Skip to main content

இந்தியாவின் உலக அழகிகள்!

Published on 20/11/2017 | Edited on 21/11/2017
இந்தியாவின்  உலக அழகிகள் 

சொன்னதும்   செய்ததும்...



மனுஷி 

உலகம் முழுவதும் வாழ்த்துகளை குவித்துக்  கொண்டிருக்கும் 'மனுஷி  சில்லார்' தான் இந்த வருட  உலக அழகி பட்டம் வென்றவர். இந்தியாவின்  ஹரியானா மாநிலத்தில் பிறந்து, தற்போது மருத்துவம் பயின்றுவரும் இவருக்கு 20 வயதே ஆகின்றது. மூன்றாம் ஆண்டு படித்துக்  கொண்டிருந்த இவர், இந்தப்  போட்டிக்காக ஒரு வருட படிப்பினையும்  தியாகம் செய்துள்ளார். இவருக்கு 'கார்டியாக் சர்ஜியன்' ஆக வேண்டும் என்பதே ஆசையாம். அதுமட்டுமல்லாது கிராமப்புறங்களுக்கு இலவசமாக மருத்துவம் தருவதே இவரின் லட்சியம் என்றும் கூறியுள்ளார்(எத்தன பிரஸ் மீட் பாத்துருப்போம்!!!). இந்தியா இத்துடன்  6 வது முறையாக உலக அழகி பட்டத்தை வென்றுள்ளது. ஒவ்வொரு உலக அழகியும் இறுதிச் சுற்றில் அல்லது வெற்றி பெறும்போது தங்களது எதிர்கால திட்டங்களாகவும், லட்சியங்களாகவும் சிலபல சேவைகளை சொல்லுவது வழக்கம். சொன்ன பின்பு, நமக்கேற்ற சிறந்த சோப்புகளையும், ஷாம்புகளையும், நாம் வெண்மையாக அழகாக(?)  திகழ வழிகளையும் சொல்லி சேவையும் செய்திருக்கின்றனர்.  மனுஷிக்கு மருத்துவ சேவையென்றால் நமது மற்ற உலக அழகிகள் என்ன லட்சியம் வைத்திருந்தார்கள் என்று கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்...   



ஐஸ்வர்யா     டயானா      யுக்தாமுகி        பிரியங்கா


இந்திய மக்களை, உலக அழகி பட்டங்களை எல்லாம் திரும்பிப்  பார்க்க வைத்த பெருமை ஐஸ்வர்யாராயையும், சுஸ்மிதா சென்னையுமே சேரும். 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை ஐஸ்வர்யாவும், அதே ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டத்தை சுஸ்மிதா சென்னும் வென்று இந்தியாவிற்கு 'பெருமை' சேர்த்தனர். இந்த அழகி பட்டங்கள் அவர்களின் புற அழகிற்காக மட்டும் கொடுக்கப்படுவதில்லை.  அவர்களின் அறிவு, சமயோஜித பதில்கள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது. அழகிப்  போட்டியில் கடைசியாக நடப்பது கேள்வி பதில் சுற்று. ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டத்தை வென்ற பின்னர் அவரின் கனவென்று  உலக அமைதி பற்றி பேசினார். அமைதிக்கான தூதராக வேண்டுமென்பதே தன் ஆசை என்று கூறிய அவர், பல பொருட்களின் விளம்பர தூதராக ஆனார்.  1997ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி, பின்னர் பாலிவுட்டின் கனவுக்  கன்னியாக உருமாறினார் . இந்தியாவில் காஸ்மெடிக் பொருள்கள் அதிகம் வாங்கப்பட்டதற்கு காரணம் இவர் மாடலாக விளம்பரங்களில் நடித்ததால் கூட என்றும் சொல்லலாம். இடையில் சல்மான்கான், விவேக் ஓபராய் என காதல் பிரச்சனைகளைக் கடந்து அபிஷேக் பச்சனை மணந்து பச்சன் குடும்பத்தில் இணைந்தார். போட்டியில் சொன்னவற்றை செய்யவேயில்லை என்று சொல்ல முடியாது.  2005ல் மக்களுக்கு உதவி புரிய 'ஐஸ்வர்யா ராய் ஃபவுண்டேசனை' ஆரம்பித்தார். பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற சுஸ்மிதா அனைத்து விதமான குழந்தைகளுக்கும் என்னால் முடிந்த உதவி செய்வேன் என்று கூறினார். இவரும் இந்திய சினிமாவில் நடிக்கத்  தொடங்கினார். சுஸ்மிதா சென் இரண்டு குழந்தைகளை தத்து எடுத்தும், 'ஐ யாம்' (I am)  ஃபவுண்டேசன்' எனும் டிரஸ்டை குழந்தைகளுக்காக நடத்திவருகிறார்.



