Skip to main content

‘உலகக்கோப்பை டூ நோபல்’- இம்ரான் கானின் அரசியல் வரலாறு

Published on 02/03/2019 | Edited on 02/03/2019
imran khan


ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு புல்வாமாவில் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலை அடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கடந்த பிப்ரவரி 14 ல் இருந்து பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது. இதனை அடுத்து பிப்ரவரி 27ஆம் தேதி இந்திய விமானப்படை பாகிஸ்தானிலுள்ள பாலகோட்டில் இருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது முகாம்களில் தாக்குதல் நடத்தியது. இதன் பின் பாகிஸ்தான் விமானப்படை பதிலடி தாக்குதல் நடத்த இந்திய எல்லைக்குள் அத்துமீறியது. இதன் பின் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் மிக்-21 பைசன் போர் விமானத்தில் சென்றபோது, பாக் போர் விமானம் எஃப்-16 மீது மோதியதால், அது பழுதடைந்தது. இதனால் வானில் பயணிக்கும்போதே பாராசூட்டை பயன்படுத்தி கீழ் இறங்கிவிட்டார் அபிநந்தன். பாக் எல்லைக்குள் அவர் விழுந்துவிட்டதால், பாக் ராணுவம் அவரை பிடித்தது. உலகரங்கில் பாகிஸ்தான் உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் என்று பல நாடுகள் கேட்டுக்கொண்டது. இந்திய அரசாங்கமும் பாகிஸ்தானுக்கு கோரிக்கை வைத்தது. அந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ”இரு நாடுகளும் போர் செய்ய வேண்டும் என்று எந்த பொது மக்களும் விரும்பவில்லை. இந்தியா தாக்குதல் நடத்தினால், நாங்களும் நடத்துவோம். ஆனால் நாங்கள் அமைதியான பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என நினைக்கிறோம்” என்று இம்ரான் கான் பேட்டியளித்தார். இதனை அடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், கைது செய்யப்பட்டிருக்கும் இந்திய விமானப் படை வீரரை உடனடியாக விடுவிக்கிறோம் என்று தெரிவித்து, கைது செய்யப்பட்ட அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று பாகிஸ்தான் நாட்டில் இம்ரானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டும் என்று ட்விட்டரில் ஹேஸ்டேக் உலக அளவில் ட்ரெண்டானது. அதைபோல நோபல் கமிட்டியில் 50,000 பேர் அவரை பரிந்துரை செய்துள்ளதாக தெறிவிக்கபட்டது. இப்படி சமீபத்தில் ட்ரெண்டில் உள்ள இம்ரான் கானின் அரசியல் பயணத்தை பற்றி பார்ப்போம்...
 

"நான் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். நான் என்னை ஒரு சாதாரண வீரனாக எப்போதும் எண்ணியது இல்லை" இவ்வாறு 1992 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற பின் இம்ரான் கான் கூறுகிறார். பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை வெல்லுமா என்று எல்லோரும் எண்ணியபோது, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து, அணியை சரியாக ஒருங்கிணைத்து வெல்ல வைத்தவர். கிரிக்கெட்டராக எல்லோர் மனதையும் கவர்ந்தவர், பின்னர் அரசியல்வாதியாக உருமாறினார் . 1996ஆம் ஆண்டு, தெக்ரிப் இ இன்சாப் என்னும் கட்சியை நிறுவினார்.  தெக்ரிப் இ இன்சாப் என்றால் நீதிக்கான இயக்கம் என்பதாகும். 1996 ஆம் ஆண்டில் இந்த கட்சியை துவங்கியிருந்தாலும், பாகிஸ்தானின் மிகப்பெரிய கட்சிகளான ந-பாகிஸ்தான் முஸ்லீம் லீக் மற்றும் பாகிஸ்தான் பீப்பள் கட்சி ஆகிய இரு கட்சிகளின் ஆதிக்கத்தை உடைக்க இம்ரான் கானின் கட்சிக்கு பல வருடங்கள் எடுத்துக்கொண்டது. அதாவது கட்சி தொடங்கிய காலகட்டத்தில் இருந்து சாதாரணகட்சியாகவே இருந்துவந்த நிலையில் 2013ஆம் ஆண்டில் மூன்றாம் கட்சியாக தேர்தலில் வெற்றிபெற்றது இம்ரானின் தெக்ரிகப் இ இன்சாப்.
 

