சொன்னாலும், உலகமும் இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் அனுபவிக்கும் உலகமயமாக்கலின் சுகங்களை, பன்னாட்டு நிறுவன வேலைகளை, உடைகளை, உணவுகளை, வாழ்வுமுறையை திரிபுரா மக்களால்  எத்தனை நாள் தான் தவிர்த்திருக்க முடியும்? அதுவும் அனைத்தும் அனைவருக்கும் தெரிய வரும் இந்த தகவல் தொழில்நுட்ப காலகட்டத்தில்!  தன்னை இந்தியாவின் ஏழை முதல்வர் என்று பத்திரிகைகளும் மக்களும் சொல்வதைத் தான் ரசிப்பதாகவும் அதனால் மகிழ்வதாகவும் ஒருமுறை கூறியிருந்தார் மாணிக் சர்க்கார். முதல்வர் அப்படியிருக்கலாம். மக்களிடமும் அதை எதிர்பார்க்க முடியுமா?  

இத்தனையும் சேர்ந்து, மக்கள் மாற்றத்தை நோக்கி சென்றனர். அந்த மாற்றமாக பாஜக தன்னைக் காட்டிக்கொண்டு வென்றுள்ளது. இனி, மக்கள் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்குமா என்பது வரும் காலத்தில் தான் தெரியும். அவர்கள் எதிர்பார்த்த மாற்றமும் வளர்ச்சியும் அவர்களுக்குக் கிடைக்கலாம், ஆனால் அதன் விலை அவர்களுக்கு உடனடியாகத் தெரியாது. நமக்கு அது நன்றாகவே தெரியும்!          

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...