dfg

Advertisment

சென்னை ஐஐடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அவர்களும் அறிவுறுத்தல் கடிதத்தை சென்னை ஐஐடி இயக்குநருக்கு அனுப்பியிருந்தார். இந்நிலையில், இதுவரை நடைபெற்றிருந்த ஒரு முறையை திடீரென மாற்றுவது, கேட்டால் இது மத்திய அரசின் நிறுவனம் என பதில் அளிக்கிறார்கள் என்று சில சமூக ஆர்வலர்கள் ஐஐடி-க்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். இந்நிலையில் சென்னை ஐஐடியின் நடவடிக்கை தொடர்பாக எழுத்தாளர் இமையம் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு...

"சென்னை ஐஐடியில் இந்த மாதிரியான நிகழ்வுகள் இது முதல் முறையல்ல, பல முறை இது மாதிரியான வேறு வேறு தவறுகளை அந்நிறுவனம் தொடர்ந்து செய்து வருகிறது. அதை நடத்துவது ஒன்றிய அரசாக இருக்கலாம், இல்லை தமிழக அரசாக இருக்கலாம் என்பது முக்கியமில்லை, அது செயல்படுவது மக்கள் வரிப்பணத்தில். எனவே பாரம்பரியமாகச் செய்யப்பட்டு வரும் ஒரு முறையை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி தான்தோன்றித்தனமாக மாற்றுவது என்பது ஏற்புடையது அல்ல, இது வன்மையான கண்டனத்துக்குரியது.

மேலும் சென்னை ஐஐடியில் பெரியார் படிப்பகம், அம்பேத்கர் படிப்பகம் முதலியவற்றை எல்லாம் இவர்கள் ஒழித்துக்கட்டி நாங்கள் சொல்லுவதைத்தான் பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தமிழகத்தின் பண்பாடு, கலாச்சாரம் முதலியவற்றை அவர்கள் தொடர்ந்து பின்பற்ற, அதைப்பற்றி அடுத்த தலைமுறை அறிந்துகொள்ள அவர்களால் ஆன அனைத்து தடைகளையும் ஏற்படுத்தி பார்க்கிறார்கள். இந்தியாவின் குடியரசுத்தலைவர் வந்தாலும், பிரதமர் வந்தாலும் தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது என்பது காலம் தொட்டு நடைபெற்று வருகின்ற ஒரு நிகழ்வு.

Advertisment

அதை மாற்றுவது என்பது பண்பாட்டை குழிதோண்டி புதைப்பதைப் போன்றது. காங்கிரஸ் அரசாக இருந்தாலும், பாஜக அரசாக இருந்தாலும் மொழி சார்ந்த கொள்கைகளில் இருவருமே ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். இந்தியைத்திணிப்பது அல்லது பிற மொழியைத்திணிப்பது என்பது நிர்வாக ரீதியான குழப்பங்களை அது ஏற்படுத்தும். ஆனால் அது எதைப்பற்றியும் இந்த மாதிரியான நிறுவனங்கள் கவனத்தில் கொள்வதில்லை. ஒன்றிய அரசின் அலுவலகங்களில் எல்லாம் இந்தியை முன்னுரிமை கொடுக்கும் விதத்தில் இத்தகைய செயல்பாட்டில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். இது அந்தந்த மாநிலங்களில் தாய் மொழியை நேசிக்கும் மக்களுக்குப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

இரு மொழி கொள்கையை ஏற்றுக்கொண்ட நம்மை, மற்றொரு மொழியைப் படி என்றோ, கட்டாயப்படுத்தவோ கூடாது. நானாக விரும்பி படிப்பது என்பது வேறு, கட்டாயப்படுத்தி படிக்க வைப்பது என்பது வேறு. 100 அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் இந்தியை அமல்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவன் எதற்கு வேலைக்கு வர வேண்டும். தற்போதைய தமிழக அரசு சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

எனவே மாணவர்கள் தமிழை நோக்கிய தங்களின் பார்வையை திருப்பியுள்ளனர். தென்னமரத்தை வேப்ப மரமாக மாற்ற முடியாதது எவ்வளவு உண்மையோ, அது போல தமிழ்நாட்டில் இந்தியை எப்போதும் திணிக்க முடியாது. தமிழக மக்களும், மாணவர்களும் மற்ற இடங்களைப் போல் அவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் இல்லை, அனைவரும் விவரம் தெரிந்தவர்கள். எனவே எத்தனை ஆண்டுகள் இவர்கள் இந்தியைத்திணிக்க முயற்சி செய்தாலும் தோல்விதான் அவர்களுக்கு மிஞ்சும் என்பது மட்டும் உண்மை.