Skip to main content

வன்கொடுமை வழக்கில் இளம்பெண்; உறைந்து போன உப்பு நகர் - பதற வைக்கும் சம்பவம்!

Published on 03/05/2025 | Edited on 03/05/2025

 

Incident involving  dsp and rowdy young girl case in Thoothukudi

24 வயதேயான அந்த ஆதரவற்ற இளம் பெண் மீது சுமக்க முடியாத குற்ற வழக்கு பதியப்பட்டதையடுத்து தன் வாழ்க்கையை மீட்டெடுக்கப் போராடும் அவளின் பேராட்டம் உப்பு நகர் மாவட்டத்தையே கலங்கடித்ததுமில்லாமல் பரபரப்பான விவாத விஷயமாகவே மாறியிருக்கிறது.

தூத்துக்குடி நகரின் ஒதுக்குப் புறத்திலிருக்கும் அந்தக் காலனியிலுள்ள இளம் பெண் மாலாவின் (இளம்பெண்ணின் எதிர்காலம் கருதி பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) வீட்டிற்குச் சந்திக்கப் போன நம்மை, வழிந்த கண்ணீரும் கனத்த வேதனையுமாகத் தான் நம்மிடம் நடந்தவைகளை விவரித்தார்.

உப்பு நகரிலுள்ள ஷிப்பிங் கம்பெனியில் பணிபுரியும் பட்டப்படிப்பு பயின்ற மாலாவின் வயதான தாய் தந்தைக்கு அவள் ஒரே மகள். இதய நோயாளியான தந்தை வைத்தியம் பொருட்டு வேறு  ஒரு பகுதியிலிருக்க வயதான தாய் அவ்வப்போது சென்று கவனித்து வருகிறார். அன்றாடம் வேலையின் பொருட்டு நான் எனது டூவீலரில் நிறுவனத்திற்கு சென்று வருவேன். வழியிலுள்ள நகர் பகுதியிலிருக்கும் தென்மலை தென்குமரன் என்பவர் என்னப் பார்த்து ஆபாச சைகைகளும், செயல்களையும் தொடர்ந்து காண்பித்து தொந்தரவு கொடுத்து வந்தார். பின்னர் தான் அவன் ரவுடி என்பது எனக்குத் தெரிய வந்தது. கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி அன்று என் வீட்டின் பக்கமுள்ள மாநகராட்சி பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது அங்கு வந்த ரவுடி தென்மலை தென்குமரன் வழக்கம் போல ஆபாச வார்த்தைகளைப் பேசி, மோசமான சைகைகளைக் காட்டினான். அருவருக்கத் தக்க வகையில் முத்தமிடுவதாக சைகை காட்டினான். பாலியல் தொந்தரவு கொடுக்கும் நோக்கத்தில் வந்தவன், கொலை மிரட்டலும் விடுத்தான்.

Incident involving  dsp and rowdy young girl case in Thoothukudi

இதனால் பயந்து போன நான் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். விசாரணை நடத்திய போலீசார் அவனைக் கைது செய்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த தென்குமரன் கத்தியோடு என் வீட்டின் பின்புறமாக உள்ளே வந்து தனியே இருக்கும் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினான். தொடர்ந்து அவனது தொந்தரவு அதிகரித்தது. என்னை எப்படியும் கொலை செய்து விடுவான். தாய் தந்தைக்கான ஜீவாதாரமான தன்னை அவன் தீர்த்து விட்டால் அவர்கள் அனாதையாயிறுவாகளே என்ற அச்சத்தில் சிப்காட் காவல் நிலையத்தில் ரவுடி தென்மலை தென்குமரன் மீது புகார் கொடுத்தேன். ஆனால் அங்கு நடவடிக்கை எடுக்கவில்லை. அப்போதே நெல்லை டி.ஐ.ஜி.யான மூர்த்தியிடம் புகாரளித்த பின்பு தான் அதன் பேரில் சிப்காட் போலீசார் ரவுடி தென்குமரன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் இது வரை எந்த கைது நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை.

