ADVERTISEMENT

2022ல் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் விழுந்ததும் எழுந்ததும்!

12:58 AM Dec 31, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் அவரை இருகரம் கூப்பி வரவேற்க அழுத்தங்கள் தன் முதுகை அழுத்தும் என்பது தெரிந்தும் சிரித்துக் கொண்டே கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவரது அல்டிமேட் லட்சியமாக உலகக்கோப்பை மட்டுமே இருந்தது என்பதற்கு அவரால் சொல்லப்பட்ட வார்த்தைகளே சான்று.

“டி20 உலகக் கோப்பை விளையாடுவதற்கு முன், இருபத்தியொரு டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறோம். அதற்குள் அணியை நன்றாக தயார் செய்துவிடுவோம். அணியாக ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடினால் நிச்சயம் வெற்றி உறுதி. கேப்டனாக என் கண்கள் தற்போது ஐ.சி.சி. தொடர் மீது தான் உள்ளது” இவை ரோஹித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றதும் கூறிய வார்த்தைகள்.

அடடா இந்தமுறை உலகக் கோப்பை நிச்சயம் நமக்குதான். உலகக்கோப்பை என்ன, அதற்கு முன் நடக்கும் ஆசியக் கோப்பை, உலகக் கோப்பைக்கு பின் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் அனைத்தும் நமக்குத்தான். கோப்பைகளில் இப்பொழுதே இந்தியாவின் பெயரை எழுதுங்கள் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள்..

ரோஹித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்ற ஆரம்பகட்டத்தில் வெற்றிகள் இந்திய அணியின் நுழைவு வாயிலை தட்டின. தொடர்ந்து அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற சிறப்பு, பெருமையென அனைத்தையும் பெற்றார். ஒட்டுமொத்த இந்தியாவின் நெடுநாள் கனவாக இருந்த உலகக்கோப்பை கனவை நினைவாக்குவார் ரோஹித் சர்மா என இந்தியா இரசிகர்கள் கருதினர். இருந்தும் இந்திய அணி உலக்கோப்பையை வென்றதா என்றால் இல்லை. அதற்கு முன் நடந்த ஆசியகோப்பையாவது வென்றதா என்றால் அதுவும் இல்லை. எங்கே சறுக்கியது இந்தியா? எந்த இடத்தில் கோப்பையை கோட்டை விட்டது? கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்கள் ஒவ்வொரிடமும் தனிப்பட்ட கருத்துகள் இருக்கும். அது பற்றி நாம் விவாதிக்க போவதில்லை. இந்திய அணியின் ஒட்டு மொத்த செயல்பாடுகளைப் பற்றி பார்ப்போம். முடிவில் முடிவு உங்களிடம்.

டெஸ்ட், ஒரு நாள், டி.20 என்று இருந்தாலும். இந்தக் கட்டுரையில் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி செயல்பட்டதைப் பார்ப்போம்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது. மூன்று போட்டிகளிலும் படு தோல்வியைச் சந்தித்தது.

புத்தாண்டின் முதல் மாதத்தில் தோல்வியுடன் தொடங்கிய இந்திய அணி பிப்ரவரி மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் அடுத்த தொடரை விளையாடியது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரினை, தனது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்ட இந்திய அணிக்கு மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி. இந்தத் தொடரில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஆல் அவுட் செய்து அசத்தினர். இந்தத் தொடரின் மூன்று போட்டிகளில் ஒன்றில்கூட எதிரணி 200 ரன்களை தாண்டவில்லை. இந்தத் தொடரில் இளம் வீரர் பிரஷித் கிருஷ்ணா 9 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர் நாயகனாக ப்ரஷித் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்த ஒரு நாள் தொடர் ஜூலை மாதத்தில் இங்கிலாந்து உடன் நடந்தது. முதல் போட்டியில் வேகபந்து வீச்சாளர் பும்ரா 6 விக்கெட்களை வீழ்த்தியதில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பேட்டிங்கிலும் இந்திய அணி விக்கெட்களை இழக்காமல் வென்று காட்டியது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 76 ரன்களை விளாசி இருந்தார். அடுத்த போட்டியில் இந்திய அணி தோற்றாலும் மூன்றாவது போட்டியில் மீண்டும் எழுந்து இங்கிலாந்தை பணியவைத்து தொடரையும் வென்றது. இறுதி ஆட்டத்தில் ரிஷப் பண்ட் அசத்தலாக ஆடி சதமடித்து வெற்றியை தேடித் தந்தார். தொடர் நாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து அதே ஜூலை மாதத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. பிப்ரவரி மாதத்தில் இந்திய மண்ணில் விழுந்த வெற்றியை தங்கள் சொந்த மண்ணில் தூக்கி நிறுத்தும் முனைப்பில் இருந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஆனால், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றிலும் இந்திய அணி அசத்தல் வெற்றி. இத்தொடரில் ஷிகர் தவான் இந்திய அணியை வழிநடத்தினார். மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. தொடர் நாயகனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார்.