    சுஸ்மிதா    ஐஸ்வர்யா 


இவர்கள் இருவரைத்  தொடர்ந்து 1997ஆம்  ஆண்டு  உலக அழகி  பட்டத்தை வென்றவர் 'டயானா ஹெய்டன்'. இறுதிப் போட்டியில், மற்றவர்களின் கனவு நனவாக உதவுவதே தனது பொறுப்பு என்று கூறினார். அதற்கேற்ப கனவுக்கன்னியாக உருவாகாமல்  இரண்டு படங்கள் மட்டுமே நடித்துவிட்டு  காலின் டிக்கின்ஸ்  என்பவரை மனம் முடித்து சென்றுவிட்டார். 1999 ஆம் ஆண்டு இந்தியாவின்  யுக்தாமுகி,  உலக அழகி பட்டத்தை வென்றார். இவரும் நடிகையாக கொஞ்சம் காலம் வளம் வந்தார். சாரிட்டிகளுக்காக உதவியும் செய்துள்ளார். இரண்டாம் வருடமாக தொடர்ந்து 2000 ஆண்டிலும் இந்தியாவிற்கே உலக அழகி பட்டமும், பிரபஞ்ச அழகி பட்டமும்   கிடைத்தது. இந்தியாவிற்காக கலந்துகொண்டு உலக அழகியானவர்,  நடிகையாக பிரபலம் அடைந்த, பிரதமர் மோடி முன்பு கால்மேல் கால் போட்டு  உட்கார்ந்ததால் சமீபத்தில் செய்திகளில் அடிபட்ட   பிரியங்கா சோப்ராதான். உலக அழகி பட்டம் வாங்கும் மேடையிலேயே 'இந்த பட்டம் கிடைத்தால் அதை வைத்து பிரபலமாகி  பலருக்கு உதவி புரிவேன் என்றார். தற்போது ஹாலிவுட்  சினிமா வரை கலக்கும் பிரியங்கா பல நல்ல விஷயங்களுக்கு தன்னால் முடிந்த உதவி  செய்துகொண்டு வருகிறார். பிரபஞ்ச அழகியான லாரா தத்தா, அழகிகளின் வழக்கப்படி 'மாடலா'கி பின் நடிகையாகி, பின்னர் டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியின் மனைவியாகிவிட்டார். 90களில்தான் இந்திய அழகிகள் அடிக்கடி பட்டங்கள் வென்றனர்.  


        
ரீட்டா                                                                     லாரா
1994 ஆண்டில் இருந்து இந்த  அழகிகளை வைத்துதான் காஸ்மெடிக் பொருட்களை  இந்தியா முழுக்க விற்றுத்  தள்ளியுள்ளனர். சில ஆண்டுகளாக, நிறம் மட்டுமே அழகல்ல என்ற கருத்துண்மையும், கெமிக்கல்கள் நம் உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள், பாரம்பரிய மருந்து, அழகுப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு என மக்களின் மனநிலை மாறிவருகிறது. உலக அழகி மாடல்கள் இல்லாமல் சாமியார்கள் மாடல்களாக இருக்கும் பொருட்களும் அதிகமாக விற்கின்றன. இந்த போக்கை மாற்றத்தான் மீண்டும் இந்திய அழகியை உலக அழகியாக தேர்ந்தெடுத்திருப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆசிய கண்டத்திலேயே முதன் முதலில்  உலக அழகி பட்டத்தை  1966 ஆண்டு இந்திய டாக்டர்  'ரீட்டா ஃபாரியா' வென்றார்.  2000க்கு பின் பதினேழு  ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு டாக்டரான  மனுஷி  உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார். இவரும் அவர்களைப்  போல சமூக அக்கறையாகத்தான் பேசுகிறார்.  'நான் சினிமாவில் நடிக்க மாட்டேன்' என்றும்  கூறியுள்ளார்.  எது எப்படியோ, இவர்களிடம் 'சொன்னிங்களே, செஞ்சீங்களா'  என்று கேட்டால் அது  உலகமகா காமெடி. சொன்னதை  செய்யவேண்டியவங்களே, சொல்லிட்டு அடுத்த அஞ்சு  வருஷம்  கழிச்சுத்தான் வாராங்க...

சந்தோஷ் குமார்          

சார்ந்த செய்திகள்