NRP என்ற தொழில்நுட்பத்தின் உதவியுடன் இறந்தவரின் உடலில் இரத்தவோட்டத்தை நிகழ்த்தி உறுப்பு மாற்று அறுவையை சாத்திய படுத்தியுள்ளது டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை. இதனால் மரணத்திற்குப் பிறகு இதய-நுரையீரல் இயந்திரத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாக உயிர்ப்பித்து, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை சாத்தியமாக்கியுள்ளனர். ஆசிய அளவில் முதலில் இந்த சாதனையை இந்தியா படைத்துள்ளதாக அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Advertisment

கீதா சாவ்லா என்ற 55 வயது பெண் ஒருவர் 'மோட்டார் நியூரான்' என்ற நோயால் பாதிக்கப்பட்டு டெல்லி துவராகவில் உள்ள HCMCT மணிபால் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர் சிகிச்சையில் இருந்த கீதா சால்வா மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 6ஆம் தேதி மாலை காலமானார். கீதா ஏற்கனவே உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்பம் தெரிவித்திருந்தார். இதனை மருத்துவமனை நிர்வாகத்திடம் கீதாவின் குடும்பத்தார் தெரிவித்தனர். மருத்துவமனை குழு உடனடியாக நார்மதர்மிக் ரீஜினல் பெர்ஃபியூஷன் (NRP) நடைமுறையைத் தொடங்கியது.

Advertisment

ஆசியாவிலேயே முதல் முறையாக, மருத்துவர்கள் எக்ஸ்ட்ரா கார்போரியல் மெம்பிரேன் ஆக்சிஜனேட்டரை (ECMO) முறையை பயன்படுத்தி கீதாவின் இறந்த உடலில் இரத்த ஓட்டத்தை மீண்டும் தொடங்கினர். இது அவரது வயிற்று உறுப்புகளை சுமார் நான்கு மணி நேரம் உயிர்ப்புடன் வைத்திருந்தது. இதன் காரணமாக கீதாவின் கல்லீரல் 48 வயதுடைய ஒருவருக்கு மாற்றப்பட்டது. அதே நேரத்தில் அவரது சிறுநீரகங்கள் 63 வயது மற்றும் 58 வயதுடைய ஆண் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும் அவரது கார்னியா மற்றும் தோல் ஆகியவையும் தானமாக வழங்கப்பட்டது.

பொதுவாக மூளை இறப்புக்குப் பிறகு, இதயம் தொடர்ந்து துடிக்கும் போது உறுப்பு தானம் செய்யப்படுகிறது. இதயம் நின்றவுடன் உறுப்பு மாற்றுக்கு மருத்துவர்கள் உடனடியாக செயல்பட வேண்டியிருந்தது. இறந்த உடலில் ரத்த ஓட்டத்தை சாத்தியப்படுத்தியதன் மூலம் உறுப்பு மாற்று பற்றாக்குறை நிவர்த்தியாகும் என கருதப்படுகிறது. நார்மதர்மிக் ரீஜினல் பெர்ஃபியூஷன் (NRP) முறை மூலம் சுமார் 4 மணிநேரம் இறந்த பிறகும் உறுப்புகளை உயிர்ப்புடன் வைக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

2024 ஆம் ஆண்டின் நிலவரப்படி இந்தியாவில் 1,128 பேர் மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்வதில் இந்தியா உலகளவில் எட்டாவது இடத்தில் உள்ளது.