Skip to main content

இந்தியாவின் முதல் திருநங்கை சித்த மருத்துவர்!

Published on 27/11/2017 | Edited on 28/11/2017
இந்தியாவின் முதல் திருநங்கை சித்த மருத்துவர்!

எல்லா போராட்டங்களும் வெற்றியைத் தந்துவிடுவதில்லை.. ஆனால், வெற்றியை நோக்கித்தான் எல்லா போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின்னர், இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவராக ஆக இருக்கிறார் தாரிகா பானு. அவர் இந்த இடத்தை அடைவதற்கு பட்ட பாடு கொஞ்சமல்ல. தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பதிவுசெய்து, அதில் தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கை தாரிகா பானு மட்டும்தான். அதன்பின்னர், தனது மேற்படிப்பிற்காக சித்த மருத்துவத்தைத் தேர்வு செய்த அவருக்கு முதல் அடியிலேயே பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. 

தனது உரிமையை மீட்டெடுப்பதற்கு திருநங்கை கிரேஸ் பானுவுடன் இணைந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சில தினங்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், நவம்பர் 15ஆம் தேதிக்குள் தமிழக சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இன்று இறுதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், திருநங்கை தாரிகா பானுவிற்கு சித்த மருத்துவம் படிப்பதற்கான சீட்டினை ஒதுக்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதில் முதலில் இருந்தே தாரிகா பானுவிற்கு உறுதுணையாக இருக்கும், இந்தியாவின் முதல் திருநங்கை பொறியியலாளரும், திருநங்கைகளின் உரிமைகளுக்காப் போராடும் கிரேஸ் பானு நம்மிடம், தாரிகா பானு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதும் சித்த மருத்துவம் படிப்பதற்காக விண்ணப்பம் வாங்கி வந்தார். ஆனால், அதில் ஆண் - பெண் ஆகிய இரண்டு பிரிவுகள்தான் பாலினத்திற்கான இடத்தில் இருந்தது. தாரிகா பானு பள்ளியில் சேருவதற்கே பல தடைகளைக் கடக்கவேண்டியிருந்தது. அவர்தான் முதல் திருநங்கை பள்ளி மாணவி. சித்த மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பத்தில் எங்களுக்கான இடம் இல்லாததால், நானே திருநங்கை என கைப்பட எழுதி விண்ணப்பத்தை சமர்ப்பித்தேன். ஆனால், அதை நிராகரித்து விட்டார்கள். இதை எதிர்த்து ‘2014ஆம் ஆண்டு திருநங்கைகளுக்கான தனிஇடத்தை பாலினத்திற்கான பகுதியில் ஒதுக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்ப்படுத்தவில்லை. ஆனால், எங்களது விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டார்கள்’ என நீதிமன்றத்தில் வழக்காக தொடர்ந்தேன். அரசு தரப்பில் ஆஜரானவர்கள் சித்த மருத்துவம் பயில, தேர்வின் மொத்த மதிப்பெண்ணில் 50% பெற்றிருக்க வேண்டும் என வாதிட்டனர். 50% மதிப்பெண்கள் என்பது சாதாரண மக்களுக்கு சரி. எங்களுக்கு எப்படி அது சாத்தியமாகும்? உச்சநீதிமன்றம் எங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என வழங்கிய தீர்ப்பையும், இட ஒதுக்கீடு குறித்து 2013ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் ஆறு மாதத்தில் பதில் தருவதாகக் கூறியிருந்து, அதை மறந்துவிட்ட அரசின் நிலைப்பாட்டையும் சுட்டிக்காட்டிய நீதிபதி கிருபாகரன், நவம்பர் 27ஆம் தேதி இதுகுறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்.. இல்லையெனில் நீதிமன்றமே இதில் தலையிட்டு முடிவெடுக்கும் என முந்தைய விசாரணையில் கூறியிருந்தார். ஆனால், அதற்கு இடம் கொடுக்காத வகையில் அரசு மருத்துவப் படிப்பில் சீட்டு கொடுப்பதாக ஒத்துக்கொண்டுள்ளது. எங்களது கோரிக்கையெல்லாம் திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீட்டை முறையாக ஒதுக்கவேண்டும் என்பதுதான். எங்களுக்கான வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். அது வழங்கப்பட்டால் படிப்பதற்காக வரிசையில் காத்திருக்கும் எத்தனையோ திருநங்கைகளுக்கு அது உதவியாக இருக்கும்’ என்கிறார் உறுதியாக.

ஒவ்வொரு முறையும் போராடித்தான் எங்களுக்கான உரிமைகளைப் பெறுகிறோம். பணமும், செல்வாக்கும் கொண்டவர்கள்தான் அரசின் சலுகைகளை அனுபவிக்க முடியுமென்றால், இந்தியாவில் பொறியியலாளராகவும், காவல்துறை துணை ஆய்வாளராகவும், மருத்துவராகவும் திருநங்கைகள் ஆகியிருக்கவே முடியாது எனக்கூறும் கிரேஸ் பானுவின் வார்த்தைகளில் அழிக்கமுடியாத உண்மை இருக்கிறது. 

ஊரெங்கும் ஒலிக்கும் அவர்களின் உரிமைக்குரல் அரசின் காதில் விழாமலா இருக்கும்?

- அருண்பாண்டியன்
தொகுப்பு - ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்