இதுக்குப் பின் ரூரல் டி.எஸ்.பி.சுதிரிடமும் ரவுடியின் தொடர் கொலை மிரட்டல் பற்றியும் எனது நிலையைப் பற்றியும் அவரிடம் கூறிக் காப்பாற்றும்படிக் கேட்டேன். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்காமல் வழக்கை வாபஸ் பெறும்படி வற்புறுத்தியதால் முதலமைச்சரின் தனிப்பிரிவு, தேசிய மனித உரிமை ஆணையம், மற்றும் நெல்லை பொறுப்பு டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹதிமணி என்று புகாரளித்தேன். அதன் பின் ரவுடி தென்மலை தென்குமரனிடம் புகார் பெற்று என் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இப்போது தேசிய மனித உரிமை ஆணையத்திடம் நான் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யின் விசாரணைக்காக வந்திருக்கு. ஆனால் போலீஸ் எனக்கு எதிராக செயல்படுவதால் விசாரணையில் நம்பிக்கை இல்லை. என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று நெல்லை டி.ஐ.ஜி.யிடம் மனுவில் கூறியிருக்கிறேன்.

சமூகத்தில் நான் ஆதரவில்லாத ஒண்டியான அதுவும் பெண், போலீஸ் அதிகாரிகள், ரவுடி இவர்களை எதிர்த்து நான் போராட முடியுமா? எனக்கு திருமணம் ஆகல. இப்படி போலீஸ்ல ஒரு வழக்கு என் மேல இருப்பதால யார் தான் என்னய கல்யாணம் பண்ண முன் வருவா? என்னோட வாழ்க்கையே நாசமாப் போச்சுய்யா. ஆனாலும் என்னோட வாழ்க்கைக்காக நான் போரடுகிறேன் என்றார் நடுக்கத்தோடு வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி. பொறியில் சிக்கிய எலியாகப் போராடிக் கொண்டிருக்கும் இளம் பெண் மாலாவின் சம்பவத்தின் பின்பக்கங்களை நாம் பல்வேறு தரப்பிலும் விசாரிக்கையில் தான், சில பல அதிர்வுகள் வெளியேறின.

Incident involving  dsp and rowdy young girl case in Thoothukudi

மாவட்டத்தின் திருச்செந்தூர் பக்கமுள்ள நாலு மூலைக்கிணர் பகுதியைச் சேர்ந்தவன் தென்மலை தென்குமரன். அ.தி.மு.க.கட்சியிலிருப்பவர் என்பது பரவலான பேச்சு. அடிப்படையில் சின்னச் சின்னத்திருட்டுகளில் சிக்கியவன். அடிதடிகள் என்று அவன் மீது பல வழக்குகளிருப்பதால் சரித்திரப்பதிவேடு ரவுடி பேனலில்ருப்பவர்.

லோக்கல் போலீசாரின் ரவுடிகள் வேட்டைக் குடைச்சல் தாங்காமல், தூத்துக்குடிக்கு வந்த தென்மலை தென்குமரன் அங்குள்ள சங்கிரப்பேரி ஜி.பி. காலனியில் அறை எடுத்துக் தங்கியிருக்கிறார். பல்வேறு சந்தர்ப்பங்களில் அங்குள்ள லாரி செட்களிலும் தங்கியிருக்கிறார். இந்தச் சூழலில் தான் மாலா பணியின் பொருட்டு தான் வேலை பார்க்கிற ஷிப்பிங் கம்பெனிக்கு அவனிருக்கும் காலனித் தெரு வழியாக டூவீலரில் போய் வந்திருக்கிறார். அது சமயம் அடிக்கடி போய் வரும் மாலா அவனது கண்ணில் பட்டிருக்கிறார். ஒண்டியாகச் சென்று வருகிற இளம்பெண். கோளாறு காரணமாக, மாலாவைப் பார்த்துக் கொச்சைத் தனமான பாலியல் சைகைகளைச் செய்திருக்கிறான். அன்றாடம் இது தொடர் சம்பவமாகிப் போய் விடவே, பீதியாகி் போன மாலா தனது ரூட்டை மாற்றியிருக்கிறார்.

வழக்கமாக தன் வீட்டுப் பக்க முள்ள மாநகராட்சிப் பூங்காவில் காலை நடைப் பயிற்சி மேற் கொள்ளூம் மாலா கடந்த டிசம்பரின் போது நடைப் பயிற்சியிலிருந்த போது வேவு பார்த்து அங்கு வந்த தென்மலை தென்குமரன், பாலியல் சீண்டல், முத்தமிடுவதற்கான சைகைகளை வெளிப்படுத்த பயந்து ஒடுங்கிப் போன மாலா அன்றிலிருந்து பாதுகாப்பு, ரவுடி பயம் காரணமாக பூங்காப் பக்கம் எட்டிப் பார்க்க வில்லையாம். இவனின் தொடர் சீண்டல்களால் நடுங்கிப்போன மாலா, தான் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளரிடம் நடந்தவைகளை முறையிட்டு கண்கலங்கியிருக்கிறாராம்.

இதில் முன்னோட்டமாக, தென்மலை தென்குமரன் மாலா பணிபுரியும் நிறுவனத்திற்கு ஏற்கனவே டொனேஷன் கேட்டுப் போயிருக்கிறாராம். பேச்சுக்கள் சூடாக, நிறுவனத்தின் ஒனர் டொனேஷன் கொடுக்காமல் போகவே, இரு பாத்துக்கிறேன் என்று மிரட்டல் விட்டுப்போக, இந்த விஷயத்தில் தென்குமரனுக்கும், நிறுவன ஒனருக்குமிடையே பகை, மோட்டிவ் உருவாகியிருக்கின்றனவாம்.

இந்த நேரத்தில் மாலா, தென்குமரனால் தனக்கு குலை நடுக்க மேற்பட்ட சம்பவத்தை ஒனரிடம் தெரிவித்திருக்கிறார், அவருக்கு ஏற்பட்டது, தனக்கும் தென்குமரனுக்குமான பழைய முன்விரோதம் ஆகியவை அவர் கண்முன்னே ஒட, ஆடிப்போன ஒனர், “யம்மா அவம் மோசமானவன். உன்னக் காப்பத்திக்கணும்னா, உடனே போலீஸ்ல புகார் பண்ணிரு..” என்று சொல்ல அதன் பிறகு தான் மாலா, புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். அந்தப் புகாரால் கைதாகி, பின் ஜாமீனில் வந்த தென்மலை தென்குமரன், ஆத்திரத்தில் கத்தியோடு மாலாவின் வீட்டுக்குள்ளே புகுந்து கத்தியைக் காட்டி தீர்த்துவிடுவதாக மிரட்டியிருக்கிறாராம். தொடர்ந்து நான்கு நாட்கள் தென்குமரன் இப்படி மாலாவை கத்திமுனையில் மிரட்ட, மிரண்டு போன மாலா சிப்காட் காவல் நிலையத்தில் தென்மலை தென்குமரன் மீது புகார் கொடுத்திருக்கிறார்.

Incident involving  dsp and rowdy young girl case in Thoothukudi

அந்தக் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர், அவளின் புகாரின் மீது வழக்கு பதிந்தவர் கைது நடடிவக்கை மேற்கொள்ளவில்லையாம். இதன் பொருட்டு தொடர்ந்து காவல் நிலையம் சென்ற மாலாவிற்கு டி.எஸ்.பி. சுதிரைச் சென்று பார்க்கும்படி சொல்லப்பட்டுள்ளதாம் மாலாவும் உயிர் பயத்தில் பதறியபடி ரூரல் எஸ்.பி.சுதிரிடம், “ரவுடி தன்னிடம் நடந்து கொண்டதையும் எப்படியும் என்னக் கொன்றுவான். கேஸ் பேட்டுட்டாக ஆனா அவன அரெஸ்ட் பண்ணல. அவனால  உயிருக்கு உத்தரவாதமில்ல. காப்பாத்துங்க. நடவடிக்கை எடுங்க நா, என்னோட அப்பா அம்மாவுக்கும் ஆபத்திருக்கு.” என வேதனையில் டி.எஸ்.பி.யிடம் மன்றாடி இருக்கிறாராம்.

தொடர்ந்து இப்படி இரண்டு மூன்று நாட்கள் டி.எஸ்.பி.யிடம், தன் உயிர் பயத்தை, மனஉளைச்சல், பாதுகாப்பின்மை அபாயச் சூழலை மாலா, வெளிப்படுத்தியும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வில்லையாம். அதே சமயம் மாலாவின் இந்த தொடர் முறையீட்டல் டி.எஸ்.பி.க்கு எரிச்சலாகப்பட்டிருக்கிறது என்கிறார்கள். 

இதையடுத்தே இங்கே தனக்கு நியாயம் கிடைக்காது என்று உணர்ந்த மாலா, முதல்வரின் தனிப்பிரிவு, தேசிய மனித உரிமை ஆணையம், நெல்லை டி.ஐ.ஜி. என்று புகார்களை அளித்திருக்கிறார். அவைகள் விசாரணைக்கு வந்திருக்கின்றன. நெருக்கடியிலிருந்த டி.எஸ்.பி.சுதிர் தென்குமரனை வரவழைத்து அவனிடம் விசாரித்திருக்கிறாராம். அதன் பிறகே அந்த ட்விஸ்ட். தென்குமரனின் புகாரின் அடிப்படையில் மாலாவின் மீது 13.4.2025 அன்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் (எஸ்.சி.எஸ்.டி.ஆக்ட்) வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மாலா அளித்து புகார் மீது வழக்குப் பதியப்பட்டு மாவட்ட எஸ்.பி.யின் விசாரணைக்காக அனுப்பிவைக்கப்பட்டது தான் பரபர விஷயமாகியிருக்கிறது.

தன் புகார் மனுக்கள் மீது நடவடிக்கையில்லாமலிருக்க, தன்மீதே போலீசாரால் சுமைதாங்காத வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டு இடிந்தே போயிருக்கிறாராம். இந்த விவகாரமும் நகரில் வைரலாகியிருக்கிறது.

Incident involving  dsp and rowdy young girl case in Thoothukudi

நாம் இது குறித்து டி.எஸ்.பி.சுதிரிடம் கேட்டதில், “அந்தப் பொண்ணுகுடுத்த அனைத்துப் புகார்களையும் பதிவு பண்ணி முறையா விசாரிக்கிறோம். மாவட்டக் காவல் துறையும் இதுல அறிக்கை கொடுத்திருக்கு. அவங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்கிறோம். புகார் மனுப்படி தான் எஸ்.சி.எஸ்.டி. வழக்குப் பதிவு பண்ணியிருக்கிறோம். அத விசாரிக்கிறோம். அதுல அந்தப் பொண்ண கைது கூடப் பண்ணலயே” என்றார். 

இது குறித்து நாம் மாவட்ட எஸ்.பியான ஆல்பர்ட்ஜானின் கருத்தறியும் வகையில் தொடர்பு கொண்டதில் மாவட்ட காவல்துறை சார்பில் அந்தப் பெண் தொடர்பான வழக்குகளின் விரிவான அறிக்கை வெளியிட்டதை தெரியப்படுத்தினர். 

அந்த அறிக்கையில், மாலா தன் மீது பொய் வழக்குப் பதிந்தாக கூறியதற்கு மறுப்பு தெரிவித்த காவல்துறை, இளம்பெண் மீது வந்த புகாரின் அடிப்படையிலேயே 13.04.2025 அன்று சிப்காட் காவல் நிலையத்தில் குற்ற எண் 357/2025படி SC.ST. ACT (POA) 1989ன் படி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்றும் மாலாவின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்த காவல்துறை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்   மூலமாக புதிய விசாரணை அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அந்த விரிவான அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதனிடையே எஸ்.பி. அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்த தென்மலை தென்குமரன் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது, “நான் கங்கா பரமேஸ்வரி நகர்ல வீடு கட்டி 2 வருடமா குடியிருக்கேன். அந்த நிறுவனத்தின் ஃபேக்டரி என் வீடு பின் பக்கமிருக்கு. புகை, சவுண்டு அதிகம் வந்ததால அதபத்தி ஆணையர்கிட்ட புகார் குடுத்தேன். ஃபேக்டரிய பூட்டச் சொன்னேன் அதனால நிறுவனத்தின் உரிமையாளர் எம் மேல போலி வழக்கு கொடுத்துயிருக்காங்க. சில பெண்கள் வைச்சு பாலியல் தொந்திரவு செஞ்சதாவும், காலனில வாக்கிங் போறப்ப நா ஒரு பெண்ணுட்ட தொந்தரவு கொடுத்ததாக போலி வழக்கு பதிவு பண்ணாங்க. எம் மேல எந்த தவறுமில்லாமல் இவங்களே 7 போலி வழக்கு போட்டு இருக்காங்க. சிப்காட்ல காவல் நிலையத்தில 5, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில 2 -ன்னு 7 போலி வழக்குப் பதிவு பண்ண வைச்சு என்ன ஒரு சரித்திர குற்றவாளி என்ற பிம்பத்த உருவாக்கிடடாங்க. மாலா யாருன்னு எனக்குத் தெரியாது வீடியோவுல அன்னைக்கி ஒரு பொண்ணு இன்னைக்கி வேற பொண்ணு மாலானு காட்டறாக. நல்ல குடும்ப சூழல்ல பிறந்த என்மேல போலி வழக்குப் போட்டு பண்ணிட்டாக. என்னோட வயசு 40. நான் அந்தப் பொண்ண வன்கொடுமை பண்ணதா குடுத்திருக்காங்க. எல்லாத்துக்கும் காரணம் அவங்க தான்” என்று தன்மீதான குற்றச் சாட்டுகளை மறுக்கும் வகையில் பேசினார்.