இதனை அடுத்து ஆகஸ்ட் மாதத்தில் இந்திய அணி ஜிம்பாவே அணியை அதன் சொந்த மண்ணில் சந்தித்தது. இதில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டார். முதல் போட்டியில் இந்திய அணி விக்கெட்களை இழக்காமல் 192 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஷிகர் தவன் 81 ரன்களும், சுப்மன் கில் 82 ரன்களும் எடுத்து வெற்றியை தேடித் தந்தனர். அடுத்த இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் வென்றது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் 130 ரன்களை எடுத்து ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வானார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த தென் ஆப்பிரிக்க அணி மூன்று ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் படுதோல்வியைச் சந்தித்த இந்திய அணி, ஆப்பிரிக்க அணியை பந்தாட காத்திருந்தது. இத்தொடரில் கேப்டனாக ஷிகர் தவன் செயல்பட்டார். முதல் போட்டியில் இந்திய அணி தோற்றாலும் சஞ்சு சாம்சன் அடித்த 80 ரன்கள் ஆறுதல் அளித்தது. அடுத்த போட்டியில் இந்திய அணி மகத்தான வெற்றி. ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்து அசத்த அவருக்கு உறுதுணையாக இருந்து இஷான் கிஷன் 93 ரன்களை எடுத்தார். மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்று தொடரை வென்று, தெ.ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது. தொடர் நாயகனாக முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

டி20 உலகக் கோப்பை காய்ச்சல் முடிந்ததும் இந்திய அணி நியுசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள சுற்றுப்பயணம் மேற்கொண்டது. கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டார். முதல் போட்டியில் நியுசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், மீதமுள்ள இரு போட்டிகளை இந்தியா வெல்லும் என இரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க மழை பெரிய ட்விஸ்ட் கொடுத்து மற்ற இரண்டு போட்டிகளும் முடிவின்றி ஆனது.

இந்த ஆண்டின் இறுதியாக இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிராக ஒருநாள் தொடரை ஆடியது. கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டார். முதல் இரு போட்டிகளில் தோல்வி அடைந்து மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி 50 ஓவர்களில் 409 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 210 ரன்களையும் விராட் கோலி 113 ரன்களையும் குவித்தனர்.

இந்த ஆண்டில் இந்திய அணியில் ஒருநாள் போட்டிகளில் சீனியர் வீரர்களை விட, இளம் வீரர்களே சிறப்பாக ஆடி வெற்றியை தேடிக் கொடுத்துள்ளனர். 2022 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்கள் எடுத்தவர்களில் 24 விக்கெட்களை எடுத்து முகமது சிராஜ் முதலிடத்தில் உள்ளார். இதற்கு அடுத்த படியாக சாஹல் 21 விக்கெட்களுடனும் ப்ரஷித் கிருஷ்ணா 19 விக்கெட்களுடன் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளனர். ஷர்துல் தாக்கூர் 19 விகெட்களுடம் நான்காம் இடத்தில் உள்ளார். பி.கிருஷ்ணா 11 ஆட்டங்களில் 19 விக்கெட்களையும், ஷர்துல் 15 ஆட்டங்களில் 19 விக்கெட்களையும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

2022 ஆம் ஆண்டில் இந்திய ஒருநாள் அணியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் 724 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். ஷிகர் தவான் 688 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், சுப்மன் கில் 638 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

இந்திய அணி இந்தாண்டு விளையாடிய 24 போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் இந்தியாவை வழிநடத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT