Skip to main content

தமிழ்நாட்டுக்கு இனி தேர்தலே கிடையாதா?

election commission


என்னடா இது தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை என்று திருவிளையாடல் படத்தில் டி.எஸ்.பாலையாவின் மாடுலேஷனில் கேட்க வேண்டிய நிலைக்கு நாம் ஆளாகி இருக்கிறோம்.
 

சட்டமன்ற ஜனநாயகத்தையும், தேர்தல் நடைமுறைகளையும் கேலிக்கூத்தாக்கும் நிலை தமிழகத்தில் நிலவுகிறது. குறிப்பாக தேர்தல் நடைபெற வேண்டிய 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே நடத்தி முடித்திருக்க வேண்டிய உள்ளாட்சித்  தேர்தலையும் நடத்தாமல் இழுத்தடிப்பதில் மத்திய பாஜக அரசும் தேர்தல் ஆணையமும் அதிமுக அரசை காப்பாற்றும் வகையில் தொடர்ந்து செயல்படுகிறது.
 

2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் மிகப்பெரிய எழுச்சி ஜெயலலிதாவையே ரொம்பவே கலங்கடித்திருந்தது. அந்தத் தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் தில்லுமுல்லு செய்து பெற்ற வெற்றிக்குப் பிறகு கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, கட்சியின் நிலை குறித்து மிகவும் கவலைப்பட்டிருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் திமுக இதைக்காட்டிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் நிலை இருக்கும். அப்படி ஒரு நிலை வந்தால் ஆட்சி நடத்துவது ரொம்பவும் கடினம் என்று நேரடியாகவே கூறியிருக்கிறார்.
 

இதையடுத்தே, பேரூராட்சி, ஒன்றியத்தலைவர், நகராட்சித் தலைவர், மேயர் என எல்லா பொறுப்புகளுக்கும் கவுன்சிலர்களை வைத்தே தேர்வு செய்வது என்ற முடிவை எடுத்தார். தவிர, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தடை பெற வசதியாக பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு என்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் ஒதுக்கீட்டில் மாற்றம் செய்தும் திருத்தங்களை வெளியிட்டார். இதையடுத்து மாற்றப்பட்ட விதிகளை எதிர்த்து திமுக நீதிமன்றம் சென்றது.
 

புதிய விதிகளை திருத்தி தேர்தலை நடத்தும்படி உயர்நீதிமன்றம் சொன்னதை நிறைவேற்றாமல் அதிமுக அரசு இன்றுவரை தாமதம் செய்தது. இந்நிலையில்தான் ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கே மாதங்களில் 2016 செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்தார். அந்த மரணத்தில் இருக்கும் மர்மம் இதுவரை அவிழ்க்கப்படாமல் தினம் ஒரு சர்ச்சையாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 

ஜெயலலிதா மருத்துவமனையில் யாரும் பார்க்கமுடியாத நிலையில் இருக்கும்போது, 2016 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தப்பட்ட தஞ்சை, அரவாக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கும் பதவியேற்பதற்கு முன்னரே உறுப்பினர் மரணம் அடைந்ததால் காலியான திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
 

ஜெயலலிதா கையெழுத்து போட முடியவில்லை என்றும் ரேகை வைத்தார் என்றும் திருப்பரங்குன்றத்தில் ஏ.கே.போஸ் விண்ணப்பத்தை தாக்கல் செய்தார். வாக்குப்பதிவு அன்று ஜெயலலிதா உற்சாகமாக இருப்பதாகவும், இட்லி சாப்பிட்டார் என்றும் பேட்டி கொடுத்தார்கள். 2017 நவம்பர் 19 தேதி அந்த மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று நவம்பர் 22 ஆம் தேதி முடிவு அறிவிக்கப்பட்டது. அந்த மூன்று தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. சின்னம் ஒதுக்கும் பரிந்துரைக் கடிதத்தில் ரேகை வைத்திருந்த ஜெயலலிதா, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அறிக்கையில் கையெழுத்துப் போட்டிருந்தார். அந்தக் கையெழுத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 

இந்நிலையில்தான் தேர்தல் முடிந்து 13 நாட்களில் ஜெயலலிதாவின் உடல்நிலை திடீரென்று மோசமடைந்ததைப் போல ஒரு சீன் கிரியேட் செய்யப்பட்டு டிசம்பர் 5 ஆம் தேதி அதிகாலை மரணம் அடைந்தார் என்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பிலும்கூட பல குளறுபடிகள் இருந்தன.
 