2002 ஆம் ஆண்டில் நடந்த பொது தேர்தலில் வெற்றிபெற்ற இம்ரான் கான் முதன் முதலாக நாடாளுமன்ற உறுப்பினராகிறார். 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக தேர்வானார். இந்த நேரம் கொஞ்சம் கூடுதலாக அவருக்கு ஒரு சலுகை கிடைத்தது. இம்ரானுடைய கட்சி பாகிஸ்தானின் இரண்டாவது அதிக வாக்குகள்  பெற்ற கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது. இப்படி ஒரு அந்தஸ்தை அக்கட்சி பெற்றதும், அடுத்த முறை கண்டிப்பாக அவர்களின் கட்சி வெற்றிப்பாதையை கடக்கும் என்று பல்வேறு தரப்பினர்களால் சொல்லப்பட்டது. அதை உண்மையாக்கும் வகையில், தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்ட வரையில் முன்னிலையில் இருக்கிறது இவரது கட்சி.  
 

imran khan


இம்ரான் கான் இந்த நிலைக்கு வந்ததற்கு முக்கிய காரணமாக இருப்பது என்ன என்றால், முதலில் அவர் ஒரு நடைமுறைவாதியாக இருப்பதுதான். மேலும் பாகிஸ்தானில் உள்ள அனைத்து கட்சிகளும் மதவாதத்தையும், தீவிரவாத்தையும் மட்டும் பிரச்சார யுக்திகளாக பயன்படுத்தியபோது. இம்ரான் பாகிஸ்தான் மக்களுக்கு சராசரி வெறுப்பாக இருக்கும் ஊழல், வறுமை, சுகாதாரம், கல்வி இவை அனைத்தையும் பற்றி பிரச்சாரம் செய்தார். பாகிஸ்தான் மக்கள் எதிர்பார்த்த வகையிலேயே தன்னுடைய பிரச்சாரத்தை முன் வைத்தார். புதிய பாகிஸ்தானை உருவாக்குவேன் என்று ஒவ்வொருவர் மனதிலும் ஆணி அடித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். மேலும், இம்ரான் கானின் இந்த வெற்றிக்கு முக்கியமாக இருந்தது பாகிஸ்தானின் உளவுத்துறையும், இராணுவமும்தான் என்கின்றனர்.
 

பாக். நாடாளுமன்றத்தின் தேர்தல் முடிவுகளின்போது இழுபறிகளுக்கு பின்னர் பாகிஸ்தானின் பிரதமரான இம்ரான் கான், அரசு ஊழியர்களின் ஆடம்பர செலவுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். இது பாக். மக்களை கவர்ந்தது. பின்னர், ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் என்றார். நான் மோடியுடன் பேச தயாரக இருக்கிறேன் என்றும் கூறினார். தற்போது யாரும் எதிர்பாராத வகையில் அபிநந்தனை உடனடியாக அதிலும் இரண்டே நாட்களில் இந்தியாவிடம் ஒப்படைத்தது பலருக்கும் ஆச்சரியம்தான். இந்திய மக்களும் பாகிஸ்தானுடன் போர் வேண்டாம் என்று தங்களின் ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்,  அந்நாட்டு அப்படியே. உலகமே வியக்கும் அளவிற்கு பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பிரதமர் எந்த வெறுப்பும் இன்றி இந்திய வீரரை அனுப்பியிருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம், பாகிஸ்தானியர்கள் விரும்பியபடி அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைக்கிறதா என்று...

 

 

Next Story

“மனைவியின் உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம்” - இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Imran Khan sensational allegation on Poison is mixed in wife's food

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இம்ரான் கானிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

அதே வேளையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக திருமணம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, புஸ்ரா பீவி, இஸ்லாமாபாத்தில் உள்ள பாணி காலா இல்லத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், தனது புஸ்ரா பீவிக்கு, உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவும் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஊழல் வழக்கு தொடர்பான வழக்கில் ஆஜரான இம்ரான்கான், ‘தனது மனைவிக்கு உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலந்து கொடுக்கப்படுகிறது. மேலும், அவருக்கு கொடுக்கப்படும் விஷம் கலந்த கலந்த உணவினால், அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலையும் மிகவும் நலிவடைந்து வருகிறது.

அதனால், இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச மருத்துவமனையில் தனது மனைவியின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்’ எனக் கூறினார். இதையடுத்து, அடுத்த 2 நாட்களில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

Next Story

இம்ரான்கான் வழக்கில் புதிய திருப்பம்; பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
 Pakistan court action order on New twist in Imran Khan case

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இம்ரான் கானிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

அதே வேளையில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்று சொத்து சேர்த்த வழக்கை கடந்த ஜனவரி 31ஆம் தேதி பாகிஸ்தான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி இருவரும் குற்றவாளி என்று கூறி இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த சிறை தண்டனை காரணமாக அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியிருந்தது. 

இந்த நிலையில், பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்று சொத்து சேர்த்த வழக்கில் இம்ரான்கானுக்கு, அவரது மனைவிக்கும் இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, இம்ரான்கான் தரப்பில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. 

அந்த தீர்ப்பில், இம்ரான்கானுக்கும், அவரது மனைவிக்கு வழங்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார். மேலும், சிறைத் தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு, ரம்ஜான் விடுமுறைக்கு பிறகு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.