Skip to main content

வெற்றுக்கோஷமா மகளிர் இடஒதுக்கீடு... 149-வது இடத்தில் இந்தியா

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மற்றும் மக்களாட்சியில் மற்ற நாடுகளுக்கெல்லாம் முன்மாதிரியாக இருந்துவரும் இந்தியாவில், நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் கடந்தும் 15% கூட சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றங்களில் மகளிர் பங்கேற்றதில்லை என்பதே கசப்பான உண்மை. 

 

Women's-reservation

 

கடந்த பல தேர்தல்களாக பெரும்பாலான கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெறும் முக்கிய அம்சமாக மகளிர் இடஒதுக்கீடு உள்ளது. ஆனால் மகளிருக்குரிய இடஒதுக்கீடு இன்னும் நடைமுறையில் வரவில்லை. இந்திய வாக்காளர்களில் கிட்டத்திட்ட சரிசமமாக பெண் வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

பிஜு ஜனதாதளம் நாடாளுமன்ற தேர்தலில் 33% இடங்களையும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 41% இடங்களையும் பெண்களுக்கு ஒதுக்கியுள்ளன. நாம் தமிழர் கட்சி பெண்களுக்கு சம உரிமையை வலியுறுத்தும் வகையில் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை அறிவித்து புது முயற்சியை மேற்கொண்டுள்ளது.  
 

மகளிர் இடஒதுக்கீடு சட்டம் மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வழிவகை செய்கிறது. இதன்படி மகளிருக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் 3 பொதுத்தேர்தல்களுக்கு ஒருமுறை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் 33% மகளிர் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.
 

“கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் மகளிருக்கு தனியாக இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்” என 1929-ஆம் ஆண்டில் தந்தை பெரியாரால் சுயமரியாதை மாநாட்டின்போது தீர்மானம் இயற்றப்பட்டது தான் மகளிர் இடஒதுக்கீட்டு குரலுக்கான முக்கியமான துவக்கம். 1990-களில் 3 முறை மகளிர் இடஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோதும், போதிய ஆதரவு இல்லாமல் மசோதா நிறைவேற்றப்படவில்லை.
 

2008-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை அறிமுகப்படுத்தியது. இந்த சட்ட மசோதா 2010-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அன்றைய சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோரின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இன்றுவரை இது கிடப்பில் உள்ளது. 
 

பாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அடிப்படையில் 2019-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி 193 நாடுகளில் இந்தியா 149-வது இடத்தில் உள்ளது. பெண்களை முன்னிலைப்படுத்துவதில் முதல் 10 இடங்களில் ருவாண்டா, நமீபியா மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகள் உள்ளன. ஆனால் ஆசிய நாடுகள் ஒன்றுகூட இல்லை. 8 தென் ஆசிய நாடுகளில் பெண்களை பிரதிநிதித்துவப்படுதுவதில் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் சிறப்பாக செயல்படுகிறது.
 

ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி உலக நாடுகளில் சராசரியாக 24.3% பெண் எம்.பிக்கள் இருந்து வருகின்றனர். உலக அளவில் ருவாண்டா முதலிடம் வகிக்கிறது. அந்த நாட்டில் 80 எம்.பிக்களில் 49 பேர் பெண் எம்.பிக்கள். 1,11,000 பெண்களுக்கு ஒரு பெண் எம்.பி. என்ற விகிதத்தில் உள்ளனர். 
 

தற்போதைய இந்திய நாடாளுமன்றத்தின் 524 இடங்களில் 66 பெண் எம்.பிக்கள் உள்ளனர். 12.6% பெண் உறுப்பினர்கள் உள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கு முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ள மொத்த வேட்பாளர்கள் 616 பேர். இதில் 493 ஆண் வேட்பாளர்கள் மற்றும் 45 பெண் வேட்பாளர்கள். 
 

1951-52 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் 22 பெண் உறுப்பினர்கள் மட்டுமே வெற்றிபெற்று மக்களவைக்குச் சென்றனர். பின்னர் 1957-ல் நடைபெற்ற தேர்தலில் நாடு முழுவதும் 45 பெண்கள் மட்டுமே போட்டியிட்டு 22 பேர் வெற்றிபெற்றனர். 1984-ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் 171 பெண்கள் போட்டியிட்டு 43 பெண் உறுப்பினர்கள் வென்றனர். 
 

பெண் உறுப்பினர்களின் சதவீதம் 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதன்முறையாக இரட்டை இலக்கைத் தொட்டது. அந்தத் தேர்தலில் மொத்தம் போட்டியிட்ட 556 பெண்களில் 59 பெண்கள் வென்றனர். கடைசியாக 2014-ஆம் ஆண்டு  நடைபெற்ற தேர்தலில் 62 பெண் வேட்பாளர்கள் வென்றனர். 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் அதிகமாக 668 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
 

உலக நாடுகளில் நாடாளுமன்றங்களில் பெண் உறுப்பினர்களின் பங்கேற்பு சராசரி 23%. இதில் பாதி அளவுகூட இந்தியா இன்னும் தொடவில்லை. அதிகபட்சமாக 2014-ஆம் ஆண்டு அமைந்த மக்களவையில் பெண் உறுப்பினர்கள் 11.42%. 
 

தேர்தல் அறிக்கைகளில் பெண் வாக்காளர்களை கவரும் வகையில் திட்டங்களை அறிவிப்பது வாடிக்கையாகிவிட்டது. இந்தத் தேர்தலில்  காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, திரிணாமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கைகளில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீட்டை அறிவித்துள்ளன. இந்த வாக்குறுதிகள் வெற்றுக்கோஷமா அல்லது நடைமுறையா என்பது அடுத்த தேர்தலின்போது தெரியவரும். 

 

 


 

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

கோவிலுக்குச் சென்ற போது நேர்ந்த சோகம்; பெண்கள், மாணவிகள் 4 பேர் பலி

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
4 women who went to the temple drowned in the water and passed away

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா( 45) அவரது மகள் லலிதா (22). அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காவியா (18) அவரது 17 வயது தங்கை   உட்பட 4 பெண்கள் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் அருகே உள்ள வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுள்ளனர். வழிபாடு முடிந்த நிலையில் முனீஸ்வரன் கோவிலுக்கு அருகே உள்ள வேப்பூர் ஏரியில் உள்ள தண்ணீரில் நான்கு பெண்களும் இறங்கி உள்ளனர் 

ஏரியில் உள்ள சுழலில் சிக்கி நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கி கூச்சலிட்டுள்ளனர். மேலும் நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கிய நிலையில் அக்கம் பக்கத்தினர் இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா, ஆகிய நான்கு பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே பகுதியைச் சேர்ந்த அம்மா, மகள் மற்றும் சகோதரிகள் என நான்கு பெண்கள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.