மாலை 6 மணிக்கே ஜெயலலிதா மரணம் என்று அறிவிப்பு வெளியானது. பின்னர் அது மறுக்கப்பட்டது. மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தமிழகத்திலேயே தங்கி, அதிமுகவின் தற்காலிக முதல்வராக ஓபிஎஸ்சை தேர்ந்தெடுத்து பதவியேற்க உதவினார் என்றுகூட செய்திகள் வெளியாகின.
 

ஜெயலலிதாவை அடக்கம் செய்த கையோடு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம் அத்தனைக்கும் பாஜகவே காரணமாக இருந்தது. அதிமுகவை உடைத்து, சசிகலா குடும்பத்தை வெளியேற்றி தனக்கான ஒரு ஆளாக ஓபிஎஸ்சை பயன்படுத்த பாஜக விரும்பியது. ஆனால், எடப்பாடி பழனிச்சாமியே பாஜகவின் மிகச்சிறந்த விசுவாசியாக செயல்பட ஒப்புக்கொண்டதால் இரு அணிகளையும் இணைக்கும் புரோக்கராகவும் பிரதமர் மோடி செயல்பட்டார் என்று விமர்சனங்கள் வெளியாகின.
 

அதன்பிறகு, தமிழகம் இதுவரை திமுக, அதிமுக ஆட்சிகளில் அனுபவித்து வந்த சலுகைகள் ஒவ்வொன்றாக பாஜக பறித்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவுக்கு எந்த நெருக்கடியும் வந்துவிடாமல் பாதுகாக்க கூலியாக தமிழகத்தின் உரிமைகளையும் வளங்களையும் பாஜக கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறார்கள்.
 

சுருக்கமாக, தமிழக அரசை மோடி ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயக்குகிறார் என்று பகிரங்கமாகவே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும், மற்ற தலைவர்களும் குற்றம்சாட்டுகிறார்கள். அதைக்காட்டிலும், ஜெயலலிதாவுக்கு மண்டியிட்ட அமைச்சர்கள் இப்போது மோடியிடம் அடிமையாக செயல்படுவதாகவே மேடைதோறும் கிண்டல் செய்யும் நிலை இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். அப்போதிருந்து அந்தத் தொகுதிகள் காலியாக இருக்கின்றன. இதுதொடர்பான வழக்கு விசாரணை பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி முடிவுக்கு வந்தது. அந்தத் தீர்ப்பின் நகல் நவம்பர் மாதம் 16 ஆம் தேதி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டது. எனவே, காலியான தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அறிவிக்கப்படவில்லை.
 

kalaivanan


அந்தத் தீர்ப்பு வெளியான பிறகுதான் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே.போஸ் இறந்தார். கலைஞர் மறைவைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதியும் காலியானது. எனவே, தமிழகத்தில் 20 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கிற நிலையில் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட இருந்தது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் மழைக்காலம் என்பதால் தேர்தலை தள்ளி வைக்கவேண்டும் என்று தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா கடிதம் எழுதினார். அதையடுத்து தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், டிசம்பர் 3 ஆம் தேதி மீண்டும் தலைமைச் செயலாளர் கிரிஜா தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியதாக தற்போது தேர்தல் ஆணையமே தெரிவித்துள்ளது.
 

அதாவது, தமிழகத்தில் ஏப்ரல் மாதம் வரை இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்று தலைமை தேர்தல் ஆணையத்தை கிரிஜா கேட்டுக்கொண்டிருக்கிறார்.
 

இப்படி ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ள நிலையில், கஜா புயல் புரட்டிப்போட்ட திருவாரூர் தொகுதிக்கு மட்டும் டிசம்பர் 31 ஆம் தேதி தேர்தலை அறிவித்தது ஏன் என்ற கேள்விக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் பதிலளிக்கவே இல்லை.
 

ஆனால், ஏப்ரல் மாதம் வரை எந்தத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்பதை மட்டும் ஆணையம் தெரிவித்துள்ளது.
 

ஏப்ரல் வரைதான் நடத்தப்படாதா? எப்போதுமே நடத்தப்படாதா என்பது போகப்போகத்தான் தெரியும்…
 

மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும்போது நிச்சயமாக தமிழகத்திலும் இந்த அடிமை ராஜ்ஜியம் ஒழிக்கப்படும் என்பதில் தமிழக மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்